காற்று வெளியிடை (2017)

திகட்டத் திகட்டக் காதல், திடுதிப்பென்று பிரிவு, பின்னணியில் தீவிரவாதம் எனக் கதையின் போக்கை மாற்றிக் கடைசியில் சொல்ல வந்த சமூகப் பிரச்சனையைத் தொங்கலில் விட்டு விட்டுக் காதலின் துணை கொண்டு கரை சேர்வது மணிரத்னம் பயன்படுத்தும் ஒருவிதத் திரையுக்தி. ரோஜா, பம்பாய், உயிரே எல்லாமே இதே டெம்ப்ளேட் தான். காற்று வெளியிடையும் இதற்கு விதிவிலக்குல்லை. காதல் படங்கள் எப்பொழுதுமே மணிரத்னத்தின் சேவ் ஜானர் தான். காரணம் அதைக் காட்சிப்படுத்தும் விதம் அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் காற்று வெளியிடையில் அது மிஸ்ஸிங். படத்தின் பெருங்குறையே ஆழமான காதலோ அழுத்தமான காட்சிப்படுத்தலோ இல்லாமை தான்.

ஏர்போஸ் போர்பிரிவில் பணிபுரியும் கார்த்தி – மிலிட்டரி காம்பில் மருத்துவரான அதிதி இடையே காதல், அவ்வப்போது ஈகோ க்ளாஷினால் மோதல், வழக்கம் போல் போர்க்களச் சூழலால் பிரிவு, மீண்டும் எவ்வாறு சேர்கிறார்கள் என்பதை எந்தவித சுவாரசியமுமின்றி நீட்டி முழக்கிச் சொல்லி இருக்கிறார் மணிரத்னம்.

ka2

படத்தின் மோசமான பாத்திரப் தேர்வு கார்த்தி. அதுவும் ரொமான்ஸ் காட்சிகளில் க்ளோசப்பில் கர்ண கொடூரமாக ஒரு லுக்கு விடுவாரே பாருங்கள். ரொமான்ஸே வர்லயே? சீரியஸ் காட்சிகள் எல்லாம் சிரிப்பலை ஆகிப் போனது தான் மிச்சம். மீசை இல்லாத கார்த்தியின் அந்த கெட்டப் ஆரம்பத்தில் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது. வாய்ஸ் மாடிலேஷன் வழமையான மணிரத்னம் ஹீரோக்களின் ஃபார்முலா. முன் கோபம் வெளிப்படும் காட்சிகளில் மட்டும் ஸ்கோர் செய்கிறார்.

படத்தைக் கடைசி வரை தாங்கிச் செல்வது நாயகி அதிதியின் நடிப்பு. ஒரு சில காட்சிகளில் மனிஷா கொய்ராலாவை நினைவுபடுத்துகிறார். கார்த்தியை நேசிக்கும் அளவிற்கு அவரது ஆணாதிக்க சிந்தனைகளை வெறுக்கும் பாத்திரம்; கண்களாலேயே பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். தன் அனுமதியின்றி பேஷன்டை அழைத்துச் சென்ற R.J.பாலாஜியிடம் நியாயமான கோபத்தை வெளிப்படுத்துவது, கார்த்தி ப்ரோபோஸ் பண்ணும் காட்சியில் வார்த்தை நிராகரித்துக் கண்களால் பேசுவது, பனிப்புயலில் சிக்கிய தருணத்தில் காப்பற்ற நினைக்கும் கார்த்தியிடம் தன் தனிமனித சுதந்திரம் பறிபோகிறது என்பதை வெளிப்படுத்துவது, ஆண் – பெண் சமத்துவத்தைப் பற்றி கார்த்தியுடன் விவாதிக்கும் காட்சியில் நண்பர்களுக்கு முன்னிலையில் கார்த்தியை விட்டுக் கொடுக்காது தன் சகிப்புத்தன்மையைக் கண்களாலேயே ஊடுகடத்துவது, ப்ரேக்கப் காட்சியில் தன் இயலாமை நியாயப்படுத்துவது அட்டகாசமான பெர்ஃபாமன்ஸ்.

சுவாரசியமான சில காதல் காட்சிகள் இருந்தாலும் அவை மட்டும் போதாதே ரசிகர்களைக் கட்டிப் போட. காட்சியமைப்புகளில் கற்பனை வறட்சி; வசனங்கள் கூடப் பெரிதாகக் கை கொடுக்கவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையைச் சோதிக்கிறது. ரவிவர்மன் கேமரா ஜாலம் செய்கிறது. சூரியோதத்தை அதிதியின் சரும நிற மாற்றத்தில் காண்பிப்பது, டார்ச் லைட் அடித்து கார்த்தியின் கண்களில் அதிதி அறிமுகமாவது, பனிப்புயலில் சிக்கிக் கொள்ளும் காட்சி, காஷ்மீரின் அழகு, மணலில் சறுக்கிக் கார்த்தி லாரியை அடையும் காட்சியில் வைக்கப்படும் லாங் ஷாட் எனக் காட்சிகள் எல்லாமே விஷுவல் ட்ரீட்.

ka3

ஜவ்வாக நகரும் திரைக்கதையில் தெளிவில்லாத கார்த்தியின் பாத்திர படைப்பு பலவீனம். சமயத்தில் அவர் கொடுக்கும் முகபாவனைகளைக் கணிக்கக் கூட முடியவில்லை. மறுபுறம் தனது குரல் ஒடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு படி மேலே சென்று உயர்த்திக் குரல் கொடுக்கும் அதிதியின் பாத்திரம் சூப்பர். படத்தில் ஈர்க்கும் இன்னொரு கதாப்பாத்திரம் ருக்மினி விஜயகுமார். நடனத்திலும் கலக்குகிறார். R.J.பாலாஜியைப் பேசவே விடவில்லை மணி. அவருக்கு அதிதி மேல் ஒரு சாஃப்ட் கார்னர். டெல்லி கனேஷும் தன் பாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்.

பாக்கிஸ்தான் சிறையிலிருந்தி தப்பி ஆப்கான் வழியாக இந்தியா கார்த்தி தப்பி வருவதை ஏதோ திருடன் போலிஸ் விளையாட்டாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சர்வ சாதாரணமாக முதல் தடவை பாக் சிறையில் ஓட்டை போட்டுத் தப்புவது, இரண்டாவது தடவை பெற்றோல் குண்டு வீசித் தப்பிப்பது, துரத்தி வரும் பாக் படையினர் வானத்தை நோக்கியே குறி பார்த்துச் சுட்டுக் கொண்டிருப்பது போன்ற காட்சிகளை எல்லாம் எந்த தைரியத்தில் வைத்திருக்கிறார் மணிரத்னம். ரசிகர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? காதல் கதை என்றாகி விட்ட பிறகு கதைக்கு எவ்விதத்திலும் உதவாத அந்த பாக் – ஆப்கான் காட்சிகள் இரண்டாம் பாதி முழுவதையும் ஆக்கிரமித்திருப்பது கதையின் போக்கைத் திசை திருப்பி விட்டது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி சுத்த அபத்தம்.

ka4

வழக்கம் போல் படத்தின் ஹைலட் ரஹ்மானின் இசை. நல்லை அல்லை, மற்றும் சரட்டு வண்டியிலே இரண்டுமே டாப் லிஸ்ட். கேளாயோ பாடல் நல்லதோர் டான்ஸ் நம்பர். வான் வருவான் காட்சிப்படுத்திய விதம் அருமை. ஜுகினி பாடல் அருமையாக இருந்தாலும் அந்தக் காட்சிக்குப் பொருத்தமாக இல்லாத்து குறையே. பின்னணி இசை பாவம் ரஹ்மான். அவரும் என்ன செய்வார். தன்னால் முடிந்த வரைப் படத்தை ஒப்பேற்றியிருக்கிறார்.

சப்பைக் காரணங்களைக் காட்டி ஏற்படுத்தப்படும் ஈகோ மோதல்கள் ரொம்பவே செயற்கைத்தனமானவை. ஆனாலும் கார்த்தி – அதிதியின் பெர்ஃபாமன்ஸ் ரசிக்க வைக்கிறது. கருத்துமோதலுக்குப் பின் அதிதியை சமாதானப்படுத்திக் கூட்டி வரும் கார்த்தி நண்பர்களிடம் she is my girl. நான் எது சென்னாலும் கேட்பா என உதார் விடும் காட்சியில் இதற்காகத் தான் இத்தனை போராட்டமா? எனக் கண்களிலேயே வெறுப்பை உமிழும் அதிதியின் எக்ஸ்பெரசன்ஸ் வாவ். ஆனால் அடுத்த காட்சியிலேயே எதுவும் நடக்காதது போல் வந்து ஜ லவ் யூ சொல்வது கன்டின்யூனிட்டி மிஸ்ஸிங்.

Sound mixing பல இடங்களில் கவனிக்க வைக்கிறது. ஆடை வடிவமைப்பு, sets, visual effects படத்திற்கு பலம். எல்லாம் இருந்தும் என்ன பயன்? ஏதோ அஜீரணக் கோளாறுடன் படம் பார்க்கும் உணர்வினைத் தவிர்க்க முடியவில்லை. மணிரத்னம் தன் தலையில் தானே மண் போட்டுக் கொண்டாலும் பரவாயில்லை. பார்ப்பவர் தலையிலும் அல்லவா வாரித் தூற்றுகிறார்.

மொத்தத்தில் காற்று வெளியிடை – வானவேடிக்கை என நினைத்துப் போனால் வெறும் புஸ்வானமே எஞ்சுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s