விவேகம் (2017)

ஒட்டு மொத்தத் தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு, தயாரிப்பாளரின் முதலீடு, அஜித் எனும் உச்ச நடிகரின் அர்ப்பணிப்பு இவை அத்தனையும் இயக்குனர் ஒருவரின் அஜாக்கிரதையால் விழலுக்கிறைத்த நீராக வீணடிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது கோபத்தை விட பரிதாபமே மேலோங்குகிறது. மெய் சிலிர்க்க வைக்கும் சாகசக் காட்சிகள், இதுவரை கண்டிராத படப்பிடிப்புத் தளங்கள், தொழில்நுட்ப மிரட்டல்கள் இவையெல்லாம் இருந்தும் அதீத தித்திப்பானது ஒரு கட்டத்திற்கு மேல் திகட்டவே செய்யுமென்பதற்கு சரியான உதாரணம் விவேகம். அறிமுகக் காட்சியில் கதாநாயகன் பேசும் பன்ச் டையலாகிற்கு கை தட்டி ஆர்ப்பரித்துக் கொண்டாடும் அதே ரசிகன், இறுதிக் காட்சியில் அதே வசனத்திற்கு தலையில் கையை வைத்து கொண்டு உட்காந்திருப்பதென்பது அதீத நாயக பிம்பமானது சுக்கு நூறாக உடையும் மோசமான அனுபவம். முந்தைய வீரம், வேதாளம் போன்ற சுமாரான கதைகளையே ரசனைமிகு காட்சிகளின் கோர்வையாக்கி இயக்குனாராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட சிவா, இந்த முறை காட்சியமைப்பில் கவனம் செலுத்தாமல் உச்ச நடிகரின் புகழ் போதையை வைத்து வெறுமனே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி விடலாமெனத் தப்புக் கனக்குப் போட்டிருப்பதே இந்தப் பெரும் சறுக்கலுக்குக் காரணம்.

பல்கெரியா செர்பியா பகுதியில் இயங்கி வரும் பயங்கரவாத தடுப்புப் படையின் ஒரு பிரிவாக அஜித் தலைமையில் இயங்கி வரும் விவேக் ஓபராய் உட்பட அஜித்தின் நெருங்கிய நண்பர்களைக் கொண்டமைந்த குழுவின் தலையாய இலக்கு செயற்கை பேரழிவுகளை நிகழ்த்தி உலக நாடுகளை அடிபணிய வைப்பதற்காக உருவாக்கப்பட்ட புளூடேனியும் அணுவாயுதங்களைச் செயலிழக்கச் செய்வது. ஒரு கட்டத்தில் இல்லுமினாட்டி எனப்படும் மொத்த உலகையும் மறைமுகமாக ஆளும் ரகசிய அமைப்பிற்கு ஆதரவாகச் செயற்படும் விவேக் ஓபராய் மற்றும் சக நண்பர்கள், தம் எண்ணத்திற்கு மாறாகப் பயணிக்கும் அஜித்தை போட்டுத் தள்ள முற்பட அந்தச் சதிவலையில் இருந்து அஜித் மீண்டு வந்து துரோகிகளைப் பழி வாங்கினாரா? அணுவாயுதங்களை செயலிழக்க வைத்தாரா? என்பதை நீட்டி முழக்கிச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சிவா. படத்தின் மிகப் பெரிய பிரச்சனையே ட்ரைலரில் பார்க்கும் போது தனித்தனியே பிரமிக்க வைத்த காட்சிகள் எல்லாமே கோர்வையாகப் பார்க்கும் போது தகுந்த காரணமே இல்லாமல் தர்க்க முரண்பாடுகளுடன் பயணித்து படத்தோடு ஒன்ற விடாமல் செய்வதே.

viv.jpg

தனியொருவராகப் படத்தைக் கடைசி வரை தாங்கிச் செல்கிறார் அஜித்குமார். அவரது பெயர்ச் சுருக்கத்தை நினைவுபடுத்தும் விதமாக அந்தக் கதாபாத்திரம் AK (அஜய்குமார்) எனப் பெயரிட்டிருப்பது சிறப்பு. ஒவ்வொரு படச் சட்டகத்திலும் அவரது உழைப்பும் தொழில் நேர்த்தியும் தனித்துத் தெரிவதென்பது ஒன்றே கடைசி வரை இருக்கையில் கட்டிப் போடக் காரணம். “நான் யாருங்கிறத எப்பவுமே நான் முடிவு பண்றதில்லை. என் எதிர்ல நிக்கிறவங்க தான் முடிவு பண்ணுவாங்க. நான் நண்பனா எதிரியான்னு..” அறிமுகமாகும் காட்சியிலேயே அனல் பறக்கிறது. ஆனாலும் தொடர்ந்து வரும் பாலக் காட்சியில் துப்பாக்கி முனையில் வேற்று மொழிப் படை வீரர்கள் சூழ நிற்க அவர்களிடம் தமிழில் “இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலைகளும் நீ தோத்திட்ட தோத்திட்டான்னு அலறினாலும் நீயா ஒத்துகிற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது Never.. Ever.. Give up.” எனும் நீளமான வசனத்தை நிதானமாக அவர் பேசி முடிக்கும் வரைக்கும் மொழி புரியாமல் சுடுவதைக் கூட மறந்து நிற்கும் அந்தப் படை வீரர்களைப் பார்க்கும் போது சிரிப்பு மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. அடுத்த காட்சியில் அஜித் அத்தனை படைவீரர்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை ஏமாற்றி விட்டு பாலத்திலிருந்து பல்டி அடித்துத் தப்பிப்பதைக் கூட விட்டு விடலாம், தலைகீழாக விழும் தறுவாயில் அத்தனை தோட்டாக்களில் ஒன்று கூட அவர் மேல் பாடாததும் பதிலுக்கு அவரது துப்பாக்கிச் சூட்டில் உலங்கு வானூர்தி ஒன்று வெடித்துச் சிதறுவதும் லிங்கா க்ளைமாக்ஸை மிஞ்சும் உச்சபட்ச நகைச்சுவைக் காட்சி.

அணுவாயுதத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுப்பதற்கான கடவுச்சொல்லை அறிந்திருக்கும் ஹேக்கரான அக்ஷராஹாசனை அஜித் கண்டு பிடிக்கும் காட்சிகள் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திக் செல்ல உதவி இருக்கின்றன. அக்ஷரா முகமாற்றுச் சத்திரசிகிச்சை செய்திருப்பதைக் கண்டுபிடிப்பது, கடவுச்சொல்லுக்காக அவரது காதலனை கடத்தி அல்பானியன் குழுவொன்று கொலை செய்ததையும், தனது காதலனின் இருதயத்திற்கு அண்மையில் பொருத்தப்பட்டிருக்கும் பேஸ்மேக்கர் கருவியை ஹேக் செய்து அவனது இருப்பிடத்தை அக்ஷரா அறிந்து கொள்வதையும் அனுமானித்து இறந்து போன காதலனின் பேஸ்மேக்கரை செயற்கையாக உயிர்ப்பித்து ஹோலோகிராம் தொழில்நுட்பம் மூலமாக பொதுவெளியில் அக்ஷராவின் காதலனின் உருவத்தினை மெய்நிகராகக் பிரதிபலிக்க வைத்து அஜித் தன்னிடம் வரவழைக்கும் அந்தக் காட்சி சாமானியர்களுக்கும் புரியுமளவிற்கு எடுக்கப்பட்ட விதத்திற்கு உண்மையில் சபாஷ் போடலாம். அக்ஷரா அறிமுகமாகும் அந்தக் காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தும் அதன் பின்னணி இசையும் அருமை. தொடர்ந்து வரும் அந்த அஜித்தின் பைக் சேஸிங்கும் சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விதமும் அபாரம்.

நண்பர்களால் சதிவலையில் சிக்கி அஜித் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பும் காட்சி அதனைத் தொடர்ந்து வரும் “தலை விடுதலை..” பாடலில் அஜித்தின் உழைப்பு நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்து. ஆனாலும் மலையுச்சில் இருந்து அத்தனை குண்டடிபட்டு விழும் ஒருவர் தன்னை முதல் ஆசுவாசப்படுத்திக்க காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்காமல் அத்தனை காயங்களுடன் அந்தப் பனித்தேசத்தில் தேவையே இல்லாமல் பச்சை மரங்களைக் குத்துவதும் உடற்பயிற்சி செய்வதும் எதற்காக? என்பது இயக்குனருகே வெளிச்சம். ரசிகர்களைத் திருப்திப்படுத்த எடுத்த காட்சிகளை வேறுவழியின்றித் திணித்திருப்பதைத் தவிர்த்து அந்தக் காட்சிகளுக்கான உரிய நியாயங்களோடு முன் வைத்திருந்தால் பாராட்டி இருக்கலாம்.

viv.jpg

அஜித்திற்கும் அவரது மனைவி காஜல் அகர்வாலுக்கும் இடையான அன்னியோன்னியத்தை உணர்த்தும் காட்சிகள் அழகான பகுதிகள். அக்ஷராவை எதிரிகளிடமிருந்து காப்பற்றும் தறுவாயில் வரும் கர்ப்பிணியான மனைவியின் அழைப்பைத் தவிர்க்காமல் வெளியில் நடக்கும் விபரீதத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாகக் குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்கும் காட்சியிலும், மலையுச்சியில் சூடுபட்டு விழுகையில் தொலைபேசியில் அழைக்கும் மனைவியிடம் நான் வர்ரேன் என நம்பிக்கை அளிக்கும் காட்சியிலும் அஜித்தின் நடிப்பு அட்டகாசம். இருவரிடையே பயன்படுத்தப்படும் சைகை மொழியை இறுதிக் காட்சியில் உபயோகித்திருக்கும் விதமும் நன்று. வில்லனிடம் பேசும் போதும், மனைவிடம் பேசும் போதும் மாறுதலே இல்லாமல் ஒரே மாதிரியான குரல் பண்பேற்றதை அஜித் பயன்படுத்தி இருப்பது காதல் காட்சிகளில் சலிப்பைத் தருகிறது. “மத்தவங்களுக்கு புருஷன் வீட்டுக்கு எப்ப வருவார்னு இருக்கும். எனக்கு உயிரோட வருவாராங்கிற பயம்..”, “புருஷன் பொண்டாட்டின்னா வீட்டுக் கொடுத்து வாழுறது தான் வாழ்க்கைனு இல்ல.. ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்காம வாழனும்.” போன்ற புராதன காலத்து வசனநடைகளை கொஞ்சமாவது நவீனப்படுத்தி இருக்கலாம்.

உலகத் தரத்தில் படமெடுக்கிறேன் பேர் வழியென பல்கேரியா போனாலும் கதாநாயகனுடன் நேரடியா மோதாமல் மனைவியைக் கடத்திப் பழி வாங்கும் வழமையான தமிழ் சினிமா பார்முலா வில்லனாக விவேக் ஓபராய். அவர் உண்மையில் வில்லனா இல்லை அஜித்தை ஒரு தலையாகக் காதலித்து ஏமாந்தவரா என்று சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு மனைவி காஜலை விட அதிகமாக அஜித்தின் புகழ் பாடியே வெறுப்பேற்றுகிறார். சண்டை போட வேண்டிய நேரத்தில் கூட இருவரும் “நண்பா.. நண்பா..” எனப் பரஸ்பரம் கொஞ்சிக் கொண்டிருக்கும் காட்சி ரொம்பவே சலிப்படைய வைக்கிறது. புத்திசாலித்தனமாக தன் மீதிருக்கும் குற்றச்சாட்டுகளை அஜித்தின் மீது சுமத்தி சர்வதேசத்தால் தேடப்படும் குற்றவாளியாக்கும் காட்சியில் மாத்திரம் தனித்துத் தெரிகிறார். கதாநாயகன் – வில்லன் பரஸ்பரம் மற்றொருவர் காய் நகர்த்தல்களை ஊகிக்கும் காட்சி கொஞ்சம் சுவாரசியம்.

நகைச்சுவைக்காக கருணாகரனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவரும் ஏதேதோ முயற்சி செய்து பார்க்கிறார். அஜித்திற்கே தெரியாமல் அஜித்தை வைத்து சிவா எடுத்திருக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு முன்னால் கருணாகரனின் முயற்சி பெரிதாக எடுபடவில்லை. பயங்கரவாத ஒழிப்புப் படையின் கட்டளைத் தளபதியாக சரத் சக்சேனா சரியான தேர்வு. அஜித்திற்கும் அவரைக் கொலை செய்ய முயற்சித்த முன்னாள் நண்பர்கள் சேர்ஜ் கிரோஸ்ன் காசின் மற்றும் அமிலா டேர்சிமெஹிக் இடையான சண்டைக் காட்சிகள் படமாகப் பட்ட விதம் அருமை. ஆரவ் சௌத்ரி, சுவாமிநாதன் போன்றோரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். பேஸ்மேக்கர், ஹோலோகிராம், ரிவர்ஸ் ஹேக்கிங், அல்ட்ரா வயலெட் ஜாமர், மெய்நிகர் பிம்பம், புளூடேனியம் அணுவாயுதம் எனத் தொழிநுட்ப ரீதியில் மிரட்டி இருக்குகிறார்கள்.

viv

வசனங்கள் ஆரம்பத்தில் ரசிக்க வைத்தாலும் படம் முழுவதும் எல்லோருமே பன்ச் வசனங்கள் பேசிக் கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பையே தருகிறது. “ஜெயிக்கிற முன்னாடி கொண்டாடுறதும் ஜெயிச்சதுக்கு அப்புறம் ஆடுறதும் நம்ம அகராதியிலேயே இல்லை..”, “உலகத்தில ஜெயிக்க முடியாத எதிரி யார் தெரியுமா? துரோகத்துக்காளான உண்மையான நண்பன்..”, “எண்ணிக்கை எப்பவுமே வாழ்க்கையை முடிவு பண்றதில்லை எண்ணம் தான் முடிவு பண்ணும்..”, “மாறி மாறி சுட்டப்ப இறங்கின தோட்ட வலிக்கல.. உங்க துரோகம் தான் வலிச்சது..” போன்ற வசனங்கள் ஆங்காங்கே கவனிக்க வைக்கின்றன. ஆனாலும் “நட்ப சந்தேகப்படக்கூடாது, சந்தேகப்பட்டா அது நட்பே கிடையாது”, “அவர் கூட உழைச்ச உனக்கே இவ்வளவு இருக்குன்னா.. அவர் கூட பொழைச்ச எனக்கு எவ்வளவு இருக்கும்” மாதிரியான பழைமையான வசங்களுக்குக் கத்திரி போட்டிருக்கலாம்.

அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம். அஜித் குழுவினரின் நட்பு மற்றும் தீரத்தை விளக்கும் “Surviva..” பாடல் அனிருத் – யோகிபி குரலில் கலக்கல். ஹரிஷ் ஸ்வாமிநாதன் பாடிய “தலை விடுதலை..” நன்றாகப் படமாகப் பட்டிருந்தாலும் படத்தோடு ஒன்றாமல் போனது குறையே. ஆனாலும் தனித்துப் பார்த்தால் ரசிகர்களுக்கு சிறந்த பரிசு. சாஷா திரிபதியின் “காதலாட..” பாடல் கேட்கும் போது மனதை வருடினாலும் முதல் பாடல் முடிந்து நான்கு நிமிட இடைவெளியில் வருவதால் சலிப்புத் தட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. எழுத்தோட்டத்துடன் வரும் தலைப்பு பாடலும் விசுவல் எபக்ட்ஸும் கவர்ந்திழுக்கின்றன. க்ளைமாஸ் காட்சியில் இடம்பெறும் “வெறியேற விதிமாற..” பாடல் சகிக்கவில்லை. பின்னணி இசை பல இடங்களில் பாரட்ட வைத்தாலும் ஒரு சில இடங்களில் இரைச்சலாக இருப்பதைக் கவனித்து இருக்கலாம். காட்சிகளை வேகமாக நகர்த்தும் ரூபனின் படத்தொகுப்பும், பைக் சேசிங் மற்றும் ரயில் நிலையைச் சண்டைக் காட்சிகளும் படத்திற்கு பலம். ஹைடெக் அலுவலகம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கண் முன் கொண்டு நிறுத்திய மிலனின் கலை இயக்கமும் பாராட்டுக்குரியது.

சமீபத்தில் இத்தைகைய மோசமான இறுதிக் காட்சியை வெறெந்தப் படத்திலும் பார்த்திருக்க முடியாது. தூள் படத்தில் பரவை முனியம்மா “சிங்கப் போல..” படலைப் பாடல் விக்ரம் துவம்சம் செய்வது போல், இதில் கோபத்தின் உச்சத்தில் காஜல் “வெறியேற.. விதிமாற..” பாடலைப் பாட அஜித் ஆக்ரோஷமாக சண்டை போடும் காட்சி ஒரே சிரிப்புத் தோரணங்கள். எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் சிவா? அவரது சிக்ஸ் பேக் முயற்சி கூட உங்களது மட்டமான காட்சியமைப்பால் சோபிக்க முடியாமல் போய் விட்டது. சலிப்பூட்டும் அந்த பீனிக்ஸ் பறவை க்ராபிக்சைத் தவிர்த்திருக்கலாம். சுற்றி வர அல்பானியன் குழு குழுமி நிற்க வெடிகுண்டைக் உடம்பில் கட்டிக் கொண்டு அஜித் நிதானமாக வெளியே வருவதெல்லாம் அரதப் பழசான யுக்தி. வில்லன் பாத்திரத்தை இன்னும் வலுவாக்கி உலகையே மறைமுகமாக இயக்கும் இலுமினேட்டி சமூகத்தைப் வெறும் வசனங்களால் கடந்து போகாமல் இன்னும் அது சார்ந்த காட்சிகளை மெருகேற்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் அரதப் பழசான காட்சியமைப்புக்களும் மோசமான திரைக்கதையும் இந்த விவேகத்தை மோசமாகப் பாதித்தாலும் கடைசி வரை தனியொருவராகத் தாங்கிச் செல்லும் அஜித்தின் நடிப்பிற்காகவும் தொழில்நுட்பக் குழுவினரின் அபரிமிதமான உழைப்பிற்காகவும் கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம்.

Vivegam Trailer

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s