Classics of Tamil Cinema 3: விடியும் வரை காத்திரு (1981)

முழு நீளத் திகில்ப் படங்கள் இயக்குனர் பாக்யராஜ் அதிகம் தொடாத திரைப்பட வகையறாக்களில் ஒன்று. கதாசிரியராக குருநாதர் பாரதிராஜாவிற்காக இவர் எழுதிய ஒரு கைதியின் டைரியையும் அதை ஹிந்தியில் மறுவாக்கம் செய்து இவரே இயக்கிய ஆக்ரே ராஸ்தாவையும் ஆக்க்ஷன் திரில்லராக இதே வரிசையில் சேர்த்தாலும், ஒரு இயக்குனராக தன்னைத் தானே பரீட்சிக்க எடுத்த படைப்பான விடியும் வரை காத்திரு நிச்சயம் ஒரு மாற்று முயற்சியே. அதற்கு முன்னரே பாரதிராஜாவின் பாசறையில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பாலகுருவின் இயக்கத்தில் ராஜேஷ் – வடிவுக்கரசி நடித்த கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லனாக நடித்திருத்திருந்தாலும், இந்தப் படத்தில் எதிர்மறை நாயகனாகத் தனக்காகப் பாக்யராஜ் அமைத்திருக்கும் கதாப்பாத்திரம் வேறுபட்ட பரிமாணத்தில் அமைந்திருக்கும்.
சகோதரியின் துர்மரணத்தைக் கண்ணெதிரே பார்த்த அதிர்ச்சியில் மனநிலை பிழன்று உத்தரித்துக் கொண்டிருக்கும் நாயகியாக சத்யகலா; வேலை தேடி வரும் பாக்யராஜை முதலில் உதாசீனப்படுத்தி விட்டுப் பின் அவரது சாமர்த்தியத்தையும் நேர்மையாக உழைத்து வாழ வேண்டுமெனும் நல்லெண்ணத்தையும் புரிந்து கொண்டு தனது ஊட்டி பங்களாவை நிர்வகிக்கும் பொறுப்பைப் பணக்காரரான சத்யகலாவின் தந்தை கொடுக்க மெல்ல மெல்ல சத்யகலாவை குணப்படுத்த முயன்று ஒரு கட்டத்தில் மனைவியாக்கிக் கொள்ளும் தருணத்தில் தான் சொத்துக்காக அவர் போடும் திட்டத்தின் சாயம் மெதுவாக வெளுக்கத் தொடங்குகிறது. இதற்கிடையில் அவரது போலியான நாடகத்தின் அங்கமாக சத்யகலா உண்மையிலே குணமடைந்து விடுவது அவரே எதிர்பார்க்காத திருப்பம். கடைசி வரை மனைவியைக் கொன்று சொத்தை அடைய அடுத்தடுத்து அவர் போடும் திட்டங்களும் அதிலிருந்து சத்யகலா மீண்டு வருவதும், சாட்சிகளே இல்லாமல் அந்தக் கொலைப்பழியில் இருந்து அவர் தப்பிக்கும் விதமும் படத்தின் திருப்புமுனைக் காட்சிகள்.
vid2.jpg
பாக்யராஜின் கதாப்பாத்திர அறிமுகக் காட்சிகள் மக்களுக்கு உதவுவது, அநீதிக்கு எதிரிகாகப் பொங்குவது போன்ற வழமையான நாயக பிம்பம் சார்ந்து அமைந்திராது. (அவரது அரசியல் ஈடுபாட்டுக்குப் பின் வெளிவந்த என் ரத்தத்தின் ரத்தமே போன்ற ஒரு சில படங்கள் தவிர்த்து) மாறாக கதையின் போக்கைத் தீர்மானிக்கும் அக்கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைத்து முதல் காட்சியிலேயே பார்வையாளர்களுக்கு ஒரு வித எதிர்பார்ப்பை விதைத்து விடுவதென்பது திரைக்கதையில் அவர் கையாளும் சூட்சுமங்களில் ஒன்று. ஒரு கை ஓசையில் வலிக்காமல் தற்கொலை செய்து கொள்ளப் பட்டுச் சட்டையை தண்டவாளத்திற்குத் தலையணையாக்கிக் காத்திருக்க ரயில் எதிர்பபுறம் வர பத்தாம் பசளியாக பல்பு வாங்கும் காட்சி, பாக்யராஜ் – சரிகா இடையான முன்பகையைக் கட்டியம் கூறும் ஊடலுடன் தொடங்கும் மௌன கீதங்களின் பேரூந்துப் பயணம், முந்தனை முடிச்சில் குழந்தையும் கையுமாக வந்திறங்கும் பாக்யராஜிடம் ஊர்வசி கோஷ்டி நாடாத்தும் சீண்டல்களும் அவராற்றும் எதிர்வினைகளும், விடலைப் பையன்களின் வயதுக்கேற்ற குறும்புடன் ஆரம்பிக்கும் இன்று போய் நாளை வா, கலகலப்பான பெண் பார்க்கும் படலத்துடன் தொடங்கும் தூரல் நின்னு போச்சு எனக் கதையின் முதல் முடிச்சு அவரது அறிமுகக் காட்சியின் வாயிலாகப் பார்வையாளர் மனதில் அழுத்தமாகப் பதியப்பட்டு விடும்.
ஆரம்பக் காட்சிகளில் பாக்யராஜிற்கும் நாயகியின் தந்தைக்கும் இடையே நடைபெறும் எதேச்சையான சந்திப்புக்களும் உரையாடல்களும் மனநிலை தவறிய தன் மகளை அவருக்குத் திருமணம் செய்து வைக்க எடுக்கும் முடிவிற்கு நியாயம் செய்யும் விதமாக அமைந்திருக்கும். பந்தயத்திற்காக ஏமாற்றி சம்பாதித்த பணத்தை பசியென்று வந்து கேட்கும் பிச்சைக்காரர்களுக்கு தானம் அளித்ததை கேலி செய்யும் அந்தப் பணக்காரரிடம் “நான் இவ்ளோ நேரமும் பசியோட படுத்திருந்தேன் சார். தினம் இந்த மாதிரி பிராட் வேலை பார்க்கிறதா இருந்தா எதுக்கு நான் உங்க கிட்ட வேலை தேடி அலையப் போறேன்.” என்பதாகட்டும், திருடு போகவிருந்த அந்தப் பணக்காரரின் பணத்தைக் காப்பாற்றிய நன்றிக் கடனுக்கு ஹோட்டலுக்கு அழைத்து வந்து “Are you smoking? Or drinking?” எனக் கேட்கும் நாயகியின் தந்தையிடம் “பணக்காரன் வருமானத்தை என்ன பண்ணலாம்னு யோசிப்பான், ஏழை வருமானத்துக்கு என்ன பண்ணலாம்னு யோசிப்பான். நீங்க smoke பண்ணிட்டு இருங்க. I will go and search for the job.” எனத் தன்னிலையைப் புரிய வைத்து வேலையில் சேரும் கட்சியில் தூயவனின் வசனங்களும் நருக் வசனங்களும் கவனிக்க வைக்கின்றன.
விரக்தியின் உச்சத்தில் தற்கொலைக்கு முயற்சிக்கும் சத்யகலாவை பாக்யராஜ் திட்டமிட்டு ஏமாற்றித் திருமணம் செய்து அவரைக் கொலை செய்து அதைத் தற்கொலையாகச் சோடித்து தந்திரமாகச் சொத்துக்களை அபகரிக்கும் திட்டம் மெல்ல மெல்ல வெளிப்படும் காட்சி பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். அதுவரை நேசிக்கும் நாயகன் மொத்த வில்லத்தனத்தின் உருவமாக நிறம் மாறும் போதும் அவன் மீது வெறுப்பு வராமல் கடைசி வரை அவனது வில்லத்தனத்தை ரசிக்க வைத்திருப்பதென்பது அந்தத் திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி. முதல் முயற்சியில் மலையுச்சியில் இருந்து மனைவியைத் தள்ளி விட்டு வீட்டிற்கு வந்து தன்னுடைய மெத்தனத்தால் தான் தற்கொலை செய்து கொண்டதாக அழுது நடிக்கும் காட்சியில் மலையிலிருந்து விழுந்த அதிர்ச்சியில் உண்மையிலேயே சத்யகலா குணமடைந்து வருவது எதிர்பாராத திருப்பம்.
vid3.jpg
குணமடைந்த மனைவியை மனமாற்றத்திற்காகக் குன்னூருக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சிக்கும் அந்தப் பரபர நிமிடங்கள் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும். சரிவரத் திட்டமிட்டு செய்ய வேண்டுமென்பதற்காக கொலைக்கு முன்னரே மனைவியைக் குன்னூர் பங்களாவில் விட்டு விட்டு மாத்தரை வாங்குவதாகக் கூறிச் சென்று மாதிரி மரவீட்டை வடிவமைத்து எரிவாயுக் குடுவையைப் பற்ற வைத்து ஒத்திகை பார்ப்பதெல்லாம் அதியுச்ச வில்லத்தனம். திட்டமிட்ட படி சமையலறையில் எரிவாயுக் குடுவையைத் திறந்து விட்டுக் கொல்ல முயற்சிக்கையில் தீப்பெட்டி நனைத்திருப்பதால் பற்றவில்லை எனப் பரிதாபமாக வந்து நிற்கும் மனைவியிடம் சிகரெட் லைட்டரைக் கொடுத்து பற்றுகிறதா? இல்லையா? எனப் பதற்றத்துடன் சோதிக்கும் காட்சியிலும், தவறுதலாக வேலைக்காரன் மாட்டிக் கொண்டு இறந்து விடச் சந்தேகிக்கும் போலீசிடம் சமாளிக்கும் காட்சியிலும் நடிகராகவும் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார் பாக்யராஜ்.
எல்லாவற்றிற்கும் மேலாக காவல்த்துறை அதிகாரியாக வரும் கராத்தே மணியிற்கு தன் மேல் சந்தேகம் வலுத்ததன் பிற்பாடும் அவரையே சாட்சியாக்கி அடுத்த கொலைக்குத் திட்டமிடும் அந்த ஆடு – புலி ஆட்டம் நிச்சயம் படபடப்பை அதிகரிக்கும் உச்சக்கட்டச் காட்சி. போலீஸ் பின்தொடரும் எனத் தெரிந்திருந்தும் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு ரயிலில் பயணிப்பதாகச் சோடித்து விட்டு வழியில் மேட்டுப்பாளையம் புகையிரத நிலையத்தில் இறங்கித் திரும்பவும் காரில் ஊட்டி வந்து சரியாக 9.30 கு கொலை செய்து காரிலேயே குன்னூருக்கு முந்தைய புகையிரத நிலையத்தில் 10.10 கு ரயிலைப் பிடித்து குன்னூரில் கராத்தே மணி பார்க்கும் போது ரயில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்பது திட்டம். கொலை செய்து விட்டு ரயிலைப் பிடிக்கக் கிளம்பும் வழியில் விபத்து காரணமாக வழியில் வாகன நெரிசல் ஏற்பட்டு விடக் கரடுமரடான மாற்று வழியில் செல்கையில் கார் செயலிழந்து விடப் போலீசாரைத் திசை திருப்பி, மாற்றுக் காரை ஏற்பாடு செய்து புகையிரத நிலையத்தை அடைவதும் அவருக்கு முன்னாள் அங்கு போலீஸ் வந்து நிற்பதும் திடுக்கிட வைக்கும் திருப்பங்கள். இரு தரப்பும் தூரதிஷ்டிர வசமாக ரயிலைத் தவற விட்டு விட, காவலத்துறை அதிகாரி கரத்தே மணி பாக்யராஜிற்கு முன்னதாகவே குன்னூர் புகையிரத நிலையத்தை நோக்கிப் புறப்பட்டு விட இருப்பதோ ஒரே பாதை அதில் காரிலே முந்திச் சென்று குன்னூர் புகையிரத நிலையத்தை அடைய முற்பட்டால் போலீஸ் கண்ணில் பட்டுவிடும் அபாயம் வேறு. இந்த இக்கட்டான சூழ்நிலையில் குன்னூர் புகையிரத நிலையத்தை ரயில் அடையும் முன்னதாகவே சமயோசிதமாக ஏறிக் குன்னுரில் கராத்தே மணி ரயிலைப் பரிசோதிக்கும் காட்சியில் அவரை ஏமாற்று விதம் அருமை. வீடு வந்து சேரும் போது தான் அவர் சுட்டது மனைவியை அல்ல வேலைக்காரியை என்பதும் தெரிய வரும்.
vid4.jpg
த்ரில்லர் படங்களில் பின்னணி இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்தே தான் டைட்டில் கார்டில் முதலாவது பெயராக “இசை – இசைஞானி இளையராஜா” என வருமாறு அமைத்திருப்பார் பாக்யராஜ். அதே போல் பரபரப்பான இறுதிக்காட்சியில் தான் “கதை – திரைக்கதை – இயக்கம் – கே.பாக்யராஜ்” என டைட்டில் கார்ட் வருவதும் வித்தியாசம். மனநிலை பிழன்று பின் குணமடைந்து அடுத்தடுத்து கொலை முயற்சிகளுக்கு உள்ளாகி மீண்டு வந்து கணவனின் சுயரூபத்தைத் புரிந்து கொள்ளும் மனைவியாக சத்யகலா; சந்தேகப்பட்டுக் கொலையாளி யாரென்று கண்டு பிடித்தாலும் சாட்சிகளின்றித் தவிக்கும் கவலகாரி கதாபாத்திரத்தில் கராத்தே மணியும் சரியான தேர்வு; கூடவே பாக்யராஜின் திட்டமிடலில் பங்கெடுத்து அவருக்கெதிராகவே காய் நகர்த்தும் சங்கிலி முருகனுக்கும் நல்ல வேடம்.
இளையராஜாவின் இசையில் மூன்றே பாடல்கள் என்றாலும் அத்தனையும் கேட்கும் ரகம். அதிலும் பாட்டுக்கும் பாரதத்திற்கு இடையே நடக்கும் போட்டிப் பாடலான ஜானகி பாடிய “அபிநயம் காட்டு நடை போட்டு..” நிச்சயம் இன்று வரை பலருக்கும் விருப்பப் பாடலாக இருக்கும். மலேசியா வாசுதேவன் – ஜானகி பாடிய “நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு..” அருமையான மெட்டு. பாடலின் பல்லவியே பாக்யராஜின் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா மற்றும் சைலஜா இணைந்து பாடிய “பேசு என் அன்பே..” பாடலும் கூடக் கேட்கும் ரகம். உச்சக்கட்ட ரயில் சேசிங் காட்சியில் இளையராஜாவின் பின்னணி இசை சிலிர்க்க வைக்கும்.
இறுதிக் காட்சியில் கூட சுற்றி வளைந்திருக்கும் போலீசிடமிருந்து தப்ப வழியில்லை எனத் தெரிந்திருந்தும் “இங்கிருந்து நீ தப்பிக்கலாம்னு நினைக்கிறியா?” எனக் கேட்கும் கராத்தே மணியிடம் “I will try my level best.” எனச் சவால் விடும் கெத்து.. அது தான் அந்த எதிர்மறைக் கதாப்பாத்திரத்தைக் கூட இத்தனை ரசிக்க வைத்திருக்கிறது. விறுவிறுப்பான திரைக்கதைக்காக விடியும் வரை காத்திரு நிச்சயம் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s