Classics of Tamil Cinema 1: பசி (1979)

பகட்டு வாழ்க்கைக்காக சமரசங்களோடு போராடும் நடுத்தர வர்க்கம், வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட நிலையிலும் தன்மானத்திற்காகப் போராடும் ஏழை வர்க்கம், இதற்கு மத்தியில் நாளாந்த வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டாகும் ஒவ்வொரு விதமான பசியும் தெரிந்தோ தெரியாமலோ இன்னொருவரை ஏய்த்துத் தான் பிழைக்கிறது. இந்தச் சமூக அவலத்தை முடிந்தவரை நேர்மையாகச் சுட்டிக் காட்டியமையே பசி படத்தின் உண்மையான வெற்றி.

இயக்குனர் துரை எப்பொழுதும் கதை நடக்கும் இடத்திலிருந்தே திரைக்கதை எழுதிப் பழக்கப்பட்டவர். ஒருமுறை குப்பத்து மக்களின் வாழ்வியலைப் படம்பிடிக்க எண்ணி சென்னை மெரீனாவை ஒட்டிய சேரிப்புறத்தில் அமர்ந்து கதையெழுதி விட்டு நள்ளிரவுப் பொழுதில் ரிக்ஷா மூலம் வீட்டிற்குப் பயணிக்கையில், அந்த ரிக்ஷா ஓட்டுனர் எதேச்சையாகப் பகிர்ந்து கொண்ட சொந்தக் கதை தான் பசி எனும் பெயரில் படமானது.

pasi2.jpg

போதைப்பசியில் தினம் தினம் வருமானத்தை இழந்த விட்டு வரும் கையாலாகாத தந்தை, நோய்ப்பசியில் அல்லலுறும் தாய், இதற்கிடையில் சகோதர சகோதரிகளைக் காப்பாற்றும் பொறுப்பு கதாநாயகி குப்பம்மாவின் தலையில் விழ, தினக்கூலிக்குப் கடதாசி பொறுக்கும் வேலைக்குச் செல்கிறாள். கடன் என்று கேட்டால் கையைப் பிடிக்கும் காமாந்தகர்களுக்கு மத்தியில் திக்கித்தினறித் தன்மானத்துடன் வாழ்கிறாள். இந்த நிலையில் அவளது வறுமைப் பசியைத் தனக்கு சாதகமாக்கி சிநேகிதம் கொள்கிறான் ஒரு லாரி டிரைவர். காதல் பசியால் அவன் விரித்த மோகவலையில் சிக்குண்டாள் அந்த மாது. விஷயம் அறிந்து மானப்பசியால் உயிர் துறக்கிறாள் அவள் தாய்.

அந்தக் காமுகன் ஏற்கனவே மணமானவன் எனும் உண்மை தெரிய வருகிறது. இருந்தும் ஏதுமறியா அபலைப் பெண்ணின் வாழ்க்கையைக் கருத்திற் கொண்டு தன்னை ஏமாற்றிய உண்மையை மறைத்து ஆபத்திலிருந்து அவனைக் காப்பாற்றுகிறாள். அந்தக் குற்றவுணர்ச்சியில் மெல்ல மெல்ல அவன் மனமும் மாறுகிறது; வலிந்து அவன் செய்ய நினைக்கும் உதவிகளையும் ஏற்க மறுக்கிறது அவள் தன்மானம். ஒரு கட்டத்தில் அவன் மனைவிக்கு உண்மை தெரிய வர குப்பம்மாவைத் தேடிச் செல்கிறார்கள் இருவரும். அவளோ பிரசவத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் காலத்தின் மரணப்பசிக்கு இரையாகிறாள். அவள் குழந்தை வயிற்றுப்பசிக்காக அழும் காட்சியுடன் படம் முடிகிறது.

pasi4.jpg

 

அந்தச் சேரிப்புறக் குப்பம்மாவாகப் படத்தைத் தாங்கியிருப்பார் ஷோபா என்கிற மஹாலஷ்மி. ஆம் அது தான் அவரது இயற் பெயர். 1966 ஆம் ஆண்டு சந்திரபாபு இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். குறுகிய காலம் மாத்திரமே நடித்திருந்தாலும் ஒரு வீடு ஒரு உலகம், அழியாத கோலங்கள், பசி, ஏணிப்படிகள், மூடுபனி என ஷோபா எனும் தேவதை தமிழ் திரையுலகில் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலாது. உதவி என்று பல்லிளித்தால் உபகாரத்திற்காக கையைப் பிடிக்கும் ஒரு சில ஆண்களுக்கு மத்தியில் தன்மானத்திற்காகப் போராடும் கதாப்பாத்திரம்; ஒரு கட்டத்தில் விஜயன் தன்னை ஏமாற்றிய உண்மை தெரிய வர உணர்ச்சிப் பிழம்பாய் வெடிக்காமல் நிதானமாக அலட்டலே இல்லாமல் பிரச்சினையைக் கையாளும் விதம் அருமை.

கடதாசி பொறுக்கும் காட்சியொன்றில் ஷோபா – சத்யா இடையே நிகழும் யதார்த்தமான சம்பாஷணை: “முன்னாடியெல்லாம் கழுதை மட்டும் தான் தின்னுகிட்டு இருந்திச்சு. இப்போ ஆடு மாடெல்லாம் தின்ன ஆரம்பிச்சிடுச்சு. பார்த்துக்கினே இரு.. இன்னும் கொஞ்ச நாள் போனா மனுஷனும் தின்ன போறான்..” மனிதர்களின் நவநாகரீகப் பசி புற்றரையை மேய வேண்டிய கால்நடைகளைப் பேப்பர் தின்னுமளவிற்குப் பாதித்துள்ளதை அவர்கள் மட்டத்திலேயே விவாதிப்பார்கள்.

pasi5.jpg

கதையின் ஓட்டத்தில் மனத்தைத் தொடும் இன்னுமோர் பாத்திரம் விலைமாதுவாக வரும் பிரவீனா. ஒருபக்கம் நெறி தவறிய மகளுக்காக உயிர் துறக்கும் தாயாக ஷோபாவின் தாய் கதாப்பாத்திரம்; மறுபுறம் அதற்கு நேரெதிராக பகட்டு வாழ்க்கைக்காக மகளையே விலைமாதாக அனுப்பும் பிரவீனா தாய் கதாப்பாத்திரம்; என வித்தியாசப்படுத்தி இருப்பார் கதாசிரியர் துரை. மாறுபட்ட தளத்தைச் சேர்ந்த இந்த தாய்க் கதாப்பாத்திரங்களின் உளவியல் வேறுபாடு தான் அந்த விலைமாதுவுக்கு ரிக்ஷா ஓட்டும் ஷோபாவின் தந்தை டெல்லி கணேஷிற்கு வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்தும்.

ஒரு காட்சியில் குப்பத்துக்கு வர விரும்பும் பிரவீனாவிடம் “நீ அங்கெல்லாம் வரதம்மா.. சாக்கடை நாத்தம் தாங்க முடியாது.” என ஷோபா மறுதலிக்க, “நீ சாக்கடைக்குப் பக்கத்தில தான் வாழுற.. நான் சாக்கடையில தான் வாழ்ந்துக்கிட்டிருக்கன். உங்கப்பன் உயர்த்திப் பேசுற அளவுக்கு நான் உயர்ந்தவ இல்ல. நான் கட்டிக்கிட்டிருக்கிற புடவை மட்டும் தான் வெள்ளை.” என சிரித்துக் கொண்டே சொல்வார்; 2 – 3 காட்சிகளில் விவரிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தை இரண்டே வரிகளில் காட்சிப்படுத்தி இருப்பார்.

pasi6.jpg

இந்தப் படம் ஸ்டூடியோவில் ஒத்திகை பார்க்கப்பட்டு நிஜமான சேரிப்பகுதிகளில் வெறும் 22 நாட்களில் படமாக்கப்பட்டது. படத்தில் பாடல்கள் என்றேதுமில்லை; பின்னணி இசையை சங்கர் – கணேஷ் சிறப்பாகக் கொடுத்திருப்பார்கள். நடிகர்களுக்கும் ஒப்பனை கிடையாது; புதுமுகங்களால் மட்டுமே இயல்பான நடிப்பைத் தர முடியும் என்பது துரையின் எண்ணமாக இருந்தது; துணை நடிகர்களான பிரவீனா, செந்தில், சத்யா, நாராயணன் எல்லோருக்கும் இது முதல் படம். படம் தயாரானதே தவிர படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. குப்பைத்தொட்டியில் எடுத்த இந்தப் படம் ஓடாது என்று கட்டியம் கூறினார்கள். வேறுவழியின்றி படத்தை துரையே வெளியிட வசூலில் வாரிக்குவித்தது மாத்திரமன்றி விருதுகளையும் அள்ளித் தந்தது. சமகால அரசியலைச் சாடி ஒடுக்கப்பட்டவர்களின் குமுறலாக சமரசமில்லாத ஜனரஞ்சகமான கலைப்படமாக அமைந்திருந்தது பசி.

கோதைக்கோ மானப்பசி
குழந்தைக்கோ வயிற்றுப்பசி
காதகனுக்கோ காமப்பசி
காலத்திற்கோ மரணப்பசி

இது படவெளியீட்டு தினத்தன்று விளம்பரத்துக்காக துரையினால் எழுதி வெளியிடப்பட்ட கவிதை; இது தான் படத்தின் கதைச்சுருக்கம்; படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் ஒவ்வொரு விதமான பசியையும் இந்தக் கவிதை மூலம் வகைபிரித்துக் காட்டியிருப்பார் இயக்குனர். இந்தப் படத்திற்காக ஷோபாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது. இடையே பாலு மஹேந்திராவுடனான திருமணம் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த சோகம் காரணமாக பசி படத்தின் 100 வது வெற்றி நாளுக்கு முதல் நாள் ஷோபா தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. ஷோபாவிற்கு அஞ்சலி செய்யும் முகமாகப் படத்தில் வெற்றி விழாவை ரத்து செய்தார் இயக்குனர் துரை.

3 Comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s