அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (2017)

இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ஒரு சில நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. ஓன்று படத்தின் முதல் ரஷ்ஷினைப் பார்த்து விட்டு எடிட்டர் மறுபடியும் பார்க்க மறுத்திருக்கலாம்; அல்லது தேவையில்லாத காட்சிகளை வெட்டியெறிந்து விட்டு மிச்ச மீதியிருக்கும் நான்கு காட்சிகளை மாத்திரம் ட்ரைலராக வெளியிட்டு விட்டு எஞ்சிய குப்பைகளை மறுபடியும் பார்க்க விருப்பப்படாது அப்படியே இரண்டு துண்டங்களாகி வெளியிட்டிருக்கலாம். கடைசியாக தான் நடித்த காட்சிகளை வெட்ட மனமில்லாமல் அப்படியே வெளியிட சிம்பு முடிவு செய்திருக்கலாம். இதில் எது நடந்திருந்தாலும் அது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்பதை மறுப்பதற்கில்லை. சிலம்பரசன் திறமையான நடிகர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் அறிமுகமாகி இத்தனை வருடத்தில் தனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளையும் அவருக்கு இருக்கும் வணிக மதிப்பையும் புரிந்து கொள்ளவே இல்லை என்பது தான் அவர் மேல் இருக்கும் வருத்தம்.

மதுரையின் பிரபல ரவுடி மைக்கேல் ஷ்ரேயாவின் மேல் காதலில் விழுந்து அவரது அன்புக் கட்டளையை ஏற்று வன்முறையைக் கை விட்டு துபாய் சென்று வாழ்க்கை நடத்த முற்பட விதி வசத்தால் போலீசில் சிக்கிக் கொள்கிறார். இந்த நிலையில் ஷ்ரேயாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட, அதைத் தடுப்பதற்காக ஜெயிலில் இருந்து தப்பிக்கும் மைக்கேல் நடுவழியில் பாவம் பொண்ணு பொழைச்சு போகட்டும் என்று மனதை மாற்றி விட்டு துபாய்க்குப் பறக்கிறார். பொண்ணு பொழைச்சிடுச்சு அப்புறம் எங்க பாடு தான் திண்டாட்டம். 20 வருடங்களுக்குப் பிறகு அஸ்வின் தாத்தா என்கிற பெயரோட தாத்தா என்னும் அன்பில் பழகிற இளவயதுத் தமன்னாவிடம் காதலில் விழுகிறார் இந்தக் கிழவர்; அது காதலா? காமமா? என்று பட்டிமன்றம் நடத்தி ஒரு வழியா காதலைச் சொல்லப் போற நேரத்தில் நடக்கும் குழப்பம் என்ன? என்பதே மீதிக் கதை; 30 வயதில் மைக்கேல் 50 வயதில் அஸ்வின் தாத்தா எனில் இடைப்பட்ட 20 வருட காலத்தில் நடந்தது என்ன? துபாய் ரகசியப் புலனாய்வாளர் கஸ்தூரி அவரைத் தேடும் காரணம் என்ன? தமன்னாவுடனான காதலுக்கு வரும் இடைஞ்சலை எவ்வாறு அந்தக் கிழவர் சரி செய்யப் போகிறார்? எனும் கேள்விகளை அடுத்த பாகத்துக்கான துவக்கப் புள்ளியாய் வைத்துப் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

aaa2.jpg

ரசிகர்களுக்காகப் படம் பண்ண நினைத்த சிலம்பரசன் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வானம் ரேஞ்சுக்கல்லவா கதையைத் தெரிவு செய்திருக்க வேண்டும். இந்த மாதிரி ஒரு கதையினைத் தெரிவு செய்கிறார் என்றால் ஒன்று அவர் தன் ரசிகர்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; அல்லது அவர்களது ரசனையை அத்தனை துச்சமென நினைக்கிறார் என்றே பொருள் படும். இத்தனைக்கும் மனிதர் நடிப்பில் ஏதும் குறை வைக்கவில்லை. மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா, திக்குவாய் சிவா என மூன்று வேடங்களுக்கும் தன்னால் முடிந்த வரை நியாயம் செய்திருக்கிறார்.

மதுரை மைக்கேலாக அவர் அறிமுகமாகும் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. அடுத்த விசில் இடைவேளையின் அஸ்வின் தாத்தா அறிமுகக் காட்சி; இனியாவது படம் பார்க்க சகிக்குமா எனும் ஏக்கத்தில் வந்த அந்தப் பரிதாப விசில் சத்தம் அது; அதற்கு முன்னும் பின்னும் தியேட்டரில் மயான அமைதி; அதகளமாக அறிமுகவாகும் மைக்கேல் தான் மனதில் நிற்கும் கதாப்பாத்திரம். ஒப்பனையில் இளவயது ராஜேந்தரை நினைவுபடுத்துகிறார். மாஸ் ஹீரோவுக்கான சண்டைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து உருவாக்கி இருக்கிறார்கள். அதனைத் தவிர ரசிப்பதற்கு வேறு காட்சிகளே இல்லாதது தான் திரைக்கதையின் பலவீனம். “இது வரைக்கும் எத்தனை பேர கொன்னிருப்பா? யாரையாச்சும் வாழ வச்சிருக்கியான்னு தானே கேட்டா? என்னால அவளாச்சும் வாழ்ந்துப் போகட்டும்” என காதலை விட்டுக் கொடுத்துச் செல்லும் காட்சி மாத்திரம் நெஞ்சைத் தொடுகிறது.

ஏனோதானோ என்று தான் காட்சிகள் நகர்கின்றனவே தவிர எதிலும் சுவாரசியம் என்பது மருந்துக்கும் கூட இல்லை. இடைவேளையில் அஸ்வின் தாத்தாவைக் கண்டதும் இனியாவது நன்றாக இருக்குமே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டால், அதற்கு முன்பாதியே எவ்வளவோ தேவலை எனும் நிலையில் இருக்கிறது இரண்டாம் பாதி திரைக்கதை.வயது வித்தியாசம் பாராது ஒரு தலையாகத் தமன்னாவைக் காதலித்து ஏமாந்து விட்டு அவளைப் பழிவாங்கப் புறப்படுகிறார் இந்தக் கிழட்டுத் தாத்தா. வயது வித்தியாசமான காதலை ஒருவித முதிர்ச்சித் தன்மையுடன் கையாண்டிருக்கலாம். காதலையும் கொச்சைப்படுத்தி காமத்தையும் இழிவுபடுத்தி ரெண்டுங் கெட்டாந் தனமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.

aaa3.jpg

காதல் காட்சிகளிலும் எந்தவித ரசனையும் இல்லை. காதலித்தால் தந்தையின் உயிரைக் காப்பாற்றுவதாக வாக்குறுதி வாங்கி விட்டுக் காதலிக்கிறார் மைக்கேல். இருவரும் ஒரே நேரத்தில் கொட்டாவி விட்டால் காதல் என்று அர்த்தம் என நாரகாசமான புதுவித டெக்னிக்கை அறிமுகப்படுத்துகிறார்கள். இரண்டாம் பாதியில் நடிகன் படத்தில் வயதான சத்யராஜை மனோரமா காதலிப்பதைப் போலவே இங்கு அஸ்வின் தாத்தாவை கோவை சரளா காதலிக்கிறார். இது போதாதென்று தலை நரைத்திருந்தால் யார் எவரென்று பாராமல் தாத்தா பாசத்தில் கட்டிப் பிடிக்கிறார் தமன்னா. இந்த மாதிரியான கர்ண கொடூரக் காட்சிகளை வெறெந்தப் படத்திலும் பார்த்திருக்க முடியாது.

நடிகை கஸ்தூரியின் ரீஎன்ட்ரி காட்சியை இத்தனை மோசமாகவா வைப்பது. அவர் குட்டைப் பாவாடையுடன் உதட்டின் மேல் நாக்கை சுழட்டிக் கொண்டு அறிமுகமாகும் காட்சியில் படம் தொடங்கும் போதே உவ்வே என்றாகி விடுகிறது. துபாயின் பிரபல டானைப் பற்றி விசாரிக்கிறேன் பேர் வழி என அவரது காதல் குப்பைகளைக் கிளறுவதையே வேலையாகப் பார்க்கிறார். இரண்டாவது பாதியிலாவது நல்ல ஸ்கோப் இருக்கும் என நம்பலாம். நண்பியின் திருமணத்தை நடத்தி வைக்கச் சென்ற இடத்தில் பிரச்சினை வந்து விட சாட்சிக்கு வந்த ஸ்ரேயாவை மைக்கேலுக்குக் கட்டி வைக்கிறார்கள். அதுவரை விருப்பமில்லாமல் திரிந்த அவரும் திருவிழாவுக்கு நேர்ந்து விட்ட ஆடு மாதிரியே கழுத்தை நீட்டுகிறார் எந்தவித எதிர்ப்புமில்லாமல். தாலி கட்டிய அடுத்த காட்சியிலேயே காதல் வந்து விடுகிறது அவருக்கு. தமன்னாவை எதோ அழகு பொம்மையாக மாத்திரமே பயன்படுத்தி இருக்கிறார்கள்.

எப்பேர்ப்பட்ட நடிகர் வை.ஜி.மகேந்திரனை மலிவான காமெடிக்காக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். துணை நடிகர்கள் கூட அவருக்கு உதட்டோடு உதடு முத்தம் வைத்து விட்டுச் செல்கிறார்கள். ரொம்ப நாளைக்குப் பிறகு சண்முகசுந்தரத்தைத் திரையில் பார்க்க முடிகிறதே என்று பார்த்தால் அவரையும் ஜாக்கெட் திருடும் காமெடிக் காட்சியில் வீணடித்திருக்கிறார்கள். கோவை சரளாவின் கிழட்டுக் காதல் காட்சிகள், மொட்டை ராஜேந்திரனின் நிர்வாண செல்பி என மொன்னைத் தனமான காட்சிகளையே நகைச்சுவை என்னும் பெயரில் ஒப்பேற்றி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு விடிவி கணேஷின் இம்சை வேறு.

aaa4.jpg

படத்தைக் கடைசி வரை தாங்கிச் செல்வது யுவன் ஷங்கர் ராஜாவின் கலக்கலான பின்னணி இசையும் பாடல்களும் ஆகும். வைரமுத்து எழுதியிருக்கும் “நீங்க இல்லாம நானில்லை..” கலக்கலான அறிமுகப் பாடல்; சிம்புவின் மெலிதான குரல் பாடலின் பிளஸ். மதுரை மைக்கேலுக்கு கொடுத்திருக்கும் பின்னணி இசை அதகளம்; அஸ்வின் தாத்தாவின் காட்சிகளில் இடம்பெறும் பின்னணி இசையும் மெர்சல். பொருத்தமில்லாத பிளேஸ்மெண்டால் “இன்னிக்கு நைட் மட்டும் நீ லவ் பண்ணலே போதும்..” பாடலை ரசிக்க முடியவில்லை.

க்ளைமாக்ஸில் இரண்டே காட்சிகளில் சிலம்பரசன் திக்கு சிவா வேடத்தில் வருகிறார். இரண்டாவது பாகம் தமன்னாவை அடைவதற்காக அஸ்வின் தாத்தாவிற்கும் திக்கு சிவாவிற்கும் இடையிலான போட்டியாகவே இருக்கப் போகிறது. தமன்னாவைப் பொருத்தவரை வயதானவர்கள் மேலே அதீத பாசம் கொண்டவராகவே ஆரம்பத்தில் இருந்து சித்தரிக்கப் படுகிறார். அவர் “தாத்தா ஐ லவ் யூ..” என்று சொல்வதையும் அன்பால் முத்தம் கொடுப்பதையும் காதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளும் அஸ்வின் தாத்தா, தமன்னா தன்னை ஏமாற்றியதாகத் தன்னைத் தானே சமரசப்படுத்திக் கொண்டு அவரைப் பழி வாங்க நினைக்கும் பொழுதே அவரது கதாப்பாத்திரம் மொத்தமாக அடிபட்டுப் போகிறது. அதற்கு மேல் அவர் என்ன பெர்பாமன்ஸ் பண்ணினாலும் அவர் மேல் எந்தவித அனுதாபமும் வரவில்லை.

மொத்தத்தில் AAA உணர்த்தும் ஒரே விடயம் சிலம்பரசன் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது. ரசிகர்களின் பல்ஸை உணர்ந்து அதற்குத் தகுந்தாற் போல் கதையைத் தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த முறை கௌதம் மேனன் வந்து தூக்கி விடும் வரை காத்திருக்க நேரிடும்.

Anbanavan Asaradhavan Adangadhavan Trailer

Click here to read previous movie reviews

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s