பண்டிகை (2017)

வாழ்க்கையின் ஒரு கட்டம் வரை தான் நாம் பணத்தைத் துரத்துகிறோம்; தொட்டு விட்ட மறுநொடி அது நம்மைத் துரத்தத் தொடங்கி விடும்; இந்த உண்மையை உணராத வரை நிம்மதியின்றி காலச்சக்கரத்தில் உழன்று கொண்டிருக்க வேண்டியது தான் என்பதை இரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சொல்லியிருக்கிறது இந்தப் பண்டிகை. பணத்திற்காக அடித்துக் கொண்டு சாவதற்கும் அஞ்சாத சண்டைக்காரர்களை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் சூதாட்டப் போட்டி, பெட்டிங் பணத்தைக் கட்டி விட்டு ஏதோ ஒரு வித மனோ வியாதியுடன் வெறி கொண்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம், சூதாட்டத்திற்குப் பின்னால் இருக்கும் மாஃபியா கும்பல், தெரிந்தும் தெரியாமலும் அதனைச் சுற்றிப் பின்னப்படும் சூழ்ச்சி வலைகள் என இதுவரை காணாத புதிய கதைக்களத்துடன் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை விருந்தாக்கிப் பண்டிகையை வார்த்தெடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் ஃபெரோஸ்.

கிரிக்கட் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்பதற்காக வழி தேடி அலையும் சரவணன், வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணத்தை தேடி அலையும் கிருஷ்ணாவை தற்செயலாகச் சந்திக்கவே, அவரது சண்டைத்திறனில் வியந்து போய் பணத்திற்காக அடித்துக் கொள்ளும் சூதாட்டச் சண்டைப் போட்டியில் கிருஷ்ணாவைப் போட்டியாளராகக் இணைத்து விடுகிறார். பண்டிகை என விழிக்கப்படும் அந்தப் கடைசி மோதலில் கிருஷ்ணா வேண்டுமென்றே தோற்றுப் போவதும் எதிராளியின் மீது பணத்தை பெட்டிங் கட்டி சரவணன் சூதாட்டத்தில் வெற்றி பெறுவதே அவர்களது திட்டம். தோற்க வேண்டிய போட்டியில் எதிர்பாராத விதமாக கிருஷ்ணா ஜெயித்து விட, அந்த எதிர்பாராத திருப்பத்திற்குக் காரணகர்த்தா யார்? இழந்த பணத்தை மீட்க மீண்டும் சரவணன் போடும் திட்டம் என்ன? அந்தத் திட்டத்திற்குக் கிருஷ்ணா உதவ வேண்டியதன் பின்னணி என்ன என்பதே பண்டிகை படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

pan

பயம்.. அதை மத்தவங்க கண்ணில பாக்கிறப்போ வருமே ஒரு போதை; அந்த போதையிலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட நாயகனாகக் கிருஷ்ணா தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். என்ன தான் அவர் வன்முறையிலிருந்து வெளியே வர நினைத்தாலும் விதி அவரை அதே பாதைக்கே இட்டுச் செல்கிறது. தோற்க வேண்டிய போட்டியில் ஜெயித்து, ஜெயிக்க வேண்டிய வாழ்க்கையில் தோற்றுப் போகிறார். விருப்பமே இல்லாமல் சூதாட்டச் சண்டைப் போட்டியில் பணத் தேவைக்காகக் கலந்து கொள்வது, சம்பாதித்த பணத்தில் வாங்கிய கைப்பேசி உடைந்து போக ஒரு முறை பார்த்த ஆனந்தியைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பது, தோற்க வேண்டிய போட்டியில் எப்படி ஜெயித்தோம் எனத் தெரியாமல் குழம்புவது, கடைசியில் பணம் கைக்கு வந்ததன் பிற்பாடு வாழ்க்கையின் யதார்த்தை உணருவது என நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதிலும் கிரிக்கட் சூதாட்டப் பணத்தைக் கடத்தத் திட்டம் போடும் சரவணனை எச்சரிக்கை செய்வதும், வேறு வழியில்லாமல் தன்னை நம்பி எதிராளியின் மீது பணத்தை பெட்டிங் கட்டி இழந்து நிற்கும் சரவணனுக்காக அதே திட்டத்திற்கு துணை போவதுமாக அமைக்கப்பட்டிருக்கிறது அவரது கதாப்பாத்திரம்; சண்டைக்காட்சிகளுக்கு கிருஷ்ணாவின் உடல்மொழி அந்தளவிற்கு ஒத்துழைக்காது என்று தெரிந்து, அவரது வன்முறைக்குப் பின்னால் இருக்கும் நியாயங்களை வெளிப்படுத்தும் காட்சிகளை வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். என்ன தான் பதற்றத்துடனே பயணிக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும் காதல் காட்சிகளிலாவது கிருஷ்ணா கொஞ்சம் முகபாவனைகளில் வித்தியாசம் காட்டி இருக்கலாம்.

விறுவிறுப்பாக நகரும் திரைக்கதையில் சம்பந்தமேயில்லாமல் துருத்திக் கொண்டிருக்கும் காதல் காட்சிகள் ரொம்பவே நெருடல். நாயகி ஆனந்தியைப் பொறுத்த வரை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்; மற்றையபடி நடிப்பதற்குப் பெரிதாக வாய்ப்பில்லை. பல்பொருள் அங்காடியில் நிராதரவாகக் கிடக்கும் ஆயிரம் ரூபாய் தாளை சுற்றி நிற்பவர்களிடமிருந்து காப்பாற்றி நன்கொடை உண்டியலில் சேர்ப்பிக்கும் அறிமுகக் காட்சியில் மாத்திரம் சபாஷ் போட வைக்கிறார். அத்தனை சூதானமான பெண்ணாக அவரை அறிமுகப்படுத்தி விட்டுக் கடைசி வரை நாயகனின் பின்னணியே தெரியாமல் காதலிப்பதாக அவரது கதாப்பாத்திரத்தைத் தொங்கலில் விட்டு விட்டார் இயக்குனர். ஆனந்தியுடன் பேசிக் கொண்டிருக்கும் கைப்பேசி விழுந்து உடைந்தும் கிருஷ்ணா மறுபடியும் தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பதெல்லாம் கூட ஓகே தான்; அதற்காக மறுபடியும் பத்தாயிரம் ரூபாய் செலவழித்துத் தான் கைப்பேசி வாங்க வேண்டுமா என்னும் கேள்வி எழாமல் இல்லை. கூடவே ஆனந்தியின் பீர் காமெடியையும் தவிர்த்திருக்கலாம்.

pan

மொத்தக் கதையும் நடிகர் சரவணனை மையப்படுத்தியே நகர்கிறது. ஏஜென்ட் ஒருவரை நம்பி சொந்த வீட்டை அடமானம் வைத்துக் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்து மனைவியைப் பிரிந்து நிற்கும் முதல் காட்சியில் தான் விரிகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் மனதில் நிற்கும் கதாப்பாத்திரம். கிருஷ்ணாவின் வாக்கை நம்பி எதிராளியின் மீது பணத்தைக் கட்டி, எதிர்பாராத விதமாகக் கிருஷ்ணா ஜெயித்து விட “எத்தனையோ முறை தோத்திருக்கேன், இன்னைக்குதான்டா ஏமாறுறேன்” எனப் புலம்புவது, கிரிக்கெட் சூதாட்டத்தில் தான் தோற்கவில்லை.. எல்லாமே சூழ்ச்சி தான் என்பதை உணர்ந்ததும் அதற்கு காரணமான சூதாட்ட விடுதியை நடத்தும் வில்லனிடமிருந்தே சூதாட்டப் பணத்தைக் கடத்தத் திட்டம் போடுவது என அட்டகாசமான பெர்பாமன்ஸ்.

பண்டிகை என்னும் சண்டைச் சூதாட்டத்தை நடாத்தும் வில்லனாக மதுசூதனன் ராவ்; பார்த்து பழகி கதாப்பாத்திரம் தான். இவரது கதாராபாத்திரம் என்ன தான் துணை நடிகர்களால் உயர்த்திப் பேசப்பட்டாலும், அதனை ஊர்ஜிதப்படுத்தும் அளவிற்குக் காட்சிகள் குறைவு தான். செம்பட்டைத் தலை, நரைத்த தாடி, கண்ணாடியுடன் சூதாட்டப் போட்டியை நடாத்தி வைக்கும் வித்தியாசமான வேடத்தில் நிதின் சத்யா கலக்கி இருக்கிறார். சூதாட்டப் பணத்தைக் கடத்த கிருஷ்ணா – சரவணன் கோஷ்டிக்கு உதவும் இவருக்கு, பணம் கடத்தப்பட்ட பின் என்னானது என்பதை சொல்லாமலே விட்டு விட்டார் இயக்குனர். ஒரு சில காட்சிகள் வந்தாலும் ஷண்முகராஜன், அருள்தாஸ் பாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வு; இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் சபரீஸும் நல்ல தேர்வு.

படத்தின் இன்னொரு திருப்புமுனைக் கதாப்பாத்திரம் சூதாட்டப் பணத்தைக் கடத்த கிருஷ்ணா – சரவணன் கோஷ்டிக்கு உதவிக்கு வரும் கருணாஸ்; உச்சக்கட்டக் காட்சியில் இவரை வைத்துக் காமெடி பண்ணப் போகிறார்கள் என எதிர்பார்த்தால் அதற்கு நேர்மாறாக ஆச்சரியப்படுகிறார். பணத்தை அடித்ததும் பார்ட்டி கொண்டாடும் சரவணனிடம் “அடையும் போது மாட்டிறவனை விட அனுபவிக்கும் போது மாட்டிறவன் தான் ஜாஸ்தி.. ஆர்வக்கோளாறுல நீங்களும் மாட்டி என்னையும் மாட்டி விட்டிடாதீங்க..” உஷார் படுத்துவதிலும், பணத்தைத் தேடும் போலீசான ஷண்முகராஜனிடம் ஐடென்டிட்டி திருடனாக நடித்து ஏமாற்றும் காட்சியிலும் தனித்தே தெரிகிறார். ஒரு சில இடங்களில் பிளாக் பாண்டி கிச்சுகிச்சு மூட்டினாலும் இயக்குனர் இன்னும் அவரைப் பயன்படுத்தி இருக்கலாம்.

pan

கதாப்பாத்திரத் தேர்வும் வடிவமைப்பும் படத்திற்கு பக்க பலம்; இத்தனை கதாப்பாத்திரங்களையும் திரைக்கதையில் எந்தவிதத் தொய்வும் இல்லாமல் கையாண்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். ஆரம்பத்தில் இருந்தே தனக்குக் கிடைக்கும் பணத்தை நன்கொடை, மருத்துவமனையில் சந்திக்கும் முன்னறிமுகமில்லாத நபரின் வைத்திய செலவு என தெரிந்தே விட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார் கிருஷ்ணா. அதற்கு நேர் மாறாக கிரிக்கெட் சூதாட்டம், பண்டிகை எனும் சூதாட்டச் சண்டைப் போட்டி எனத் தெரியாமலேயே இழந்து கொண்டிருப்பார் சரவணன். இருவரும் பணத்தை அடைந்ததும் எடுக்கும் முடிவு க்ளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பம்.

விக்ரமின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. மதன் கார்க்கி வரிகளில் கார்த்திக் பாடிய “சில வாரமா.. விவகாரமா..” பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. “இது வாழ்வுக்கும் சாவுக்கும்..” பாடல் சண்டைக் காட்சிகளின் நடுவே கடந்து போகிறது. ஐட்டம் பாடலாக வரும் “தேன் சிலை நான்..” ரொம்பவே பொறுமையை சோதிக்கிறது. பின்னணி இசை பல இடங்களில் கவனிக்க வைக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியின் பின்னணி இசை வாவ்.

“எல்லாத்துக்கும் சாதாரணமா கெடைக்கற விஷயம் எனக்கு அடிச்சதுக்கப்பறம்தான் கெடச்சது..”, “புத்திசாலிங்க, முட்டாள ஏமாத்தறதுக்குக் கண்டுபிடிச்சதுதாண்டா அதிர்ஷ்டம்..” என வசனங்கள் பெரும்பாலும் அந்தந்தக் கதாப்பாத்திரங்களின் சாயலைப் பிரதிபலிப்பவையாக இருப்பது படத்தின் பலம்; பண்டிகை பந்தயப் போட்டியில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் நன்றாகக் படமாக்கப்பட்டுள்ளன. இரவு நேரக் காட்சிகள் அதிகமாக உள்ள களமாதலால் ஒளிப்பதிவாளர் அர்விந்தின் கேமெராவிற்கு ரொம்பவே வேலை அதிகம். படத்தொகுப்பாளர் பிரபாகர் முடிந்த வரை காதல் காட்சிகளுக்குக் கத்திரி போட்டிருக்கிறார். ஆனாலும் க்ளைமாக்ஸிற்கு முந்தைய காதல் காட்சியும் அதனைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாவது தடவையாக வரும் “சில வாரமா…” பாடலும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு வேகத்தடைகள்.

மொத்தத்தில் ஆங்காங்கு ஒரு சில வேகத் தடைகள் இருந்தாலும் அதிரடியான திரைக்கதைக்காக இந்தப் பண்டிகையை நிச்சயம் கொண்டாடலாம் .

Pandigai Trailer

Click here to read previous movie reviews

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s