துப்பறிவாளன் (2017)

நல்ல படைப்பென்பது மக்களின் ரசனையை மேம்படுத்த வேண்டும்; ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுத் தர வேண்டும்; தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு அந்தப் படைப்பைப் பற்றியே சிந்திக்க வைக்க வேண்டும் என்பது இயக்குனர் மிஷ்கினின் திரை இலக்கணம். வெற்றி தோல்விகளைத் தாண்டி ஒரு கலைஞனாக அவரிடமிருக்கும் அந்தத் தேடல் தான் மிஷ்கினிஸமாக படம் முழுக்க விரவிக் கிடக்கிறது. அத்தனை உச்ச நட்சத்திரங்களையும் தாண்டி அவர்களிடமிருந்து வெளிப்படும் மிஷ்கினின் உடல்மொழிகள், கேமரா கோணங்களில் இருந்து சண்டைக் காட்சிகள் வரை புதைந்திருக்கும் மிஷ்கினின் திரைமொழிகள் எனக் காட்சிக்குக் காட்சி இயக்குனரின் முத்திரையை நினைவுபடுத்திக் கொண்டே கடந்து செல்கின்றன. அடிப்படையே தெரியாமல் அடுத்தடுத்து நிகழும் கொலைகள், தொழிநுட்ப உதவியுடன் அவற்றை விபத்துகளாக சித்தரித்து விட்டுத் தப்பிக் கொள்ளும் எதிராளியின் முகாம், சம்பந்தமே இல்லாமல் சிக்கிக் கொள்ளும் வழக்கொன்றின் நூலைப் பிடித்து மெல்ல மெல்ல முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் துப்பறிவாளனின் கதை; எதிராளி முகாமின் பின்னணியை இன்னும் விபரித்திருக்கலாமே என்னும் எதிர்வாதத்தினை சற்றே தளர்த்தி விட்டுப் பார்த்தால் நிறைவான படைப்பாக வந்திருக்கிறது இந்தத் துப்பறிவாளன்.

பிறந்த நாளன்று மொட்டை மாடியில் மின்னல் தாக்கி சிம்ரனின் கணவர் வின்சென்ட் அசோகன் மற்றும் மகன் இருவருமே இறந்து போகின்றனர். அடுத்து பல்பொருள் அங்காடியில் முகம் தெரியாப் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விட்டுத் திரும்பும் வழியில் உறுப்புகள் செயலிழந்து இறந்து போகிறார் காவல்துறை அதிகாரி ஆடுகளம் நரேன். எதிர்பாராத விதமாக சிறுவன் ஒருவன் கொண்டு வரும் செல்லப் பிராணியின் கொலை வழக்கின் பின்னணியை ஆராயத் தொடங்கி சதிவலைகளின் ஒவ்வொரு முடிச்சாகக் கண்டு பிடிக்கிறார் துப்பறியும் நிபுணர் விஷால். அவரது ஒவ்வொரு நகர்வையும் மோப்பம் பிடித்து அவருக்கு முன்பே காய் நகர்த்துகிறது எதிராளியின் முகாம். கொலைகளுக்கான காரணம் என்ன? தொழிநுட்ப உதவியால் கொலைகள் விபத்துகளாக மாற்றப்படும் பின்னணி என்ன? எதிராளியின் முகாமை விஷால் எப்படி அடைகிறார்? என ஏகப்பட்ட முடிச்சுக்களுடன் நகர்கிறது மிரட்டலான திரைக்கதை.

“ஷெர்லாக் ஹோம்ஸ் என்பது துப்பறியும் கதாப்பாத்திரங்களின் அடிப்படைக் கட்டுமானம்; Private detective கதைக் களத்தைத் தொடுபவர்கள் அவ்வளவு எளிதில் அந்தக் கட்டுமானத்தின் சாயலில் இருந்து வெளிவர முடியாது.” என சமீபத்தில் மிஷ்கின் ஒரு நேர்காணலில் கூறியது நினைவிற்கு வருகிறது. புத்தகப்பிரியர்; புத்திக்கு சவால் விடும் புதிருக்காக நாட்கணக்கில் தவம் கிடப்பது; வேலையே இல்லையென்றால் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பது; சுருங்கச் சொல்லின் workaholic. உடல் ஓரிடத்தில் இருக்கையில் மனதை வேறு இடத்தில் குவித்து மாற்றங்களை அவதானிக்கும் வித்தை கை வரப் பெற்றவர்; அவ்வப்போது கொஞ்சம் கிறுக்குத்தனம்; வேலை முடிந்ததும் பழைய நிலையை அடைந்து விடுவது என அந்தக் கதாப்பாத்திரத்தின் பிரதிபலிப்பாகவே விஷாலின் கணியன் பூங்குன்றன் கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் மிஷ்கின். சமயத்தில் அவரது கிறுக்குத்தனங்களுக்குப் பின்னால் இருக்கும் உள்ளார்ந்த அர்த்தம் பார்வையாளர்களுக்குப் புரியாது. பார்வையாளர்களின் சந்தேகங்களையே கேள்விக்கணைகளாக்கி தெளிவுபடுத்துவதற்காகவே கூடவே வரும் உதவியாளர் மனோவாகப் பிரசன்னா.

thu

இதுவரை மசாலா படங்களுக்குள்ளே சிக்கிக் கொண்டிருந்த விஷாலுக்கு இந்த கணியன் பூங்குன்றன் கதாப்பாத்திரம் கொடுத்திருக்கும் மாற்றம் அவரே எதிர்பாராதது. படம் முழுக்க அவர் செய்யும் குறும்புத் தனங்களை ரசித்துக் கொண்டிருக்கலாம். அதுவும் அந்தப் பள்ளிச் சீருடையில் திருட முற்பட்டு அடி வாங்கிக் கொண்டிருக்கும் சிறார்களைப் பொதுமக்களிடமிருந்து காப்பாற்றி அதற்குக் காரணமான ரவி மரியாவை வீடு புகுந்து எதிர்கேள்வி கேட்காமல் பால்கனியிலிருந்து தூக்கி வீசும் காட்சி செம. ஆணவக் கொலைக்காகப் பணத்துடன் மகளைக் கண்டுபிடிக்குமாறு வந்து நிற்கும் தலைவாசல் விஜயின் குணாதிசயத்தினைச் சரியாக இனம் கண்டு தவிர்ப்பது, சுரங்கப்பாதையில் பிரசன்னாவின் பணப்பையினை லாவமாகத் திருடும் அனு இமானுவேலை கையும் களவுமாகப் பிடித்துப் பின் அவள் நிலையறிந்ததும் வீட்டிலே வேலை போட்டு கொடுப்பது, தனது குணாதிசயத்தின் வெளிப்பாடாக அவ்வப்போது அனுவிடம் சண்டை போட்டு விட்டு தவறென்று உணர்ந்த பின் மன்னிப்புக் கூடக் கேட்காமல் அச்சம்பவத்தைக் கடந்து செல்வது, இறந்து போன கணவரைப் பற்றிப் பொய்யுரைப்பதாகக் கூறி சிம்ரனின் உள்ளுணர்வினைத் தூண்டி விட்டுச் செயற்கை மின்னல் தோன்றிய இடத்தைக் கண்டுபிடிப்பது என அதிகம் பேசாமல் அளவான நடிப்பில் கவர்கிறார் விஷால்.

சிறுவன் கொண்டு வரும் நாய்க்குட்டி கொலை வழக்கு இடம்பெற்ற கடற்கரையில் கிடைக்கும் தடயத்தைக் கொண்டு, பௌதிகவியல் பேராசிரியர் வீட்டை அடைந்து, அங்கிருந்து “Lightening Physics” புத்தகம் திருடப்பட்டதைக் கண்டறிந்து, சிம்ரனிடம் பேச்சு வளர்த்து, ஒளி ஒலியை விட வேகம் கூடியது எனும் இயற்கை விதிக்கு முரணாக இடிச்சத்தம் முதலில் கேட்டதை ஊர்ஜிதப்படுத்தி நடந்தது செயற்கையாக பேராசிரியரால் உருவாக்கப்பட்ட மின்னலால் நடத்தப்பட்ட திட்டமிட்ட கொலையெனப் பிரசன்னாவிடம் விஷால் நிரூபிக்கும் தருணங்கள் படத்தின் பரபர நிமிடங்கள். அதே சமயம் முதலமைச்சரின் பணிப்பின் பெயரில் கடற்கரையில் கிடைக்கும் தடயத்தை ஆய்வு செய்ய வேண்டுமென மருத்துவரை நம்ப வைப்பதும் எந்தவித முன்னனுமதியும் இல்லாமல் அந்தத் தடயம் சம்பந்தப்பட்டவர்களை நெருங்கி நேரடியாக ஆய்வு செய்வதும் கொஞ்சம் ஹம்பக். என்ன தான் நம்ம ஊர் வைத்தியர்கள் பேக்குகளாக இருந்தாலும் குறைந்த பட்சம் அடையாள அட்டை கூடக் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள மாட்டார்களா?

விஷாலுடன் கூடவே பயணிக்கும் கதாப்பாத்திரம் பிரசன்னாவிற்கு; பார்வையாளர்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி கிடைக்கும் வாய்ப்புகளில் கவனிக்க வைக்கிறார். முதன்முறை காதல் துளிர் விடும் விஷால், அனுவிடம் அதை வெளிப்படுத்தத் தெரியாமல் சண்டை போடுகையில் செய்வதறியாது மெல்ல அந்த இடத்திலிருந்து நழுவும் காட்சியில் மெல்லிதாய் புன்னகைக்கவும் வைக்கிறார். அவரை இன்னமும் பயன்படுத்தி இருக்கலாம். கதாநாயகியாக இல்லாவிட்டாலும் அனுவின் கதாப்பாத்திரம் சற்றே அழுத்தமானது. “படுக்கிறியா? எடுக்கிறியான்னு என் மாமன் கேட்டான். நான் பர்ஸ் எடுக்கிறேன்னேன்.” எனத் தனது திருட்டுத் தொழிலுக்கான நிர்பந்தத்தை விஷாலுக்கு உணர்த்துவதும், வினயினால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தறுவாயில் தனக்காக வருத்தப்படும் விஷாலிடம் “சார், நான் பிக்பாக்கெட் தானே சார்.” எனக் கூறி வினயிடமிருந்து திருடிய கைப்பேசியை விஷாலிடம் ஒப்படைக்கும் காட்சியும் நிச்சயம் கலங்க வைக்கும். ஆனாலும் வேலை தேடி வந்த இடத்தில் துடைப்பதைக் கொடுத்துக் கீழே தள்ளும் விஷாலின் பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கா விட்டாலும் பரவாயில்லை, அதை ஏதோ பெருமையாக எண்ணிச் சந்தோஷப்படுவது தான் கொஞ்சம் நெருடல்.

thu.jpg

சஸ்பென்ஸ் வைத்து நீட்டி முழக்கமால் இவர்கள் தான் எதிராளிகளின் கூடாரத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பிக் காட்சிகளையே கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி விட்டு கதையை நகர்த்தி இருக்கும் பாங்கும் சிறப்பு. அதிலும் வித்தியாசமான பாக்கியராஜின் தோற்றத்தினை அடையாளம் கண்டு கொள்ள இரண்டு அல்லது மூன்று காட்சிகளாவது தேவைப்படும். நீளமான வசனங்களையே பேசிப் பழகிய அவரை நிறுத்தி நிதானமாக மாறுபட்ட குரல்தொனியில் பேச வைத்திருப்பதும் நல்ல முயற்சியே. திருகாணியில் துளையிட்டு ரிஸினை செலுத்தி, மெழுகினால் துளையினை அடைத்து, அதனை ஆடுகளம் நரேனின் உடலில் செலுத்தி உடல்வெப்பத்தில் மெழுகு உருகி, உடலில் சேர்த்து உறுப்புகளைச் சிதைத்து, அவர் கொலை செய்யும் விதம் தூக்கி வாரிப்போடுகிறது. விஷால் நெருங்கியதும் வினயினால் கொல்லப்படும் காட்சியில் எதிர்மறைக் கதாப்பாத்திரமாக இருந்தாலும் கலங்க வைக்கிறார். கொலையாளியாக வரும் ஆண்ட்ரியாவுக்கு அளவெடுத்துத் தைத்ததைப் போன்ற வேடம். ஜான் விஜயைச் சூழ்ச்சி வலையில் வீழ்த்தி கொலை செய்வது, விஷாலைக் கொலை செய்ய முயற்சிப்பது, இறுதிக்காட்சியில் வீரியம் குறையாமல் விஷாலுடன் மோதுவது என சபாஷ் போட வைக்கிறார். ஆனாலும் விஷால் மற்றும் காவல் துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஆண்ட்ரியா தப்பிக்கும் காட்சி வெறும் கண் கட்டி வித்தை.

ஸ்டைலிஷ் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் கலக்கி இருக்கிறார் வினய். கொலை செய்ய முன் ஒரு கப் காஃபி குடிக்கும் மேனரிசம் கூட அழகு தான். அதிலும் குளிர்சாதனப் பெட்டியில் கொலை செய்யப்பட்டு அடைத்து வைக்கப் பட்டிருக்கும் பேராசிரியரின் உடல், விஷால் நெருங்கியதும் குளியலறையில் விறைப்படைந்த உடலை இலத்திரனியல் ரம்பத்தைக் கொண்டு அறுத்து சிதை சிதையாகச் சாக்கடையில் கலந்து விட்டு இரத்தம் தெறித்த உடலுடன் நிதானமாகக் காஃபி குடிப்பாரே பாருங்கள்! வின்சென்ட் அசோகன் கொல்லப்பட்டது ஜெயப்ரகாஷின் தொழில்முறைப் போட்டியால் என்பதை விஷால் கண்டுபிடித்ததும் “கழுத்தில கயிறு இருக்கும் போது ஒன்னு கைத்த அறுக்கணும்.. இல்ல தொங்கணும். அதன் க்ளைனட்ட சைலண்ட் பண்ணிட்டேன்.” எனத் தனது கொலைக்கான காரணத்தை ஜான்விஜயிடம் விளக்கும் விதம் நச்.

“நல்லதோர் ஆர்டிஸ்டுக்கு அதிகமான ஷாட்ஸ் தேவையே இல்லை. எனக்கு ஒரே ஷாட் போதும் அவங்க திறமையை நிரூபிக்க..” என மிஷ்கின் சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். சிம்ரனின் திறமையை நிரூபிக்க விஷால் – சிம்ரனுக்கு இடையான அந்த மொட்டை மாடி வாக்குவாதக் காட்சியொன்றே போதும். அபிஷேக்கிற்கு படத்தின் திருப்புமுனைக் கதாப்பாத்திரம். அவர் சார்ந்த விசாரணைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்ட விதமும் அதன் ஒளியமைப்பு மற்றும் கேமேராக் கோணங்களும் அசத்தல். தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக வசனங்கள் பதற்றத்துடன் பேசுவதாக அமைக்கப்பட்டிருந்தாலும் தெளிவில்லாத வசன உச்சரிப்பினால் முக்கியமான அந்தக் காட்சி பலருக்குப் புரியாமல் போக வாய்ப்புண்டு. கொல்லப்பட்ட நாய்க்குட்டிக்காக நியாயம் கேட்டு வரும் குழந்தை நிஷேஷின் நடிப்பில் அத்தனை தத்ரூபம். ஆடுகளம் நரேன், ஜெயப்ரகாஷ், ஜான்விஜய், தலைவாசல் விஜய், ரவிமரியா என அனைவரும் தமது பங்களிப்பைச் சிறப்பாகச் தந்துள்ளனர். அஜய் ரத்னம் மற்றும் வின்சென்ட் அசோகன் இருவருக்கும் சிறப்புத் தோற்றம் போன்றதோர் வேடம்.

thu

அரோல் கரெல்லியின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம். பாடல்களேதும் படத்தில் இல்லை. இசைத்தொகுப்பில் வரும் மிஷ்கின் பாடிய “இவன் துப்பறிவாளன்..” பாடலும் கேட்கலாம் ரகம்; படத்தின் தீம் இசை ரசிக்க வைக்கிறது. பல இடங்களில் வயலினை வைத்து வித்தை காட்டி இருக்கிறார் இசையமைப்பாளர். ஷெர்லாக் ஹோம்சினை ஒத்த கணியன் பூங்குன்றனின் வீடமைப்பு, சைனீஸ் உணவகம், வினய் & கோவின் தங்குமிடம் எனக் கலை இயக்குனர் அமரனின் நேர்த்தி கட்சிக்குக் காட்சி தெரிகிறது. முதல் காட்சியே மிஷ்கினுக்குப் பிடித்த காலடி ஷாட்டில் இருந்தே தொடங்குகிறது. அறை வெளிச்சத்தில் படமாக்கப்பட்டிருக்கும் கணியன் பூங்குன்றனின் வீட்டுக்குள் நிகழும் காட்சிகள், டார்ச் வெளிச்சத்தில் பேராசிரியரின் வீட்டில் துப்பறியும் காட்சி, வெட்டவெளியில் சதுப்பு நிலக் காடுகளில் நிகழும் சண்டைக் காட்சிகளில் கார்த்திக் வெங்கட்ராமனின் கேமரா வித்தை காட்டுகிறது. வழக்கமான மிஷ்கின் பாணியிலாக இருட்டிலேயே பயணிக்காமல் வெளிச்சத்திலே பல காட்சிகள் நகர்வது ரசிக்க வைக்கிறது. செயற்கை மின்னைலைப் பரிசோதிக்கும் காட்சி நன்றாக வந்துள்ளது. சிம்ரனின் மொட்டைமாடிக் காட்சி, வினய் கோபத்தின் உச்சத்தை அடையும் காட்சி, ஆண்ட்ரியாவை பின் தொடரும் காட்சிகளில் வைக்கப்பட்டுள்ள கேமரா கோணங்கள் டிபிக்கல் மிஷ்கின் ரகம்.

பாழடைந்த கட்டடத்தில் நிகழும் மவுத் ஓர்கன் சண்டை மற்றும் சைன்ஸ் உணவு விடுதியில் நிகழும் மார்ஷல் ஆர்ட்ஸ் சண்டை இரண்டுமே கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கின்றன. எல்லாவற்றிக்கும் மேலாக கடைசி இருபது நிமிடங்கள் சதுப்பு நிலக் காடுகளில் தொடரும் தேடல்களும் சண்டைக் காட்சிகளும் பிரமிப்பின் உச்சம். செயற்கை மின்னல், ரிஸின் கொலைகள் எனத் தொழில்நுட்ப ரீதியிலும் மிரட்டி இருக்கிறார்கள். படத்தின் மிகப் பெரிய பலவீனமே கொலைகளை இத்தனை விரிவாக விபரித்த மிஷ்கின் கொலைகாரக் கும்பலின் பின்னணியை வெறும் வசனங்களால் கடந்து செல்வது தான். வினயின் பின்னணியைக் கண்டுபிடிக்கும் விஷால் அந்தக் குழு எவ்வாறு உருவானது? அதன் உறுப்பினர்களின் பின்னணி என்ன? என்பதைப் ஏதும் குறிப்பிடவில்லை. இது வெறும் பணத்திற்காக கொலை செய்யும் கும்பல் என்ற மட்டில் மிஷ்கின் நினைத்த மாதிரி இதன் பின்னணியை விளக்கத் தேவையேயில்லை. ஆனால் காவல்துறையிடம் சிக்கிக் கொள்ளும் ஆண்ட்ரியாவைக் காப்பாற்ற ஒருவர் வயிற்றைக் கிழித்துத் தற்கொலை செய்து காவல்துறையைத் திசை திருப்புகிறார்; அவரது இறப்பிற்காக ஆண்ட்ரியா அழுகிறார்; வினய் பாக்கியராஜை மாமா என விளிக்கிறார்; பாக்கியராஜிற்கு நடமாட முடியாத மனைவி வேறு இருப்பதாக காட்டப்படுகிறது. இத்தனை உணர்வு பூர்வமான விஷயங்கள் இருக்கும் போது இதற்கான பின்னணி விபரிக்கப்படாமல் இருப்பது திரைக்கதைக்கு சற்றே சறுக்கல்.

மிஷ்கினின் மேக்கிங்கிற்கு முன்னால் சின்னச் சின்னக் குறைகள் கூட மாயமாகி விடுவதால் மொத்தத்தில் நல்லதோர் முயற்சி. மிஷ்கின் குழுவினருக்கு வாழ்த்துக்கள்! உங்கள் அடுத்த படைப்பிற்காகக் காத்திருக்கிறோம்.

Thupparivaalan Trailer

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s