மெர்சல் (2017)

விசிலடித்துக் கரகோஷித்து ரசிகர்களே களைத்துப் போகுமளவுக்குத் தித்திப்பான சரவெடிகளுடன் கோர்க்கப்பட்டிருக்கும் அதிரடிக் காட்சிகள், நடுநிலை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் சமூகக் கருத்துக்களுடன் கூடிய உணர்வுபூர்வமான கதைக்களம், மாநில அரசிலிருந்து மத்திய அரசு வரை பாரபட்சம் பார்க்காமல் தைரியமாகக் கேள்வி கேட்கும் நறுக் வசனங்கள், உச்ச நடிகரின் பின்னணியில் பேசப்பட்டிருக்கும் சமூகப் பிரச்சினைகள் என என்ன தான் பார்த்துப் பழகிய கதையாக இருந்தாலும், காட்சிக்குச் காட்சி ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து அட்டகாசமான தீபாவளிச் சரவெடியாக மெர்சலைத் தந்திருக்கிறார் இயக்குனர் அட்லீ. விஜய்யை இதுவரை பார்த்திராத புதிய பரிமாணத்தில் காட்சிப்படுத்த வேண்டுமெனும் இயக்குனரின் முனைப்பும், ஒட்டு மொத்தமாகப் பார்வையாளர்களைக் வசப்படுத்தி விடும் விஜய்யின் திரையாளுமையும் படத்தை வேறு தளத்திற்கு இட்டுச் செல்கிறது.

அடுத்தடுத்துக் கடத்தப்படும் மருத்துவத்துறைப் பணியாளர்களின் பின்னணியை ஆராயும் காவல்த்துறை அதிகாரியான சத்யராஜின் விசாரணை வட்டத்தில் வெறும் ஐந்து ரூபாய்க்கு மருத்துவத்தை சேவையாகப் பார்க்கும் மருத்துவர் விஜய் சிக்கிக் கொள்ள, அதே சமயம் மருத்துவர் விஜய்யை விலைக்கு வாங்க முயற்சிக்கும் சக மருத்துவரான ஹரீஷ் பேராடி மாயாஜால நிகழ்ச்சிக்குத் தந்திரமாக வரவழைக்கப்பட்டு மாய வித்தகன் விஜய்யால் கொல்லப்பட, கடத்தல்களின் சூத்திரதாரியாக இருக்கும் அந்த மாயாஜால வித்தகன் யார்? உயிரைக் காப்பாற்றும் மருத்துவர் உயிரை எடுக்கத் துணிந்தாரா? இல்லை பாவம் ஒருபுறம் இருக்கப் பழி இன்னொரு புறம் சேர்கிறதா? எனும் தேடல்களுடன் விரிகிறது மனதை நெகிழ வைக்கும் மருத்துவத்துறையின் மலிவான ஊழல்களின் பின்னணி. பார்த்துப் பழகிய தமிழ் சினிமாவின் பழி வாங்கும் சூத்திரமென்றால் கூட விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பும், சமூக அவலங்களைத் தோலுரித்து சமகால அரசியலைச் சாடி இருக்கும் விதமும் சபாஷ் போட வைக்கிறது.

இயக்குனர்கள் விக்ரமன், பாசில், முருகதாஸ் வரிசையில் விஜய்யிடமிருந்து உச்சபட்சச் செயல்திறனை வெளிக்கொணர்த்திருக்கிறார் அட்லீ. சமீபத்திய பேட்டியில் அவர் குறிப்பிட்டது போன்றே விஜய்யின் அதிதீவிர ரசிகராக இருந்தால் மாத்திரமே இந்த முயற்சி சாத்தியம். மருத்துவர் மாறன், மாயவித்தகன் வெற்றி, கிராமத்துத் தலைவர் தளபதியென மூன்று வேடங்களில் மாறுபட்ட பரிமாணங்களில் விருந்து படைத்திருக்கிறார் இளைய தளபதி.. மன்னிக்கவும் இன்றிலிருந்து தளபதி விஜய். மூன்று வேடங்கள் என முன்னரே தெரிந்திருந்தாலும் மருத்துவர் மற்றும் மாய வித்தகன் இரண்டும் இரட்டைக் கதாப்பாத்திரங்களா? இல்லை ஆள் மாறாட்டமா எனப் பார்வையாளர்களைச் சிறிது நேரம் குழப்பத்துடனே பயணிக்க வைத்திருப்பது நல்லதோர் யுக்தி. தெறியையும் விட அதீத மாஸுடன் இருக்க வேண்டுமென்பதற்காக விஜய் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியையும் அறிமுகக் காட்சிக்கு இணையான அதிர்வுடன் வடிவமைத்திருப்பது சிறப்பு. அதே சமயம் ஒரு சில படங்களை நினைவுபடுத்தும் காட்சியமைப்புக்கள் உச்சுக் கொட்டவும் வைப்பது பலவீனம்.

mersal

சிறந்த மனிதநேயச் சேவைக்கான விருத்தைப் பெற வேட்டி சட்டையில் செல்கையில் விமான நிலையத்தில் சோதனையெனும் பெயரில் அவமானப்படுத்தப்படும் போதும், தடைகளைக் கடந்து சென்று ஆபத்திலிருக்கும் பிரெஞ்சு பெண்ணிற்கு முதலுதவி செய்து தலை குனிந்து நிற்கும் பிரெஞ்சு காவல்த்துறையிடம் “நான் பேசுற பாஷையும் போட்டிருக்கிற டிரெஸ்ஸும் தான் உங்க பிரச்சினையின்னா மாற வேண்டியது நான் இல்லை.. நீங்க தான்.” எனத் தமிழ்ப் பாரம்பரியத்தின் பெருமை பேசும் முதல் காட்சியிலேயே மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறார் மருத்துவர் விஜய். இலவச மருத்துவத்தையே கனவாகக் கொண்டு ஐந்து ரூபாய்க்காக மருத்துவத்தை சேவையாகச் செய்யும் கதாப்பாத்திரம்; தன்னை விலை பேச வரும் சக மருத்துவர் ஹரீஷை அமைதியாகக் கடந்து செல்ல நினைப்பதும், முடியாதவிடத்து தரை லோக்கல் மட்டத்திற்கு இறங்கி அடிக்கும் விதமும் வாவ். அரசு மருத்துவமனைகளின் செயலாற்ற தன்மை, விவசாய நிலங்களின் முக்கியத்துவம், பணமதிப்பிழப்பின் தாக்கம், GST வரி, டிஜிட்டல் இந்தியா, ஒட்டுக்குப் பணம், இலவசங்களின் பெயரால் செய்யப்படும் மூளைச் சலவை, இலவச மருத்துவத்தின் முக்கியத்துவம் எனக் கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் துணித்து மக்கள் பிரச்சினையைப் பேசி இருக்கிறார் விஜய்.

“தலை சிறந்த மருத்துவர்களை உருவாக்கி 34 வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதில் இந்தியாவிற்கு முதலிடம். அதே சமயம் சொந்த மக்களுக்காகத் தரமான மருத்துவதைத் தருவதில் 112 வது இடம். தகுந்த மருத்துவச் சான்றிதழ் இல்லாத மருத்துவர்கள் மாத்திரமே 54.3%. ஒரு வருடத்தில் நடக்கும் மருத்துவத்துறைத் தவறுகள் மாத்திரமே 52 லட்சம். 120 கோடி மக்கள் இருக்கிற நாட்டில வெறும் 120 பேருக்கு மாத்திரம் கிடைக்கிற மருத்துவத்திற்குப் பேரு வளர்ச்சி கிடையாது” என விஜயகாந்த் பாணியில் புள்ளி விபரங்களை அள்ளி விடும் காட்சியில் கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்கிறது. அலட்டலில்லாத உடல்மொழியுடன் கண்களில் வன்மத்தோடு மாய வித்தகனாக அறிமுகமாகும் வெற்றி எனும் விஜய்யின் பாத்திரம் இலகுவில் மனதில் ஒட்டிக் கொள்கிறது. ஏற்கனவே பார்த்துப் பழகிய மாயவித்தைகளையே செய்து காட்டுவதென்பது சற்று ஏமாற்றமே. இன்னும் கொஞ்சம் புதுமையாக இருந்திருக்கலாம். காஜலைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி மருத்துவரைக் கொலை செய்வது, பின் குற்றவுணர்ச்சி தாளாமல் வந்து மன்னிப்புக் கேட்பது, காவலதிகாரி சத்யராஜிடம் தந்திரத்தால் தப்பிப்பது என மிரட்டி இருக்கிறார். சில இடங்களில் மாயாஜாலங்கள் அதீத மிகைப்படுத்தல்களுடன் இருப்பதும் நகைமுரண்.

இரண்டாம் பாதியின் நீளமான அந்த முன்கதையை ஒற்றை மனிதராகத் தோளில் சுமந்திருக்கிறார் கிராமத்துத் தளபதி விஜய். முறுக்கு மீசை, லேசாக நரை விட்ட தாடி, முரட்டுத் தேகம் என மதுரை மண்ணின் மைந்தராகக் களமிறங்கும் அந்தக் காட்சியில் “இதுக்காகத் தானேய்யா இம்புட்டு நேரமாக் காத்திருந்தோம்..” என ஆர்ப்பரிக்கிறது ரசிகர் கூட்டம். விவசாய மண்ணில் தொழிற்சாலை கட்ட முயற்சிக்கையில் வெகுண்டெழுவது, கோயில் கட்ட முடிவெடுத்து நடத்தப்படும் திருவிழாவில் ஏற்படும் உயிர்பலிகளினால் இந்த ஊருக்கு கோயிலை விட அத்தியாவசியத் தேவை இலவச மருவமனை என முடிவெடுப்பது, தான் கட்டிய இலவச மருத்துவமனையில் வைத்தியர்களின் பணத்தாசைக்கு மனைவியைப் பலி கொடுத்து முறையற்ற சிசேரியன் பிரவசத்தால் உயிர் போகும் தறுவாயில் இருக்கும் மனைவியைக் கைகளில் தாங்கி உருகுவது என நிஜமாகவே மெர்சலாக்கி இருக்கிறார் தளபதி. அதிலும் அந்த உருக்கமான சிசேரியன் பிரசவக் காட்சி நிச்சயம் நெகிழ வைக்கும்.

mersal

மூன்று நாயகிகள் என்றாலும் கூட படத்தின் நீளத்தைக் கருத்திற் கொண்டு அளவாகவே உபயோகப்படுத்தி இருக்கிறார் அட்லீ. இருந்தாலும் அந்த அழுத்தமான பிரசவக் காட்சியில் கலங்க வைக்கிறார் நித்யா மேனன். வழக்கம் போலவே காதல் காட்சிகளில் அட்லீயின் சிறப்புத் தொடுகைகள் ஆங்காங்கே தெரிகின்றன. நேர்காணல் ஒன்றிற்காக மருத்துவர் விஜய்யிடம் அனுமதி பெற்றுத் தர வேண்டி அவரிடமே வந்து “டேய் தம்பி ரோஸ் மில்க் வாங்கி தரேண்டா..” என லந்து கொடுப்பதும் பதிலுக்கு அவர் அப்பாவியாகப் பம்முவதும் கலக்கல் காட்சிகள். காஜலை வெறுமனே கொலையொன்றுக்கான பகடைக் காயாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். வடிவேலுவுக்கு முக்கியமான குணச்சித்திர வேடம். கதையின் போக்குக் காரணமாக முடிந்தவரை காதல் காட்சிகள் மற்றும் நகைச்சுவையினை மட்டுப்படுத்தி இருக்கிறார்கள். நல்ல நடிகனுக்கு இரண்டு காட்சிகளே போதும் என்பதை தான் இடம்பெறும் காட்சிகளில் எல்லாம் நிரூபித்திருக்கிறார் வடிவேலு.

சத்தமியில்லாமல் வந்து வில்லத்தனம் செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா. “மெடிக்கல் error ங்கிறது தப்பில்லை.. அத நியூஸ் ஆகும் வரை விட்டது தான் தப்பு. ஜனங்களோட மறதி தான் நம்மோட பலமே. That’s why we are running the show.” என இலவச மருத்துவ முகாம் நடாத்தித் தவறுகளை மூடி மறைப்பதாகட்டும், “இன்னைக்கு சிசேரியன்னா ஷாக் ஆகிறாங்க.. இதுவே 30 வருஷம் கழிச்சு சுகப் பிரசவம்னா ஷாக் ஆவாங்க..” எனச் சமகால நிதர்சனத்தைப் பேசுமிடத்திலும் கவர்கிறார். அவரை விட அவரது நண்பராக வரும் ஹாரீஷ் பேராடி பார்வையிலேயே வில்லத்தனத்தைக் கக்குகிறார். “இந்தக் கொடூரமாப் பேசுறவனைக் கூட நம்பலாம் குசுகுசுன்னு பேசுறவன நம்பவே முடியாது..” எனத் தான் பாணியில் எதிர்வினையாற்றும் இடங்களில் தனித்துத் தெரிகிறார் சத்யராஜ். அவரை இன்னமும் பயன்படுத்தி இருக்கலாம். யோகிபாபு இரண்டே காட்சிகள் வந்தாலும் கிச்சுக்கிச்சு மூட்டுகிறார். ஒரே காட்சியில் வரும் இலங்கைப் பெண்ணும் மனதில் நிற்கிறார். கோவை சரளா, மிஷா கோஷல், தேவதர்ஷினி, சத்யன், சங்கிலி முருகன் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஓரிரு காட்சிகள் வந்து செல்கிறார்கள். காளி வெங்கட்டின் உணர்வு பூர்வமான கிளைக்கதை மையக்கருவிற்கு வலுச் சேர்க்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு அடிமட்டத்திற்கு இறங்கி அரசியல் பேசியிருக்கிறார் விஜய். “இலவசமா மிக்ஸி, டிவி, லாப்டாப் கொடுக்கிற ஊருங்க இது.. ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்க முடியிறப்போ இலவசமா மருத்துவம் கொடுக்க முடியாதா?..”, “முதலமைச்சர், கவர்னர், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எல்லோரையும் அரசு மருத்துவமனையில்தான் சேர்க்கணும்னு சட்டம் கொண்டுவந்தா, அரசு மருத்துவமனைகளின் தரம் தானாக உயரும்”, “7 சதவீத GST வாங்குற சிங்கப்பூரில இலவசமா மருத்துவம் கொடுக்க முடியும்னா 28% GST வசூலிக்கிற நம்ம நாட்டில் மருத்துவ வசதிகளை மக்களுக்கு இலவசமா தர முடியலை?”, “உசுர எடுக்கிற சாராயத்துக்கு 8% GST உசிரக் காக்கிற மருத்துவத்திற்கு 18% GST ” என ரமண கிரிவாசனின் வசனங்களில் தீப்பொறி பறக்கிறது. இவையெல்லாமே சமூக வலைத்தளங்கில் பேசப்பட்ட விடயங்களாக இருந்தாலும் உச்ச நடிகரின் குரலில் கேட்கப்படும் போது வெகுஜனத்தைப் பரவலாகச் சென்றடையும். அதற்குச் சான்று ஆளுங்கட்சியின் முக்கியப் பிரமுகரால் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.

mersal

படத்தின் இத்தனை பிரமாண்டத்திற்குக் காரணம் வானவில்லின் ஏழு வண்ணங்களின் கலவையாக அமைந்திருக்கும் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு. “ஆளப்போறன் தமிழன்..” பாடலில் வரும் ஹோலிப் பண்டிகைக் காட்சி, உச்சி வெயிலில் படமாக்கப்பட்டிருக்கும் மல்யுத்தக் காட்சி, அகண்ட கோணத்தில் படமாக்கப்பட்டிருக்கும் ஊர்த் திருவிழாக் காட்சி, தீ விபத்துக் காட்சி, பிரான்சின் பசுமை, கண்ணுக்குக் குளிர்ச்சியான பாடல் காட்சிகள் என பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். பிரமாண்டமான திருவிழாக் காட்சி, மாய வித்தகனின் மறைவிடம், மாயாஜால நிகழ்ச்சி நடைபெறும் பிரமாண்டமான அரங்கம், 80 களின் காலகட்டத்தை ஒத்த மருத்துவமனை, மல்யுத்த விளையாட்டரங்கம் எனக் பிரமிப்பின் உச்சகத்திற்கே கொண்டு செல்கிறன கலை இயக்குனரின் கட்டுமானங்கள். சீட்டுக்கட்டைக் கொண்டு வித்தை காட்டும் சண்டைக் காட்சி, எம்.ஜி. ஆர் பின்னணியில் திரையரங்கில் நடக்கும் சண்டைக்காட்சி, ராட்டினத்தைக் கொண்டு நீர்த்தாங்கியைக் உடைத்து தீ விபத்தைத் தவிர்க்கும் காட்சி, இறுதியில் மதுரை தளபதி கொல்லப்படும் காட்சி என மிரட்டி இருக்கிறது அனல் அரசுவின் ஸ்டண்ட் குழு.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டி எங்கும் பிரபலம். பலரும் எதிர்பார்த்த “ஆளப்போறான் தமிழன்..” பாடலுக்கு திரையரங்கமே எழுந்து ஆடுகிறது. வழக்கத்திற்கு மாறாகக் காதல் பாடலுடன் படத்தைத் தொடங்குகிறார் அட்லீ. முதல் பாடலான “மாச்சோ மேட்ச்சாச்சோ..” சித் ஸ்ரீராம் – ஸ்வேதா மோகன் கூட்டணி கலக்கல் பாடல். விஜய்யின் நடனத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் வேகமாக இருக்கிறது “மெர்சல் அரசன் வாறான்..” பாடல். இசைத்தொகுப்பிலேயே இதயத்திற்கு நெருக்கமான பாடலென்றால் அது ரஹ்மான் – ஸ்ரேயா கோஷல் பாடிய “”நீதானே நீதானே.. என் நெஞ்சைத் தட்டும் சத்தம்..” தான். பாடமாக்கப்பட்டிருக்கும் விதத்திலும் காதல் கொப்பளிக்கிறது. விவேக்கின் வரிகள் பாடல்களைத் தூக்கி நிறுத்துகின்றன. மாய வித்தகனின் பின்னணியில் வரும் குறும் பாடலான “வலை இல்ல காத்தப் புடிச்சு வர..” பாடலும் ரசிக்க வைக்கிறது. மெர்சலான மைய இசை, அமைதியான நித்யாவின் பகுதி, கலங்க வைக்கும் சோகக் காட்சிகள் எனப் பின்னணி இசை பல இடங்களில் ஈர்க்கிறது.

படத்தின் நீளம் குறையாகவே தெரியவில்லை. ரூபனின் விறுவிறுப்பான படத்தொகுப்பும், விஜய்யின் திரையாளுமையும், ஆங்காங்கே தென்படும் சின்னச் சின்ன ஆச்சரியங்களும் கடைசி வரை கட்டிபோடுகின்றன. ஆனாலும் பார்த்து பழகிய காட்டியமைப்புக்கள் படத்தின் பலவீனம். அதிலும் அபூர்வ சகோதரர்களின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. இறுதிச் சண்டைக் காட்சியும் அதையே ஊர்ஜிதப்படுத்துகிறது. அடுத்தடுத்த படங்களில் இந்தக் க்ளீஷேக்களை அட்லீ தவிர்ப்பது நல்லது. செய்தியாளர் சந்திப்புக்கு முந்தைய இறுதிக்காட்சி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். எடுத்திருக்கும் சமூகக் கருத்துடன் கூடிய கதைக்களம் மற்றும் சொல்லியிருக்கும் விதத்திற்காக நிச்சயம் சபாஷ் போடலாம். இத்தனை புத்துணர்ச்சியுடன் இதுவரை விஜயைப் பார்த்ததேயில்லை என்று சொல்லுமளவிற்கு அவரும் தன் பங்கிற்கு விருந்து படைத்தது விட்டார்.

மொத்தத்தில் தீபாவளிக்கு ஏத்த சரவெடியாக வந்திருக்கிறது இந்த மெர்சல். இனிக் கொண்டாட்டத்திற்குப் பஞ்சமில்லை.

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Mersal Teaser

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s