புரியாத புதிர் (2017)

தனிமனித அந்தரங்கள் என்பவை தனிப்பட்ட ஒருவரது காட்சிப்பதிவுகளாக இருக்கும் வரை மாத்திரமே அவரவர் ரசனைக்குட்பட்டவை. எப்போது அவை இலத்திரனியல் சாதனங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு மீளவே முடியாத இணையமெனும் சூனிய வலயத்தில் சிக்குண்டு பதிவு செய்யப்பட்ட காட்சிகளாகின்றனவோ, நாளாந்தம் வெறும் தன்னிச்சையான கிளர்ச்சிக்காகப் பகிரப்பட்டுப் பகிரப்பட்டு யாரோ முகம் தெரியாத நபரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ பொதுவெளியில் இன்னொருவர் அந்தரங்கங்களை அரங்கேற்றுவதன் பின்விளைவுகளைத் தாமே அனுபவ ரீதியாக உணரும் வரை யாரும் தம்மைத் தாமே சுபரிசோதனை செய்து கொள்வதில்லை எனும் உண்மையை விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லராகப் பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இசையமைப்பாளர் வாய்ப்புக்காகப் போராடிக் கொண்டே பகுதி நேரமாக நண்பரின் இசைக் கருவிகள் விற்கும் கடையை மேற்பார்வை செய்யும் விஜய்சேதுபதிக்கு களியாட்ட விடுதியில் பணியாற்றும் அர்ஜுனனும், தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் நண்பர் தவிர்த்து நெருங்கிய நட்பு வட்டாரம் கிடையாது. இசையாசிரியை காயத்திரியுடனான எதிர்பாராத சந்திப்பு மெல்லிசையின் வழியே மனத்தை வருடிக் காதலும் அரும்ப எதிர்பாராத நேரத்தில் அநாமதேயத் தொலைபேசி இலக்கத்திலிருந்து காயத்திரி துணிக்கடையொன்றில் உடை மாற்றும் ஒளிப்படத் துணுக்கு விஜய்சேதுபதியின் கைப்பேசிக்கு வருகிறது. இதற்கிடையில் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பரது அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாகி வேலையிழந்து அவர் தற்கொலை செய்து கொள்ள, மறுபுறம் களியாட்ட விடுதியில் போதைப்பொருள் பரிமாறும் ஒளிப்படத் துணுக்கு வெளியாகி அர்ஜுனன் சிறை செல்ல நேர, அடுத்தடுத்து காயத்திரியைக் குறி வைத்து கைப்பேசிக்கு வரும் அந்தரங்கக் காட்சிகளை இணையத்தில் பதிவேற்றாமல் இருக்கத் தன்னால் பிறப்பிக்கப்படும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டுமென்பது அநாமதேய ஆசாமியினால் விஜய்சேதுபதிக்கு விதிக்கப்படும் விதி. விஜய்சேதுபதியைச் சுற்றிப் பின்னப்படும் சதிவலைகளின் பின்னணி என்ன? அதற்கு காயத்திரி குறி வைக்கப்படுவதற்கான காரணம்? விஜய்சேதுபதியைச் சுற்றலில் விடும் அந்த மூன்றாவது கண் யாருடையது? என்னும் விடை தெரியாக் கேள்விகளுக்கான தேடலே இந்தப் புரியாத புதிர்.

puri

நான்கு வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட படம் என்பதாலே என்னவோ பீட்சாவில் பார்த்த அதே தேஜஸுடன் நவநாகரீக நகரத்து இளைஞராக இளமையாகவே காட்சியளிக்கிறார் விஜய் சேதுபதி. காயத்திரியைப் பார்த்த மாத்திரத்திலே இருவருக்கும் பொதுவான இசையெனும் உணர்வினால் உந்தப்பட்டுக் காதலில் விழுவது, காதலைச் சொல்ல வரும் காயத்திரியிடம் “சொல்ல வேணாம். சொல்லாம இருக்கிறது தான் அழகு.. எனக்குப் புரியும்.” என மறுதலிப்பது, உண்மையைச் சொல்லி காதலிக்கு மனவழுத்தத்தை ஏற்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே பதற்றத்தால் உழன்று கொண்டு காயத்திரியைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளுக்கு விடை காணத் தவிப்பது, காயத்திரியின் அந்தரங்க ஒளிப்படத் துணுக்குகள் இணையத்தில் பதிவேற்றாமல் இருக்க அநாமதேய ஆசாமியின் குரூரமான கட்டளைகளை நிறைவேற்றுவது, இறுதிக்காட்சியில் வலைப்பின்னலின் சூத்திரதாரியையும் அதன் பின்னணியையும் அறிந்து நிலைகுலைந்து விழுந்து அழுவதெனக் கடைசி வரை படத்தைத் தூக்கி நிறுத்துகிறது விஜய்சேதுபதியின் நடிப்பு.

தொலைக்காட்சி ஒளியலை வரிசை நிறுவனரின் மனைவிக்கும் தனக்குமான தொடர்பு வெளிச்சத்திற்கு வந்ததைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நண்பனின் தவறுகளுக்கு அதுவரை துணை போன அர்ஜுனனிடம் “அன்னைக்கு ஏதோ பெருசா சப்போர்ட் பண்ணியே? இன்னிக்கு சொல்ல முடியுமா அவனோட அம்மா அப்பாகிட்ட.. எதுக்கு செத்தான்னு?” எனக் கோபப்படும் போதும், புகார் கொடுக்க வந்த இடத்தில் வக்கிர புத்தியின் மேலீட்டால் அந்தரங்கக் காட்சிகளுக்கு சாட்சி கேட்கும் காவல்த்துறை அதிகாரியை சமாளித்து இயலாமையை வெளிப்படுத்தும் போதும், காயத்திரி துணிக்கடையில் உடை மாற்றும் ஒளிப்படத் துணுக்குகள் எடுக்கப்பட்ட கடையில் புகுந்து மேலாளருடன் எதிர்வாதம் செய்து சாட்சியைக் கேட்கும் போது கூடவே காதலியை வைத்துக் கொண்டு செய்வதறியாது தவிக்கும் போதும் பண்பட்ட நடிகராக மிளிர்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காயத்திரி ஷங்கரைத் திரையில் பார்க்க முடிகிறது. ஒட்டு மொத்தப் படத்தையும் தாங்கிச் செல்லும் அழுத்தமான கதாப்பாத்திரம்; இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையான காதல் காட்சிகள் மிகவும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. பிறந்த நாள் பரிசாக பியானோவை அன்பளிக்கத் திருட்டுதனமாக காயத்ரியின் வீட்டிற்குள் நுழையும் விஜய்சேதுபதி “ஒரு அழகிய இதயத்தினுள் நுழைவதற்காகத் திருட்டு சாவி போடப்பட்டுள்ளது” என வாழ்த்துமடலில் எழுதி ஆச்சரியப்படுத்தும் காட்சி அழகிய கவிதை; அந்தரங்கக் காட்சிகள் கைப்பேசிக்கு வந்ததன் பின்னர் துணிக்கடை மேலாளருடன் வாக்குவாதம், படம் பிடிக்கும் தோரணையில் கைப்பேசிச் செயலியில் விளையாடும் தெருமுனை இளைஞர்களுடன் பிரச்சினை என விஜய்சேதுபதியின் குணாதிசய மாற்றத்தினை அவதானித்து உண்மையைத் தெரிவிக்குமாறு வலியுறுத்துவதும், கைப்பேசியில் வந்த தனது அந்தரங்கக் காட்சிகளை பார்க்கும் போது ஏற்படும் உளவியல் மாற்றத்தினை அத்தனை இயல்பாக முகபாவனைகளில் வெளிப்படுத்தும் விதமும், விரக்தியின் உச்சத்தில் தனிமையின் அவசியத்தை விஜய்சேதுபதிக்குப் புரிய வைக்கும் விதமும் அருமை. அபார்ட்மெண்டில் மறைமுகமாக காயத்திரியை ஒரு உருவம் பின் தொடர்வதும் அதை வைத்து கதையின் போக்கைத் திசை திருப்பி இருக்கும் விதமும் அதன் பின்னணி இசையும் மிரட்டல். சுற்றி நடக்கும் பிரச்சினைகளின் வீரியம் புரியாமல் அதை மறைக்கும் விஜய்சேதுபதியிடம் ஊடல் கொள்வதும் உண்மை தெரிந்ததும் அதை விட அதிகமாகக் காட்டும் நெருக்கமும் அழகு.படத்தின் இறுதிக் காட்சி உட்படப் பல திருப்புமுனைக் காட்சிகள் இவரைச் சுற்றியே புனையப்பட்டுள்ளதால் ரம்மி படத்திற்குப் பிறகு நிச்சயம் பெயர் சொல்லும் வேடம்.

puri

அளவுக்கதிகமான கதாப்பாத்திரங்களைத் திணிக்காமல் விஜய்சேதுபதி, காயத்திரி மற்றும் அந்த அநாமதேய ஆசாமியை மையப்படுத்தியே நகரும் திரைக்கதை பாக்க பலம்; கூடவே சமீபத்திய சர்ச்சைக்குரிய ப்ளூவேல் கைப்பேசிச் செயலியை போன்றே அந்த மர்ம நபரும் கட்டளைகளைப் பிறப்பித்து மிரட்டுவது சிறப்பு. உலகத்தின் முன்னாள் நிர்வாணமாக நிற்கும் வழியை உணர்த்துவதற்காகக் கொடுக்கப்படும் தண்டனை சற்றும் எதிர்பாராதது. நண்பராக வரும் அர்ஜுனனை வழக்கம் போல நகைச்சுவைக்காகப் பயன்படுத்தாமல் தேவைக்கேற்ற காட்சிகளுடன் நிறுத்தியிருக்கிறார்கள். கூடவே பயணிக்கும் துணைக் கதாப்பாத்திரங்களின் பால் பார்வையாளர்களின் சந்தேகப் பார்வையைத் திருப்பி கதையின் போக்கினைத் திசை மாற்றும் உத்தி முன்பாதி அளவிற்கு இரண்டாம் பாதியில் கை கொடுக்கவில்லை. ரமேஷ் திலக்கின் பாத்திர வடிமைப்பில் இருக்கும் குழப்பம் பார்வையாளர்களுக்குத் தேவையற்ற திணிப்பாகத் தெரிவதில் ஆச்சரியமேதுமில்லை.

சாம் சி.எஸின் இசையில் பாடல்கள் வெளியான புதிதிலேயே ஏக பிரபலம்; இத்தனை வருடங்கள் கழித்தும் படத்தோடு பார்க்கையில் அந்த மையல் குறையவேயில்லை. தொடக்கப் பாடலான மரியா கவிதா தாமஸின் “யாவும் யாவுமே நாம் தானே..” கேட்கும் ரகம். ரஞ்சித் ஜெயக்கொடியின் வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் ஹரிஹரன் – ஹரிணியின் குரலில் ஒலிக்கும் “வெள்ளைக் கனவொன்று உள்ளே நுழைந்தது..”. அட்டகாசமான வயலின் இசையுடன் தொடங்கும் “மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றைப் போல அல்லவோ..” பாடலில் மென்சோகமான ஷ்ரேயா கோஷலின் குரலும் அதற்கு ஆறுதலாய் சற்றே அழுத்தமாக ஹரிச்சரனின் குரல்ப் பகுதி அமைக்கப்பட்டிருக்கும் இசையொழுங்கும் அருமை. மதன் கார்க்கி வரிகளில் ஸ்ரீனிவாஸ் – மரியா கவிதா தாமஸ் பாடிய “இறுக்கம் தளர்த்து.. பூவென எனைக்கிடத்து..” சலிக்காத மெல்லிசை மெட்டு. இதே பாடலின் ஆங்கிலப் பாதிப்பான “Take Me Higher..” பாடல் இசைத்தொகுப்பில் இருக்கிறது.

puri

படத்தின் ஜீவநாடியாகக் கடைசி வரை தாங்கிச் செல்லும் த்ரில்லர் படங்களுக்கே உரித்தான பாணியிலான விறுவிறுப்பான பின்னணி இசை புரியாத புதிரின் மிகப் பெரிய பலம். காதல் காட்சிகளில் தவிப்பு, தற்கொலை முயற்சியிலிருந்து மீண்டு காயத்ரி டாக்ஸியில் வீடு திரும்பும் போது அந்த வலி, அபார்ட்மெண்டில் மர்ம நபரால் பின்தொடரப்படும் போது ஏற்படும் பதைபதைப்பு என உணர்வுகளை நிஜமாகவே ஊடுகடத்திருக்கிறது சாம் சி.எஸின் பின்னணி இசை. அறை வெளிச்சத்தில் படமாக்கப்பட்டிருக்கும் காயத்திரின் பிறந்தநாள் காட்சி, மேற்கோணத்தில் படமாக்கப்பட்டிருக்கும் அபார்ட்மெண்ட் திகில் காட்சிகள், தூரத்திலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கும் மஹிமா நம்பியாரின் தற்கொலை எனப் பல இடங்களில் அசத்துகிறது தினேஷின் கேமரா. பவன் ஸ்ரீகுமாரின் படத்தொகுப்பு முன்பாதியை விறுவிறுப்பாக நகர்த்தினாலும் இரண்டாம் பாதியில் ரமேஷ் திலக் சார்ந்த காட்சிகளில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளைத் தவிர்த்திருக்கலாம். இயல்பான ஆடை வடிவமைப்பும் கலை இயக்கமும் படத்திற்கு பலம்.

கொஞ்ச நேரமே வந்தாலும் மஹிமா நம்பியாரின் மிருதுளா கதாப்பாத்திரம் மனதில் நிற்கிறது. பிளாஷ்பேக் காட்சிகள் இன்னும் சற்றே அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அந்தரங்கக் காட்சி வெளியாகிப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்காகப் பழி வாங்கும் அந்த மூன்றாவது நபர் சம்பந்தப்பட்டவரைப் பழி வாங்குவதற்காக அந்த நபர் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஒளித்துணுக்கினை வெளியிட்டது எந்தத் தார்மீக அடிப்படையில் என்னும் கேள்வி பார்வையாளர்களுக்கு எழுமென்பதைக் கணிக்கத் தவறி விட்டார்களோ என்னவோ. படத்தின் முடிவு எதிர்மறையாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் விஜய்சேதுபதியின் நடிப்பும் இறுதிக் காட்சியும் மனதை நெகிழச் செய்யும்.

மொத்தத்தில் கால தாமதமாக வந்திருந்தாலும் விறுவிறுப்பான காதல் த்ரில்லர் இந்தப் புரியாத புதிர்.

Puriyatha Puthir Trailer

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s