Classics of Tamil Cinema 4: ஒரு தலை ராகம் (1980)

இழுத்து மூடும் முந்தானையால் மனதை இறுக்கப் போர்த்தும் நாயகி; சற்றே பிடியைத் தளர்த்த நினைத்தாலும் தடை போடும் மேகங்களாய்க் குறுக்கே வந்து நிற்கும் அவளது குடும்பப் பின்னணியென இழுபறிகளுக்கு மத்தியில் நாயகனின் கனத்த இதயம் இசைக்கும் ஒரு வகைசேரா கீதமே ஒரு தலை ராகத்தின் ஜீவநாதம். தமிழ் திரையுலகின் வரலாற்றை எழுதுபவர்கள் ராஜேந்தரின் ஒரு தலை ராகத்தினை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலாது. எப்படி பாரதிராஜாவின் “16 வயதினிலே” அதுவரை காட்டியிராத கிராமத்துக் கதைக்களத்தை ஜனரஞ்சகமாகப் படம் பிடித்திருந்ததோ, அது போல் அதுவரை கண்டிராத எண்பதுகளின் சிறுநகரம் சார்ந்த கல்லூரி வாழ்க்கையை அச்சு அசலாகப் பதிவு செய்திருந்தது இந்த ஒரு தலை ராகம்.

பருவ வயதில் வாழ்க்கையில் தடம் மாறி ஒருவனால் ஏமாற்றப்பட்டு, அடுத்துக் கரம் பிடித்த கணவனும் கை விட்ட நிலையில் ஊர் மக்களின் ஏச்சுப்பேச்சுகளுக்கு மத்தியில், பெற்றெடுத்த இரண்டு பெண் குழந்தைகளையும் தனியொருத்தியாகக் கண்ணியம் தவறாமல் கட்டுக்கோப்புடன் வளர்த்தெடுக்கும் நாயகியின் தாய்; இத்தகைய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நாயகி ரூபாவிற்குத் தன் நடத்தையால் தாயின் வளர்ப்பிற்குக் களங்கம் வந்து விடக் கூடாதே எனும் தயக்கம். கூடவே அதுவரை சந்தித்த ஆண்களுடனான மோசமான அனுபவங்களால் நாயகன் சங்கரின் காதலை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கிறாள். பதிலில்லாத கேள்விகளுடன் உருகி உருகி வலம் வந்து ஒரு கட்டத்தில் நொடிந்தும் போகிறான் நாயகன். அவனது தவிப்பைப் பார்த்து மனம் திறந்து பேச முற்படும் வேளையிலெல்லாம் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவளைத் தடுத்து விடுகின்றன. படத்தின் கடைசி வரை நாயகனும் நாயகியும் பேசிக் கொள்வதேயில்லை. தடைகளை மீறி அவள் முதல் தடவை பேச முயற்சிக்கையில் எதிர்பாராத திருப்பத்துடன் கதை முடித்திருப்பார் ராஜேந்தர்.

oru1.jpg

நாயகியின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக முதலில் இக்கதைக்குத் “தடை போடும் மேகங்கள்” எனத் தலைப்பிட்டிருந்தார் ராஜேந்தர். இக்கதையை வைத்து கொண்டு தயாரிப்பாளர் இல்லாமல் தேடியலைந்த ராஜேந்தருக்கு, “கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இசை எல்லாமே நீதான், ஆனால் படத்தை நான் தான் இயக்குவேன்.” எனும் முன்நிபந்தனையோடு படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டார் ஈ.எம்.இப்ராஹிம். முதற்பட வாய்ப்புக் கிடைப்பதே அரிதென்பதால் சம்மதித்திருந்தாலும், முன்னனுபவம் இல்லாமல் இப்ராஹிம் தடுமாறுவதைக் கண்டு படத்தைத் தானே இயங்குவதாகவும், இயக்குநராகத் தயாரிப்பாளர் இப்ராஹிமின் பெயரையே போட்டு கொள்ளலாமெனக் கூறக், கடைசியில் ராஜேந்தரின் படைப்பாகவே உருவானது ஒரு தலை ராகம். ஆனாலும் எழுத்தோட்டத்தில் “தயாரிப்பு – இயக்கம் -ஈ.எம்.இப்ராஹிம்” எனவே இடம் பெற்றிருக்கும். இந்தப் படம் தன்னுடையது தானென்பதை நிரூபிக்க, இதே சாயலிலேயே தனது அடுத்து படைப்பான இரயில் பயணங்களில் படத்தையும் எடுத்து வெற்றி கண்டார் ராஜேந்தர்.

முதிர்ச்சியடைந்த நாயகர்களை கல்லூரி மாணவர்களாகக் காட்டுவது, இயல்பு வாழ்கைக்குப் புறம்பான மாணவர்களின் தோற்றம், ஆடைகள், நெறிப்படுத்தப்பட்ட சீரிய வசன நடை, டூயட் பாடும் கதாநாயகி என அபத்தங்களையே பார்த்துச் சலித்துப் போன மக்களுக்கு பெல்பாட்டம், பாபி காலர், கிராப் முடி, சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் வசன நடை, யதார்த்ததோடு ஒன்றிய கல்லூரி வளாகம், இனிமையான இரயில் பயணங்கள், சமூகச் சிக்கல்கள் என எண்பதுகளின் சாயலை அப்படியே பிரதிபலித்தமையே ஒரு தலை ராகத்தின் முதல் வெற்றி. வெளியான முதல் வாரம் புதுமுகங்களின் படைப்பென்பதால் கவனிப்பாரற்று சுமாராகப் போனாலும், இயல்பான கல்லூரிக் கதைக்களம் மாணவர்களை முதலில் வசீகரிக்க, தொடர்ந்து அருமையான பாடல்கள் வெகுஜன மக்களிடம் படத்தைக் கொண்டு சேர்க்கவே திரையிட்ட அரங்குகளனைத்தும் திருவிழா போல களைகட்ட துவங்கின.

ஆழமாக விவரிக்கப்பட வேண்டிய காட்சிகளிலெல்லாம் வலிந்து சோகத்தைத் திணிக்காமல் வசனங்களின் மூலமாகவே கடந்து சென்றிருக்கும் ராஜேந்தரின் பாங்கு சிறப்பானது. “நாம எப்போ தடுக்கி விழுவோம்? எப்போ சிரிக்கலாம்னு இந்த ஊரே காத்திட்டு இருக்கு.” என எச்சரிக்கும் தாயிடம் “இந்த இதயம் ஒரு இறுகின பாறைம்மா.. இதில சிலை செய்ய நெனச்சா அந்த உளி தான் உடையும்.” எனத் மறைமுகமாகக் கதையின் போக்கை கோடிட்டுக் காட்டி ரூபா பேசுவது, சங்கரை உதாசீனப்படுவதைக் கண்டு பொருமித் தள்ளும் தன் உயிர்த் தோழி உஷாவிடம் “உள்ளே வாங்கன்னு உள்ளம் சொல்ல நெனச்சாக் கூட உபசரிக்க முடியாத நேரத்தில விருந்தாளி வந்தா.. எடுத்து வச்சுப் பரிமாறவா முடியும்? தட்டிக் கழிக்கத் தான் முடியும்.” எனத் தன்னுடைய ஆசைகளை திரை போட்டு மறைப்பது ஆகிய இரண்டு காட்சிகளே போதும் நாயகியின் இக்கட்டான சூழ்நிலையை எடுத்தியம்பிக் கூறுவதற்கு.

ஒரு கட்டத்தில் விரும்பி நெருங்கி வருவதும், அடுத்த நொடியில் மனவுளைச்சலுக்கு உள்ளாகி விலகிச் செல்வதுமென இருதலைக் கொள்ளி எறும்பாக அல்லற்படும் பாத்திரம் ரூபாவிற்கு. பேசவே முடியாத காட்சிகளில் கூட கண்களால் உணர்வுகளை ஊடு கடத்தியிருப்பார். தன்னைப் பார்க்க வந்து ஊர்க்காரர்களிடம் அடி வாங்கும் சங்கரைத் தவிப்போடு கடந்து சென்று கிணற்றடியில் நின்று அழுவது, மல்லிகை வாசத்தை பற்றி சங்கர் பேசும் வேளை அணிந்திருந்த பூமாலையை தூர வீசி “தூக்கியெறிஞ்சது பூவ மட்டுமல்ல..” என குறிப்பால் உணர்த்துவது, ஒருமுறை மறைமுகமாகத் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியதன் எதிர்வினைகளை எண்ணிப் பார்த்து “தெரிஞ்சோ தெரியாமலோ இதுவரைக்கும் கற்பூரம் ஏத்திக்கிட்டிருந்தேன். இனிமே எப்பிடி அணைக்கணும்னு யோசிக்கப் போறேன்..” எனத் நிலைப்பாட்டை வெளிப்படுத்து என தேர்ந்த நடிப்பை வழங்கி இருப்பர் ரூபா.

oru.png

“வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது..” எனத் தன் உள்ளக்கிடக்கையை சங்கர் பாடலாகக் கல்லூரி விழாவில் பாட, அந்த இடத்தில் இருக்கமாட்டாமல் வெளியில் சென்று மறைந்திருந்து அந்தப் பாட்டை ரூபா ரசிப்பதும், எழுந்து சென்ற கோபம் தாளாமல், மறுநாள் நூலகத்தில் நேரெதிராகச் சந்திக்கும் ரூபாவை சங்கர் புறக்கணிப்பதைக் கவனிக்கும் தோழி உஷா, “என்னங்க எந்திரிச்சிடீங்க.. கோபமா?” எனக் கேட்க, பதிலுக்கு சங்கர் “ஆமாங்க கோபம் தான், இந்த புக் மேல. எவ்ளோ படிச்சாலும் புரியவே மாட்டேங்குது.” எனச் சமாளிப்பதும் அழகான கவிதை. பரீட்சை நேரத்திற்கு முன்பே விடைத்தாளை மடித்துக் கொடுத்து விட்டு வரும் சங்கரிடம் தோழி உஷா, “Questions எல்லாம் ஈஸியா இருக்கில்ல?” எனக் கேட்க, “ஈஸியாத் தான் இருக்கு. ஆனா எனக்குள்ள இருக்கிற கேள்விகளெல்லாம் தான் பதிலேயில்லாத கேள்விகள் ஆயிடுச்சே..” என விரக்தியில் சொல்லும் காட்சியிலும், பரீட்சை எப்படி எனக் கேட்கும் சங்கரிடம் “சுபத்ரா (ரூபாவின் கதாப்பாத்திரம்) நல்லா செஞ்சிருக்கா..” என பதிலளிக்கும் உஷாவிடம், “கேட்காத கேள்விக்கெல்லாம் நீங்க பதில் சொல்றீங்க. சிலர் கேட்கிற கேள்விங்களுக்கே பதில் சொல்றதில்ல..” என ரூபாவைக் குறிப்பிட்டுப் பேசும் காட்சியிலும் வசனகர்த்தா ராஜேந்தரின் பேனா தனித்தே தெரியும்.

ரூபா வாய்மூடி மௌனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரது மனசாட்சியாக இருந்து அவர் மனதில் நினைப்பதை வெளிப்படுத்தும் துறுதுறு கதாப்பாத்திரம் தோழியாக வரும் உஷா; இவரே பின்னாட்களில் ராஜேந்தரின் மனைவியுமானார். “தாமரை கூடத் தான் தண்ணியில தள்ளாடுது அத ரசிக்கிறீங்க.. நான் தண்ணியில தள்ளாடினாக் கூட ரசிங்கடா..” என எப்போதும் போதையிலேயே தத்துவங்களை உதிர்க்கும் கதாப்பாத்திரத்தில் சந்திரசேகர்; அதிலும் இறுதிப் பிரிவுபசார நிகழ்வில், சிவப்பாக மாற விரும்பும் அழகான வெள்ளை ரோஜாவின் காதலுக்கு ஏங்கி, அதன் முள்ளிலேயே குத்தப்பட்டுத் தன் இரத்தத்தால் அதை சிவப்பாக்கி, உயிர் துறக்கும் குருவியின் கதையைத் தன் நண்பனின் காதலுடன் ஒப்பிடுப் பேசி ரூபாவிற்கு உண்மையை உணர்த்தும் காட்சியில் கலங்க வைப்பார். உண்மையில் அந்த வேடம் ராஜேந்தரே செய்ய வேண்டியிருந்தது. தயாரிப்பாளர் இப்ராஹிமும் அதையே தான் விரும்பினார். ஆனால் ஒரு காட்சியில் புகை பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் அதனைத் தவிர்த்தார் ராஜேந்தர். இருப்பினும் ஒரேயொரு காட்சியில் கல்லூரி விழாவில் மேடையேறி இந்திப் பாடல் பாடி விட்டுச் செல்வார்.

படத்தின் ஒளிப்பதிவு இரட்டை இயக்குனர்களான ராபர்ட் – ராஜசேகர்; திரைக்கதை உருவாக்கத்திலும் பங்கு கொண்டிருந்தனர். பிற்காலத்தில் பாலைவச்சோலை, சின்னப்பூவே மெல்லப் பேசு, மனசுக்குள் மத்தாப்பூ என ஏராளமான வெற்றிப் படைப்புக்களைத் தந்தனர். சங்கர், ரூபா, ரவீந்திரன், தியாகு, தும்பு கைலாஷ் எனப் பங்காற்றியிருந்த புதுமுகங்கள் அனைவருக்கும் புது முகவரியைக் கொடுத்திருந்தது ஒரு தலை ராகம். படப்பிடிப்பின் போது தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் படத்தை முடித்துக் கொடுத்து விட்டு வெளியேறினார் ராஜேந்தர். இதனால் தான் என்னவோ ராஜேந்தரின் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டாலும் பின்னணி இசைக்கு வேறொருவரை நாடிச் சென்றார் தயாரிப்பாளர் இப்ராஹிம். படத்தின் எழுத்தோட்டத்தில் “பாடல்கள் – இசையாக்கம் – ராஜேந்திரன்” எனவும் “பின்னணி இசை – A.A.ராஜ்” என வருவதையும் அவதானிக்க முடியும்.

oru

ராஜேந்தரின் இசை மற்றும் வரிகளில் மாறுபட்ட பாடல்களைக் கொண்ட இசைத்தொகுப்பு இது. பாடல்களுக்காகவே மக்கள் மீண்டும் மீண்டும் வந்து பார்க்கலாயினர். கிட்டார், சக்சபோன், ட்ரம்ஸின் கலவையாக ஒலிக்கும் துள்ளிசைப் பாடலான ஜோலி ஆப்ரஹாமின் “அட மன்மதன் ரட்சிக்கணும்.. இந்த மங்கையர்க் காளைகளை..” ரெட்ரோப் பாடல்களின் பிரியர்களுக்கு செமையான விருந்து. ரவீந்திரனின் நடனமும் அட்டகாசமாக இருக்கும். ரயில் தடம் புரண்டிருக்கும் வேளை பொழுதைப் போக்குவதற்காகப் பாடப்படும் “கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு..” அருமையான கிராமத்து விருந்து. மலேசியா வாசுதேவனின் மாறுபட்ட குரலும், அதே பாடலின் இடைச் செருகலாக வரும் “பொழுதோட கோழி கூவுற வேளை.. ராசாதி ராசன் வாராண்டி முன்னே..” குறும் பாடலும் அப்பாடலுக்கு இன்னமும் மெருகேற்றும்.

பாடல்கள் வெறுமனே திணிப்புக்களாக இல்லாமல் சூழ்நிலைகளின் வீரியத்தை விளக்குவதாக் கதையோடு பயணிப்பதும் மற்றொரு சிறப்பு. அதிலும் பாலசுப்ரமணியம் பாடிய “வாசமில்லா மலரிது.. வசந்தத்தை தேடுது..” என்றும் கேட்கத் திகட்டாத பாடல்; “என்ன சுகம் கண்டாய்.. இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே?” எனத் தன்னைத் தானே எதிர்க் கேள்வி கேட்கும் பங்காக பாடலை அமைத்திருக்கும் விதத்திற்கே சபாஷ் போடலாம். எதிர் உவமைகளைக் கொண்டே புனையப்பட்டிருக்கும் “இது குழந்தை பாடும் தாலாட்டு..” சற்றே மாறுபட்ட முயற்சி; ராஜேந்தரின் தமிழ்ப் புலமையைப் பறை சாற்ற நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன்.. வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன்..” என முரண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட வரிகளே போதுமானது.

ஜெயச்சந்திரன் குரலில் அமையப் பெற்ற “கடவுள் வாழும் கோவிலிலே கற்பூரதீபம்..” பாடல் நாயகனின் ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு. “என் கதையை எழுதிவிட்டேன்.. முடிவினிலே சுபமில்லை..” என விரக்தியின் உச்சத்தில் டி.எம்.சௌந்தர்ராஜன் பாடும் “நான் ஒரு ராசியில்லா ராஜா..” கேட்கும் போதே சற்றுக் கலங்க வைக்கும். நாயகனின் கோணத்தில் இடம்பெறும் பாடல்களையும் அவை அமையப் பெறும் வரிசையும் அவதானித்தால் ஒரு விஷயம் புரியும். உற்சாகம், மகிழ்ச்சி, புரிதலின்மை, சோகம், ஏமாற்றம், விரக்தி, மரணம் என நாயகனின் பரிணாம மாற்றத்தை அவை எடுத்துக் காட்டும்.

ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
துயில் நினைவினை மறக்கும் வழி தந்தாள்
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்…

ரயில் பயணத்தில் துவங்கிய உறவை, வாழ்க்கைப் பயணத்தில் இணைத்துக் கொள்ள விரும்பிக் காத்திருப்பாள் நாயகி. இறுக்கம் தளர்த்தி இதயம் பரிமாற அவள் நினைக்கையில் அவனது இதயத் துடிப்பு நின்று விட்டிருக்கும். தாமதமாகச் சொல்லப்பட்ட காதலால் அவன் காத்திருப்பும் வீண் போயிருக்கும். பின்னணியில் சௌந்தர்ராஜனின் அழுத்தமான குரலில் ஒலிக்கும் “என் கதை முடியும் நேரமிது..” பாடலின் வரிகள் படம் முடிந்த பின்னரும் மனதைச் சலனத்திலேயே வைத்திருக்கும். அதுவே இந்த ஒரு தலை ராகத்தின் வெற்றி.

Click here to read complete web series of Classics of Tamil Cinema

Click here to advertise @ Thiraimozhi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s