ரங்கூன் (2017)

இயற்கையால் விதிக்கப்பட்ட பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவே வாழும் வாழ்க்கையை மட்டுமே மனிதனால் தீர்மானிக்கப்படுகிறது; எப்படி வாழ வேண்டும் என்பதை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அது சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளுமே தீர்மானிக்கின்றன. இதில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இல்லை. எல்லோருமே அதிர்ஷ்டத்தைத் தேடி அலையும் துரதிஷ்டசாலிகள் தான். இழப்பு, சந்தோசம், காதல், நட்பு, துரோகம் எனப் பார்த்துப் பழகிய கதை தான். எடுத்துக் கொண்ட கதைக்களமும் அது சொல்லப்பட்ட விதமும் தான் படத்தை வித்தியாசப்படுத்தி இருக்கிறது.

பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வட சென்னையில் குடியேறும் கௌதம் பிரபல வியாபாரியான குணசீலனிடம் வேலைக்குச் சேர்கிறான். கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கும் அவர் ஒருமுறை தங்கக் கடத்தலில் ஈடுபட்டுக் கடனையெல்லாம் அடைத்து விடலாமென எண்ணி, இக்கட்டான சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றி நம்பிக்கைக்குப் பாத்திரமான கௌதமிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறார். தங்கத்தை விற்க ரங்கூன் செல்லும் கௌதம் & கோ விற்ற பணத்தை வழியில் கோட்டை விட்டு விட, பணத்தைக் கொள்ளையடித்தது யார்? குணசீலனின் கடன்தொகையை ஈடுகட்ட கௌதம் எடுக்கும் முடிவு என்ன? அது எப்படி அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது? என்பதே படத்தின் சுவாரசியமான முடிச்சுக்கள்.

ரங்கூன் – வட சென்னை என இருவேறு தளங்களில் நகரும் கதை; எண்ணூர் பர்மா காலனியில் வாழும் மக்களின் வாழ்வியல், தங்கக் கடத்தலின் பின்னணி, கை மாற்றப்படும் விதம், பணப் பரிமாற்ற முறைகள், அதன் பின்னணியில் உள்ள நுணுக்கங்கள் எல்லாவற்றையும் நேர்த்தி குன்றாமல் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

ran2.jpg

கௌதம் கார்த்திக்கின் அறிமுகக் காட்சி முதலே ஆச்சரியம் தொற்றிக் கொள்கிறது. இதுவரை படத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவர் போல் வந்து சென்றவர் முதன்முறை தனது பாத்திரத்தின் தன்மை அறிந்து முடிந்த வரை நியாயம் செய்திருக்கிறார். தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நல்ல இயக்குனர்களிடம் தன்னை ஒப்புவித்தால் முத்துராமன் மற்றும் கார்த்திக்கின் பெயரினைக் காப்பாற்றி விடலாம். ரங்கூனில் பிறந்து வளர்ந்ததாக அமைக்கப்பட்டிருக்கும் அவரது பாத்திரம் கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. குணசீலனின் உயிரைக் காப்பாற்றி அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாவது, நட்புக்காக விட்டுக் கொடுப்பது, ரங்கூனில் பணத்தைத் தொலைத்து விட்டோமே எனும் குற்றவுணர்ச்சி கலங்கித் தவிக்கும் காட்சிகளில் இயல்பான நடிப்பில் கவர்கிறார். தொலைத்த பணத்திற்காக குழந்தையைக் கடத்தி பேரம் பேசி விட்டு, அடுத்த நொடி பெற்றோரின் கதறலைக் கேட்க முடியமால் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கும் காட்சியில் நச் பெர்பாமன்ஸ்.

இந்தக் கதைக்கு நாயகியே தேவையில்லை. வெறுமனே காதல் காட்சிகள், பாடல்கள் என தமிழ் சினிமாவின் வழமையான க்ளீஷேக்களுக்காக காட்சிகளையும் நேரத்தையும் வீணடித்திருக்கிறார்கள். நாயகி சனா கிடைத்த வாய்ப்புகளில் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் நடிப்பதற்குப் பெரிதாக வாய்ப்பில்லை. ஏகடியம் செய்யும் ரவுடிகளிடம் இருந்து காப்பற்றியதும் நாயகனின் மேல் காதல் வயப்படுவதும், கடத்தல் தொழிலில் ஈடுபடத் தொடங்கித் திசை மாறும் அவனது வாழ்க்கையை மீட்டெடுக்கும் வழமையான உப்பு சப்பில்லாத பாத்திரம். கௌதமின் நண்பர்களாக வரும் லல்லு மற்றும் டானியல் ஆனி போப் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்.

ran3

கதையின் அடிநாதமாக இடம்பெறும் இன்னொரு பாத்திரம் குணசீலனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் சித்திக்; வணிகர் சங்கத்தின் வருவாய்க்காக படத் தயாரிப்பில் முதலீடு செய்து படம் பாதியிலேயே நின்று விட, கடனை அடைப்பதற்காக கௌதமை நம்பித் தங்கக் கடத்தலில் ஈடுபடும் கதாப்பாத்திரம். ரங்கூனில் பணம் கொள்ளையடிக்கப்பட்டு விடக் கலங்கி நிற்பதும், க்ளைமாக்ஸில் ரங்கூனில் பின்னப்பட்ட சூழ்ச்சி வலைக்குக் காரணகர்த்தா யாரெனத் தெரிந்ததும் காட்டும் மாற்றங்கள் வாவ். அதே நேரம் ஆரம்பத்தில் பெரிதாகக் காட்டப்பட்ட சின்னத்திரை நடிகர் ஸ்ரீயின் பாத்திரம் க்ளைமாக்ஸில் வலுவிழந்து போவதென்பது குறையே.

இழந்த பணத்தை மீட்பதற்காக குழந்தையைக் கடத்தி பேரம் பேசும் கௌதம் & கோ பணத்தை வாங்கச் செல்லும் வழியில் ஏற்படும் திருப்பங்கள் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கின்றன. ரங்கூனில் நகரும் நாயகனின் முன்கதைச் சுருக்கம், ரங்கூனிலிருந்து அகதியாய் சென்னை வந்தடையும் காட்சிகள், கடத்திய தங்கத்தை விற்பதற்காக மணிப்பூர் வழியாக மியன்மார் செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அருமை. இயல்பான சண்டைக் காட்சிகளும் அனிஷ் தருண் குமாரின் ஒளிப்பதிவும் பக்க பலம்; எடிட்டர் முடிந்தவரை காதல் காட்சிகளைக் குறைத்திருக்கிறார். மொத்தமாக நீக்கிக் கடத்தலையே மையமாகக் கொண்டு திரைக்கதையை நகர்த்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ran4.jpg

விக்ரம் – விஷால் சந்திரசேகர் இணையிசையில் நவீன் ஐயர் பாடிய “யாத்ரீகா..” இனிமையான பயணப் பாடல்; அனிருத் பாடிய “பாரின் ரிட்டர்ன்..” பாடல் ஏக பிரபலம்; கௌதம் நடனத்திலும் பின்னி இருப்பார். “நீ இல்லா ஆகாயம்..” பாடல் சலிப்பான காதல் காட்சிகளுக்கு மத்தியில் இடம்பெறுவதால் பெரிதாக ரசிக்க முடியவில்லை. சின்மயி பாடிய bit song ஆன “தொட்டில் மடியில்..” அருமையான மெலடி; அதை முழு நீளப் பாடலாக நீட்டித்திட்டுருக்கலாம். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையில் பாதகமில்லாமல் நகர்கின்றன காட்சிகள்.

“ஒரு அகதியா ஆரம்பிச்ச என் வாழ்க்கையில அதிக வலியைத் தந்தது என்னை சேர்ந்தவங்க எனக்கு செய்த துரோகம் தான்”, “இங்க யாருமே நல்லவங்க கெட்டவங்கன்னு கிடையாது.. எல்லோருமே அதிர்ஷ்டத்தைத் தேடி அலையிற துரதிஷ்டசாலிகள் தான்.”, “சரியென்ன தப்பென்னனு முடிவெடுக்க என் சூழ்நிலை எனக்கு இடம் கொடுக்கவில்லை..” என வசனங்கள் ஒரு சில இடங்களில் கவனிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் வித்தியாசமான கதைக்களமும் மாறுபட்ட கௌதமின் நடிப்பும் ரங்கூனைக் கொஞ்சம் அதிகமாகவே ரசிக்க வைக்கின்றன.

Rangoon Trailer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s