சத்ரியன் (2017)

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலனின் காதல் போன்ற ஜனரஞ்சகமான படைப்புக்களைத் தந்த இயக்குனராயிற்றே எனும் நம்பிக்கையில் படத்திற்குப் போனால் கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு; நடுவுல நாம விடணும்னு நினைச்சாலும் நம்ம அது விடாது என்கிற தமிழ் சினிமாவின் ஆதிகால பார்முலாவையே தன்னுடைய பாணியில் உணர்வு பூர்வமான அதிரடிப் படமாகத் தர முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். கேங்ஸ்டர் படம் என்றாலே பொதுவாக மதுரை என்றாகி விட்டதன் பிற்பாடு கொஞ்சம் வித்தியாசப்படுத்தணுமே என்பதற்காக திருச்சியைத் தெரிவு செய்திருக்கிறார். ஆனால் கதைக்களத்தை மட்டும் மாற்றி என்ன பிரயோசனம் இயக்குனரே? கதையையே அல்லவே மாற்றி இருக்க வேண்டும்.

சமுத்திரம் – சங்கர் எனும் இரண்டு ரவுடி கும்பலுக்குள் மோதல்; அவங்களுக்குள்ளயே அடிச்சிக்கிட்டு சாகட்டும் எனப் போலீசும் மெத்தனமாய் விட்டுவிட சமுத்திரத்தை கொன்று விட்டு அவரோட இடத்தை சங்கர் பிடிக்க சங்கருக்கும் சமுத்திரத்தின் கோஷ்டியில் இருந்த விக்ரம் பிரபுவிற்கு லடாய்; மறுபக்கம் விக்ரம் பிரபுவிற்கு சமுத்திரத்தின் மகளான மஞ்சிமாவிற்கும் காதல்; இது பிடிக்காமல் அந்தக் குடும்பம் சமுத்திரத்தின் கோஷ்டியில் இரண்டாம் கட்டத் தலைவனான ரவியிடம் போய் நிற்க ரவிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் இடையே மோதல்; இந்த இரண்டு கோஷ்டிக்குள்ளே சிக்குண்ட காதலின் கதியென்ன என்பதை நீட்டி முழக்கிச் சொல்லி இருக்குகிறார் இயக்குனர்.

sat2.jpg

விக்ரம் பிரபுவின் உயரமும் கூர்மையான பார்வையும் ஆக்க்ஷன் காட்சிகளுக்கு அட்சர பொருத்தம். பிடித்திருந்தும் மஞ்சிமாவை விட்டு விலகியே நிற்பது, மஞ்சிமாவின் வேண்டுகோளிற்கு இணங்கி கத்தியில்லாமல் பதற்றத்துடன் ஒரு நாளைக் கழிக்கும் காட்சி, பெண் கேட்க வந்த இடத்தில் பொறுமையிழந்து பழக்க தோஷத்தில் கத்தியை எடுக்கும் காட்சிகளில் ஸ்கோர் செயகிறார். கிளைமாக்ஸில் அண்ணனாகப் பாவித்த ரவியைக் குத்தி விட்டு ரவுடீசியத்தை விட்டு விடுமாறு அறிவுறுத்தும் காட்சிகளில் இயல்பான நடிப்பில் கவர்கிறார். ஆனால் காதல் காட்சிகளிலும் அதே தோரணையுடன் முகத்தை வைத்திருப்பது தான் கொஞ்சம் நெருடல்.

படத்தின் மிகப் பெரிய ஆறுதல் நாயகி மஞ்சிமா தான். சுவாரஸ்யமே இல்லாத காதல் காட்சிகளில் கூட அவரது நடிப்பு தான் உட்கார்ந்து பார்க்க வைக்கிறது. “நேற்று முழு நாள்ல கத்தியில்லாம ஒரு பத்து நிமிசமாச்சும் நீ பயப்படல.. அப்போ மத்தவங்க உன்கிட்ட காட்டிற மரியாதையெல்லாம் உன் மேல வச்சிருக்கிற பயமா? இல்ல உன் கத்தி மேல வச்சிருக்கிற பயமா?” என நிதர்சனத்தை விக்ரம் பிரபுவுக்குப் புரியவைக்கும் காட்சிகளில் கவர்கிறார். ஒருபுறம் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அம்மாவிடம் கெத்து காட்டி விட்டு, “அமைதியா சொன்னாதான் எங்கம்மா ஒதுக்க மாட்டாங்களே..” என வருத்தப்படும் காட்சிகளில் மஞ்சிமாவுக்கு சபாஷ் போடலாம்.

sat5

காட்சிகள் கதையின் போக்கில் எதோ நகர்கின்றனவே தவிர திரைக்கதையில் எந்தவித சுவாரசியமும் இல்லை. தனது பாதுகாப்பிற்க்காக வரும் ரவுடியான விக்ரம் பிரபுவின் காதல் வர மஞ்சிமாவிற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை. இரண்டு மாதம் காவலுக்கு வரும் ரவுடியின் மேல் தினமும் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதால் காதல் வந்து விடுகிறதாம். ஒரு நாள் அவனைக் காணாது விடினும் மனம் திக்கித்துப் போவது; அது தான் காதலெனக் கூட இருக்கும் தோழிகள் ஒத்தூதுவதும்; ஓடுற பஸ்ஸில் ஹீரோ ஏறியதும் நாயகி முகம் மலர்வது; ஸ்ஸப்பா.. இந்த மாதிரிக் காட்சிகள் எல்லாம் புதுமுக இயக்குனர்களே இப்போது வைப்பதில்லை.

சரவணன் மீனாட்சி புகழ் கவின் மற்றும் ரியோவை நடிக்க வைத்திருக்கிறார்கள். கவினுக்கும் ஐஸ்வர்யா தத்தாவிற்குமிடையே கதைக்கு சம்பந்தமே இல்லாமல் தனியான காதல் ட்ராக் நகர்கிறது. அது சுவாரசியமாக இருந்தாலும் கடைசி வரை அந்தக் காதலுக்கு என்னானது என்பதைச் சொல்லாமல் தொங்கலிலேயே விட்டு விட்டார் இயக்குனர். ஆனால் மருத்துவக் கல்லூரி மாணவராக வரும் கவினுக்கு நல்ல ரோல். ஐஸ்வர்யா இடையான ஊடல், சமூகப் பொறுப்பில்லாத டாக்டருடன் வாக்குவாதப் படுவது, விக்ரம் பிரபுவிற்கு உதவப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். ரியோவை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.

sat4

யோகிபாபு வரும் காட்சிகள் தான் கொஞ்சம் கிச்சுக்கிச்சு மூட்டுகின்றன என்று பார்த்தால் அவரையும் இரண்டு காட்சிகளுக்கு மேல் காண முடியவில்லை. அமைதியாகப் பெண் கேட்க வரும் விக்ரம் பிரபுவிடம் ஏடாகூடமாகப் பேசி விட்டு பதிலுக்கு குரலை உயர்த்தி பேசியதும் நிலைகுலைந்து விழும் யதார்த்தமான அண்ணனாகக் கவர்கிறார் சௌந்தரரராஜா. ரவியாக நடித்திருக்கும் விஜய் முருகனின் பாத்திரமும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் நரேன், அருள்தாஸ், ஷரத் போன்றோரை வீணடித்திருக்கிறார்கள்.

படத்தின் உண்மையான ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா தான். படம் தொடங்கி 20 நிமிடங்கள் கழித்து டைட்டில் கார்டும் அதன் பின்னணி இசையும், கத்தியில்லாமல் கழியும் அந்த ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பரபரப்பிற்குப் பஞ்சமில்லை. சாதாரணமாக நகரும் கட்சிகளுக்குக் கூடத் தனது பின்னணி இசையால் அந்த உணர்வுகளைக் கச்சிதமாக ஊடுகடத்தி இருக்கிறார் யுவன். தீபக்கின் குரலில் அட்டகாசமான டிரம்ஸ் பீடுடன் இடம்பெறும் ஆரம்பப் பாடல் “சூடா ஒரு சூரியன் செஞ்சு; மற்றும் யுவன் பாடிய “பாறை மேலே தூறல் போல” இனிமையான மெலடி; வைரமுத்து வரிகளில் விஜய் ஜேசுதாஸ் பாடிய “மைனா ரெண்டு..” பாடல் கச்சிதமான பிளேஸ்மென்ட். வித்தியாசமான ஜானரில் நகரும் பாடல்களைக் கொண்ட அருமையான இசைத்தொகுப்பு.

வசனங்கள் ஒரு சில இடங்களில் கவனிக்க வைத்தாலும் பல இடங்களில் கேட்டுக் கேட்டுச் சலித்தவையாக இருப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் போரடிக்கவே செய்கிறது. இடைவேளைக்கு முந்தைய சண்டைக் காட்சி படமாகப் பட்ட விதம் அருமை. ஹீரோவை ஊரே அஞ்சும் ரவுடியாக வசனங்களில் சித்தரிக்கிறார்களே தவிர அதை நியாயப்படுத்தும் காட்சிகள் ஏதுமில்லாதது பெருங் குறை. பின்பாதி 20 நிமிடங்கள் விறுவிறுப்பாக நகர்கின்றன. ஒளிப்பதிவும் பக்க பலம். சுவாரசியமான காட்சிப்படுத்தல்கள் இருந்திருந்தால் படத்தை இன்னும் ரசித்திருக்கலாம்.

மொத்தத்தில் சத்ரியன் – விஜயகாந்தின் ப்ளாக்பாஸ்டர் படத் தலைப்பினை வீணடித்திருக்கிறார்கள். அடப் போங்கப்பா…

Sathriyan Trailer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s