கவண் (2017)

 

ஊடகங்களின் துணை கொண்டு அரசியலின் கருப்புப் பக்கங்களைக் ‘கோ’ வில் புடம் போட்டுக் காட்டிய கே.வி.ஆனந்த், இந்த முறை அதே ஊடகங்களின் மறுபக்கத்தை, சாக்கடை அரசியல் கலந்த அதன் வணிக விம்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். கே.வி.ஆனந்த் – சுபா கூட்டணியில் புதுவரவாக இணைந்துள்ளார் கபிலன் வைரமுத்து; வெறும் கமர்சியல் பக்கேஜ் என்றில்லாமல் சமகால நிகழ்வுகளின் தொகுப்பாக காட்சிகளை அமைத்துச் சொல்ல வந்த கருத்தினைத் தெளிவாக ரசிகர்களிடம் ஊடுகடுத்துவதில் ஜெயித்துள்ளது இந்த டீம். முதல் காட்சியிலே பாடலோடு கதாப்பாத்திரத்திரங்களை அறிமுகப்படுத்தி விட்டு உடனடியாகவே கதைக்குள் அழைத்துச் செல்கிறார் கே.வி.ஆனந்த். அஹிம்சைப் போராட்டத்தில் அராஜகம் புகுந்தது எப்படி என்பதைப் பதிவு செய்யும் காட்சிகள், அதை ஒளிபரப்பு செய்யும் சேனல் நிர்வாகத்தின் கோல்மால்களைச் சொன்ன விதம் சபாஷ் போட வைக்கிறது.

Kavan2

என்ன மனுஷன்யா இவர்? என சிந்திக்க வைக்கிறார் விஜய் சேதுபதி. எந்த காரெக்டர் கொடுத்தாலும் பின்னிப் பெடலெடுக்கிறார். இத்தனைக்கும் இம்மியளவு கூட மிகையில்லாத நடிப்பு. கல்லூரி மாணவராக இளமைக் குறும்பு, மடோனாவுடனான ஊடலின் போது வெளிப்படுத்தும் பரிதவிப்பு, எல்லோரும் பராட்டும் வேளை மடோனாவின் பராட்டுக்காக அவர் கண்கள் தேடுவது, மானபங்கப்படுத்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் ஒளிபரப்பப்படுவதைத் தடுக்க முடியாத கையறுநிலை, நேரலை நேர்காணலில் அன்டர்ப்ளே ஆக்ட் செய்து அமைச்சரிடம் போட்டு வாங்குவது, முன்னணி நடிகர் என ஈகோ பாராது சக கலைஞர்களுக்கு ஸ்க்ரீனை விட்டுக் கொடுப்பதென பண்பட்ட நடிகராக மிளிர்கிறார் விஜய் சேதுபதி. மடோனாவிற்கு படம் நெடுகப் பயணிக்கும் கதாப்பாத்திரம். அவ்வளவு சார்மிங்காக இருக்கிறார். அவருக்கும் விஜய் சேதுபதிக்குமான ஊடல் தருணங்கள் அழகிய எபிசோட்கள். ஆங்காங்கே கோபப்படும் காட்சிகளில் சோ ஸ்வீட். படத்தின் இன்னொரு ஹீரோ டி.ராஜேந்தர்; சேனலை அடிமாட்டு விலைக்குக் கேட்கும் ஆகாஷ்தீப்பிடம் பொங்குவது, தன்னுடைய இயலாமையை விளக்கும் காட்சியில் கலங்க வைப்பது, மிமிக்ரி, டைமிங் சென்ஸ், அடுக்குமெழி வசனங்கள் என மனுஷர் பட்டையைக் கிளப்புகிறார்.

திறமைகளை வெளிக்கொணர்வதாக் கூறிக் கொண்டு முன்னணிச் சேனல் நடாத்தும் ரியாலட்டி ஷோக்களின் வியாபார அரசியலைப் பட்டவர்த்தனமாகாக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். திறமைகளைப் புறந்தள்ளி அழகான பெண்களை இறுதிக் கட்டத்திற்கு அழைத்துச் செல்வது, அதிலிருக்கும் விளம்பர ஏஜென்ட்களின் ஆதிக்கம், போட்டி முடிவுகளில் நிர்வாக இயக்குனரின் தலையீடு, TRP ரேட்டிங்குக்காக வலிந்து திணிக்கப்படும் நாடகங்கள், சித்தரிக்கப்பட்ட கருத்துமோதல்கள், பவர் ஸ்டார் போன்றவர்களைக் கூட்டி வந்து கலாய்ப்பது எனப் பொட்டிலடித்தாற் போல் வைத்திருக்கும் காட்சிகளுக்குப் பராட்டுக்கள். ஒரிரு காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார் பவர் ஸ்டார்; நீங்கெல்லாம் காமெடிப் பீஸாய் நினைக்கும் வரை தான் எனக்குச் சான்ஸ் எனச் சேனலிடம் கலங்கும் காட்சி சூப்பர். இந்த ஷோவிலுள்ள ஒரே உண்மை பவர் ஸ்டார் மட்டும் தான் எனக் குமுறும் மடோனாவின் ஒரே வசனம் போதும் இந்நிகழ்ச்சிகளின் நம்பகத்தன்மையைக் கேள்வி கேட்க.

Kavan3
விஜய் சேதுபதி – அமைச்சர் போஸ் வெங்கட் இடையான நேரலை நேர்காணல் செய்திச் சேனல்களுக்குச் சரியான செருப்படி. முன் கூட்டியே கொடுத்து வைக்கப்பட்ட கேள்விக் கணைகள், இயக்குனாரால் நெறியாளர்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள், லைவ் ஷோவையே மார்ஃபிங் செய்து காட்சிப்படுத்தும் வித்தைகள் என மீடியாவின் உள்ளடி வேலைகளுக்குத் தோதான தாக்குதல்களை எவ்வளவு பராட்டினாலும் தகும். மீடியா நினைத்தால் அரசியல்வாதியை எந்த நிலைக்கும் ஏற்றிச் செல்லலாம். அதே மீடியாவைப் பகைத்துக் கொண்டால் அடுத்த நிமிடமே அவரது இமேஜை காலி செய்ய முடியும். இதுவே கட்சிக்கொரு சேனல் வைத்திருக்கக் காரணம் என்பதைச் சொன்ன விதம் அசத்தல்.

நீ எதையாச்சும் மாத்தனும்னு நெனச்சா, மாத்திற இடத்துக்கு நீ போகனும். அந்த உயரத்தை நீ அடையிற வரைக்கும் உன் கோபத்தை இந்த உலகம் மதிக்காது ~ வசனங்கள் பல இடங்களில் கவனிக்க வைக்கின்றன. கேள்வி தான் முக்கியம்னு நினைக்கிறவன் கத்தி கத்திக் கேட்பான். பதில் முக்கியம்னு நினைக்கிறவன் மெதுவாத் தான் கேட்பான் என விஜய் சேதுபதி நேரலை விவாதம் எப்படித் தொகுத்து வழங்குவது என நடித்துக் காட்டும் காட்சி வாவ்.

Kavan6

சில காட்சிகள் அப்படியே கோ படத்தை நினைவுபடுத்துவது படத்தின் குறை. எதிரிகள் கூடாரத்தில் உளவாளி, பென் கேமாரா போன்ற புளித்துப் போன சமீச்சாரங்களைத் தவிர்த்திருக்கலாம். மீடியா என்பதற்காக எல்லோரும் பேசிக்கிட்டே இருப்பது ஒரு கட்டத்தில் போரடிக்கிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் கேட்கலாம் ரகம். ஓக்சிஜன் தந்தாலே பாடல் காட்சிப்படுத்திய விதம் அருமை. ஹாப்பி நியூ இயர் பாடலில் TR வாய்ஸ் ஸ்பெஷல். பின்னணி இசை ஓகே ரகம். ஆன்டனியின் எடிட்டிங் பக்க பலம். முன்பாதி வேகமாக நகர்கிறது. கலை இயக்குனர் கிரனின் வடிவமைப்பில் அந்த சேனல் உற்கட்டமைப்பு, ராஜேந்தரின் சேனல் செட் சூப்பர். சமீராவின் ஆடை வடிவமைப்பு வெகு இயல்பு.
விக்ராந்த் – சாந்தினி காட்சிகள் தான் படத்தின் திருப்புமுனை. பாண்டியராஜன், ஜெகன், வில்லன்களான போஸ் வெங்கட் மற்றும் ஆகாஷ்தீப் தேர்ந்த நடிப்பு. அத்தனை அநுபவம் மிக்க நாசரை ஏதோ செட் ப்ராப்பர்டி போல் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அரசியல் களத்தை மாற்றியமைப்பதில் மீடியாவின் செல்வாக்கு, பப்பளிசிட்டிக்காக மீடியா எதிக்ஸை சேனல் மீறும் விதம், நடுநிலை சேனல்கள் மீதான அடக்குமுறை, பினாமி ஊடகங்கள் மூலம் தவறான செய்திகளை நியாயப்படுத்துவது, சென்சேஷனல் எனும் பெயரில் செய்யப்படும் தகிடுதத்தங்கள், சமூகப் பிரச்சனைகளைத் திசை திருப்புவதில் ஊடகங்களின் பங்களிப்பு என கே.வி.ஆனந்த் எதையும் விட்டு வைக்கவில்லை.

மொத்தத்தில் கவண் – ஊடக விபச்சாரிகளுக்குச் சரியான கமர்சியல் சாட்டையடி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s