வனமகன் (2017)

இயற்கையையே காவலரணாகக் கொண்டு வெளியுலகத் தொடர்பில்லாமல் வாழும் அழிந்து வரும் மனிதத் தன்மையின் எச்சங்களான பழங்குடியினர், தமது வாழ்வாதாரமான காட்டு வளத்தை அபிவிருத்தி என்னும் பகட்டு மொழியைப் பயன்படுத்தி அபகரிக்க நினைக்கும் நாகரீகம் எனும் போர்வையில் நாட்டுக்குள் நடமாடும் மிருகங்களிடமிருந்து மீட்டெடுக்க நடத்தும் போராட்டமே இந்த வனமகன். சமூக அக்கறையுடன் கூடிய நல்லதோர் கதைக்களத்தைத் தெரிவு செய்த இயக்குனர் ஏ.எல்.விஜய் அதையே மையக் கருவாகக் கொண்டு பயணித்திருக்கலாம். காட்டுவாசி நாயகன் நகருக்குள் வந்து காதலில் விழுவதென பார்த்து பழகிய ஹாலிவூட் திரைப்படங்களின் சாயலிலேயே முன் பாதி திரைக்கதையை நகர்த்தி இருப்பது தான் கொஞ்சம் நெருடல்.

சுற்றுலாவிற்காக நண்பர்களுடன் அந்தமான் தீவுகளுக்குச் செல்லும் நாயகி சாயீஷாவிற்குத் தன்னால் விபத்திற்குள்ளாகி நினைவிழந்த காட்டுவாசியைச் சிகிச்சைக்காகச் சென்னை அழைத்து வந்து தன் வீட்டிலேயே அடைக்கலம் கொடுக்கும் நிலை. வனத்திலே வாழ்ந்து பழக்கப்பட்ட அவனை அன்பால் தன் கட்டுக்குள் கொண்டு வருகிறாள். அந்தக் காட்டுவாசியால் அவளைச் சுற்றியிருக்கும் நவநாகரீக மிருகங்களின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாகக் கிழிகிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அந்தக் காட்டுவாசி அந்தமான் காவல்த் துறையினரால் கைது செய்யப்பட அந்தக் காட்டுவாசியின் பின்னணி என்ன? அந்தமான் காவல்த் துறையினர் அவனைத் தேடும் காரணம் என்ன? அவனது கூட்டத்தினரைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள சதிவலைக்கு சாயீஷா எந்த விதத்தில் மறைமுகக் காரணியாக அமைகிறார்? என்பனவே படத்தின் சுவாரசியமான முடிச்சுக்கள்.

vm1.jpg

தனியொருவனாகப் படத்தைத் தாங்குகிறார் ஜெயம் ரவி; அடித்து விரட்டப்படும் காட்டுவாசிக் கூட்டத்தில் ஒருவனாகத் தப்பிக்கும் அவரது அறிமுகக் காட்சியில் தான் படமே விரிகிறது. அவரது உழைப்பும் எடுத்துக் கொண்ட சிரத்தையும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அவருக்கென்று வசனங்கள் பெரிதாக இல்லை. அவரது உடல்மொழியும் வெகு இயல்பான மேனரிஸமும் சொல்ல வேண்டிய செய்தியை எளிதாகப் பார்வையாளர்களுக்கு ஊடுகடத்துகிறது. வனத்திலிருந்து நகர்ப்பகுதிக்கு அவர் கொண்டு வரப் பட்டதும் மயக்கம் தெளிந்து, பழக்கதோஷத்தில் மரத்தில் ஏறி இருந்தே பொழுதைக் கழிப்பது, மூடியிருக்கும் அறையிலிருந்து சுவரை பெயர்த்துக் கொண்டு வருவது, கையடக்கத் தொலைபேசியின் சினுங்கல் ஒலி அமைதியைக் குலைப்பது பிடிக்காமல் நீச்சல் குளத்தில் அதை வீசி எறிவது, தொலைக்காட்சியில் பார்க்கும் சிங்கம் நிஜமென நினைத்து வேட்டையாட வருவது என அவர் அடிக்கும் கூத்துகள் தான் முன்பாதியைக் கலகலப்பாக நகர்த்திச் செல்கின்றன.

சாயீஷாவின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர் வீடியோ சாட்டில் மனைவியுடன் சண்டையிடுவதைக் கவனித்து அந்தப் பெண்ணை துணிக்கடையில் சந்திக்கையில் அலேக்காகத் தூக்கி வந்து அந்த நபருடன் சேர்த்து வைக்கும் காட்சி அருமை; “தூரத்தில இருக்கிறவங்கள தொடர்பு கொள்ள தான் இந்த cellphone, internet எல்லாம் கண்டு பிடிச்சாங்க. இப்பெல்லாம் பக்கத்தில இருந்துகிட்டே செல்போன்ல பேசிக்கிறதால தான் பிரச்சினையே வருது. இவன் கையில போன் இல்ல. அதனால தான் இவனுக்குப் புரிஞ்சிருக்கு..” எனும் வசனத்திற்காகவே இந்தக் காட்சியை வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். அதே காட்சியில் வேறொருவர் தள்ளி விட அந்த ஜோடி கட்டிப்பிடிப்பதைப் பார்த்து விட்டு, அடுத்த காட்சியில் சாயீஷா தன் சித்தப்பாவின் குடும்பத்தை முதல்முறையாகச் சந்திக்கும் போது அதே போல் தள்ளி விடுவது அழகான டச்.

சாயீஷாவின் அன்பான கண்டிப்புக்குக் கட்டுப்படுவது, அகம்பாவத்தால் அடக்க நினைப்பவர்களைக் கண்களால் சுடுவது, சயீஷாவை மோத வரும் காரை புஜபல பராக்கிரமத்தால் தள்ளி விடுவது, திக்கித் திணறி காவியா எனும் நாயகியின் பெயரைச் சொல்லக் கற்றுக் கொள்வது, அந்தமான் காட்டுக்குள் போனதும் நினைவு வந்து சொந்த வீட்டுக்குள் வந்ததைப் போன்ற உணர்வினை வெளிப்படுத்துவது எனத் தேர்ந்த நடிப்பில் மிளிர்கிறார் ரவி. அந்தமான் போலீசிடம் தப்பி நகர்புறத்திலிருந்து காடு வரை ஓடுகையில் கையின் பிடி நாயகியின் வசமிருப்பதும், காட்டுக்குள்ளே வந்ததும் கையின் பிடியினை ரவி தன் வசமாக்கிக் கொள்வதும் அழகான நிலைமாற்றம்.

vm2.jpg

கதாநாயகியையும் சேர்த்தே மையப்படுத்தி நகரும் கதை; ஜெயம் ரவிக்கு இணையாகத் தன்னால் முடிந்த வரை கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் சயீஷா சைகல். பெற்றோரின் நேரடி வளர்ப்பில்லாமல் பணத்தின் நிழலில் உறவினரின் பராமரிப்பில் வளரும் பெண்ணாக அவரது பாத்திரத்தை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். வெளியுலகம் தெரியாத காட்டுவாசிக்கு மெல்ல சிற்சில கண்டிப்புக்களுடன் நாகரீகத்தைக் கற்றுக் கொடுப்பது, அவனைக் கேலி பேசும் நண்பர்களை எதிர்த்து குரல் கொடுப்பது, பிறந்த நாள் விழாவில் ஏற்படும் ரகளையைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் இயலாமையை வெளிப்படுத்துவது, கைது செய்யப்பட்ட ரவியைக் காப்பாற்ற அந்தமான் சென்று போராடுவது, ஏசியிலேயே பிறந்து வளர்ந்த பெண் இயற்கையின் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் காட்சி நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். நடனக் காட்சிகளும் கலக்கி இருப்பதால் தொடர்ந்து நல்ல வாய்ப்புக்கள் அமையலாம்.

தம்பி ராமையாவின் ஒன்லைனர்கள் சீரியஸ் காட்சிகளிலும் கொஞ்சம் ஆறுதல். சமையலுக்கு வைத்திருந்த காய்கறிகளைப் பச்சையாகவே ரவி சாப்பிட்டுக் காலி செய்து விட சாயீஷா “வயிறு வலிக்குது மருந்து இருக்கா?” எனக் கேட்க “அந்த வலிக்குப் பெயர் பசி; அந்த மருந்துக்குப் பெயர் சாப்பாடு; எப்பவாச்சும் பசிச்சிருந்தா தானே தெரிஞ்சிருக்கும். இப்போ தெரியுதா நீ வீணாக்கிற சாப்பாட்டோட அருமை. ஒருத்தர் சாப்பிட 72 பேருக்கு சமைக்க வேண்டி இருக்கு இந்த வீட்டில..” என பதிலடி கொடுக்கும் காட்சி நச். காட்டுக்குள்ளே கழுகு வழி காட்டுவதைப் பார்த்து விட்டு “நம்மூர்ல கூகிள் மேப் மாதிரி இங்க ஈகிள் மேப்” எனக் கவுண்டர் விடும் போது தியேட்டரே கலகலக்குது.

பிரகாஷ்ராஜை அறிமுகப்படுத்தும் போதே கதையின் போக்கினை ஊகித்துக் கொள்ள முடிவதென்பது திரைக்கதையின் பலவீனம். ஆனாலும் ஆரம்பத்தில் சாயீஷாவிடம் அடக்கி வாசிப்பது, இரண்டாம் பாதியில் தனக்கே உரிய வில்லத்தனத்தில் கவர்வதெனத் தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். தலைவாசல் விஜய், பிரகாஷ்ராஜ், அர்ஜுனன், வேல ராமமூர்த்தி போன்றவர்களை இன்னும் நன்றாகக் பயன்படுத்தி இருக்கலாம். ரவியின் தந்தையாகவும் காட்டுவாசிகளின் தலைவராகவும் வேல ராமமூர்த்தி சரியான தேர்வு. ஒரு காட்சியில் வந்தாலும் ரம்யா மனதில் நிற்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு ஷண்முகராஜனுக்கு நல்லதோர் வேடம்.

vm3.jpg

சண்டைக் காட்சிகள் படமாக்கிய விதம் அருமை. பிறந்த நாள் விழாவில் ஏற்படும் கலகத்தில் ரவியின் ஆக்ரோஷமான சண்டைக் காட்சி, பிளாஷ்பாக்கில் நிலஅபகரிப்பிற்காக காட்டுவாசிகளைக் கூண்டோடு காலி செய்யும் காட்சி, அந்தமான் காட்டுக்குள் நிகழும் சேசிங் காட்சிகள் என ஸ்டண்ட் சில்வா மிரட்டி இருக்கிறார். காட்டுக்குள் காட்டுவாசிகள் ஓடும் காட்சியில் ஏற்படும் சலசலப்பை டாப் வியூவில் படம் பிடித்திருக்கும் விதம் அருமை, இயற்கையின் வனப்பை களங்கமில்லாமல் பதிவு செய்திருக்கிறது திருவின் காமரா.சேஸிங்கின் போது கால் தவறி விழும் சாயீஷாவை காப்பாற்றும் காட்சிகள் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

செய்த வேலைக்கு ஊதியமாகக் கொடுக்கப்பட்ட பணத்தை ரவி எரிப்பது, சிறுமியைக் காப்பாற்றக் கத்தியால் கீறி விட்டு மனம் கேட்காமல் பச்சிலைகளால் மருத்துவம் செய்து விட்டுப் போவது, உயிரைக் கைப்பற்றிய நன்றிக் கடனுக்காக இக்கட்டான சூழ்நிலையின் புலி ரவியைக் காப்பாற்றுவது, நாகரீக மாற்றத்தின் பின் ரவியை அவனது கூட்டத்தினரால் அடையாளம் காண இயலாதிருப்பது, இரைக்காகத் தான் இதுவரை உயிரைக் கொன்றோம்.. இடத்திற்காகக் கொல்ல வைக்காதீர்கள் என காட்டுவாசிகள் கெஞ்சுவது என அவர்களது வாழ்வியலை வெளிப்படுத்தும் காட்சிகள் ஏராளம். கலை இயக்கமும் படத்தின் பக்க பலம்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்டதும் பிடிக்கும் ரகமில்லை என்றாலும் படத்தோட பார்க்கையில் பிடிக்கவே செய்கிறது. கார் விபத்தில் காப்பாற்றும் காட்சி , பிளாஷ்பாக் சோகக் காட்சி, பிறந்த நாள் விழா சண்டைக் காட்சி, க்ளைமாஸ் சேசிங் காட்சிகளில் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. ஹரிச்சரன் – பாம்பே ஜெயஸ்ரீ பாடிய “யம்மா நீ அழகம்மா” இனிமையான மெலடி; மதன் கார்க்கி வரிகளில் விஜய் ஜேசுதாஸ் பாடிய “சிலுசிலு என்று பூங்காற்று..’ கேட்ட மாத்திரத்தில் நெஞ்சத்தைத் தொடுகிறது. இத்தனை அழகான பாடலான “பச்சை உடுத்திய காடு..” பொருத்தமேயில்லாத சேசிங் காட்சிகளுக்கு இடையில் வருவதால் ரசிக்க முடியவில்லை. ஹாரிஸின் 50 வது படமென்ற மட்டில் திருப்தியான இசைத்தொகுப்பு தான்.

என்ன தான் காட்சிகள் சுவாரசியமாக நகர்ந்தாலும் காட்டுவாசி மேல் காதல் வர சாயீஷாவிற்க்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் இருப்பது தான் பெருங்குறை. வாதத்திற்காக இரண்டாம் பாதியில் காட்டுக்குள் சென்று சுதந்திரத்தை அனுபவித்த பின்னர் தான் காதல் வந்ததென வைத்துக் கொண்டாலும், அத்தனை காததூரம் சம்பந்தமேயில்லாத காட்டுவாசிக்காக ஏன் பிரயாணப் பட வேண்டும் எனும் கேள்வி எழாமல் இல்லை.

மொத்தத்தில் சின்னச் சின்ன சமரசங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இயற்கையின் வனப்புகளுக்கு மத்தியில் சமூகக் கருத்துடன் கூடிய ஜனரஞ்சமான படம் தான் இந்த வனமகன்.

Vanamagan Trailer

Click here to read previous movie reviews

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s