Classics of Tamil Cinema 2: சபாஷ் மீனா (1958)

நகல்களைக் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை; அதே சமயம் அவை தழுவி எடுக்கப்பட்ட அசல் படைப்புக்களுக்கான குறைந்த பட்ச மரியாதையைக் கூடக் கொடுக்கத் தவறுவதென்பது நிச்சயம் நேர்மையின்மையின் வெளிப்பாடு தான். பாமா விஜயம், காசே தான் கடவுளடா, காதலிக்க நேரமில்லை என காலத்தால் அழியாத முழு நீள நகைச்சுவைச் சித்திரங்கள் வரிசையில் வைத்து இன்று வரை கொண்டாடப்படும் படைப்பான 1996 இல் வெளியாகி சக்கைப்போடு போட்ட உள்ளத்தை அள்ளித்தா படமானது, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1958 இல் வெளியான சிவாஜி – சந்திரபாபு இணைந்து கலக்கிய சபாஷ் மீனாவின் அப்பட்டமான தழுவல் என்பது இந்தத் தலைமுறையினரில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? தனது இயக்கத்தில் ஜெயராம் – குஷ்பூ நடித்து வெளியான முறைமாமன் படத்தின் கதைக்கருவானது 1963 இல் சிவாஜி – சரோஜாதேவி நடிப்பில் வெளியான இருவர் உள்ளம் படத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டது என்பதை நேர்மையாக ஒப்புக் கொண்ட இயக்குனர் சுந்தர்.சி இதுவரை உள்ளதை அள்ளித்தா – சபாஷ் மீனா சர்சையைப் பற்றி வெளிப்டையாகப் பேசியதாகத் தகவல்கள் ஏதுமில்லை. வெறும் கதைக்கரு மாத்திரமன்றி கதை நகரும் களமும், கதாப்பாத்திர வடிவமைப்பும் கூடவே காட்சியமைப்புக்கள் கூட சபாஷ் மீனாவுடன் ஒத்துப் போவதால் வெறும் இன்ஸ்பிரேஷன் எனக் கருதி எளிதாகக் கடந்து செல்ல முடியாது.

பணக்கார வீட்டுப் பையனான சிவாஜி நடிப்பில் ஈடுபாடு கொண்டு பொறுப்பில்லாமல் நண்பர் சந்திரபாபுவுடன் சேர்ந்து ஊர் சுற்றி வர, குடும்பப் பொறுப்பை உணர்த்துவதற்காக சென்னையில் தனது நண்பர் ரங்காராவின் கட்டுப்பாட்டில் இருப்பதற்காகத் தந்தையான பாலசுப்ரமணியம் அனுப்ப கூண்டுக்குள்ளே அடைபட்டுக் கொள்ள விரும்பாத சிவாஜி தனக்குப் பதிலாக நண்பர் சந்திரபாபுவை அனுப்பி வைத்து விட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பி திருடன் குலதெய்வம் ராஜகோபாலுடன் நட்புறவு பூண்டு குப்பத்தில் அடைக்கலம் சேர்கிறார். மதன மாளிகையில் சந்திரபாபு – சரோஜாதேவி இடையே காதல் மலர, சிவாஜியோ சேரியில் சந்திக்கும் மாலினி மீது காதல் வயப்படுகிறார். இடையே மகனைத் தேடி தந்தை வர சிவாஜி – சந்திரபாபு கூட்டணி நடத்தும் ஆள்மாறாட்ட ரகளை, மாலினியைக் ஒரு தலையாகக் காதலிக்கும் அவளது மாமனால் சிவாஜியின் மேல் சுமத்தப்படும் கொலைப்பழியில் இருந்து தப்பிக்கும் விதம், உச்சபட்சமாக உண்மையான சந்திரபாபு போலீசுக்குப் பயந்து ஓடி விட, அவரது சாயலிலேயே தள்ளுவண்டிக்காரரான இன்னொரு சந்திரபாபுவை தவறுதலாகக் வீட்டுக்குள் கூடி வர அவர் அடிக்கும் லூட்டிகள் என கலகலப்பிற்குப் பஞ்சமேயில்லாமல் நகரும் திரைக்கதை சுவரசியத்தின் உச்சக்கட்டம்.

இதே கதையமைப்பினை சிற்சில மாறுதல்களுடன் உள்ளத்தை அள்ளித்தாவில் கையாண்டிருப்பார் இயக்குனர் சுந்தர்.சி. சிவாஜிக்கு இடத்தில் கார்த்திக்; சந்திரபாபுவின் கதாப்பாத்திரத்தில் கவுண்டமணி; இரட்டைக் கதாநாயகிகளைப் பயன்படுத்தாமல் ரம்பாவை மாத்திரம் மையமாகக் கொண்டு கதையை நகர்த்தி இருப்பார். திருடனாக தொடக்கத்தில் வரும் குலதெய்வம் ராஜகோபால் பாத்திரத்தை கவுண்டமணியின் கதாப்பாத்திரத்தோடு இணைத்து சந்திரபாபுவின் இரட்டை வேட உபாயத்தை மணிவண்ணனுக்கு வழங்கியிருப்பார். சிவாஜியின் தந்தை பாலசுப்ரமணியம், சரோஜாதேவியின் தந்தை ரங்காராவ் வேடங்களுக்கு மாற்றீடாக கார்த்திக்கின் தந்தையாக ஜெய்கணேஷையும் ரம்பாவின் தந்தையாக மணிவண்னண்ணையும் பயன்படுத்தி இருப்பார். காவியம் பேசிய “சித்திரம் பேசுதடி..” பாடல் காலஓட்டத்தில் “அழகிய லைலா..” வாக மாறியது. மகன் என்பதை ஊர்ஜிதப்படுத்த சிவாஜியின் தந்தை கொடுக்கும் கடிதத்திற்குப் பதிலாக குடும்ப மோதிரத்தை மாற்றீடு செய்திருப்பார்; சிவாஜியின் தந்தை சிவாஜியைத் தேடி ரங்காராவ் வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் வரும் வேளை சிவாஜி – சந்திரபாபு இணைந்து நடத்தும் ஆள் மாறாட்ட நாடகக் காட்சிகள் அச்சுப் பிசகாமல் உள்ளத்தை அள்ளித்தாவிலும் இடம்பெற்றிருந்தன. படத்தின் வெற்றி ஆள் மாறாட்ட நகைச்சுவைக் கதைகளின் வல்லுநர் எனும் பிம்பத்தை சுந்தர்.சிக்குப் பெற்றுத் தந்தது. உண்மையில் அந்த விதையானது சபாஷ் மீனாவிலேயே துளிர் விட்டதென்பதற்கு மாற்றுக் கருத்தே கிடையாது.

சிவாஜி கணேசன் நிறைய விட்டுக்கொடுப்புகளுடன் இந்தப் படத்தை நடித்திருந்தார். சொல்லப் போனால் பல காட்சிகளில் சிவாஜியை விட சந்திரபாபுவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். முதல் காட்சியே “அலங்காரவல்லியே..” பாடலுடன் கூடிய சிவாஜி – சந்திரபாபுவின் நாடக ஒத்திகையில் தான் ஆரம்பிக்கும். தந்தையின் அபரிமிதமான கட்டுப்பாடுகள் மற்றும் பணத்தின் நிழலில் இருந்து விடுபட்டு தன்னிச்சையாக வாழ எத்தனிக்கும் கதாப்பாத்திரம். அதுவரை ராஜாவாக வாழ்ந்து விட்டு முதல் முறை குடிசை வாழ்வை அனுபவிக்கும் காட்சியில் வெகுளித்தனமான முகபாவனைகளால் தனது அசௌகரியங்களை வெளிப்படுத்துவது, குலதெய்வம் ராஜகோபாலுடன் சேர்ந்து திருட்டு வழியில் பணம் சம்பாதிக்க முயற்சித்து சிறுபிள்ளைத்தனமாக மாட்டிக் கொண்டு முழிப்பது, பின் மனம் திருந்தி வாகன ஓட்டுனராக உழைக்கத் தொடங்கும் போது திருச்சியில் இருந்து சென்னை வரும் சிவாஜியின் தந்தை சிவாஜியின் காரிலேயே ஏறி விடக் காட்டும் தவிப்புக்கள், சென்னையில் நாடகக் குழுவில் சேர்ந்து நாடகம் போடுகையில் எதேச்சையாகத் தந்தை வந்து விட குட்டு வெளிப்பட்டு விடுமோ என அஞ்சி நாடகத்தின் பாதியிலேயே நழுவி விடுவது எனக் கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் இயல்பான நடிப்பில் கவர்ந்திருப்பார்.

sab

பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர்.பந்தலு, ப.நீலகண்டன் ஆகியோர் சபாஷ் மீனா என்னும் முழுநீள நசைச்சுவைச் சித்திரத்தை படமாக்க முனைந்த பொழுது கதாநாயகனாக சிவாஜியை நடிக்க வைக்கப் பேச்சு வார்த்தை நடந்தது. கதையைக் கேட்ட சிவாஜி, கதாநாயகனுக்கு இணையாகக் கதையின் மைய நாயகனாக ஒரு நகைச்சுவைக் கதாப்பாத்திரம் கூடவே பயணிப்பதை அவதானித்து அந்தக் கதாப்பாத்திரத்துக்காகச் சந்திரபாபுவைப் பரிந்துரைத்தார். விஷயத்தை ப.நீலகண்டன் தொலைபேசியில் சந்திரபாபுவிடம் தெரிவிக்க, நேராக பத்மினி ப்ரொடக்ஷன்ஸுக்கு வந்து கதையைக் கேட்ட சந்திரபாபு, “சிவாஜி மிகத் திறமையான நடிகர். எனது திறமையைப் புரிந்து கொண்டதால் தான் இந்த வேடத்திற்குப் பரிந்துரைத்திருக்கிறார்.” என்று கூற நீலகண்டனுக்கு கொஞ்சம் ஆச்சரியம்; கூடவே சம்பள விஷயத்தில் சிவாஜியை விட ஒரு ருபாய் அதிகமாகத் தர வேண்டுமென கோரிக்கை வைக்க சற்றே அதிர்ச்சியும் மேலிடுகிறது. விஷயம் சிவாஜியின் காதுகளுக்குச் செல்ல, “இது நகைச்சுவைப் படம்; அவனிடம் திறமை இருக்கிறது. சில காட்சிகளில் அவனது நடிப்புத் தான் மேலோங்கி இருக்கும். நான் தான் பார்த்துச் சூதனமாக நடிக்க வேண்டும். சில சமயங்களில் இப்படித்தான் அதிமேதாவித்தனமாக பேசுவான்; விட்டு விடுங்கள்.” எனப் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து நடித்ததாகக் கூறுவர்.

சந்திரபாபுவைப் பொறுத்த வரை அவரது மிகச் சிறந்த படங்களில் என்றும் சபாஷ் மீனாவிற்குத் தனி இடமுண்டு. ஒருபுறம் சிவாஜியின் நண்பராக போகிற போக்கில் தத்துவார்ந்த கருத்துக்களை வெகு இயல்பாக உதிர்த்து விட்டுப் போகும் கதாப்பாத்திரம், மறுபுறம் உண்மையான சந்திரபாபு ஆள் மாறாட்டக் குற்றத்திற்காகப் பயந்து ஓடிப் போய் விட அவரது தோற்றத்திலேயே இருப்பதால் மாட்டிக் கொள்ளும் ரிக்க்ஷாக்காரர் கதாப்பாத்திரம். தந்தை தனக்குக் கொடுத்த கடிதத்தைக் கொடுத்து தனக்குப் பதிலாக சிவாஜி நடிக்கச் சொல்ல, “நீ பணக்கார பையன்.. எனக்கு பஞ்சத்தைத் தவிர வேறேதும் தெரியாது. உன் பேரு தானேடா எழுதியிருக்கு. என்னையேண்டா போக சொல்ற?” எனச் சலித்துக் கொள்வது, ஆள் மாறாட்டக் குற்றத்திற்குப் பயந்து சரோஜாதேவியின் காதலை ஏற்க முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிப்பது, ரங்காராவ் வீட்டிலிருந்து தப்பி செல்லும் வழியில் ரிக்க்ஷாக்காரர் சந்திரபாபு மனைவியிடம் மாட்டிக் கொண்டு சமாளிக்க முடியாமல் தவிப்பது, ரங்காராவ் வீட்டு வேலையாட்கள் உண்மையான சந்திரபாபுவிற்குப் பதிலாக ரிக்க்ஷாக்காரரை அழைத்துச் சென்று அவரது பேச்சுவழக்கு மாற்றத்திற்கான காரணத்தை கணிக்க முடியாமல் பைத்தியம் பிடித்து விட்டதாகக் கணிக்க தப்பித்துப் போக முடியாமல் புலம்புவது என இருவேறுபட்ட வேடங்களை வெகு அனாயாசமாகச் செய்திருப்பார்.

sab.jpg

சிவாஜிக்கு ஜோடியாக மாலினியும், சந்திரபாபுவிற்கு ஜோடியாக சரோஜாதேவியும் நடித்திருப்பர். மாலினி எம்.ஜி.ஆருடன் சபாஷ் மாப்ளே, எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் தலை கொடுத்தான் தம்பி, டி.ஆர்.ராமச்சந்திரனுடன் அவள் யார், முத்துராமனுடன் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, மற்றும் கல்யாண்குமாருடன் அழகு நிலா போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். தலைப்பில் குறிப்பிடப்படும் மீனா என்னும் கதாப்பாத்திரம் இவருடையதே. மாலினியுடன் ஒப்பிடும் பொழுது சரோஜாதேவிக்கு அதிக முக்கியத்துவம் படத்தில் கிடையாது. சரோஜாதேவியின் தந்தையாக ரங்காராவ் கலக்கியிருப்பார். குலதெய்வம் ராஜகோபால் என விளிக்கப்படும் வி.ஆர்.ராஜகோபாலுக்கு நல்லதோர் வேடம். கண்ணாடி வியாபாரம் செய்ய நினைத்து வெகு சாமர்த்தியமாக முன்கூட்டியே ராஜகோபால் சென்று கல்லெறிந்து வீட்டுக் கண்ணாடிகளை உடைத்து விட சிவாஜி சென்று கண்ணாடிகளை விற்க வேண்டுமென்பது கணக்கு; ஆர்வக்கோளாராக பேசிய நேரத்திற்கு முன்னதாகவே சிவாஜி சென்று கண்ணாடி விற்க முனைய, அவர் இருப்பது தெரியாமல் ராஜகோபால் கல்லெறிந்து கண்ணாடியை உடைத்து இருவரும் மாட்டிக் கொள்வது கலகலப்பான பகுதிகள்.

மகனைத் தேடி ரங்காராவிடம் வரும் சிவாஜியின் தந்தை வர இருவரையும் ஒரே சமயத்தில் சிவாஜி – சந்திரபாபு இணைந்து கட்டம் கட்டி ஏமாற்றும் காட்சிகள் வெடிச் சிரிப்பிற்கு உத்தரவாதம். ரிக்க்ஷாக்காரர் சந்திரபாபுவின் தெரு வழியாகப் போகும் நிஜ சந்திரபாபு ரிக்க்ஷாக்காரரின் மனைவியை அடையாளம் தெரியாமல் யாரென்று கேட்க, உன் மனைவி குழந்தைகளையே யாரென்று கேட்கிறாயா என்று சுற்றியிருப்பவர்கள் ஒன்று சேர்ந்து அடி போட, பொறுக்க முடியாமல் “ஆமாமா.. என் குழந்தைங்க தான்.” என பக்கத்தில் நிற்கும் நான்கு குழந்தைகளை வாரி அணைத்துக் கொள்ள, அடி போட்டவர்களில் ஒருவன் “யோவ்!! அது என் குழந்தைய்யா” என்று ஒரு குழந்தையை பிடுங்கிக் கொள்ள அப்பாவியாக ஒரு பார்வை பார்ப்பரே.. சபாஷ்! அடுத்த காட்சியில் அவருக்குப் பேய் பிடித்திருப்பதாக எண்ணி, தலைகீழாகக் கட்டிப் போட்டுப் பூசாரி “என்ன ஓடுறியா?” என கேட்கப் பதிலுக்கு “தலைகீழா கட்டிப் போட்டு ஓடுறியா என்றால் எப்படிய்யா ஓடுறது?” என்று பரிதாபமாகக் கேட்கும் காட்சி அவரது அபாரமான டைமிங் சென்ஸிற்கு சரியான உதாரணம். அதிலும் உச்சக் கட்ட இறுதிக் காட்சியில் சிவாஜி, நிஜ சந்திரபாபு, ரிக்க்ஷாக்காரர் சந்திரபாபு மூவரையும் வைத்து நடக்கும் ஆள் மாறாட்டக் காட்சிகளில் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாவது நிச்சயம்.

டி.ஜி.லிங்கப்பா இசையில் அருமையான பத்துப் பாடல்; சற்றே அதிகம் என்றாலும் இனிமையான இசை தொய்வில்லாமல் படத்தை நகர்த்திச் செல்லும். எத்தனை பாடல்கள் இருந்தாலும் டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய “சித்திரம் பேசுதடி..” பாடலுக்கு நிகரேது? அதுவும் சிவாஜி கொடுத்திருக்கும் முகபாவனைகள் சிறப்பு. சுசீலா – டி.ஏ.மோதி பாடிய “காண இன்பம் கனிந்ததேனோ..” இனிமையான மெட்டாக இருந்தாலும் மோதியின் குரல் சிவாஜிக்கு அவ்வளாகப் பொருத்தமில்லை. சந்திரபாபுவின் குறும்பான நடிப்பிற்காக டி.எம்.சௌந்தர்ராஜன் – சீர்காழி கோவிந்தராஜன் “ஆசைக்கிளியே கோபமா..” பாடலை ரசிக்கலாம். டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய “செல்வம் நிலையல்லவே..”, சூலமங்கலம் சகோதரிகள் குரலில் “நல்ல வாழ்வு காணலாமே..”, மற்றும் வறுமையின் கொடுமையை பேசுவதாக சந்திரபாபு – சரோஜாதேவி நடத்தும் நாடகத்தின் பின்னணியில் ஒலிக்கும் “ஓ.. சுயநலவெறி மிகு மானிடர்களே..” காலத்தால் அழியாத பாடல்களைக் கொண்ட இசைத்தொகுப்பு.

அருமையான பாடல்கள், திகட்டாத நகைச்சுவைக் காட்சிகள், சந்திரபாபுவின் திறமையான நடிப்பு எல்லாவற்றிற்கும் மேலாக இன்று வரை நகைச்சுவைப் படங்களில் கையாளப்படும் ஆள் மாறாட்ட யுக்திக்கு முன்னோடி என்ற வகையில் சபாஷ் மீனா கொண்டாடப்பட வேண்டிய படைப்புக்களில் ஒன்று என்றால் அது சற்றேனும் மிகையல்ல.

Click here to read complete web series of Classics of Tamil Cinema

Click here to advertise @ Thiraimozhi

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s