போங்கு (2017)

செய்யாத தவறுக்காக திருட்டுப் பழியேற்று வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நிர்கதியாய் நிற்கும் இளைஞர்கள், தொலைத்த இடத்திலேயே வாழ்க்கைத் தேடும் பொருட்டு ஆடும் ஆட்டம் தான் இந்த போங்கு. ஒருபுறம் நட்டி என்கிற நடராஜன் மறுபுறம் அதே திருட்டுப் பின்னணி என்றவுடன் சதுரங்க வேட்டை படம் ஒப்பீட்டளவில் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அந்த எதிர்பார்ப்பே படத்தின் ஒட்டுமொத்த பலமும் பலவீனமும்.

கார் கம்பெனியில் வேலை பார்க்கும் நட்டி, அர்ஜுனன், ரூஹி டெலிவரி செய்ய வேண்டிய கார் மர்ம கும்பலால் லாவகமாகக் களவாடப்பட அவர்களது வேலையும் பறிபோய் நட்டி – அர்ஜுனன் சிறை செல்லவும் நேர்கிறது. கூடவே அவர்களது ப்ரோபைலும் பிளாக் லிஸ்ட் செய்யப்படுவதால் மீண்டும் வேலை கிடையாத திண்டாட்ட நிலை. சந்தர்ப்ப வசத்தால் வேறொரு கார் கடத்தல் கும்பலிடம் வேலைக்கு சேர்க்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக முதல் போனியிலேயே திருடிய காரில் கறுப்புப் பணம் இருந்து விட பயணம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் மதுரை பிரபல ரவுடி பாண்டியின் காரைக் கடத்த முற்படுகையில் களவாடப்பட்ட அந்த முதல் காரின் பின்னணி தெரிய வருகிறது. காணாமல் போன அந்தக் காரின் பின்னணி என்ன? அதைக் களவாடியது யார்? மதுரையில் சந்திக்கும் பெண்ணுக்கு நட்டி உதவுவதன் பின்னணி என்ன? என்பதை நீட்டி முழக்கிச் சொல்லி இருக்கிறார் புதுமுக இயக்குனர் தாஜ்.

bon2.jpg

சதுரங்க வேட்டையின் வெற்றிக்குக் காரணமே சுவாரசியமான அந்த திருட்டுக் காட்சிகளும் பின்பாதியில் வரும் உணர்வு பூர்வமான கதைக்களமும் தான். இந்தத் திரைக்கதையில் அது தான் மிஸ்ஸிங். கார் திருடும் காட்சிகளில் எந்த வித சுவாரசியமும் இல்லை. என்ன தான் நட்டி & கோ வின் கார் திருட்டுப் பின்னணிக்கு வலுவான காரணத்தை இயக்குனர் முன் வைத்தாலும் அதை நியாயப்படுத்தும் அளவிற்கு அழுத்தமான காட்சியமைப்புகளும் இல்லை.

கதையின் நாயகனாக ஒளிப்பதிவாளர் நட்டி (எ) நடராஜன் கதாப்பாத்திரத்திற்கு சரியான தேர்வு; சதுரங்க வேட்டையில் அதே கதாப்பாத்திரத்தின் நீட்சி தான். இந்த முறை நடனம், சண்டைக் காட்சிகள் என சோலோ ஹீரோவாக தன்னை நிலை நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். கட்டம் கட்டி நிதானமாகக் காரைத் தூக்குவது, தன்னால் வேலையிழந்த ராமதாஸிற்கு தன் கும்பலிலேயே வேலை கொடுப்பது, வில்லனுடன் சவால் விடும் காட்சிகளில் எல்லாம் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். அதிலும் “எனக்கு நீ ஊதுபத்தியா காட்டினால்ல.. நான் உனக்கு சம்பிராணியே கொழுத்திறன் பார்” என வில்லனிடம் சவால் விடும் காட்சி நச்.

கதாநாயகி ரூஹி சிங்கிற்குப் பெரிதாக வேலையில்லை. துணைப் பாத்திரம் பிரியாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் கூட கதையில் பெரிதாக இவருக்கு இல்லை. போகுமிடமெங்கும் CCTV கேமராவை ஹாக் செய்து நிறுத்துவத்துவதற்காகவே பயன்பட்டிருக்கிறார். அவரது கதாப்பாத்திரத்திரம் சரியாக வரையறுக்கப் பாடாததும் ஒரு குறையே. டெலிவரி சேவையில் பணியாற்றிய அவருக்கு எப்படி ஹாக்கிங்கில் முன் அனுபவம் இருந்திருக்க முடியும் என்பதையும் இயக்குனர் தெளிவுபடுத்தவில்லை.

bon4.jpg

படத்தில் கவனிக்க வைத்த பாத்திரமென்றால் அது காமெடியனாக வரும் ராமதாஸே. சமீபத்தில் வந்த மாநகரம் படத்தில் வின்னிங்ஸ் பாத்திரத்தில் கலக்கி இருப்பார். வெகுளித் தனமான கதாப்பாத்திரம்; நட்டி & கோ வின் முதல் திருட்டினால் காவலாளி வேலையை இழந்து நிற்பது, பின் அதே கும்பலிடம் தெரியாமல் வாகன ஓட்டியாக வேலைக்குச் சேர்வது, தன்னையறிமலே ஒவ்வொரு திருட்டுக்கும் துணை போவதெனக் கலக்கி இருக்கிறார். அதிலும் உச்சக்கட்ட சண்டைக் காட்சியில் ஏதுமறியாமல் காதிலே ஹெட்போனை மாட்டிக் கொண்டு சாம்பார் வைக்கும் காட்சி கலகல எபிசோட்.

வில்லனை ஏதோ காமெடிபீசாகக் காட்டுகிறார்கள். ஹீரோ – வில்லன் இடையான மோதலே இரண்டாம் பாதியின் மையம் என ஆனதன் பிற்பாடு வில்லன் பாத்திரத்தை அத்தனை வலுவானதாக அல்லவா அமைத்திருக்க வேண்டும்? வெறும் 5 பேர் கொண்ட டீமை வைத்துக் கொண்டு வில்லனின் கோட்டைக்குள் நுழைந்து ஒரே சமயத்தில் 10 கார்களைக் கடத்துவதெல்லாம் சுத்த ஹம்பக். கடைசி ஒற்றைக் காரைக் காப்பாற்ற அத்தனை பெரிய ரவுடி வெறுமனே ஒரு மெக்கானிக் சாம்ஸை நம்புவது அவரது கதாப்பாத்திரத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

அர்ஜுனனின் ஒன் லைனர்கள் அவ்வப்போது கலகலப்பூட்டுகின்றன. அசிஸ்டென்ட் கமிஷ்னராக அதுல் குலகாரணியைப் பரபரப்பாக அறிமுகப்படுத்துகிறார்கள். அவராவது ஏதாச்சும் கண்டுபிடிப்பார் என்று பார்த்தால் கிளைமாக்ஸில் வந்து அட்வைஸ் செய்து விட்டுப் போகிறார். மயில்சாமியும் ஒரு காட்சியில் வந்து போகிறார் அவ்வளவே.

bong3.jpg

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ஆலாப் ராஜு – டிம்மி பாடிய “வானம் அதை எட்டிப் பார்க்க ஜன்னல் இல்லை” பாடல் மனதில் நிற்கிறது. இரண்டாம் பாதியில் இரண்டு ஐட்டம் பாடல்களைப் போட்டுக் கடுப்படிக்கிறார்கள். சின்மயி பாடிய வெள்ளைக் குதிரை பாடல் கேட்கும் ரகம் தான் என்றாலும் placement சரியில்லை. பின்னணி இசை ஓகே ரகம். ஒளித்தொகுப்பும் கலை இயக்கமும் படத்திற்கு பக்க பலம்.

“சம்பவங்கள் நிறையப் பண்ணா தான் சரித்திரம் இடம்பிடிக்க முடியும்.. அதுக்காக ஓடணும்.. ஓடிக்கிட்டே இருக்கனும்”, “எந்த இடத்தில வாழ்க்கையைத் தொலைச்சீங்களோ அந்த இடத்தில வாழ்க்கையைத் தேடுறது தான் புத்திசாலித்தனம்” போன்ற வசனங்கள் கொஞ்சம் கவனிக்க வைக்கின்றன. முதல் தடவை வில்லனிடமிருந்து கார்களைத் தூக்கிய நட்டி வில்லனின் பின்புலம் தெரிந்த பின்னரும் தன் வாழ்க்கையைத் திசை மாற்றிய அந்தக் கடத்தப்பட்ட காரை விட்டு வருவதும் மீண்டும் அதே காருக்காக வில்லனுடன் பந்தயம் கட்டுவதும் தேவையற்ற திணிப்புக்கள்.

மொத்தத்தில் போங்கு – சதுரங்க வேட்டை என்னும் எதிர்பார்ப்புடன் தியேட்டருக்குச் சென்றால் ஏதோ அழுகுணி ஆட்டம் ஆடி இருக்கிறார்கள்.

2 Comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s