தூரத்தில் நான் கண்ட உன் முகம் (நிழல்கள் )

ஏனோ தெரியவில்லை… இன்றைய தினம் பித்துப் பிடித்தாற் போல் இந்தப் பாடலையே உதடுகள் முனுமுனுக்கின்றன. ஆழ்மனதின் எங்கோ ஓர் ஓரத்தில் அரவமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த இந்தப் பாடலை ஏதோவோர் உள்ளுணர்வு சலனப்படுத்தி இருக்கிறதென்றே தோன்றுகிறது.

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

பல்லவி அனுபல்லவியே சொல்லிவிடும் பாடலின் சங்கதியை; உணர்ச்சிக்கு குவியலில் ஊசலாடும் இளம் பெண்ணும் ஒரு கணம் பரிதவித்து நின்றாலும் மறுகணம் தன்னிலை அடைந்து காதல் தரும் வலியை இதமாக ஏற்றுக் கொள்ளும் அவள் பக்குவ நிலையையும் இத்தனை எளிதாக ரசிகர்களுக்கு ஊடுகடத்துவதில் பஞ்சு அருணாசலத்தின் வரிகளுக்கு நிகரில்லை. அனுபல்லவி முடிந்து வரும் முதல் இடையீட்டு இசையை அவதானித்தாலே புரியும்; வீணைக்கும் வயலினுக்கும் இடையான தர்க்கமாக அமைத்திருப்பார் இளையராஜா. அதாவது விதியிற்கும் அந்த இளம்பெண்ணின் உணர்வுக்கும் இடையான உணர்ச்சிப் போராட்டமாக உருவகப்படுத்தி இருப்பார்.

வேங்குழல் நாதமும் கீதமும் (2)
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐயன் உன் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

வெற்றுப் புல்லாங்குழலில் ஊடுருவும் காற்று எவ்வாறு மனதை மயக்கும் இசையாக வெளிவருகிறதோ அவ்வாறு தன் வெறுமையான நெஞ்சாங்கூட்டில் உருவாகும் அதீத உணர்வுகளுக்கு நாயகனைக் காரணம் காட்டி, அவன் வரவை எதிர்நோக்கும் அவள் நிலையைக் காற்றலை வழியே ஊடுகடத்தும் விதம் அற்புதம். முதல் சரணத்தின் பின்னரான இடையீட்டு இசையையில் கூட அதே வீணை – வயலின் விவாதம் தொடர்ந்து உச்சநிலையை அடைகிறது. ஒரு கட்டத்தில் விதியின் போக்கை வலியதாகக் காட்ட அந்த பெண்ணின் கையறு நிலையை வெகு இயல்பாக ஒற்றை வயலினின் துணை கொண்டு உணர்த்தி இருப்பார் இளையராஜா.

உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விதி வரும் அதில்
உறவுகள் பிரிவதும் ஒரு சுகம்

குறித்த வரிகளினிடையே ஜானகி அம்மையார் கொடுக்கும் ஏற்ற இறக்கங்கள் கூடவே அவள் ஆற்றாமையைத் தணிக்கும் ராஜாவின் தபேலாவின் மெல்லிய தாளநடை, விதி வசத்தால் வரும் அந்தப் பிரிவினைச் சுகிக்க நினைக்கும் அந்தப் பெண்ணின் மனநிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும்.

வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானில் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில் வந்த ஆறாவது படம்: நிழல்கள். வேலையில்லா திண்டாட்டத்தை மையப்படுத்தி மணிவண்ணன் எழுதிய கதை; படம் நன்றாக இருந்தும் பெரிதாகப் போகவில்லை. அதை விட சோகம் இத்தனை அருமையான பாடல் படமாக்கப்படவேயில்லை என்பதே. இதே மெட்டு சித்தாரா எனும் தெலுங்கு படத்தில் Vennello Godaari Andam எனும் பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுப் பாடிய ஜானகிக்குத் தேசிய விருத்தையும் கொண்டு சேர்த்தது. காட்சி வடிவம் இன்றி ஒரு பாடல் இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பது நிச்சயம் ஆச்சரியமே.

 

 

Telungu Version (Vennello Godaari Andam)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s