குரங்கு பொம்மை (2017)

படத்தின் சுவரொட்டி வடிவமைப்பிலேயே மொத்தக் கதையையும் சொல்லி விடும் தைரியம் அவ்வளவு எளிதில் முன்னணி இயக்குநர்களுக்குக் கூட வருவதில்லை. குரங்கு முகத்தின் சாயலில் ஐந்து நுழைவாயில்களைக் கொண்ட பாதை வடிவமைப்பு; மையத்தில் குரங்கு முகம் பதித்த பை; ஐந்து நுழைவாயில்களிலும் அந்தப் பையை நோக்கிய பயணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஐந்து நபர்கள் என கதையின் சாராம்சத்தை சுவரொட்டி வடிவமைப்பிலேயே ஆவலைத் தூண்டி, கூடவே பார்வையாளர்களுக்கு நம்பிக்கையையும் விதைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். எதிரெதிர் திசைகளில் பயணிக்கும் மாறுபட்ட திரைக்கதையும் வணிக சமரசங்களுக்குப் பெரிதும் இடம் கொடாமல் இலக்குத் தவறாமல் பயணிக்கும் கதையும் கடைசி வரை இருக்கையுடன் கட்டிப் போடுவதில் பெரிதும் ஆச்சரியமில்லை.

தஞ்சாவூரில் மரக்கடை நாடத்திக் கொண்டு இன்னொரு பக்கம் ஐம்பொன் சிலைகளைக் கடத்திக் கை மாற்றி இலாபம் பார்க்கும் ரவுடி தேனப்பன் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான பாரதிராஜாவிடம் சென்னைக்குச் சென்று இளங்கோ குமரவேலிடம் கடத்திய ஐம்பொன் சிலையைக் கை மாற்றும் பொறுப்பைக் கொடுக்க, குரங்கின் முகம் பதித்த அந்தப் பையில் என்ன இருக்கின்றதென்பதே தெரியாமல் கிளம்புகிறார் பாரதிராஜா. ரவுடி தேனப்பனுடனான பாரதிராஜாவின் நெருக்கம் தெரிந்து கல்யாணம் நின்று போகும் விரக்தியில் தந்தையோடு கோபித்துக் கொண்டு தொழில் நிமித்தம் சென்னைக்கு வரும் விதார்த் கையில் எதேச்சையாகக் கிடைக்கிறது அதே குரங்கு பொம்மைப் பை. தடைபட்ட கல்யாணத்திற்குப் பெண்ணாகப் பேசப்பட்ட டெல்னாவைச் சென்னையில் சந்திக்கும் விதார்த் சந்திப்பின் மத்தியில் குரங்கு பொம்மைப் பையைத் தொலைத்து விடும் தருவாயில் தான் அது காணாமல் போன தந்தை பாரதிராஜா கொண்டு வந்த பையென்று தெரிகிறது. இந்த இடியாப்பச் சிக்கல்களுக்கு மத்தியில் இளங்கோ குமரவேல் பாரதிராஜா சென்னை வரவேயில்லை எனத் தேனப்பனிடம் சாதிக்க பாரதிராஜாவிற்கு என்ன ஆனது? அந்த குரங்கு பொம்மைப் பையில் இருந்தது என்ன? இறுதியில் அதை அடைந்தது யார்? என்பதே படத்தின் சுவாரசியமான முடிச்சுக்கள்.

kur

வழக்கமான தமிழ் திரையுலகின் நாயக பிம்பத்தினுள் சிக்கிக் கொண்டு திருப்திப் பட்டுக் கொள்ளாமல் குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை என மாறுபட்ட கதைக் களங்களைத் தேர்ந்தெடுக்கும் விதார்த்தின் தைரியத்திற்கு நிச்சயம் சபாஷ் போடலாம். பெண் பார்க்க வந்த இடத்தில் ரவுடியுடனா நட்பைக் கரணம் காட்டி தந்தையை இழிவுபடுத்தும் மணப்பெண்ணின் தகப்பனான பாலாசிங்கிடம் நியாமான கோபத்தை வெளிப்படுத்தி மறுபக்கம் தந்தையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுவது தாளாமல் உள்ளுக்குள்ளேயே பொருமுவது, தந்தையின் மருத்துவச் செலவிற்காகக் கொடுக்கும் பணத்தை மறுதலிக்கும் டெல்னாவை உதவியாக இல்லாமல் நட்பு பாராட்டி வாங்க வைப்பது, பையைத் திருடிய அடி வாங்கிய திருடனிடமே தொலைந்து போன தந்தையைத் தேடுவதற்காக உதவியெனக் கையேந்தி நிற்பது, இறுதியில் அந்தக் குரங்கு பொம்மைப் பையில் இருந்தது என்னவென்பதை உணரும் காட்சியில் நிலைகுலைந்து விழுவது என அளவான காட்சிகளே என்றாலும் அட்டகாசமான நடிப்பு.

வெளியிலே தந்தையின் கூடா நட்பினைப் பற்றிய வருத்தம் இருந்தாலும் இலைமறை காயாகத் தந்தை – மகனுக்கு இடையிலான பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் அந்தக் காட்சியமைப்புக்கள் அருமை. மகனைச் சமாதானப்படுத்தத் தனக்குத் தானே “எனக்கு மட்டுமென்ன ஆசையா அங்க வேலை பாக்கணுமின்னு? நானும் நின்னுடலாம்னு தான் யோசிக்கிறேன்.” என குறைந்த சுருதியில் அனாத்தி விட்டு மனைவி மற்றும் மகனின் எதிர்வினைக்காக எதிர்பார்த்து ஏங்கித் தொடர்ந்து “நான் நின்னுட்டா அவனுக்கு யார் இருக்கா? யார் பார்த்துப்பா?” என சுதாரித்துக் கொள்ள, எதையோ எதிர்பார்த்து ஏமாறும் மனைவி ரமா “வௌவால் தரையிலயா நடக்கும்.. தலைகீழாத் தான் தொங்கும்.” எனத் தலையில் அடித்துக் கொள்ளும் காட்சியில் இயல்பாக நறுக்கெனத் தெறிக்கும் வசனங்கள் ரொம்பவே கவர்கின்றன. “திங்கிற சோத்தில இருந்து அவன் போட்டிருக்க ஜட்டி வரைக்கும் அந்த ஏகாம்பரம் குடுத்த காசுடி..” என மனைவி அதட்டி விட்டு மறுபக்கமாக வந்து வெளியில் செல்ல இருக்கும் மகனிடம் குசலம் விசாரிக்க பதிலுக்கு விதார்த் “ஜட்டி ரெண்டு தேவைப்படுது. அதான் ஏகாம்பரம் வீடு வரைக்கும் போகணும்..” நக்கல் தொனியில் பதிலளிப்பதெனப் போகிற போக்கில் வசனங்களில் நகைச்சுவையைத் தூவி இருக்கும் பாங்கு அலாதி.

கொலை செய்வதற்காகச் சதித்திட்டம் தீட்டி விட்டு “ஏன்னா இவ்ளோ நல்லவரா இருக்குக்கீங்க. அந்தாளுகிட்ட போய் சகவாசம் வச்சிருக்கீங்க?” எனப் பேச்சு வளர்க்கும் குமரவேலிடம் “ஊருக்குத் தான் அவன் கெட்டவன். எனக்கு நல்லவன். ஒரு கதை சொல்லவா?” எனத் தொடங்கி குறைபாடுகளுடன் பிறந்தது பெற்றோரின் அரவணைப்பில்லாமல் கூடப் பிறந்தவர்களின் ஆதரவில்லாமல் நின்ற தனக்கும் தக்க சமயத்தில் தோள் கொடுத்த கடத்தல்காரன் தேனப்பனுக்கும் இடையான நட்பின் ஆழத்தினை உணர்வு பூர்வமாக விபரித்து, “அன்னிக்கு ஏகாம்பரம் என்னைக் காப்பாத்திட்டான். இன்னிக்கு நான் சகாப் போறேன்.. நீ என்னைக் கொல்லத் தானே போற? என் பையன் சென்னையில பக்கத்தில தான் வேலை பார்க்கிறான். வரும் போது சண்டை போட்டிட்டு வந்திட்டான். ஒரு வார்த்தை பேசிட்டு வந்திரவா?” எனக் கெஞ்சும் அந்தக் காட்சியொன்றே போதும் பாரதிராஜாவின் பக்குவப்பட்ட நடிப்பிற்கு.

kur.jpg

அறிமுகக் காட்சியிலேயே மனதிற்குள் பசை போல ஒட்டிக் கொள்கிறார் நாயகி டெல்னா டாவிஸ். அதிகம் ஒப்பனையில்லாமல் பக்கத்துக்கு வீட்டுப் பெண் போன்ற தோற்றம்; கூடவே துறுதுறுவெனக் கண்களால் பேசும் வித்தையும் கை வரப் பெற்றிருப்பதால் தொடர்ந்து நல்ல வேடங்கள் அமைய வாய்ப்பிருக்கிறது. பெண் பார்க்கப் போகும் இடத்தில் “கோபம் வந்த டப்புன்னு கேட்ட வார்த்தையெல்லாம் பேசிடுவேன். நீங்க தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்” என விதார்த்தை மிரட்டுவதாகட்டும், காவல் நிலையத்தில் உதவிக்கு வரும் விதார்த்தைத் தன் தந்தையுடனான பிரச்சினையைக் காரணம் காட்டித் தவிர்ப்பது, தந்தையின் மருத்துவச் செலவிற்கு உறவினர்கள் கை கொடுப்பார்கள் என்னும் நம்பிக்கையில் விதார்த் தானாக முன் வந்து செய்ய நினைத்த பணவுதவியை மறுதலித்து விட்டு, அவர்கள் கை விரித்த பின்னரும் கூட தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் உண்மையை மறைப்பதாகட்டும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்.

ஏகாம்பரம் கதாப்பாத்திரம் தயாரிப்பாளர் தேனப்பனுக்காகவே வடிவைக்கப்பட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. பாரதிராஜா தன்னைப் பார்க்க வரவேயில்லை என டபாய்க்கும் குமரவேலைத் தேடி அவர் வந்து நிற்கும் காட்சி கிட்டத்தட்ட பாட்ஷாவில் சிறையிலிருந்து தப்பிக்கும் ஆன்டனி தன் மனைவியைக் கொன்று சொத்துக்களை அபகரித்த கேசவனத் தேடி வந்து ஜெர்க் அடைய வைக்கும் காட்சிக்கு ஒப்பானது. மனுஷர் முகபாவனைகளிலேயே பின்னுகிறார். கிரிக்கட் என்ற பேரில் சிறுவர்களுடன் போங்காட்டம் ஆடிக் கொண்டு இளங்கோ குமரவேல் அறிமுகமாகும் போது வழக்கம் போல் ராதாமோகன், பிரகாஷ்ராஜ் படங்களில் வருவது போன்ற குணச்சித்திர வேடம் தானே என அசால்ட்டாக இருந்து விட்டால், படத்தின் திருப்புமுனைக் கதாப்பாத்திரமே அவர் தான். வெகுளித் தனமான முகபாவனைகளைக் கொண்டே அவர் செய்யும் வில்லத்தனங்கள் சற்றும் எதிர்பாராதது.

கதாப்பாத்திரத் தேர்வும் அதன் வடிவமைப்பும் படத்திற்கு பக்க பலம். சின்னச் சின்னக் கதாப்பாத்திரங்கள் கூட வித்தியாசமான குணாதிசயங்கள் மூலம் மனத்தைக் கவர்கின்றன; குறிப்பாக பெண் பார்க்கும் படலத்தில் தின்பண்டங்களில் ஈ மொய்ப்பதை எண்ணிக் கவலை கொண்டிருக்கும் சாப்பட்டுப் பிரியரான டெல்னாவின் மாமா, பையைத் திறந்து பார்ப்பதிலேயே குறியாக நிற்கும் காவலதிகாரி, குமரவேலின் மனைவி; படத்தின் இன்னுமோர் ஆச்சரியம் சிந்தனை எனும் திருடன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கல்கி எனும் அறிமுக நடிகர்; மெட்ராஸ் பாஷையில் அவர் லாவகமும் அலட்டலே இல்லாத உடல்மொழியும் ஆச்சரியப்படுத்துகிறது. பையைத் திருடி விட்டு விதார்த்தைக் கண்டதும் பம்முவது, தந்தையைக் கண்டுபிடிக்க விதார்த் உதவியை நாட பையைத் தன்னிடமே தர வேண்டுமென நிர்பந்திப்பது, இறுதிக் காட்சியில் பையில் இருப்பது என்னவென்று தெரிந்து கலங்கி நிற்பது எனக் கலக்கலான நடிப்பு. கொஞ்ச நேரமே என்றாலும் பாலாசிங் மற்றும் கிருஷ்ணமூர்த்தி கவர்கிறார்கள். “என் உயிர் தோழன்” ராமாவையும் கஞ்சா கருப்பையும் ஓரிரு காட்சிகளுக்காக வீணடித்திருக்கிறார்கள்.

kur

துளியளவும் நாடகத் தன்மையில்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் அந்த இறுதிக் காட்சியும் அதற்கு முற்பட்ட காட்சியும் நெஞ்சைக் கலங்கச் செய்யும். வலிந்து திணிக்கப் பட்ட சோகம் என்றெதுமில்லாமல் அந்தக் காட்சி எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. இரண்டு தளங்களில் பயணிக்கும் கதைகளின் இரண்டு முடிவுகளும் சந்திக்கும் அந்த மையப்புள்ளி அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். மரணத்தின் தறுவாயிலிலும் கூட “அஞ்சு கோடி கெடைக்குதுன்னா எங்கப்பனே என்னைக் கொல்லுவான்.. நான் கொல்ல மாட்டனா.. கார் பங்களா எல்லாமே சம்பாதிச்சா வாங்க முடியும்.. சாகடிச்சா தான் வாங்க முடியும்.” என யாதார்த்தத்தை தன்னிலையில் இருந்து பேசும் அந்த வில்லன் கதாப்பாத்திரத்தின் வசனங்களில் கவனிக்க வைக்கிறார் வசனகர்த்தா மடோன் அஸ்வின். ஆனாலும் இத்தனை நெருக்கமான நட்பிருந்தும் இத்தனை காலமில்லாமல் திடீரெனச் சிலை கடத்தலுக்கு பாரதிராஜாவைத் தேனப்பன் பயன்படுத்த வேண்டிய அவசியமென்ன என்பதை இயக்குனர் சொல்லத் தவறி இருப்பது சற்றே நெருடல்.

அஜனீஷ் லோக்நாத்தின் படத்தை விறுவிறுப்புக் குறையாமல் தாங்கிச் செல்கிறது. பாடல்களும் படத்தோடு பார்க்கையில் பிடிக்கவே செய்கின்றன. ஆன்டனி தாசன் பாடிய தலைப்புப் பாடலான “பீச்சுக் காத்து பார்சல் என்ன விலை..” அட்டகாசமான மெட்டு. சங்கர் மகாதேவன் குரலில் வரும் “பார்த்தும் பார்க்காம போகும் விழி பொய் சொல்லுமா..” இந்த இசைத்தெகுப்பிலேயே முத்தாய்ப்பான பாடல். இந்தப் பாடலின் இடையீட்டு இசைதனைக் காதல் காட்சிகளின் பின்னணி இசையாகப் பயன்படுத்தி இருக்கும் விதமும் அருமை. இறுதிக் காட்சிக்கு முன்னரான “அண்ணாமாரே ஐயாமாரே..” பாடல் கேட்கும் ரகமாக இருந்தாலும் வேகத்தடை என்பது மறுப்பதற்கில்லை. ஆனாலும் தத்துவார்த்த வசனங்களுடன் கூடிய அந்தப் பாடல் கேட்கக் கேட்கப் பிடிக்கவே செய்கிறது. அபினவ் சுந்தர் நாயக்கின் படத்தொகுப்பில் குழப்பமே இல்லாமல் நகர்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதி பாடல்களைக் குறைத்து இன்னமும் துரிதப்படுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் குரங்கு பொம்மை இந்த வருடத்தின் நேர்த்தியானதோர் முயற்சி.

Kurangu Bommai Trailer

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s