இவன் தந்திரன் (2017)

எதிர்காலக் கனவுகளுக்காக நிகழ்காலச் சமரசங்களோடு போராடிக் கொண்டிருக்கும் பட்டதாரி மாணவர்களின் ஏக்கத்தைப் பகடைக் காயாக்கிக் காசு பார்க்கத் துடித்திடும் அரசியல் முதலைகளின் அரதப் பழசான அரசியல்ச் சதுரங்கக் காய்நகர்த்தல்களைத் தவிடு பொடியாக்க, அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும் தொழிநுட்பத்தின் துணை கொண்டு மாணவர்கள் ஆடும் ஆடு – புலி ஆட்டமே இவன் தந்திரன் படத்தின் சுவாரசியமான திரைக்கதை. ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை என அறிமுகப் படங்களிலேயே நம்பிக்கை அளித்த இயக்குனர் ஆர்.கண்ணன் நடுவிலே தட்டுத் தடுமாறித் திசை மாறிச் சென்று விட 3 வருட கால இடைவெளிக்குப் பின் விறுவிறுப்பான கதைக்களத்துடன் மீண்டு(ம்) வந்திருக்கிறார்.

விதிமுறைகளுக்குப் புறம்பாக பொறியியல்க் கல்லூரிகள் நடாத்தப்படுவதாகப் புறம் கூறி அவற்றின் சட்டபூர்வ அங்கீகாரத்தை ரத்து செய்யப் போவதாக மிரட்டி தனக்குச் சேர வேண்டிய கப்பப் பணத்தை வசூலிக்கத் திட்டமிடும் அமைச்சர்; கொடுக்க வேண்டிய கப்பப் பணத்தைக் இறுதி வருடத் தேர்வுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் மேல் திணித்து வசூலிக்கத் திட்டமிடும் கல்லூரி நிர்வாகம்; இந்த இருதரப்பின் முட்டல் மோதல்களுக்கு நடுவே கேள்விக்குறியாய் மாணவர்களின் நிலை; சந்தர்ப்ப சூழ்நிலையால் பொறியியல் கல்வியைத் தொடர முடியாமல் இடைநிறுத்திய புத்திசாலி மாணவர்களான கௌதம் – RJ பாலாஜி எதிர்பாராத விதமாக அத்தகைய மாணவர் ஒருவரின் பரிதாப மரணத்திற்கு மறைமுகக் காரணமாகத் தொடர்புபட்டு விட, கௌதம் – அமைச்சர் இடையான பிரச்சினை என்ன? மாணவன் தற்கொலையில் கௌதமின் மறைமுகத் தொடர்பு என்ன? அமைச்சரின் காய் நகர்த்தல்களைத் தொழிநுட்பத்தின் உதவியோடு வெளிக்கொணர்வது எப்படி? என்பனவே படத்தின் சுவாரசியமான முடிச்சுகள்.

ivan2

ரங்கூனிற்குப் பிறகு கௌதம் கார்த்திக்கின் மேலிருந்த வாரிசு நடிகர் என்னும் பிம்பம் ரொம்பவே மாறி இருக்கிறது. கதைத் தேர்வில் ரொம்பவே கவனம் செலுத்துகிறார். அவரது கதாப்பாத்திரம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளமை படத்தின் பலம்; தொழிநுட்ப உபகரணங்களை விற்பவராக அறிமுகமாகும் கௌதம் பொறியியல் கல்வியைப் பாதியிலேயே இடை நிறுத்தியவர் என்பது முன்னாள் நண்பருடனான உரையாடலின் போதே வெளிப்படுத்தப்படுகிறது. தன் கண் முன்னே நிகழும் தற்கொலையைத் தடுக்க முடியாமல் துடித்துப் போவது, செய்த வேலைக்குக் கூலி தராமல் இழுத்தடித்த ஸ்டண்ட் சில்வாவிற்கு தகுந்த பாடம் கற்பிப்பது, மாணவனின் மரணத்திற்குக் காரணமான அமைச்சரின் பதவித் திட்டமிட்டுக் காலி செய்வதென நேர்த்தியான நடிப்பில் கவர்கிறார்.

அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது விதிகளை மீறி நடாத்தப்படும் கல்லூரிகளை மூடப் போவதாக அறிவிக்கும் போது, RJ பாலாஜி “பாகிஸ்தான் பக்கத்தில நிலத்தை வாங்கி பொட்டல் காட்டில கட்டடத்தைக் கட்டி நமீதா, சினேகாவை வச்சுத் தொறந்து எஞ்சினீரிங் காலேஜ்னு நம்ப வச்சாங்களே.. அவங்களுக்கு வேணும்” என்று வழிமொழிய, பாதிக்கப்படப் போவது மாணவர்கள் தானே என நிஜத்தினை உணர்த்தும் காட்சி நச். பீர் குடிக்கும் அறிமுகப் பந்தயக் காட்சியை மாத்திரம் தவிர்த்திருக்கலாம்.

துடிப்பான கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கதாநாயகி ஷ்ரத்தா. பாவனைக்குதவாத மடிக்கணினியைத் தலையில் கட்டி விட்டதாகப் புகார் கூறி கௌதமிடமிருந்து பணத்தை மீளப் பெறுவதற்காகப் போராடுவது, அது முடியாத விரக்தியில் மடிக்கணினியில் சப்பாத்தி சுடுவது எப்படி என வீடியோ எடுத்து முகப்புத்தகத்திலிட்டு கௌதமிற்கு வரவிருக்கும் நல்ல வாய்ப்பைக் காலி செய்வது, தனது கல்லூரிக் கட்டணத்தை கௌதம் கட்டியதும் தவறை உணர்ந்து மீண்டும் அந்த வாய்ப்பை கௌதமிற்கே பெற்றுத் தருவதென இயல்பான நடிப்பில் கவர்கிறார். காதல் காட்சிகளும் பெரிதாகத் துருத்திக் கொண்டு நில்லாமல் யதார்த்தமாகக் கடந்து போவதால் ரசிக்க வைக்கின்றன. அத்தனை துடிப்பான பெண்ணாக வடிவமைக்கப்பட்ட ஷ்ரத்தாவின் கதாப்பாத்திரம் க்ளைமாக்ஸில் காதலுக்காக பெங்களூரில் கிடைத்த வேலையைத் துறந்து விட்டு வருவதில் அடிபட்டுப் போகிறது. இறுதிக் காட்சியின் ஹைப்பைக் கூட்டுவதற்காக செய்யப்பட்ட வலிந்த திணிப்பாக அந்தக் காட்சி உறுத்திக் கொண்டிருப்பதே கொஞ்சம் நெருடல்.

ivan3

RJ பாலாஜியின் கவுண்டர்கள் சீரியஸ் காட்சிகளிலும் கொஞ்சம் ஆறுதல். பீர் குடிக்கும் பந்தயத்திற்கு வர்ணனை செய்பவரை, “நீ என்ன நெனச்சிட்டு இருக்க.. நல்லா காமெண்ட்ரி பண்றதாவா? நட்சத்திர கிரிக்கெட் மாதிரி நாரகாசமா இருக்கு..” எனக் கலாய்ப்பதில் தொடங்கி, கல்லூரியில் மேலதிகமாக வாங்கப்பட்ட பணம் யாரைப் போய்ச் சேர்கிறது என கௌதம் பின்தொடரும் காட்சியில், “இந்நேரத்துக்கு எங்கடா போறோம். அதோ கூவத்தூர் பீச் ரிசார்ட்.. அதுவே இன்னும் தொறக்கல..” எனச் சமகால அரசியலைச் சாடுவதென கலகலப்பிற்குப் பஞ்சமில்லாமல் நகர்கின்றன அவர் வரும் காட்சிகள். அந்த உச்சா காமெடியை மாத்திரம் தவிர்த்திருக்கலாம்.

வெறுமனே கதாநாயகனுடன் கூடவே பயணிக்கும் வேடமாக இல்லாமல் நடிப்பதற்கும் ஆங்காங்கு வாய்ப்புக்களைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். பொறியியல் கல்வியை இடையில் விட்டதற்கான காரணத்தை விளக்கும் காட்சியிலும், தகவல் தொழிநுட்பத் துறையில் பணி புரிபவர்கள் படும் கஷ்டத்தை RJ பாலாஜி விளக்கும் காட்சியில் வசனங்கள் அருமை.

அமைச்சராக வரும் சூப்பர் சுப்பாராயனும் அவரது மைத்துனராக வரும் ஸ்டண்ட் சில்வாவும் சரியான தேர்வு. பணப் பரிமாற்றால் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பதவியிழந்து அதற்குக் காரணமானவனைக் கண்டறிய முடியாமல் தவிக்கும் அரசியல்வாதியாகக் கலக்கி இருக்கிறார் சூப்பர் சுப்பராயன்; அதிலும் கல்லூரிப் பணத்தைப் பரிமாற்றம் வீடியோவை சப்தத்தை நிறுத்திச் சொல்லி விட்டு கட்சி நன்கொடையாக மாற்றி டப்பிங் கொடுக்கும் காட்சி செம. அதற்கு “டிஸ்கவரி சானல் தமிழ் டப்பிங் மாதிரி பேசி எஸ்கேப் ஆகிட்டானே..” என RJ பாலாஜி கொடுக்கும் ஒன்லைனர் நச். ஒரு கட்டத்தில் ஸ்டண்ட் சில்வா கௌதமை நெருங்கியதும் இடைவேளைக்கு முன்னரான அந்தத் திருப்பமும் எதிர்பாராரது.

ivan4

“மரணத்தை விடக் கொடுமையானது ஒருத்தனோட திறமையை மறுக்கிறதும் மறைக்கிறதும்.. தேவையான வேலைவாய்ப்பை வழங்கத் துப்பில்ல.. எங்க பார்த்தாலும் லஞ்சம்” என ஒரு சில வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. பிற்பாதியில் வரும் GPS ட்ராக்கிங்கை வெகுஜனப் பார்வையாளர்களுக்குப் புரியும் வண்ணம் விளக்குவதற்கு முன்பாதியிலேயே வளர்ப்பு நாயை GPS உதவியுடன் தேடிக் கண்டுபிடிக்கும் காட்சி இயக்குனரின் சாமர்த்தியம். ஒரு சில காட்சிகள் வந்தாலும் கௌதமின் சீனியராக வரும் கோபி கதாப்பாத்திரம் மனதில் நிற்கிறது. மயில்சாமி, மதன்பாப் போன்றவர்களை ஒரே காட்சியோடு வீணடித்திருக்கிறார்கள்.

தமனின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகம். குறிப்பாக யாசின் நிசார் – சஞ்சனா பாடிய “என்னை மிதக்க விட்டாய்..” அட்டகாகசமான மெலடி; ராகுல் நம்பியார் பாடிய “சென்னையில எங்களை தான் லோக்கலுன்னாங்க..” பாடல் கேட்கும் ராகம்; இளைஞர்களின் எழுச்சியைக் குறிக்கும் “இணைய நண்பனே..” பாடல் கதையோட்டத்தினூடே நகர்வதால் ரசிக்க வைக்கிறது. காதல் காட்சிகளில் பின்னணி இசை ரசிக்க வைத்தாலும் விறுவிறுப்பான சேசிங் காட்சிகளில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆடை வடிவமைப்பும், சண்டைக் காட்சிகளும் பக்க பலம்; இரவு நேரக் காட்சிகலில் ஒளிப்பதிவு கொஞ்சம் டல்லடிப்பதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் கனவுகளோடு போராடும் பட்டதாரி மாணவர்களின் பின்னணியையும், அவர்களே அறியாமல் அவர்களைச் சுற்றிப் பின்னப்படும் அரசியல் சதிவலைகளையும் தந்திரமாகக் காட்சிப்படுத்தியதில் ஜெயித்திருக்கிறான் இந்தத் தந்திரன்.

Ivan Thanthiran Trailer

 

Click here to read previous movie reviews

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s