மரகத நாணயம் (2017)

தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் வரத்தையும், அதே நேரம் தொட்டவனையே தீர்த்துக் கட்டும் சாபத்தையும் தன்னகத்தில் ஒருங்கே பெற்ற அமானுஷ்யப் பொருளைத் தேடும் ஒரு சுவாரசியமான பயணமே இந்த மரகத நாணயம். இந்த மாதிரியான கதைக்களத்தை மிகைப்படுத்தப் பட்ட நாயக பிம்பத்துடன் கூடிய சாகசப் பயணமாகவோ, அன்றேல் மாந்திரீகத்தின் பின்னணியுடன் கூடிய பக்திப் படமாகவோ நகர்த்துவதே தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலா. அந்த மாதிரி எதுவுமே இல்லாமல் நகைச்சுவையுடன் கூடிய பாண்டஸிப் படமாக வித்தியாசப்படுத்தி இருப்பதே அறிமுக இயக்குனர் ARK சரவணனுக்குக் கிடைத்த முதல் வெற்றி.

மரகத நாணயத்தின் முன்கதைச் சுருக்கத்துடன் காட்சிகள் விரியும் போதே ஆச்சரியங்கள் தொற்றிக் கொள்கின்றன. இரும்பொறை சிற்றரசன் வனதேவதையை நோக்கித் தவம் புரிந்து பெற்ற பொக்கிஷமான காலத்தால் அழியாத மரகத நாணயத்தை வைத்து சோளிங்கபுரம் சாம்ராஜ்யத்தையே வீழ்த்துகிறான். தனக்குப் பின் அந்த அரிய பொக்கிஷம் யாருக்கும் கிடைக்கக் கூடாதென எண்ணித் தன்னுடன் சேர்த்து அந்த மரகத நாணயத்தையும் புதைத்துக் கொள்கிறான். 90 களில் பேராசிரியர் ஒருவர் அவனது கல்லறையைத் திறந்து அந்தப் பொக்கிஷத்தைக் கபளீகரம் செய்து விட அவரிடமிருந்து ஒவ்வொருத்தராகக் கைமாற அத்தனை பேரையும் தீர்த்துக் காட்டுகிறது இரும்பொறை மன்னனின் ஆத்மா. இதனை சிக்கல்களுக்கு மத்தியில் நம்பூதிரி ஒருவரது துணையுடன் மரகத நாணயத்திற்காக உயிர் விட்ட ஆவிகளுடன் கூட்டு சேர்த்து அதை அடையத் துடிக்கும் ஆதி & கோவின் கலகலப்பான போராட்டம் தான் படத்தின் சுவாரசியமான முடிச்சுக்கள்.

mn1

படத்தின் மிகப் பெரிய பலமே கதாப்பாத்திரத் தேர்வு தான். மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் நாயகன் – நாயகி – காதல் எனக் காட்சிகளை வீணாகாமல் எல்லாக் கதாப்பாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து நகர்த்தி இருப்பதும் பாராட்டுக்குரியது. ஆதியைப் பொறுத்த வரை இந்தப் படத்திற்காக தன் நாயக பிம்பத்தை நிறையே விட்டுக் கொடுத்து காட்சிகளின் அங்கமாக வலம் வருகிறார். சின்னச் சின்னக் கடத்தல்களில் சலிப்புற்றுப் போய் மரகத நாணயத்தைக் குறி வைத்துத் திட்டம் போடுவது, கூட்டு சேர்த்த ஆவிகள் புகுவதற்காக பிணங்களைத் தேடி அலையும் போது பிணத்தோடு பிணமாக தான்
ஒருதலையாகக் காதலித்த நிக்கியைக் காணும் காட்சியில் நினைவிழந்து நிற்பது, நிக்கியின் உடலுக்குள் ஆவி புகுத்திருப்பதை மறந்து தன்னைக் குறி வைக்கும் தோட்டாவிற்குத் தேடி வந்து இரையாகிக் காப்பாற்றும் நிக்கிக்காக வருத்தப்படுவது, அடுத்த காட்சியிலேயே அந்த உடலுக்குள் இருக்கும் ஆவி விழித்துக் கொள்ள பல்பு வாங்குவது என கிடைத்த காட்சிகளில் முடிந்தவரை தனது நடிப்பைப் பதிவு செய்கிறார். இருந்தாலும் காதல் காட்சிகளுக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கும் ஒரே மாதிரியான முகபாவங்களைத் தவிர்த்திருக்கலாம்.

நாயகி நிகிதா கல்ராணிக்கு நல்லதோர் பாத்திரம்; படத்தின் ஆரம்பத்திலேயே தனக்கு நிச்சயிக்கப்பட்டவரால் மனஉளைச்சலுக்கு உள்ளாகித் தற்கொலை செய்து கொள்ள, என்னடா அதற்குள் கதை முடிந்து விட்டதே என்று பார்த்தால் ஆதி தன்னுடன் கூட்டு சேர்த்த மரகத நாணயத்திற்காக உயிர் விட்ட ஒருவனின் ஆவி அவர் உடம்பில் புகுந்து கொள்ள, அவர் செய்யும் அலப்பறைகள் தான் படத்தின் கலகல எபிசோடுகள். அடிக்கடி ஆதியைக் கலாய்ப்பதற்காக அவர் உடம்பிலிருக்கும் ஆவி நிக்கியாக மாறுவது, துப்பாக்கியால் சூடு வாங்கியதும் இறந்து விட்டதாக நடித்து மறுபடியும் எழுந்து குத்தாட்டம் போடுவது, சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் தற்கொலைக்குக் காரணமானவனை மீண்டும் சந்திக்கும் போது வெளுத்து வாங்குவது என தூள் கிளப்புகிறார்.

mn2

படத்தின் மையக் கதாப்பாத்திரமே நகைச்சுவை நடிகரான ராமதாஸ் தான்; மாநகரம், போங்கு என இந்த வருடம் தொடர்ந்து கலக்கி வருகிறார். சுமாரான காட்சிகள் கூட இவர் இருக்கும் போது சலிப்பூட்டாமல் நகர்கின்றன. இயல்பான வெகுளித்தனமான முகபாவனைகளும் குரலும் தான் இவரது மிகப் பெரிய பலம். இறந்த பிணம் எனும் அடையாளம் தெரியாமல் இருக்க சிவாஜியைப் ஒப்பனை செய்து மருத்துவமனைக்குச் செல்லும் காட்சியில், “ஏண்டா.. சிவாஜி ஐயா கெட்டப்புன்னு பந்தாவா சொன்னீங்களேடா.. இப்பிடி வசந்த மாளிகை கெட்டப் போட்டு விட்டிருக்கீங்க.. அந்த நர்ஸ் அம்மா எப்பிடிடா என்னைய மதிக்கும்” என வருத்தப்படுவதும், அதே காட்சியில் தனது பெயர் தோத்தலவாயன் எனத் தெரிந்ததும் “கடைசில ஒரு நல்ல பெயர் கூடக் கிடைக்கலையாடா உங்களுக்கு..” என சலிப்படைவது என அதகளப்படுத்தி இருக்கிறார்.

காமெடி வில்லன் ட்விங்கிள் ராமநாதனாக ஆனந்தராஜ். வித்தியாசமான மேனரிசம், மாறுபட்ட குரல்தொனியினால் கவர்கிறார். சம்பந்தமேயில்லாமல் இவர் பெயரைப் பயன்படுத்தி ஆதி & கோ போலி மரகத நாணயத்தைக் கடத்தி விட இவரும் அந்த மரகத நாணயத்தைத் தேடித் பயணிக்கிறார். உதவாக்கரை கோஷ்டி ஒன்றை வைத்துக் கொண்டு அவர் படும் பாடு கலகலப்பூட்டுகிறது. இன்னும் அவரை நன்றாகப் பயன்படுத்தி இருக்கலாம். எல்லா இடங்களுக்கும் அவரே செல்லாமல் ஸ்பீக்கரில் பேசும் ஏற்பாட்டினை ஏதோ புதிய யுக்தி போல காட்சிப்படுத்தி இருந்தாலும் அதுவெல்லாம் எம்ஜிஆர் கால வில்லன்களின் பார்முலா இயக்குனரே.

mn3

எம்.எஸ்பாஸ்கர், கோட்டா சீனவாசராவ், மைம் கோபி, பிரம்மானந்தம் போன்ற நல்ல நடிகர்களை ஓரிரு காட்சிகளுடன் வீணடித்திருக்கிறார்கள். இறந்து போன காளி வெங்கட்டும் சில காட்சிகளில் ஆவியாக வருகிறார். ஆதியுடன் நண்பனாகக் கூட வரும் டேனியின் ஒன்லைனர்கள் முன்பாதியைக் கலகலப்பாக நகர்த்திக் செல்கின்றன. தமிழை ஒரு போதும் புதைக்க முடியாது என சொல்லிக் கொண்டு புதைக்கப் புதைக்க மறுபடியும் புதைகுழியிலிருந்து எழுந்து வரும் பிணமாக நடித்திருக்கும் சங்கிலி முருகனும் இரண்டே காட்சிகள் என்றாலும் கவனிக்க வைக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய குறையே முழு நீள பாண்டஸி படமாகவோ அல்லது காமெடிப் படமாக ஒரு குறிப்பிட்ட ஜானரில் இல்லாதிருப்பது தான். பாண்டஸி, திகில், காதல், நகைச்சுவை, ஆவிகள் என எல்லா உணர்வுகளையும் கலந்து கட்டிக் காட்சிகள் அமைத்து இருப்பதால் எதுவுமே முழுமையடையாத உணர்வே மேலோங்கி நிற்கிறது. ஒரு சில காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டதோ எனும் எண்ணம் மேலிடுவதையும் தவிர்க்க முடியவில்லை. பேய்களுக்கென்றே ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து லாஜிக்காக கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். என்னதான் கலகலப்பாகக் காட்சிகள் நகர்ந்தாலும் முன்பாதி ஒரு கட்டத்திற்கு மேல் ஜவ்வாக இழுப்படுகிறது. ஆனாலும் போலி மரகத நாணயத்தை எம்.எஸ்.பாஸ்கர் உதவியுடன் கைப்பற்றியதும் சுவாரசியம் தொற்றிக் கொள்கிறது. உண்மையான மரகத நாணயத்தைக் கைப்பற்றும் கடைசி 20 நிமிடப் பயணம் கலாட்டாத் தோரணங்கள்.

பாடல்களில் பெரிதாக சோபிக்கா விட்டாலும் பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார் திபு நினன் தாமஸ். மரகத நாணயத்தைக் கண்டடையும் போது வரும் தீம் மியூசிக் கலக்கல். இரும்பொறை மன்னனின் வண்டிக்கான பின்னணி இசை மற்றும் ஆனந்தராஜின் வில்லன் கோஷ்டிக்காக கிடார் பேக்கப்பாக இடம்பெறும் பின்னணி இசை ரசிக்க வைக்கின்றன. கதை சொல்லும் பாடலான “பாருக்குள்ளே நல்ல நாடு..” பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனாலும் குறும் பாடலாகப் படத்தில் வரும் “மழையோடு நனையும் புதுப்பாடல்..” அருமையான மெலடி. பிரசன்னாவின் நேர்த்தியான படத்தொகுப்பும் சங்கரின் ஒளிஓவியமும் படத்தின் பக்க பலம்; இரும்பொறை மன்னனின் கல்லறை, ஆனந்தராஜின் சிறைக்கூடக் காட்சிகள், மற்றும் க்ளைமாக்ஸில் வரும் சேசிங் காட்சிகள் படமாகப்பட்ட விதம் அருமை.

மொத்தத்தில் ஆங்காங்கு வழி தவறிப் போனாலும் கலகலப்பான பயணமாதலால் சுவாரசியம் குன்றாமல் ரசிக்கவே வைத்திருக்கிறது இந்த மரகத நாணயம்.

Maragatha Naanayam Trailer

Click here to read previous movie reviews

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s