பாகுபலி 2: The Conclusion (2017)

ராஜமௌலி வித்தைக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது பாகுபலி 2. சற்று நிதானமாக அவதானித்துப் பார்த்தால் தினம் தினம் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் மசாலா படங்களின் டெம்பிளேட் தான். சரித்திரப் புனைவாக எடுக்கப்பட்ட படத்திற்குத் தெரிந்தே தான் வணிக ரீதியிலான மிகைப்படுத்தல்களுக்கு இடம் கொடுத்திருக்கிறார் ராஜமௌலி. ஆனாலும் அந்த சமரசங்களைத் தாண்டி தனது காட்சியமைப்பில் அவர் கொண்டுள்ள அதீத நம்பிக்கை, அது தான் பாகுபலியை யாராலும் எட்ட முடியாத உயரத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளது.

ராஜமாதா சிவகாமியின் குரலுடன் தொடங்கும் அந்த டைட்டில் கார்டே சொல்லிவிடுகிறது பின்னால் வரப் போகும் பிரமாண்டத்தை. முதல் பாகத்தின் முடிவிலிருந்து பிளாஷ்பாக்காக விரிகிறது இரண்டாம் பாகம். அரசகுலக் கதைகளுக்கே உரிய வீரம், காதல், முடியாட்சிக்கான போட்டி, சூழ்ச்சி, துரோகம் என நகரும் பழிவாங்கும் கதை தான். திருப்பங்கள் என்று பெரிதாக ஏதுமில்லை. முதல் பாதி நினைவிருந்தால் கதையின் போக்கை எளிதில் கணித்து கொள்ளலாம்.

கதாப்பாத்திரத் தேர்வுதான் படத்தின் பக்க பலம்; எந்த நிலையிலும் பிரபாஸோ, ராணாவோ, அனுஷ்காவோ தெரியவில்லை. பாகுபாலி, பல்வாள் தேவன், தேவசேனா, ராஜமாதா சிவகாமி, கட்டப்பா, பிங்கலதேவன், குமார வர்மன், அவந்திகா என கதாப்பாத்திரங்களை முன்னிறுத்திக் காட்சிகளை அமைந்திருப்பதே ராஜமௌலியின் வெற்றி.

bahu2

முதல் பாகத்தில் சிவுவாக வந்த பிரபாஸுக்கு அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி என ரெட்டைப் பாத்திரங்கள். இரண்டிலுமே பிரமதமாகப் பொருந்திப் போகிறார். தேவசேனாவிடம் காதலில் உருகுவது, பிண்டாரிகளின் படையெடுப்பிலிருந்து குந்தல தேசத்தை காப்பாற்றுவது, தேவசேனாவிற்காக ராஜ்ஜியத்தைத் துறப்பது, சதிவலையில் சிக்கி கட்டப்பாவின் கைகளால் மரணத்தைத் தழுவும் தருவாயிலிலும் ராஜமாதாவிற்காக வருந்துவது என நெஞ்சத்தை அள்ளுவது என்னவோ அமரேந்திர பாகுபலி தான்.

அழகே பொறாமைப்படும் பேரழகு.. யார் அவள்? அவள் தான் தேவசேனா. முன்பாதியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து விட்டார் அனுஷ்கா. அருந்ததியைப் போல அனுஷ்காவிற்கு இன்னொரு வாழ்நாள் கதாப்பாத்திரம் இந்த தேவசேனா. பிண்டாரிகளின் சுற்றி வளைப்பின் மத்தியில் பல்லக்கிலிருந்து இறங்கி வாள் வீசும் தேவசேனாவின் கடைக்கண் பார்வையிலேயே சொக்கிப் போய் விடுகிறான் கடைக்கோடி ரசிகனும் கூட. இதில் அமரேந்திர பாகுபலி மட்டும் எம்மாத்திரம்? காட்டுப் பன்றி வேட்டைக்குப் போன இடத்தில் விழிகளையே கணைகளாகக் கொண்டு சந்தேகிப்பது, பொன்னாசை காட்டிப் பெண்ணெடுக்க நினைக்கும் மகிழ்மதி ராஜமாதாவின் ஆணையைத் துச்சமென நிராகரிப்பது, அமரேந்திர பாகுபலியின் சுயரூபத்தை முதன்முதலில் காணுகையில் சொக்கிப் போய் நிற்பது, தன் மீது கை வைக்க எத்தனிக்கும் படைத்தலைவனின் விரல்களைக் கண்ணிமைக்கும் நொடி தனில் நறுக்குவது என அனுஷ்காவின் நடிப்பு அட்டகாசம். அதிலும் அடிமையாக வர மாட்டாள் இந்த தேவசேனா என அமேந்திர பாகுபலியிடம் மறுதலிக்கும் காட்சியெல்லாம் அருமை.

காதல் காட்சிகளெல்லாம் கற்பனை உலகிற்கே அழைத்துச் சேர்கின்றன. அதிலும் ஒரே ஒரு ஊரில் பாடல் விஷுவல்களால் மெய்மறக்கச் செய்யும். ஆனாலும் அனுஷ்காவிற்கு முன் பாகுபலி பயந்தாங்கொள்ளியாக அடக்கி வாசிக்கும் காட்சிகள் பல படங்களில் பார்த்தவையே.

bahu3

ஆரம்பத்தில் அடக்கி வாசித்து நிதானமாகச் சூழ்ச்சி வலை பின்னிப் பாகுபாலியைக் காலி செய்யும் பல்வாள் தேவனாக ராணா; இடைவேளைக்கு முந்தைய பட்டாபிஷேகத்தின் போது பாகுபலிக்கு ஆதரவாக மக்கள் குரல் கொடுக்க, பாகுபலியை நோக்கி ஓர் பார்வை பார்ப்பார் பாருங்கள். அந்த ஒற்றைப் பார்வையே போதும் இரண்டாம் பாதி முழுவதும் தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறார். கிளைமாக்ஸில் இராட்சத ஜந்துவாக உருமாறி சண்டையிடும் காட்சிகளில் மிகைப்படுத்தல்கள் என்றாலும் கூட பெர்பாமன்ஸ் கை தட்ட வைக்கிறது.

படத்தின் மையப் பாத்திரம் ராஜமாதா சிவகாமி; முதல் பாகத்தில் நீதி வழுவாத கம்பீரமாக கட்டமைக்கப்பட்ட பாத்திரம் இந்த பாகத்தில் மஹாபாரத திருதிராஷ்டினனைப் போல இருதலைக் கொள்ளி எறும்பாக மாற்றப்பட்டுள்ளமை கொஞ்சம் நெருடலே. கதைக்கு அவசியம் என்ற மட்டில் முதல் பாகத்திலேயே அதே தோரணையில் வடிவமைத்து இருக்க வேணடும். பாகுபலி இறப்பிற்குப் பின் சதிகளை உணர்ந்து வருத்தும் காட்சிகளில் எல்லாம் எந்த வித அனுதாபமோ அந்தக் கதாப்பாத்திரத்தின் மீது ஏற்படவில்லை. ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு தான் கடைசி வரை தூக்கி நிறுத்துகிறது.

கட்டப்பாவாக சத்யராஜும், பிங்கல தேவனாக நாசரும் கதாப்பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். “உன் தாயின் நாய் வருகிறான்” என ஏளனம் செய்யும் பிங்கல தேவனிடம் அவன் சதிகளை வெளிப்படுத்தி “நாய் தானே மோப்பம் பிடித்தேன்” என பதிலடி கொடுக்கும் காட்சிகளெல்லாம் செம. மற்றபடி கட்டப்பா ஏன் பாகுபாலிக் கொன்றார் என்பதெல்லாம் ஒன்றும் மில்லியன் டாலர் கேள்வியில்லை. அது வெறும் வியாபார தந்திரம்.

ராஜமாதாவின் ஆணையை ஏற்று பாகுபாலியைக் கொல்லும் ராஜவிசுவாசியான அடிமை கட்டப்பா, கொன்று முடித்து விட்டு வந்து சதியை அம்பலப்படுத்தி எதிர்க் கேள்வி கேட்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். அதற்காக சிவகாமி எனப் பெயர் சொல்லி அழைத்துத் தொடர்ந்து ஒருமையில் விழிப்பதெல்லாம் அந்தக் கதாப்பாத்திரத்திரத்தின் குணாதிசயம் இல்லையே? மேலும் சதியை அம்பலப்படுத்தி ராஜமாதாவை அரண்மனையில் இருந்து தப்பிக்க வைத்த கட்டப்பாவைக் கொல்லாமல் 25 வருடங்களாக அரண்மனையிலேயே பல்வாள் தேவன் விட்டு வைக்க வலுவான காரணங்கள் ஏதும் சொல்லப்படவில்லை கூடவே பிளஷ்பாக் காட்சிகள் முடிந்ததுமே கதை கேட்டுக் கொண்டிருந்த சிவு எந்த வித போர்ப் பயிற்சிகளின்றி மகிழ்மதிக்குப் படையெடுத்துச் சென்று மகேந்திர பாகுபலியாகப் போரிடுவது எல்லாம் சுத்த ஹம்பக்.

bahu4

கீரவாணியின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. கண்ணா நீ தூங்கடா மாட்டும் கேட்கும் ரகம். மற்றைய பாடல்கள் படத்தோடு வருவதால் பெரிதாக உறுத்தலில்லை. பின்னணி இசை பல இடங்களில் கவனிக்க வைக்கிறது. இடைவேளை வரை நேர்த்தியான திரைக்கதையும் படத்தொகுப்பும் இடைவேளையின் பின் சற்றே தடம் மாறுகின்றன. மதன் கார்க்கியின் வசனங்கள், கலை இயக்குனரின் கை வண்ணங்கள், ஆடை வடிவமைப்பு எல்லாமே படத்திற்கு பலம்.

முதல் பாகத்தில் போதியளவு காட்சிகள் கொடுத்தாலோ என்னவோ இந்த பாகத்தில் தமன்னாவிற்குப் பெரிதாக வேலை இல்லை. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் மட்டுமே அவந்திகாவைக் காண முடிகிறது. தேவசேனாவின் மாமா குமார வர்மனாக வரும் சுப்பாராஜூவும் கவனிக்க வைக்கிறார். பிண்டாரிகளின் படையெடுப்புக் காட்சிகள், குந்தல தேசத்திலிருந்து தேவசேனா மகிழ்மதி வரும் காட்சிகள், கிளைமாக்ஸ் போர்க்களக் காட்சிகள் படமாக்கிய விதத்தில் கண்ணுக்கு விருந்து. ஆனாலும் பனை மரத்தை spring ஆக வளைத்து ஆங்கிரி பேர்ட்ஸ் போல பறந்து கோட்டையைத் தாண்டுவதெல்லாம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத காட்சியமைப்பு.

பட்ஜெட், காலவிரயம், கால்ஷீட் பிரச்சினை, தகுந்த வரவேற்பு கிடைக்குமா எனும் சந்தேகங்களால் சரித்திரப் படங்கள் எடுக்க ஜாம்பவான்களுக்குக் கூட தைரியம் இல்லை. அதை சாத்தியமாக்கிய ராஜமௌலியை எத்தனை பாராட்டினாலும் தகும். இனி வருங்கலங்களில் மஹாபாரதமோ, பொன்னியின் செல்வனோ இல்லை வேறேதும் சரித்திர புனைவுகளோ தூசு தட்டப்படலாம். அந்த ஒரே காரணத்திற்காக எத்தனை மிகைப்படுத்தல்கள் இருந்தாலும் இந்த பாகுபாலியைக் கொண்டாடலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s