லென்ஸ் (2017)

அடுத்தவர் அந்தரங்கத்தை ரசித்துக் காம இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் ஆபாசப்படப் பிரியர்களுக்குத் தமது அந்தரங்கத்தை அதே இணையத்தில் கண்டு களிக்கும் தைரியம் உள்ளதா? இதையே மையக் கருவாகக் கொண்டு தெளிவான திரைக்கதை எழுதித் துளியளவும் ஆபாசமே இல்லாமல் உணர்வு பூர்வமான படைப்பாக லென்ஸை வடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

இன்றைய இணையவுலகில் நாம் என்றுமே தனியாக இல்லை. எமது ஒவ்வொரு அசைவுகளும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விளையாட்டாக எடுக்கப்படும் hidden camera வீடியோக்கள், நண்பர்களிடையே பகிரப்படும் ஆபாசப் படங்கள் எல்லாம் யாரோ ஒருவருடைய வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ நாமும் எதோ ஒரு விதத்தில் அதற்குக் காரணமாகத் தான் இருக்கின்றோம் என்பதைப் பொட்டிலடித்தாற் போல் கூறியது மாத்திரம் அன்றி ஒவ்வொருவரும் தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்ய வேண்டிய தேவையையும் வலியுறுத்தி இருக்கிறது இந்த லென்ஸ்.

அர்விந்த், யோகன், ஏஞ்சல், சுவாதி என நான்கே கதாப்பாத்திரங்களை சுற்றியே நகரும் கதை. கூடவே ஜூலி எனும் கற்பனைக் கதாப்பாத்திரம்; வெறுமனே அர்விந்த் – யோகன் இடையான இணையதள உரையாடலாகவே நகரும் கதை; வழக்கமான தமிழ் சினிமா க்ளீஷேக்கள் ஏதுமில்லை. வலிந்து திணிக்கப்பட்ட பாடல்களில்லை. கதையில் இடமிருந்தும், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ஏதுமில்லை. எனில் போரடித்திருக்க வேண்டுமே? ம்ஹும் அது தான் இல்லை. காட்சிக்குக் காட்சி சுவாரசியமாக விரியும் முடிச்சுகளுடன் நகரும் திரைக்கதை கடைசி வரை இருக்கையுடன் கட்டிப் போட்டு விடுகிறது.

lens3

சைபர் செக்ஸ்க்கு அடிமையான அர்விந்த் மனைவி சுவாதிக்குத் தெரியாமல் தினமும் அறிமுகமில்லாத பெண்களுடன் நிர்வாணமாக செக்ஸ் சாட்டில் ஈடுபடுகிறார். ஒருமுறை மனைவி வீட்டில் இல்லாத வேளை அறிமுகமில்லாத ஜூலி பெண்ணிடமிருந்து முகப்புத்தக அழைப்பு (Facebook Request) வருகிறது. முகப்புத்தக சாட்டிங் ஸ்கைப் லைவ் சாட்டிங்காக மாறும் போது தான் தெரிகிறது அது பெண்ணல்ல ஆண் என்பது. யோகன் எனும் அந்தக் கதாப்பாத்திரம் தான் தற்கொலை செய்யும் லைவ் வீடியோவை அர்விந்த்தைப் பார்க்கும் படி நிர்பந்திப்பதிலிருந்து தான் படமே சூடு பிடிக்கிறது.

அரவிந்தின் மனைவி சுவாதி யோகனின் வசம் கடத்தி வைக்கப் பட்டிருக்கிறாள். கூடவே அர்விந்த் – ஜூலி இடையான நிர்வாண சாட்டிங் வீடியோவும் யோகனின் வசம் கிடைத்து விடுகிறது. இந்நிலையில் அர்விந்த் தப்பிக்க வேறு வழியே இல்லை. ஜூலி எனும் பெயரில் அர்விந்துடன் சாட்டிங்கில் ஈடுபட்ட பெண் யார்? அது அரவிந்தின் மனைவி ஸ்வாதியா? இல்லை யோகனின் மனைவி ஏஞ்சலா? அரவிந்தின் மனைவி சுவாதி யோகனிடம் சிக்கிக் கொள்வது எப்படி? யோகன் – சுவாதி இடையே ஏதும் தொடர்புண்டா? ஏஞ்சலின் பின்னணி என்ன? அரவிந்தை யோகன் பழி வாங்கக் காரணம் என்ன? என ஏகப்பட்ட கேள்விகளுடன் மாறுபட்ட கோணத்தில் நகர்கிறது திரைக்கதை.

கதாப்பாத்திரத் தேர்வும் வடிவமைப்பும் படத்தின் மிகப் பெரிய பலம். முக்கிய பாத்திரமான அரவிந்தாக இயக்குனர் ஜெயப்பிரகாஷே நடித்திருக்கிறார். பல இடங்களில் ஒரே காட்சியில் இருவேறுபட்ட மனநிலையை வெளிப்படுத்தும் சவாலான வேடம். குறிப்பாக ஒரு காட்சியில் முந்தைய நாள் பதிவு செய்யப்பட்ட செக்ஸ் சாட்டிங் வீடியோ ஓடிக் கொண்டிருக்கும். அதே காட்சியில் முந்தைய நாள் சந்தோஷமாக அர்விந்த் கொடுத்த உத்தரவுகளை ஒவ்வொன்றாக இன்றைய தினம் கடத்தப்பட்டு மயக்க நிலையில் உள்ள ஜூலியின் உடலில் நிறைவேற்றிக் கொண்டிருப்பார் யோகன். மெல்ல மெல்ல அவள் ஆடைகள் களையப்படும் வேளை அன்று ஏற்பட்ட இச்சை இன்று இல்லை அர்விந்திடம். கடைசியில் ஜூலியின் முகமூடி களையப்பட்டு உண்மை தெரியும் அக்கணத்தில் அவரது நடிப்பு.. சாதித்து விட்டார்.

Lens5

யோகனாக ஆனந்தசாமி தன் பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். நிச்சயம் இந்த முறை விருதுக்கான பட்டியலில் அவர் பெயர் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. லைவ் சாட்டிங்கில் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டும் சைக்கோவாக அறிமுகமாகி பின்னர் அவரது பின்புலம் மெல்ல மெல்ல விரியும் போது கலங்க வைக்கிறது. ஜூலியின் உடலை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. ஆனால் உன் மனைவி சுவாதியின் உடலை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என கூறி முகமூடியைக் கழற்றும் காட்சி மிரட்டலின் உச்சம். ப்ளாஷ்பேக்கில் காவல் நிலையத்தில் தனது மனைவியுடனான உடலுறவுக் காட்சிகள் 2Lips எனும் பெயரில் பதிவேற்றப்பட்ட இணையத்தளங்களின் முகவரைகளைச் சேகரித்துக் கொடுத்து சைபர் கிரைம் பிரான்ச்சுக்கு அனுப்பும் படி கேட்டுக் கொள்வதும், காவல் நிலையத்திலிருந்து வெளியேறும் போது முகத்தை மூடிக் கொண்டு “வெளிய தலை காட்ட முடியல சார்!” எனத் தனது இயலாமையை வெளிப்படுத்தும் காட்சிகளில் கலங்க வைக்கிறார் ஆனந்தசாமி. கதைக்கு வலு சேர்க்கும் வகையில் வன்பொருள் பொறியாளராக அவரது யோகன் பாத்திரம் அமைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு.

யோகனின் மனைவியாக வரும் ஏஞ்சல் பாத்திரம் தான் கதையின் திருப்புமுனை. வாய் பேச முடியாத அவள் குணாதிசயத்தைப் பார்வையாளர்களுக்குத் தெரியாமலே கடைசி வரை நகர்த்தி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். முன்னரே அதைக் கூறியிருந்தால் அவள் மேல் ஒரு பரிதாபம் வலிந்து திணிக்கப் பட்டிருக்கும். அது கதைக்கு அவசியமில்லை என்பதை உணர்த்தே இருக்கிறார் இயக்குனர்.

தன் அந்தரங்கத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் உண்மையை உணர்ந்து ஏஞ்சல் அனல் மேல் புழுவாகத் துடிக்கும் அந்தக் காட்சி நிச்சயம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் சுடும். வெளிச்சத்துக்கு பயந்து இருளையே துணையாகக் கொண்டு புழுங்கும் அந்தக் காட்சியில் “I’m scared of light.. We are being watched.. It’s my fault.. Our child will see someday..” எனப் பேப்பரில் எழுதி கணவனிடம் தன்னிலையை வெளிப்படுத்தும் போது நொறுங்கி விடுவது அவள் இதயம் மாத்திரமல்ல நாமும் சேர்ந்து தான். கர்ப்பிணியான ஏஞ்சல் தன் முடிவைத் தானே தேடிக் கொள்ளும் தருனத்திற்க்கு முன்னர் அவள் உலகத்திற்கு சொல்லும் சேதி.. “You all were watching us without any guilt.. At least if you didn’t upload that video, my life will be normal.. My fear killed my baby.. ” பார்ப்பவர் மனதில் ஒருவிதக் குற்றவுணர்ச்சியை விதைத்து விட்டுத் தான் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள் அந்த தேவதை. அந்த இடத்தில் ஏஞ்சலாக நடித்திருக்கும் அஸ்வதி லாலின் நடிப்பு அருமை.

lens4

படத்தில் தெரிந்த ஒரே முகம் ஸ்வாதியாக நடித்திருக்கும் மிஷா கோஷல் தான். படம் நெடுகவே வந்தாலும் மயக்கத்திலேயே இருப்பதால் இரண்டே காட்சிகளில் தான் நடிப்பதற்கு வாய்ப்பு; ஆனாலும் மனதில் நிற்கிறார். ரொம்ப நாட்களுக்குப் பிறகு பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்குமார். ஏஞ்சலின் காட்சிகளில் மனதைப் பிழிகிறது பின்னணி இசை; யுகபாரதியின் வரிகளில் ஹரிணி பாடிய “மூங்கில் நிலா பாடும் புது ஆராரோ” ஒரே பாடல் என்றாலும் கூட பிரமாதம். படத்தொகுப்பும் பக்க பலம்.

படம் முழுவதும் லைவ் சாட்டிங்கிலேயே நகர்வதால் அறை வெளிச்சத்திலேயே படமாக்கப் பட்டுள்ளமையால் இயல்பாகப் படத்துடன் ஒன்றிப் போக முடிகிறது. பதிவு செய்யப்பட்ட வீடியோ சாட்டை மையமாகக் கொண்டு அர்விந்துடன் யோகன் ஆடும் அந்த rewind game காட்சிப்படுத்திய விதம் அருமை. பார்வையாளர்களைக் குழப்பாமல் லைவ் சாட்டிங்கிலேயே recorded வீடியோவைக் காட்டி வித்தியாசமான கோணத்தில் படமாக்கி இருப்பார் ஒளிப்பதிவாளர் கதிர். மேலும் மூணாறில் நடக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நகரும் ஏஞ்சலின் பகுதிகளில் ஒளிஓவியம் சிறப்பு. தேவையற்ற காட்சிகள் என்றேதுமில்லை. கதைக்கு எது அவசியமோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இணையத்தில் 2Lips வீடியோவைப் பார்த்த இளைஞர்கள் ஏஞ்சலை நேரில் பார்க்கும் போது அணுகும் முறை அந்த நிலையில் ஏதுமறியாத அந்தப் பெண்ணின் நிலையைக் காட்சிப்படுத்திய விதத்திற்கு சபாஷ் போடலாம்.

“இப்பெல்லாம் கதவை மூடிட்டு எதைப் பண்ணாலும் அது கடைத் தெருவுக்கு வந்துடுது..”, “எமோஷனல் ஆக்கிரப்போ தான் ஒருத்தனோட மனசாட்சி முழிச்சிக்கும்..”, “ஏஞ்சல் செத்திட்டா.. ஆனா நீங்க.. உங்க இருண்ட மனசில.. வக்கிரம் பிடிச்ச மூளையில தினம் தினம் அவ அழுகின பொணத்த ரேப் பண்ணிக்கிட்டு தாண்டா இருக்கீங்க..”, “Life is a question paper but the answer is yours..” எனக் கவனிக்க வைக்கும் வசனங்கள் ஏராளம். எத்தனை பேர் இந்த வீடியோவைப் பார்த்திருப்பாங்க.. என்னை மட்டும் ஏன் சித்திரவதை பண்றா? என அர்விந்த் கேட்க, “புழுவுக்கு ஆசைப்படற மீன் தான் தூண்டில்ல முதல்ல சிக்கும்” என யோகன் பதிலடி கொடுக்கும் அந்தத் காட்சி செம.

கடைசி ஷாட்டில் அரவிந்தின் சுயரூபம் தெரிந்ததும் அதுவரை அவருக்கு உதவி செய்த அவர் நண்பர் அரவிந்தின் முகத்தில் காறி உமிழ்வார். அந்த எச்சில் நம்மை நோக்கி உமிழப்பட்டது என்பதை உணர வெகு நேரம் தேவைப்படாது. படம் பார்த்த பிற்பாடு அடுத்த முறை ஆபாசப் படம் பார்க்க நினைக்கையில் நாமும் ஏதோ ஒரு வகையில் இந்தச் சமூகச் சிக்கலுக்குக் காரணமாக இருக்கின்றோமோ எனும் குற்றவுணர்ச்சி உள்ளூரத் தடுக்கும். அதுவே இயக்குனரின் வெற்றி. அந்த வகையில் Lens – பாராட்டப் பட வேண்டிய முயற்சி; A very neat presentation; கண்டிப்பாக திரையில் பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s