கருப்பன் (2017)

பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே படத்திலிருந்து மைத்துனர்களுக்கிடையான பனிப்போரில் மெல்ல மெல்லக் கரைந்துருகும் அண்ணன் – தங்கைப் பாசப் போராட்டத்தை மையக் கருவாக எடுத்து, கார்த்திக் சுப்பராஜின் இறைவியில் மாற்றான் மனைவியை அடையத் துடிக்கும் பாபி சிம்ஹாவின் பகுதியைத் துணைக் கருவாகக் கோர்த்து, விஷாலின் செல்லமே படத்தில் சிறுவயது முதலே ரீமாசென்னுடன் வளர்ந்து, திருமணமாகிப் பிரிந்ததும் மனரீதியாகப் பாதிக்கப்படும் பரத்தின் சாயலில் பிரதான வில்லனின் குணவியல்பை வடிவமைத்து, இதுவரை பார்த்துப் பழகிய காட்சிகளின் தொகுப்பாகவே ஒட்டு மொத்தத் திரைக்கதையையும் வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் பன்னீர்செல்வம். அப்படியெனில் சலிப்புத் தட்ட வேண்டுமே? ம்ஹும்.. வழக்கம் போல் ஆபத்பாந்தவராக ஏதேதோ மாயவித்தைகள் புரிந்து அபயம் அளிக்கும் விஜய் சேதுபதி; கூடவே அழகான ஆச்சரியமாக கண்களாலேயே சொக்குப்பொடி போட்டு இறுதிக் காட்சி வரை கட்டிப் போட்டு விடும் நாயகி தான்யாவின் அபரிமிதமான நடிப்பும் சேர்ந்து விடுவதால் இந்த கருப்பன் அழகழகாய்த் தெரிவதில் பெரிதும் வியப்பேதுமில்லையே நமக்கு?

ஜல்லிகட்டுப் போட்டியில் தான் உயிருக்குயிராக வளர்க்கும் காளையை அடக்கும் வீரனுக்கே தங்கையை மணமுடித்துத் தருவதாகப் பந்தயம் கட்டி விஜய் சேதுபதியிடம் பசுபதி தோற்றுப் போக, வேண்டா வெறுப்பாகத் திருமணம் செய்து கொண்டாலும் போகிற போக்கில் அடுத்தவர் குணாதிசயங்கள் ஒருவருக்கொருவர் பிடித்துப் போக பசை போல ஒட்டிக் கொள்கிறது விஜய் சேதுபதி – தான்யா ஜோடி; இதற்கிடையில் தான்யாவின் மேல் சிறு பராயம் முதலே காதல் வயப்பட்டிருக்கும் தாய்மாமன் பாபி சிம்ஹா உறவாடிப் பகை தீர்க்க எத்தனிக்க, அவரது சதிவலையில் வீழ்ந்து அடுத்தடுத்து அந்தவூர் அரசியல்வாதி சரத் லோகிதாஸ் மற்றும் மைத்துனர் பசுபதியின் விரோதத்தை விஜய் சேதுபதி சம்பாதித்துக் கொள்ள, அவரது அசமந்தப் போக்கால் ஒரு கட்டத்தில் கர்ப்பிணியான தான்யாவின் கருவும் கலைந்து மனைவியின் வெறுப்பும் சேர்ந்து கொள்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாபி சிம்ஹாவின் சதிவலையிலிருந்து மீண்டெழுந்து தன் தரப்பு நியாயத்தை விஜய் சேதுபதி நிலைநிறுத்துவது எப்படியென்பதை நீட்டி முழக்கிச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பன்னீர்செல்வம்.

kar

முறுக்கு மீசையும் முரட்டுத் தேகமுமாக வாடிவாசல் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரராகக் களமிறங்கும் காட்சியில் திரையரங்கில் கைதட்டல்கள் அதிர்கிறது. அச்சு அசல் கிராமத்து இளைஞனாக வாய் பேச முடியாத தாயிடம் பாசத்தைக் கொட்டுவது, விருப்பமில்லாமல் தாலி கட்டிய மனைவிக்குப் பயந்து ‘இது நம்ம ஆளு’ பாக்யராஜ் பாணியில் முதலிரவன்று வெளியிலே படுக்கையைப் போட்டுத் தூங்குவது, குடித்து விட்டு குலதெய்வம் கோவிலில் அரசியல்வாதி சரத் லோகிதாஸிடம் வம்பிழுப்பது, மறுநாள் மன்னிப்புக் கேட்கச் சென்ற இடத்தில் மனைவி தன்யாவை அடிக்கும் அண்ணன் பசுபதியிடம் சுதாரிக்கும் நொடியில் கோபத்தைக் காட்டுவது, கருவுற்றிருக்கும் மனைவிடம் சந்தோஷத்தைக் கூடப் பகிர்ந்து கொள்ளத் தெரியாத வெள்ளந்தி மனிதராகக் குழைவது என நவரசங்களையும் கொட்டித் தீர்த்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

மாட்டுக்கு மருத்துவம் பார்க்கச் சென்று காயப்பட்டிருக்கும் தன்னைக் குசலம் விசாரிக்க வரும் பசுபதியிடம் உரிமையாக “யோவ்! எங்கய்யா போற? பாரு அவ மூஞ்சி தூக்கி வச்சிருக்கா. நீதானே கட்டி வச்சே? போய் நீயே சமாதனப்படுத்து” கேட்பதாகட்டும், முதல் நாள் குலதெய்வம் கோவிலில் குடித்து அலப்பறை செய்து விட்டு, மறுநாள் “புருஷனை அடிச்சு வெரட்டிட்டு வாசல் தெளிச்சு கோலம் போட்றதெப்படின்னு ஒரு இன்டெர்வியூ தர முடியுமா மேடம்?” என மனைவியைக் கலாய்ப்பதாகட்டும், மனைவியை அடித்த கோபத்தில் அவளது அண்ணனை அடித்து விட்டு மறுநொடி “ஏய் அன்பு.. உனக்கு என்னைய அடிக்கணும்.. சண்டை போடணும்னு எதுவுமே தோணலையா?” என பரிதாபமாகக் கேட்பதாகட்டும், அண்ணண் வீட்டுக்குப் போக விரும்பும் மனைவிடம் நடந்த பிரச்சினையைக் கூற முடியாமல் கோபத்தில் சாப்பாட்டுக் கோப்பையை வீசியெறிந்து விட்டுப் போகும் காட்சியிலும் பண்பட்ட நடிகராக மிளிர்கிறார் விஜய் சேதுபதி.

பார்த்த மாத்திரத்தில் பசக்கென்று ஒட்டிக் கொள்ளும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றமும் பொலிவான அந்தப் புன்னகையும் நாயகி தன்யா ரவிச்சந்திரனின் சிறப்பு; இதற்கு முன்னரே பலே வெள்ளையத்தேவா மற்றும் பிருந்தாவனத்தில் பார்த்திருந்தாலும், மொத்தக் கதையும் இவரைச் சுற்றியே சுழல்வதால் இதில் அவருக்குக் கிடைத்திருக்கும் அன்புச்செல்வி கதாப்பாத்திரம் கொஞ்சம் ஸ்பெசல் தான். விருப்பமில்லாமல் திருமணத்திற்கு முதலில் ஒப்புக் கொண்டாலும் பின்னர் விஜய் சேதுபதியின் குணாதிசய மாற்றத்தை அனுபவ ரீதியாக உணர்வது, குலதெய்வம் கோயிலில் ரகளை செய்து விஜய் சேதுபதி வெளியேற்றப்படும் காட்சியில் கண்களாலேயே இயலாமையை வெளிப்படுத்துவது, உண்மை புரியாது கூட்டப்படும் ஊர்ப் பஞ்சாயத்தில் சொந்தபந்தங்களை எதிர்த்து தன் கணவன் தரப்பு நியாயங்களை இடித்துரைப்பது, தற்கொலை செய்ய முயற்சித்து கருக்கலைந்து வெற்றுடலாக இருக்கும் தறுவாயில் பார்க்க வரும் விஜய் சேதுபதியிடம் கண்களாலேயே வெறுப்பை உமிழ்ந்து வெளியேற்றுவது என வலுவான கதாப்பாத்திரமாகப் படத்தைத் தாங்குகிறார்.

kar.jpg

விஜய் சேதுபதி – தான்யா காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சாப்பாடு பரிமாறும் காட்சியில் கபி.. கபி.. எனக் கொஞ்சுவதும், தவறு செய்யும் விஜய் சேதுபதியை தான்யா செல்லமாக மிரட்டுவதும், செய்த தவறுகளை உணர்ந்ததன் பிற்பாடு தான்யாவை எதிர்கொள்ள முடியாமல் விஜய் சேதுபதி தடுமாறுவதும், குலதெய்வம் கோவிலில் மனைவியை விஜய் சேதுபதி சைட் அடிப்பதும் பதிலுக்கு தான்யா செல்லமாகக் கண்டிப்பதும் கலகலப்பான பகுதிகள். சண்டையிட்டுப் பிரிந்திருக்கும் போது கூட மனைவி பரிசளித்த மூக்குக் கண்ணாடியை கழட்டாமல் இருப்பதும், பசித்திருக்கும் கணவனுக்காகத் தான்யா தாய்மாமன் சிங்கம் புலியிடம் உணவு கொடுத்தனுப்புவதும், அதே உணவை பாசமாக அம்மாவிற்கு ஊட்டி விட்டு மனைவிக்குக் கொடுக்காமல் விஜய் சேதுபதி செருக்குக் காட்டுவதும் இயல்பாக ரசிக்க வைக்கும் காட்சிகள்.

கிழக்குச் சீமையிலே விஜயகுமாரின் சாயலியேயே அமைந்திருக்கிறது பசுபதியின் கதாப்பாத்திரம். ஏற்கனவே மாப்பிள்ளையைத் தீர்மானித்திருந்தாலும் ஜல்லிக்கட்டில் உணர்வுகளைத் தூண்டி விட்டு விஜய் சேதுபதியைப் பரீட்சிப்பது, பாபி சிம்ஹாவின் சூழ்ச்சியை அறியாத விஜய் சேதுபதியுடன் மல்லுக்கு நிற்பது, தங்கையைப் பார்க்க முடியாமல் பரிதவிப்பது, தங்கை கருவுற்றிருக்கும் செய்தியறிந்ததும் கோபமிருந்தாலும் கோவிலுக்குச் சென்று பிரார்த்திப்பது எனத் தேர்ந்த நடிகர் என்பதை கிடைக்கும் வாய்ப்புகளில் மறுபடியும் நிரூபித்திருக்கிறார். அவரை இன்னமும் பயன்படுத்தி இருக்கலாம். அவரது மனைவியாகக் காவேரி; தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின் பார்க்க முடிந்தாலும் இறுதிக் காட்சியைத் தவிர நடிப்பதற்குப் பெரிதாக வாய்ப்பில்லை என்பது குறையே.

கறுப்புப் பொட்டு, வேஷ்டி சட்டையில் சற்றே மாறுபட்ட தோற்றத்தில் அறிமுகமாகிறார் பாபி சிம்ஹா. மாற்றான் மனைவி மீது கொண்ட மோகத்தால் உறவாடிப் பகை தீர்க்கும் கதாப்பாத்திரம். பிரச்சினைக்குத் தூபம் போட்டு தொடக்கி விட்டு “இது எங்க குடும்பப் பிரச்சனை; நாங்களே பேசித் தீர்த்துகிறோம்..” எனத் தன் மீது பழி வராமல் தப்பிக்கும் காட்சிகளிலும், கடைசிக் காட்சியில் இறக்கும் முன்னர் கூட கண்ணடித்துத் தான்யாவிடம் காதலை வெளிப்படுத்துவதில் மாத்திரம் தனித்துத் தெரிகிறார் பாபி சிம்ஹா. மற்றையபடி இதே பாத்திரத்தை இதை விடச் சிறப்பாக இறைவியில் பாபி சிம்ஹா வாயிலாகவே பார்த்து விட்டபடியால் அவரது வில்லத்தனங்கள் அவ்வளவாக எடுபடவில்லை. இரண்டாம் கட்ட வில்லனாகவே வந்து போகிறார் சரத் லோகிதாஸ். சமீபத்தில் படங்களில் தொடர்ந்து ஒரே மாதிரியான உடல்மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் கொஞ்சம் தேவலாம்.

ரேனுகாவின் பலமே அவரது பளிச் பேச்சும் கம்பீரமான குரலுமே; அவையிரண்டையுமே இல்லாமல் வடிவமைத்த இயக்குனருக்கு ஒரு குட்டு வைக்கலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைவான கதாப்பாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் சிங்கம் புலி. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிகளுக்குத் திரையரங்கே அல்லோகலப்படுகிறது. தான்யாவுடனான இரண்டு காட்சிகளில் அழுத்தமான வசனங்களைப் பேசித் தன்னைக் குணச்சித்திர நடிகராகவும் நிலைநிறுத்துகிறார். படத்தின் ஆரம்பத்தில் வரும் வாடிவாசல் ஜல்லிகட்டுப் படம் பிடிக்கப்பட்ட விதம் அருமை. கிராமத்து மக்களுக்கும் மாடுகளுக்கும் இடையான நெருக்கமான பந்தத்தை எடுத்துக் காட்டும் மாட்டுக்கு மருத்துவம் பார்க்கும் காட்சியும், இறந்து போன காளைக்கு நாடாத்தப்படும் மரணச் சடங்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இறுதிச் சண்டைக் காட்சியில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் மஞ்சு விரட்டுக் காட்சிகள் படத்திற்கு சம்பந்தமேயில்லாமல் துருத்திக் கொண்டு நிற்கின்றன.

kar

இமானின் இன்னிசையில் பாடல்கள் ரசிக்கவே வைக்கின்றன. அதிலும் ஷங்கர் மஹாதேவன் – சாஷா திருப்பதி பாடிய “கருவா கருவா பயலே..” எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிக்காது. அதிரிபுதிரியானா முகபாவனைகளாலும் விஜய் சேதுபதியுடன் காட்டும் நெருக்கத்தாலும் ஒட்டு மொத்தப் பாடலையும் கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கிறார் நாயகி தான்யா. “வெளஞ்ச காட்ட.. வெறிக்கும் மாட்ட.. வெரட்ட நெனச்ச பாயும் ஒம்மேல..” போன்ற வரிகளில் கவனிக்க வைக்கிறார் யுகபாரதி. சற்றே மெதுவாக நகர்ந்தாலும் பிரதீப் குமாரின் குரலில் மனதை வருடுகிறது “அழகழகாய்த் தொடுகிறதே காத்து..” பாடல். பென்னி தயாள் பாடும் குறும்புப் பாடலான “உலக வாயாடி..” கேட்கலாம் ரகம் தான். யுகபாரதியின் வரிகளில் “உசுரே உசுரே..” சோகத்தைப் பிழிகிறது. “முறுக்கு மீசை மாமா..” பாடலிலை அனிதா வெங்கட்டின் குரல் தான் தூக்கி நிறுத்துகிறது. பின்னணி இசை குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இல்லா விட்டாலும் பாதகமில்லாமல் காட்சிகளை நகர்த்த உதவுகிறது.

படம் சுவாரசியமாக இருந்தாலும் ஏற்கனவே பார்த்துப் பழகிய காட்சிகளின் தொகுப்பாக இருப்பதும், அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் ஊகித்துக் கொள்ளக் கூடியதாக இருப்பதும் திரைக்கதையின் பலவீனம். ரேணிகுண்டாவில் இருந்த புத்துணர்ச்சி இந்தப் படத்தில் தவறியிருப்பதும் வலுவான நட்சத்திரப் பாத்திரங்கள் இருந்தும் அவை மேம்போக்காகக் கையாளப்பட்டிருப்பதும் இது இயக்குனர் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமென்பதை உணர்த்தி நிற்கின்றன. அதே சமயம் நாயகி தான்யாவின் திறமையை வெளிக்கொணர சரியான களமாகக் கருப்பன் அமைந்திருக்கிறது என்பதையும் இங்கு மறுப்பதற்கில்லை. ஊர்ப் பஞ்சாயத்தைப் பத்து நாட்களுக்கப்புறம் பேசிக்கலாம் என முடிக்கிறார்கள்? அதற்கப்புறம் என்னானது என்பது காட்டப்படவேயில்லை. கதைக்கு உதவாத சரத் லோகிதாஸ் கதாப்பாத்திரம் எதற்காக வந்து போகிறது? பாபி சிம்ஹாவால் நேரடியா மோத முடியாது என்பதற்காக இப்படியொரு கதாப்பாத்திரத்தைத் திணிக்க வேண்டுமா?

மொத்தத்தில் படத்தை சுவாரசியமாக நகர்த்திச் செல்லும் விஜய் சேதுபதி – தான்யாவைத் தவிர்த்துப் பார்த்தால் இந்தக் கருப்பன் வெறுமனே பார்த்துப் பழகிய காட்சிகளின் தொகுப்பு மாத்திரமே. அடுத்த படைப்பில் புதுமையான காட்சியமைப்புடன் வாருங்கள் பன்னீர்செல்வம்.

Karuppan Trailer

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s