ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017)

தொடர்ந்து நல்ல கதைகளாகவே தேர்ந்தெடுத்து நடித்து வந்த அதர்வாவிற்கு கொஞ்சம் ரிலாக்ஸாக முழு நீள நகைச்சுவைப் படம் பண்ண வேண்டுமென்று ஆசை; காதல் மன்னன் ஜெமினிகணேசனின் வேடமென்றவுடன் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னை முழுமையாக இயக்குனரிடம் ஒப்புக் கொடுத்து விட்டார் அதர்வா. தொடர்ச்சியான காதல் தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் ஜெமினிகணேசன் – ஒவ்வொரு காதல் தோல்விக்கும் பின்னால் இருக்கும் காரணத்தை ஆராயத் தொடங்கி சிக்கிச் சின்னாபின்னமாகும் சுருளிராஜன் இரண்டு பேரையும் வைத்து சடுகுடு ஆடியிருக்கலாம் இயக்குனர் ஓடம் இளவரசு. என்னதான் நகைச்சுவைப் படங்களில் தர்க்க முரண்பாடுகள் பார்க்கத் தேவையில்லை என்ற போதிலும், ஒட்டு மொத்தப் படமுமே தர்க்க முரண்பாடுகளோடு பயணிப்பதால் எந்தவொரு காட்சியும் மனதில் நிற்காமல் இருப்பதென்பது திரைக்கதையின் பலவீனம்.

ஆட்டோகிராஃப் சேரன் போல தனது திருமண அழைப்பிதழை தன்னுடைய முன்னாள் காதலிகளுக்குக் கொடுக்க வேண்டுமென மதுரை வந்தடையும் அதர்வா, அங்கு எதேச்சையாக சந்திக்கும் சூரியுடன் நட்புறவு பூண்டு தனது ஒவ்வொரு காதல் கதையையும் எதிர்பாராத திருப்பங்களுடன் பகிர்ந்து கொள்கிறார். மதுரையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் அதர்வாவிற்குக் கீழ் வீட்டில் வசிக்கும் ரெஜினா மீது காதல்; அந்தக் காதல் டமாலாகி விட்டதன் பிற்பாடு மேல் வீட்டில் வசிக்கும் அதிதி மீது காதல்; எதிர்பாராத விதமாக அதுவும் புஸ்வானமாகி விட ஊட்டிக்கு இடமாற்றலாகிச் சென்று பிரணீதா மீது காதல் கொள்கிறார். துரதிஷ்டவசமாக திருமணம் வரை செல்லும் அந்த உறவில் விரிசல் விழுந்து விடுகிறது. இதற்கிடையில் ஊட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அதர்வா மேல் ஒரு தலைக் காதல். இப்படியாக ஒட்டு மொத்தக் கதையையும் கேட்டு குழம்பிப் போன சூரி அதர்வாவின் காதல் தோல்விகளுக்கான காரணத்தைத் தேடிப் பயணிக்க அடுத்தடுத்து நிகழும் ஆச்சரியங்களே கலகலப்பான மீதிப் பகுதி.

g

நவீன காதல் மன்னனாக சோடாபுட்டிக் கண்ணாடியுடன் நான்கு நாள் தாடியும் அப்பாவி முகமுமாக அதர்வாவின் காதாப்பாத்திரத் தேர்வு அட்சர பொருத்தம். என்ன தான் பிளேபாய் கதாப்பாத்திரம் எனப் ப்ளாஷ்பாக்கின் முதல் ஓரிரு காட்சிகளிலேயே புரிந்து விட்டாலும், அந்தக் காதல்களுக்கிடையான தொடர்பினை சஸ்பென்ஸ் வைத்து நகர்த்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். பாரபட்சம் பாராமல் ஒரே சமயத்தில் மேல் வீட்டு அதிதியையும் கீழ் வீட்டு ரெஜினாவையும் கட்டம் கட்டிக் காதலில் விழ வைப்பது,
ஏதோ வரலாற்றுச் சாதனைகள் போல ஒவ்வொரு காதல் கதையையும் ட்விஸ்ட் வைத்துச் சொல்லிச் சூரியைக் கடுப்பேற்றுவது, இரண்டாம் பாதியில் கருணை இல்லம் சென்டிமென்ட்டைப் பயன்படுத்தி ப்ரணீதா – ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருசேர விழுத்துவது என அட்டகாசமான நடிப்பு. அதிலும் ரெஜினாவிடம் முகப்பரு க்ரீம் வாங்கி அதிதியிற்கு கொடுப்பதும், பதிலுக்கு அதிதி கொடுக்கும் பரிசை ரெஜினாவிற்கு கொடுத்து இம்ப்ரெஸ் செய்வதும் கலகல காதல் எபிஸோட்ஸ்.

முன்னாள் காதலிகளுக்கு கல்யாணப் பத்திரிக்கை வைப்பதற்காக வரும் அதர்வாவிற்கு உதவி செய்யப் போய் தனக்குத் தானே ஆப்பை சொருகிக் கொள்ளும் சுருளிராஜனாக சூரி பட்டையைக் கிளப்பி இருக்கிறார். திரைக்கதையின் ஓட்டம் தொய்வடையும் போதெல்லாம் சூரியின் ஒன்லைனர்கள் தான் அவ்வப்போது நிவாரணமாக இருக்கிறது. படத்தின் ஆரம்பிக் காட்சிகள் கலகலப்பில்லாமல் சாதாரணமாக நகர்ந்தாலும் போகப் போக வேகம் பிடிக்கிறது. அதிலும் கடைசி இருபது நிமிடங்கள் வெடிச் சிரிப்பிற்கு உத்தரவாதம். உச்சக் கட்டமாக வரும் சரோஜா – தேவி என்னும் பெயரை வைத்து செய்யும் காமெடி, தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் தங்கச்சி காமெடியை நினைவுபடுத்தினாலும் அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் நன்றாகவே ஒர்கவுட் ஆகின்றன. க்ளைமாக்ஸில் அதர்வாவின் கதாப்பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து நீளமான வசனத்தை உணர்வு பூர்வமாக ஒரே தடவையில் பேசி முடிக்கும் காட்சியிலும் மனதில் நிற்கிறார்.

g

ரெஜினா, அதிதி, ப்ரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ் என நான்கு கதாநாயகிகள் இருந்தும் யாருக்கும் அழுத்தமான பாத்திரப் படைப்பு இல்லாமல் வெறுமனே அழகுப் பதுமைகளாக வலம் வர வைத்திருப்பதை என்னவென்று சொல்வது? ஆனாலும் சிகப்பு நிறப் புடவையில் ரெஜினா அறிமுகமாகும் போது இளைஞர்களின் பல்ஸ் வேறு லெவலுக்கு செல்வதைத் தவிர்க்க முடியவில்லை. அதுவும் “வெண்ணிலா தங்கச்சி..” பாடலில் நடனம் + முகபாவனைகளில் கலக்கி இருக்கிறார். இருப்பதிலேயே ரொம்பவே துக்காடா வேடம் அதிதிக்கு; முதல் பார்வையில் காதலில் விழுவதோடு சரி; வேறெந்த வேலையும் பெரிதாக இல்லை. இரண்டாம் பாதியை ப்ரணீதா கொஞ்சம் ஆக்கிரமிப்பு செய்கிறார். இவரது பாத்திரப் படைப்பு மட்டும் தான் ஓரளவுக்கேனும் நியாயமாகக் கையாளப்பட்டுள்ளது. பதிவுத் திருமணம் வரை சென்று இவரது காதல் டமாலாகி விட மீண்டும் அதர்வாவை சந்திக்கும் காட்சியில் இவர் காட்டும் நியாமான கோபம் ரொம்பவே இயல்பாக உள்ளது. நல்ல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வீணடித்திருக்கிறார்கள். அவரும் முடிந்த வரை தன் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் கற்பித்து விட்டுச் செல்கிறார்.

அதர்வாவின் பெற்றோராக வரும் தயாரிப்பாளர் சிவாவும், சோனியாவும் ரொம்பவே மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். மகனின் காதல் லீலைகளைத் தெரிந்தும் கண்டு கொள்ளாத தந்தை, எல்லாவற்றையும் வெகுளித் தனமாக நம்பும் தாய், தன்னுடைய காதல் லீலைகளில் தந்தையைக் கோர்த்து விட்டு அதர்வா எஸ்கேப் ஆகி விட தந்தை சிவாவை சந்தேகிக்கும் தாய் சோனியா என என்ன தான் நகைச்சுவைக்காக என்றாலும் இத்தனை நாரகாசமாக காட்சிகளை அமைத்திருக்க வேண்டாமே? கட்டப்பா கெட்டப்பில் தேமே என்று வந்து போகிறார் மொட்டை ராஜேந்திரன். கூடவே கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன அவரது வழக்கமான பன்ச்களும் பெரிதாகக் கவரவில்லை. ஒரு சில காட்சிகள் வந்தாலும் மயில்சாமி கலகலப்பூட்டிச் செல்கிறார்.

என்ன தான் ரொமான்டிக் ஹீரோ வேடம் அதர்வாவிற்குப் பொருத்தமாக இருந்தாலும் பார்க்கும் பெண்களெல்லாம் முதல் பார்வையிலேயே காதலில் விழுவதென்பது ரொம்பவே ஓவர். பெற்றோரின் அரவணைப்பில் வளரும் மற்றைய பெண்களைக் கூட விட்டு விடலாம். யாருடைய ஆதரவும் இல்லாமல் கருணை இல்லத்தில் தங்கிப் படித்து சக கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக வளர்ந்து நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்குமா வாழ்க்கையைப் பற்றிய ஒரு புரிதல் இல்லாமல் போகும்? அதர்வாவின் சுயரூபம் தெரிந்த பின்னரும் வழக்கமான காதநாயகிகளைப் போல் நாயகன் திருந்தி வரும் வரை காத்திருப்பதாக அவரது பாத்திரத்தை வடிவமைத்திருப்பது சுத்த அபத்தம். முன்னாள் காதலிகளுக்கு திருமணப் பத்திரிக்கை வைக்க வரும் அதர்வா ப்ரணீதாவைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் நேரடியாகச் சந்திக்கவில்லை. குறைந்த பட்சம் அவர்களை சந்திக்க வைத்து அழுத்தமாக ஓரிரு காட்சிகள் வைத்திருந்தால் அதர்வாவின் மன மாற்றத்திற்கு நியாயம் கற்பிக்கும் விதமாக அமைந்திருக்கும்.

g

இமானின் இசையில் பாடல்கள் எல்லாமே ஆட்டம் போட வைக்கின்றன. யுகபாரதியின் வரிகளில் பிரதீப் குமார் பாடிய “அம்முக்குட்டியே அடியே..” அருமையான மெலடி; இடையிசையில் பேஸ் கிடாரும், வயலினும் புகுந்து விளையாடி இருக்கின்றன. நகாஷ் – ரம்யா பாடிய “வெண்ணிலா தங்கச்சி..” அருமையான டான்ஸ் நம்பர்; தினேஷின் நடன அமைப்பில் அதர்வா – ரெஜினா கலக்கி இருப்பர். ஸ்ட்ரிங்ஸ் – கிட்டார் காம்போவில் ஒலிக்கும் “கண்மணி மெய்யான காதல் நீதானே..” இனிமையான பாடல்; அபாய் ஜோத்புர்க்கர் குரல் பாடலுக்கு சரியான தேர்வு. ப்ரணீதாவின் காதலுக்காக ஹரிச்சரன் – ஸ்ரேயா கோஷல் பாடிய “ஆஹா ஆஹா ஆதாம் ஏவாள்..” பாடல் அருமையான இசைக்கோர்ப்பு எனலாம். காதல் தோல்வியில் இடம்பெறும் “தம்பி கட்டிங்கு கட்டிங்கு..” பாடலும் கேட்கும் ரகம். காதல் காட்சிகளில் பலவற்றில் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. அட்டகாசமான பாடல்களுக்காகவே ஒரு முறை பார்க்கலாம் இந்தப் படத்தை.

தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் அவனில்லை, ஆட்டோகிராப் எனப் பார்த்து பழகிய படங்களின் சாயலியே திரைக்கதையை அமைந்துள்ளதால் ஒரு கட்டத்திற்கு மேல் யூகித்துக் கொள்ள முடிவதென்பது கொஞ்சம் பலவீனம். ப்ரணீத்தவுடனான திருமணம் தடைப்படும் காட்சியில் முரளியின் “இதயமே இதயமே..” பாடலைப் பயன்படுத்தி இருக்கும் விதம் அருமை. இரண்டாம் பாதியில் வரும் ஒரேயொரு சண்டைக் காட்டியிலும் செயற்கைத் தனம் எட்டிப் பார்க்கிறது. கருணை இல்லத்திற்காக வித்தியாசமான முறையில் நன்கொடை திரட்டும் காட்சியை நிச்சயம் பாராட்டலாம். இளமைத் துள்ளலான படமாதலால் ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது. ஆடைவடிமைப்பும் படத்திற்கு பக்க பலம். முதல் பாதியில் “அம்முக்குட்டியே..” மற்றும் “வெண்ணிலா தங்கச்சி..” பாடல்கள் இடைவெளியே இல்லாமல் வருவது கொஞ்சம் சலிப்பூட்டுகிறது.

மொத்தத்தில் மினிமம் கேரண்ட்டி காமெடி மற்றும் அட்டகாசமான பாடல்கள் காப்பாற்றுவதால் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் பார்க்கக் கூடிய டைம் பாஸ் படம் தான்.

Gemini Ganeshanum Suruli Raajanum Trailer

Click here to read previous movie reviews

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s