ஸ்பைடர் (2017)

எதிர்பாராத நேரத்தில் அறிமுகமில்லாத மனிதர்களுக்கு எதிர்பார்ப்பில்லாமல் செய்யும் உதவி தான் மனிதாபிமானம்; அதுக்காக ரொம்பவும் மெனக்கடத் தேவையில்லை. முகப்புத்தகத்தில் பதிவுகளை Like, Share செய்யும் நேரத்தில் சக மனிதனை நேசித்து அன்பினைப் பகிர்ந்து கொண்டாலே போதுமானது. தொழிநுட்ப மோகத்தில் தொலைந்து போயிருக்கும் மனிதாபிமானத்தை அதே தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு காப்பாற்றும் அருமையான கதைக்களத்தைத் தேர்வு செய்த முருகதாஸ் அதைச் சொல்லிய விதத்தில் சற்றே சறுக்கியிருக்கிறார். எப்படித் தமிழ் – ஹிந்தி என இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் காலகட்டத்தில் இயக்குனர் மணிரத்னம் தடுமாறினாரோ அதே தடுமாற்றத்தினை முருகதாஸின் திரைக்கதையிலும் அவதானிக்க முடிகிறது. தெலுங்கு ரசிகர்களுக்காக வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் அதீத மசாலாக்கள் கதையின் இயல்புப் போக்கினை சிதைத்து ஒரு சில நல்ல காட்சிகளைக் கூட மழுங்கடித்திருப்பதால், சொல்ல வந்த விஷயத்திற்காகப் பாராட்ட நினைத்தாலும் சொல்லி இருக்கும் விதத்தில் உச்சுக் கொட்ட வைக்கிறது இந்த ஸ்பைடர்.

சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் சமூக விரோதிகளை இனம் காணும் உளவுத்துறைப் பணியகத்தில் பணிபுரியும் மகேஷ்பாபு பொது மக்களின் தொலைத்தொடர்பு பரிபாஷணைகளை ஒட்டுக் கேட்டு தான் உருவாக்கி இருக்கும் மென்பொருள் மூலம் தொலைத்தொடர்பு சாதனங்களினூடு மிரட்டுபவர்களையும், அழுபவர்களையும், உதவி கோருபவர்களையும் எளிதில் இனங் கண்டு அவர்களது பிரச்சினைகளை முன் கூட்டியே அறிந்து கொண்டு முடிந்தவரை காப்பாற்றுகிறார். எதிர்பாராத விதமாக ஒரு தடவை அவர் உதவ நினைக்கும் பெண்ணும் அவரைக் காப்பாற்ற அனுப்பப்படும் காவல்த்துறையைச் சேர்ந்த மகேஷின் தோழியும் மர்மான முறையில் கொல்லப்பட, அதன் முடிச்சுகளை ஆராயும் மகேஷிற்கு சுடலையெனும் சைக்கோ கில்லரின் பின்னணி தெரிய வருகிறது. அந்த சைக்கோ கில்லரின் கொலைகளுக்கான முகாந்திரம் என்ன? மகேஷ்பாபு அவனை நெருங்குவது எப்படி? என விறுவிறுப்பாக நகர வேண்டிய கதை வழக்கம் போல் தமிழ் சினிமாவின் க்ளீஷேக்களில் சிக்கிக் கொண்டு நொண்டியடிப்பது தான் பரிதாபம்.

spy.jpg

மகேஷ்பாபுவின் பலமே அவரது கூர்மையான பார்வையும் ஸ்டைலிஷான மேனரிசமும் தான். ஆனால் அதை மட்டுமே வைத்துக் கொண்டு முருகதாஸ் ஒப்பேற்ற நினைப்பது சமயோசிதமா? இல்லை எஸ்கேப்பிசமா? என்பது தான் புரியவில்லை. படத்தில் வில்லனைப் பிடிப்பதை விட அதிகமாக செய்த வேலை ராம்ப் வாக் மாடலாக நடப்பது தான். பின்னணிக் குரலுக்கு வேறொருவரைப் போடாமல் தானே தமிழ் பேசி நடித்திருப்பது சிறப்பு; ஒலிச்சேர்க்கையும் வசன உச்சரிப்பும் பக்கவாகப் பொருந்திப் போவதால் எளிதில் கதாப்பாத்திரத்துடன் ஒன்றிப் போக முடிகிறது. தகுதியிருந்தும் உயிர் போனதுக்கப்புறம் தண்டனை கொடுக்கும் காவல்த் துறையில் சேர விரும்பாமல் தப்பு நடக்க முன்னரே தடுக்க விரும்பும் உளவாளியின் கதாப்பாத்திரம். முதல் காட்சியிலேயே அவரது தொழிலின் பின்னணியை விரிவாக விளக்கி இருக்கும் விதம் சிறப்பு. கொலையுண்ட இரு பெண்களைக் காப்பாற்ற முடியாத குற்றவுணர்ச்சியினால் வேலையை உதரித் தள்ளும் காட்சியிலும், இனங் கண்ட கொலையாளியின் உருவப் படத்தை வைத்து அவரது பின்னணியை கண்டுபிடிக்கும் காட்சியிலும் இயல்பான நடிப்பில் கவர்கிறார். ஆனாலும் பதற்றத்தை வெளிப்படுத்தும் போதும் காதலை வெளிப்படுத்தும் போதும் ஒரே மாதிரியான முகபாவனைகளையே தொடர்வது சலிப்பைத் தருகிறது.

பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வலுவான காட்சிகள் இரண்டாம் பாதியில் இருக்கும் போது கதாநாயகியை எதற்காக இத்தனை பிற்போக்குத் தனமான கதாப்பாத்திரமாக காட்சிப்படுத்த வேண்டும்? நாயகி ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு அரை லூசாகவே படம் முழுதும் வலம் வருகிறார்; அப்பப்போ மகேஷுடன் டூயட் பாடுகிறார். முதல் தடவையாக ஆபாசப் படம் பார்த்து அதன் அனுபவத்தை நண்பியிடம் பகிர்ந்து கொள்ளும் வேளை அந்த சம்பாஷணையை ஒட்டுக் கேட்டு அவரைப் பின் தொடர்ந்து காதலில் விழுகிறார் மகேஷ். பதிலுக்கு முன் பின் தெரியாத நபருடன் டேட்டிங் செல்ல விரும்பி அவருடன் நட்புக் கொள்கிறார் ராகுல் ப்ரீத்தி சிங். இப்படி ஒரு அபத்தமான காதல் காட்சிகளை வெறெந்தப் படத்திலும் பார்த்திருக்கவே முடியாது. பாடல் காட்சிகளில் அழகாய்த் தெரிந்தாலும் படத்தில் அவரது ஒப்பனை சுத்தமாக எடுபடவில்லை. அரை லூசாகச் சித்தரிக்க வேண்டுமென்பதற்காகவே சோடாபுட்டிக் கண்ணாடியுடன் அலைய விட்டிருக்கிறார்கள்.

கடைசி வரை இருக்கையில் நம்மைக் கட்டிப் போடுவது எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தானங்கள் தான். அவரை அறிமுகப்படுத்த முதலே அவரது கதாப்பாத்திரமான சுடலையைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி அவரது கொலைகளுக்கான பின்னணியை விளக்கிப் பரபரப்பை ஏற்றியிருக்கிறார் முருகதாஸ். வெட்டியானின் மகனாகப் பிறந்து பிணங்களோடு வளர்த்ததாலோ என்னவோ இறந்தவரின் உறவினர்களின் அழுகுரலைக் கேட்பதில் இவருக்கு அலாதிப் பிரியம். பின்னாளில் சீரியல் கில்லராகப் போவதே தெரியாமல் வயிற்றுப் பிழைப்புக்காக ஆபத்திலிருப்பவரைக் கொன்று அதை விபத்கதாச் சித்தரிப்பதில் இருந்து தொடங்குகிறது அவரது முதல் கொலை. தம்பி பரத்தை மகேஷ் பாபு பிடித்ததும் அவரை விடிவிக்கக் கோரி அவர் வெளிவிடும் அந்த ஒளிப்படத் துணுக்கில் முகமூடி அணிந்து கொண்டு கண்களாயே மிரட்டி இருப்பார். அவரது பாத்திர வடிவமைப்பும் எதற்குமே அலட்டிக் கொள்ளாத அந்த மேனரிசமமும் படத்தின் வலிமையான தூண்கள்.

spy.jpg

வீதியில் எதேச்சையாக ஏதாவது விபத்தைப் பார்க்க நேர்ந்தால் நமக்குத் தெரிந்தவராக இருக்க கூடாதென மனது அடித்துக் கொள்ளும். கிட்ட நெருங்கி நமக்குப் பரிச்சயம் இல்லாதவரெனின் மனம் சற்றே நிம்மதி கொள்ளும். இந்த மனிதாபிமானக் குறைபாடு கூட Sadistic Personality Disorder இன் ஆரம்பிக் கட்டம் தான். பொதுவாக இந்த மாதிரிக் குறைபாடு எல்லோருக்குள்ளும் 4% இருக்கும். இன்றைய காலகட்டத்தில் 6% வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்க விடயம். இந்தக் குறைபாட்டின் உச்சக் கட்டமாக பிரதான வில்லன் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருப்பதும் அதன் பின்னணியைத் தெளிவாக விளக்கி இருக்கும் விதத்திற்கு சபாஷ் போடலாம்.

சூர்யாவிடம் சிக்கிக் கொள்ளும் அம்மாவைக் காப்பாற்ற தனது வாகன ஓட்டுநர் கேசவனைத் தொலைபேசியில் அழைக்கும் மகேஷ்பாபுவிற்கு “தலைப்புச் செய்திகள் – கேசவனுக்குச் சரமாரியான கத்திக்குத்து” என பதிலடி கொடுக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்டம் பரபர நிமிடங்கள். அம்மாவைக் காப்பாற்ற தொலைபேசியில் கெஞ்சும் மகேஷ்பாபுவிடம் “இரண்டாயிரம் பேர் முன்னாடி என் தம்பிய கொன்னுட்டு.. இப்போ காதும் காதும் வச்ச மாதிரி ப்ளீஸா? நீ வீட்டுக்கு வரும் போது உன் வீடு முன்னாடி கூட்டமா இருக்கும். நீ அழுவுறதப் பார்க்க அந்தக் கூட்டத்தில ஒருத்தனா நான் இருப்பேன்..” எனக் கெத்து விடும் அந்த நடிப்பிற்கு தனியான கைதட்டல்கள் கொடுக்கலாம். காவல்த் துறையினரிடம் அலட்டல் இல்லாமல் ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டே பிடிபடும் போதும், மகேஷ்பாபுவின் புலன் விசாரணைக் காட்சிகளில் “உன் உயிர் போறப்போ கூட என் உயிர் போகாம சுட்டிருக்கேன்னா.. அது என்ன ஹாஸ்பிடல் என்ன பிளான்னு தெரிஞ்சிக்கத் தானே?” என எதிர்கேள்வி கேட்கும் போதும் அட்டகாசமான நடிப்பு.

வில்லனாகக் கிடைத்த வாய்ப்பை முடிந்த வரை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் பரத். ஆனாலும் நடிப்பதற்குப் பெரிதும் ஸ்கோப் இல்லாதது சற்று ஏமாற்றம். திருப்புமுனையென நினைத்து இவர் தான் சுடலையென நகரும் காட்டியமைப்புக்கள் திரைக்கதைக்கு எந்த விதத்திலும் உதவிவில்லை. கூடவே ப்ளாஷ்பேக்கில் தம்பியெனும் கதாப்பாத்திரம் பெயரளவில் வருவதால் இலகுவில் ஊகித்துக் கொள்ளவும் முடிவது கொஞ்சம் பலவீனம். RJ பாலாஜிக்கு மகேஷ்பாபுவிற்கு கூட உதவும் நண்பன் கதாப்பாத்திரம். அதிகம் பேசாமல் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். சிபிஐ அதிகாரியாக வரும் ஹரீஷ் பேராடி மற்றும் மகேஷின் தாயாக நடித்திருக்கும் தீபா ராமானுஜம் இருவரும் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கின்றனர். அனுபவம் வாய்ந்த அஜய் ரத்னம், ஜெயப்ரகாஷ், ஷாயாஜி ஷிண்டே போன்றோரை ஓரிரு காட்சிகளுக்காக வீணடித்திருக்கிறார்கள்.

spy.jpg

பீட்டர் ஹெய்னின் சண்டைக் காட்சிகளில் பிரமாண்டம் இருக்குமளவிற்கு நேர்த்தி இல்லை. நாயகன் அறிமுகமாகும் படகுச் சண்டைக் காட்சியில் வெறுமனே பம்மாத்துக் காட்டியிருக்கிறார்கள். அந்த ரோலர் கோஸ்ட் சண்டைக் காட்சியில் பிரமிப்பைத் தருகிறது சந்தோஷ் சிவனின் கேமரா. அதே சண்டைக் காட்சியில் க்ராபிக்ஸ் தேமே என பல்லிளிப்பது நகைப்பிற்குரியது. மருத்துவமனை இடிந்து விழும் காட்சியும் பாறைக் குன்று உருண்டு வந்து உயிர்ப்பலி எடுக்கும் கட்சியும் படமாக்கிய விதம் அருமை. ஆனாலும் குறுக்குப் பாதையில் இருக்கும் பாறைக் குன்று விழும் போது பாதைக்குக் குறுக்காக விழாமல், வலது பக்கமாக பாதையின் வழியே உருண்டு வருவது எதனாலோ இயக்குனரே? பாறையைத் தடுக்கும் அதைக் கண்டைனர் அத்தனை விபத்துக்குள்ளாகியும் அதிலிருந்து மகேஷ்பாபு தப்பியதென்பது சுத்த ஹம்பக். குண்டடிபட்டு மறைந்திருக்கும் சூர்யாவை அந்த இடத்தில் சீரியல் பார்க்கும் பெண்களுக்கு இடையில் போட்டி வைத்து அவர்களது உத்வேகத்தைத் தூண்டி பணயக் கைதிகளாகப் பிடிபட்டிருக்கும் வீட்டுக்கார்களை விடிவிடுத்துச் சுற்றி வளைத்துப் பிடிக்கும் விதம் அருமை.

பாடல்கள் கேட்கும் ரகம் தானென்றாலும் ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. ஹரிச்சரன் – ஷக்திஸ்ரீ கோபாலன் பாடும் “சிசிலியா சிசிலியா சிலுசிலு காத்தில பறந்திடவா வா..” பாடல் அதிகம் ரசிக்க வைக்கிறது. நிகிதா காந்தியின் “ஒற்றா வா..” மகேஷ்பாபுவிற்கு ஏத்த அறிமுகப் பாடல் தான். பிரவின் சைவி – சத்யப்ரகாஷின் குரலில் ஒலிக்கும் “ஒற்றை இரவுக்காய்..” பாடல் கேட்கக் கேட்கப் பிடிக்கிறது. “ஆளி ஆளி..” பாடல் ரொம்பவே சுமார் ரகம். பாடல் காட்சிகளில் ஷோபியின் நடன அமைப்பைப் பாராட்டலாம்; பாடல்கள் நன்றாக இருந்தும் வேண்டாத திணிப்புகளாகத் தெரிவதால் ரசிக்க முடியவில்லை. உளவுத்துறைப் பணியகம் அமைக்கப்பட்டிருக்கும் விதம், மகேஷ்பாபுவின் வீடு, மருத்துவமனைக் காட்சிகளில் கலை இயக்குனரின் உழைப்புத் தெரிகிறது. ஸ்ரீகர் பிரசாத் காதல் காட்சிகளுக்கு இன்னும் கத்திரி போட்டிருக்கலாம்.

திரைக்கதையில் ஏகப்பட்ட குளறுபடிகள். வெறும் இரண்டு கொலைகளுக்காகத் தேடி வரும் மகேஷிடம் காரணமின்றி அண்ணன் செய்த அத்தனை கொலைகளையும் வாய்ப்பாடாக பரத் ஒப்புவிப்பது ஏனோ? படத்தில் சுடலையேனும் கதாப்பாத்திரத்தின் நோக்கம் கொலை செய்வதும் அவர்களது அழுகுரலை ரசிப்பது மாத்திரமே. அவனுக்கு செக்ஸுவாழ் மோட்டிவ் இருப்பதாக எங்குமே சித்தரிக்கப்படவில்லை. அவ்வாறிருக்கும் போது முதன் முதலில் கொலை செய்யப்படும் இரண்டு பெண்களும் நிர்வாணமாகக் கிடப்பது ஏன்? பாறையைத் தகர்ப்பது, மெட்ரோ ரயில் நிர்மாணத்தில் தூண்களில் கொலை செய்து புதைப்பது, மருத்துவமனையைத் தகர்ப்பது எனப் பெரியளவில் திட்டமிடும் வல்லமையுள்ள வில்லன் எதற்காக இன்னமும் தனி நபர்களைக் குறி வைத்துக் கொலை செய்ய வேண்டும் என்பதும் தெளிவாக இல்லை. எந்த மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் மகேஷ்பாபு காவல்துறையினர் வந்தால் நிலைமை கை மீறிப் போய் விடும் என்பதற்காக கமிஷ்னரிடம் மறைக்கிறார். அவரால் தனியொருவராக அத்தனை நோயாளிகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் கொண்டு வந்து விட முடியுமா? தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வில்லனை மடக்கும் அதி புத்திசாலியாக நாயகனை வடிவமைத்து விட்டு கடைசியில் எதற்காக இந்த அதீத ஹீரோயிசம்?

மொத்தத்தில் ஸ்பைடர் சொல்ல வந்த விஷயத்திற்காகப் வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால் சொல்லி இருக்கும் விதம்.. அடப் போங்கைய்யா!

Spyder Trailer

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s