வேலையில்லா பட்டதாரி 2 (2017)

வலுவான வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தனுஷ் இக்கட்டான சூழ்நிலையில் முந்தைய வெற்றிப் பாடமான வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தீர்மானித்தமையானது நிச்சயம் தந்திரமான மூலோபாயம் தான். என்றாலும் அந்த அதீத எதிர்பார்ப்பை முழுவதுமாகப் பூர்த்தி செய்ய எத்தனிக்காமல் வெற்றுச் சமாளிப்புகளுடனேயே திருப்திப்பட்டுக் கொண்டிருப்பது தான் சற்றே ஏமாற்றத்தைத் தருகிறது. முந்தைய பாகத்தின் கதையமைப்பின் தொடர்ச்சியாகவும் கதாப்பாத்திரங்களின் நீட்சியாகவும் இரண்டாம் பாகத்தைத் சுவாரசியமாகத் தருவதில் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஜெயித்திருந்தாலும், வலுவான கதைக்களமோ மனதில் நிற்குமளவிற்கு அழுத்தமான காட்சியமைப்புகளோ இல்லாதிருப்பது தான் மிகப் பெரிய சறுக்கல்.

வருடத்திற்கான சிறந்த பொறியாளர் விருதை வெல்லும் தனுஷை தனது நிறுவனத்தில் பணியமர்த்த முயற்சித்துத் தோற்றுப் போகும் தொழிலதிபர் கஜோல், தனுஷ் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் தொழில் முயற்சிகளை தனது பணபலத்தையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி முடக்கிப் போட, அவரோ வேலையிலிருந்து விலகி நண்பர்கள் உதவியுடன் சொந்தமாக நிறுவனத்தை உருவாக்குகிறார். கிடைக்கும் முதல் கட்டட நிர்மாண வாய்ப்பு பேரழிவிற்கு ஏதுவான நிலப்பரப்பில் அமைந்திருப்பதைக் காரணம் காட்டி தனுஷ் விலகிக் கொள்ள, அது கஜோலின் கைகளுக்குச் செல்கிறது. அபாயத்தை தடுக்க நினைத்து மாணவர் படையுடன் போராட்டத்தில் இறங்கும் தனுஷ், கஜோலின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ள பதிலுக்கு கஜோல் தனுஷின் விஐபி பாய்ஸ் நிறுவனத்தின் பெரும் பங்குகளைக் கைப்பற்றி அதிரடி காட்ட, தனுஷ் மக்கள் விரோதத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தினாரா? மீண்டும் தனது நிறுவனத்தைக் கைப்பற்றினாரா? என்பனவே படத்தின் சுவாரசியமான முடிச்சுக்கள்.

vel

படத்தை ஒட்டு மொத்தமாகத் தாங்கிச் செல்வது தனுஷின் ரகுவரன் கதாப்பாத்திரம் தான். குடும்பஸ்தராக ஒருபுறம் மனைவி அமலாபாலை சமாளிக்க முடியாமல் திணறுவது, பெரிய வாய்ப்பு எனத் தெரிந்திருந்தும் முதலில் வாய்ப்புக் கொடுத்த நிறுவனத்திற்கு துரோகம் செய்ய விரும்பாமல் கஜோலின் அழைப்பை நிராகரிப்பது, வேலையிழந்து மனவழுத்ததில் அவதியுறும் தருணத்தில் கோபத்தை மனைவியின் மேல் காட்டுவது, தனது சொந்த நிறுவனத்தின் பங்குகளை கஜோலிடம் இழந்து நிற்கும் தருவாயில் நிறுவனமென்பது ஊழியர்களின் கூட்டுமுயற்சியே அதுவில்லாதவிடத்து அது வெறும் கட்டடம் மாத்திரமே என்பதை கஜோலுக்குக் குறிப்பால் உணர்த்துவது எனப் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முடிந்தவரை பிரச்சினைகளைப் பொறுமையாகக் கையாள்வதும் முடியாதவிடாது அசால்டான மேனரிசத்துடன் நீளமான வசனங்கள் பேசி கடுப்பை வெளிப்படுத்தும் ரகுவரன் கதாபாத்திரத்தின் குணவியல்பை மாறாமல் கடைசி வரை கொண்டு செல்வதும் சிறப்பு. தந்தை சமுத்திரக்கனியின் யோசனைப்படி மனைவியை சமாதானப்படுத்த மல்லிகைப்பூவை வாங்கிச் சென்று அமலா பால் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முழிப்பதும், குலுமணாலி பயணத்திற்கு டிக்கெட் வாங்கித் தீடீரெனப் பூகம்பம் வந்து விட திட்டமிட்ட சதியெனப் பழி சுமத்தும் மாமியார் மீரா கிருஷ்ணனை சமாளிக்க முடியாமல் திணறுவதும் கலகலப்பான பகுதிகள்.

இளவயதிலேயே தந்தையை இழந்து சொத்தை அடைய நினைத்த உறவினர்களிடம் முட்டி மோதி தனியொருத்தியாக வளர்ந்து நிற்கும் தொழிலதிபராக கஜோல் பொருத்தமான தேர்வு தான். அவரது குணாதிசயத்தை நியாயப்படுத்தும் அளவிற்கு பின்னணியை அமைந்திருந்தாலும் அவரது பாத்திரம் இன்னும் வலுவாக அமைக்கப்பட்டிருக்கலாம். ரஜினிக்கு அமைந்ததைப் போல் மன்னன் விஜயசாந்தி, படையப்பா ரம்யா கிருஷ்ணன், மாப்பிள்ளை ஸ்ரீவித்யா என எதிர்மறை நாயகியுடன் மோத வேண்டுமென்பது தனுஷின் அவாவாக இருக்கலாம். இதற்கு முன் மாப்பிளை ரீமேக்கில் கூட மனீஷா கொய்ராலாவை நடிக்க வைத்திருந்தார். படையப்பா நீலாம்பரி, மன்னன் சாந்திதேவி, மாப்பிள்ளை ராஜராஜேஸ்வரி என அந்தக் கதாப்பாத்திரங்கள் வெற்றி என்பது அதன் பாத்திரப் படைப்பு சார்ந்ததேயன்றி வெறுமனே நாயகி பிம்பமல்ல. என்றாலும் தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்திற்கும் இடையான வேறுபாட்டை அவ்வப்போது வெளிப்படுத்துவது, ஜி.எம்.குமாரின் ப்ராஜெக்ட் கை நழுவிப் போனதும் ஏமாற்றத்தை வெளிப்படுத்துவது, திட்டமிட்டு தனுஷின் வேளைக்கு உலை வைப்பது, தனுஷின் சொந்த நிறுவனத்தின் பங்குகளை மறைமுகமாக அபகரிப்பது என கிடைத்த இடங்களில் பரிணமிக்கிறார் கஜோல்.

vel

அதிகமான காட்சிகள் இல்லாவிட்டாலும் அமலா பாலின் பாத்திரம் மனதில் நிற்கிறது. தாயில்லாத வீட்டில் குடும்ப நிர்வாகத்தை தாங்கி நிற்கிறார். சம்பாதிக்கும் பணத்தை குடித்து வீணாக்கும் கணவனை கண்டிப்பதும், அதுவே வேலையிழந்து வாடி நிற்கும் சமயம் ஆதரவாகப் பேசி ஆரத் தழுவிக் கொள்வது என நல்ல வேடம். ஒட்டு மொத்தக் குடும்பமுமே அவருக்குப் பயப்படுவதாக அமைத்திருக்கும் நகைச்சுவைக் காட்சிகள் முன்பாதியைக் கலகலப்பாக நகர்த்த உதவுகின்றன. முதல் பாகத்தில் கண்டிப்பான அப்பாவாகக் காட்டப்பட்ட சமுத்திரக்கனியின் கதாப்பாத்திரம் இந்தப் பாகத்தில் காமெடி அப்பாவாக மாற்றப்பட்டுள்ளமை கொஞ்சம் நெருடல். மனைவியை சாமாளிக்க மகனுக்கு யோசனைகள் கூறி அடிக்கடி பல்பு வாங்கும் கதாப்பாத்திரம். முதல் பாகத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்திற்கு ஆதாரமாய் அமைந்த சரண்யா பொன்வண்ணன் ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார்.

நகைச்சுவைக் காட்சிகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்தே கதையோடு ஒட்டியே பயணிப்பது பலம். விவேக் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாகப் பேசி அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார். புதிய நிறுவனம் தொடங்க முதலீடு இன்றித் தவிக்கும் தனுஷிற்குத் தக்க சமயத்தில் உதவும் குணச்சித்திர நடிப்பிலும் கவர்கிறார். செல் முருகன் அடிக்கடி தனக்கும் விவேக்கின் மனைவி தங்கபுஷ்பத்திற்கும் இடையான நெருக்கத்தைச் சுட்டிக் காட்டிக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். முந்தைய பாகத்தில் சுரபி ஏற்றிருந்த அனிதா கதாப்பாத்திரத்தை இந்த முறை ரிது வர்மா ஏற்றிருக்கிறார். அவரது தந்தையாக ஸ்ரீராம் இக்கட்டான சூழ்நிலையிலும் தனது ஊழியர் தனுஷை விட்டுக் கொடுக்காத கதாப்பாத்திரம்.

அளவுக்கதிகமான கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் யாரையும் விட்டுக் கொடுக்காமல் ஓரிரு காட்சிகள் என்றாலும் கூட மனதில் நிற்கும் காட்சிகளாக வடிவமைத்தமைக்கு சௌந்தர்யாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படம் ஆரம்பிக்கும் போதே கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்த அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் நேரடியாகக் நோக்கிப் பயணிக்கும் பாங்கும் பாராட்டுக்குரியது. தனுஷின் வீடு, ஹாரிபாட்டர் நாய், மொபெட் என முந்தைய படத்தின் நினைவுகளின் நீட்சியாகக் காட்சிகளை அமைத்திருப்பதும், ஆபத்தான சதுப்பு நிலப்பரப்பில் கட்டட நிர்மாணம், ஜில்லிகட்டுப் பிரச்சினையை நினைவுபடுத்தும் மாணவர் போராட்டம், வெள்ளப்பெருக்கு போன்ற சமகால நிகழ்வுகளை சமயோசிதமாக உட்புகுத்தி இருக்கும் விதம் சிறப்பு. ஆனாலும் இடைவேளை வரை வேகமாக நகரும் திரைக்கதை இடைவேளைக்குப் ரொம்பவே தடுமாறுகிறது. இடைவேளைக்குப் பின் கஜோலின் கதாப்பாத்திரம் சற்றே வலுவிழந்து போவதும் ஊகிக்க கூடிய காட்சிகளாகவே நகர்வதும் திரைக்கதையின் பலவீனம். பொதுவாக நாயகன் – எதிர்மறை நாயகி இடையானாக போட்டி என்னும் பொழுது க்ளைமாக்ஸில் மூன்றவதாக வில்லன் ஒருவர் நாயகியைக் கடத்திச் சென்று விடுவதும், நாயகன் கடைசியில் காப்பாற்ற அந்த எதிர்மறை நாயகி திருந்தி மனம் மாறுவதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். அந்த மாதிரி எமோஷனல் க்ளீஷேக்கள் ஏதும் இருக்கக் கூடாதெனத் தெளிவாக இருந்திருக்கிறார் சௌந்தர்யா. வெகு இயல்பாக தனுஷ் உண்மையை கஜோலுக்குப் புரிய வைக்கும் இறுதிக் காட்சி; சற்றே உணர்வுபூர்வமாக இருந்திருக்கலாம்.

vel

இரண்டாம் பாகம் தவற விடும் முக்கியமான நபர் முந்தைய பாகத்தின் இசையமைப்பாளர் அனிருத். பாடல் காட்சிகளில் வெறுமையை உணர முடிகிறது. அதிலும் முந்தைய பாகத்தின் பின்னணி இசையைக் கேட்கும் போதே ஒரு வித உற்சாகம் பீறிட்டெழுகிறது. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை. யோகி பி – தனுஷ் படும் அறிமுகப் பாடலான “நடடா ராஜா..” பாடல் சலிப்பூட்டுகிறது. தனுஷின் வரிகளில் தாய்மையுடன் கூடிய மனைவியின் அன்பைப் பற்றிப் பேசும் “இறைவனை தந்த இறைவியே..” பாடல் நெஞ்சைத் தொடுகிறது. மானசியின் குரலும் ஸ்ட்ரிங்ஸ் – டிரம்ப்பெட் காம்போவும் ரொம்பவே ரசிக்க வைக்கிறது. விரக்தியில் தனுஷ் படும் “உச்சத்தில கத்துறனே நானும்..” பாடலில் தனுஷின் குரலைத் தவிர வேறேதும் சிலாகிக்க இல்லை. பென்னி தயாள் – சக்திஸ்ரீ கோபாலன் பாடிய “தூரம் நில்லு..” பாடல் கேட்கலாம் ரகம். பின்னணி இசை சில இடங்களில் கவனிக்க வைக்கிறது.

காட்சிக்குத் தோதாகத் திருக்குறள்களைப் பயன்படுத்திய விதம் நலம். ஆனாலும் முந்தையை பாகத்தின் தொடர்ச்சி நிலையைப் (Continuity) பேணுகிறேன் பேர் வழியென அதே வசங்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி இருப்பது கற்பனை வறட்சி. அதிலும் அந்த “அமுல் பேபி” எனும் பெயரை கஜோலை பார்த்து விளிப்பதைக் கூட மன்னித்து விடலாம்; மற்றொரு வில்லனான சரவண சுப்பையாவையும் அதே பெயரால் விளிப்பதையெல்லாம் எப்படி சகித்துக் கொள்வது? தனுஷின் நிறுவனப் பங்குகளை கஜோல் கைப்பற்றி தனுஷை வெளியே அனுப்பியதும் விவேக் மற்றும் சக பங்குதாரரான பாலாஜி மோகன் அவருக்கு ஆதரவாக வெளியே வருவது கூட ஓகே. ஒட்டுமொத்தமாக பொறியாளர்கள் எல்லோரும் வேலையை விட்டிட்டு வருவதென்பது வழக்கம் போல் சினிமாவில் மாத்திரமே சத்தியம்.

இரண்டாவது வில்லனாக வரும் இயக்குனர் சரவண சுப்பையா மற்றும் குழப்பமான மனநிலையைப் பிரதிபலிக்கும் சக பங்குதாரரான பாலாஜி மோகன் சரியான தேர்வு. தனுஷின் தம்பியான ரிஷிகேஷ், செட்டியாராக வரும் ஜி.எம்.குமாரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ரைசா வில்சன் மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பிரபலமான லோகேஷ் கஜோலின் உதவியாளர்களாக வருகிறார்கள். சமீர் தஹீரின் நேர்த்தியான ஒளிப்பதிவும் பிரசன்னாவின் படத்தொகுப்பும் பக்க பலம். தனுஷ், கஜோல், அமலா பாலின் ஆடை வடிவமைப்பு பல இடங்களில் கவனிக்க வைக்கிறது.

மொத்தத்தில் தனுஷின் ரகுவரன் கதாப்பாத்திரமும், நகைச்சுவைக் காட்சிகளும் ரசிக்க வைத்தாலும் எதற்காக இரண்டாம் பாகம் எனும் கேள்விக்கான பதிலை இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தால் இந்த வேலையில்லா பட்டதாரியை இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாம்.

Velaiyilla Pattadhari 2 Trailer

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s