மேயாத மான் (2017)

இதயம் திரைப்பட முடிவுரையில் இருந்து தனது முகவுரையைத் தொடங்குகிறது இந்த மேயாத மான். கடைசி வரை காதலைச் சொல்லாமல் கனத்த இதயத்துடன் கடந்து செல்லும் இதயம் முரளியை நாயகி ஹீரா மீண்டும் தன் வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தால்.. எனும் கருப்பொருளை எடுத்துக் கொண்டு கலகலப்பான காதல் தோரணமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். ஒரு தலைக் காதல், அண்ணன் – தங்கைப் பாசம், நண்பனின் தங்கை மீதான காதல் என தமிழ்த் திரையுலகத்திற்குப் பழகிப் போன கதையாக இருந்தாலும் கதை நகரும் களமும், உணர்வுகளைக் கையாண்டிருக்கும் விதமும் படத்தை வித்தியாசப்படுத்தி இருக்கிறது. அதே சமயம் மெர்சல் புயலுக்கு மத்தியிலும் திரையிட்ட அரங்குகளெல்லாம் களை கட்டக் காரணம் ப்ரியா பவானி சங்கரின் ரசிகர் பட்டாளம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

மூன்று வருடங்களாகப் ப்ரியா பவானி சங்கரை ஒரு தலையாகக் காதலித்து அதை வெளிப்படுத்தத் தைரியமில்லாமல் மனதிற்குள்ளேயே புளுங்கி, ப்ரியாவின் திருமண நிச்சயதார்தத்தின் போது தற்கொலை செய்ய முடிவெடுக்கும் வைபவ்வைத் தடுப்பதற்காக ப்ரியாவின் உதவியை நாடுகிறார்கள் அவரது நண்பர்கள் விவேக் பிரசன்னா மற்றும் மத்தியூஸ் வர்கீஸ். ப்ரியாவை வற்புறுத்தி வைபவ்வைத் திட்டும் படி செய்து அவரது ஆணாதிக்க மனோபாவத்தைத் தூண்டித் தற்கொலையைத் தடுத்து நிறுத்த, இந்தக் குழப்பத்திற்கு மத்தியில் மனம் தடுமாறும் ப்ரியா கல்யாணத்தை ஒரு வருடத்திற்கு ஒத்திப் போடுகிறார். நடந்ததெதுவும் அறியாமல் ப்ரியாவின் மேல் உச்சக்கட்டக் கோபத்தில் இருக்கும் வைபவ் வாழ்க்கையில் ப்ரியா மீண்டும் குறுக்கிட நடக்கும் குழப்பங்கள் படத்தின் சுவாரசியமான திரைக்கதை. என்ன தான் ப்ரியா – வைபவ் காதலைக் கொண்டு கலகலப்பாக நகர்த்தினாலும், உணர்வுகளைக் கொண்டு கச்சிதமாக நெய்யப்பட்டிருக்கும் கிளைக்கதையான வைபவ்வின் தங்கை இந்துஜாவிற்கும் அவரது நண்பராக வரும் விவேக் பிரசன்னாவிற்குமான காதல் போராட்டமே படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

mey

இதுவரை பார்க்காத வைபவ்வை மேய்த்த மானில் காண முடிகிறது. இதயம் முரளியாகக் காதலைச் சொல்லாமல் மனதிற்குள் விசும்புவது, ப்ரியா அவமானப்படுத்திய அதிர்ச்சி தாளாமல் பொரிந்து தள்ளி விட்டுத் தொலைபேசியில் மறுமுனையில் ப்ரியா கேட்டுக் கொண்டிருப்பது தெரியாமல் நண்பரிடம் அவரை வர்ணிப்பது, திட்டிய வார்த்தைகள் ப்ரியாவிடமிருந்து வரவில்லை அவை நண்பர்கள் எழுதிக் கொடுத்துப் பேசியது எனும் உண்மை தெரிந்ததும் விவேக் பிரசன்னாவிடம் கோவத்தை வெளிப்படுத்தி விட்டு மறுநொடியே “அவ கெட்ட பொண்ணு இல்லைடா..” என சந்தோஷத்தைப் பரிமாறுவது, நண்பனை ஒரு தலையாகக் காதலிக்கும் தங்கையின் காதலை எப்படிக் கையாளுவது எனப் புரியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிப்பது என நவரசங்களையும் பொழிந்து தள்ளியிருக்கிறார். கவிதை சொல்வதாகப் போதையில் ப்ரியாவைக் கலாய்ப்பதும், நண்பனின் திருமண வீட்டில் சந்திக்கும் ப்ரியாவிடம் ஊடல் கொண்டு வெறுப்பை உமிழ்வதும், வீட்டிற்கு வந்த வைபவ்விடம் “தம்பி உங்க வீட்ல எப்பவுமே ஜலத்தை வாய் வச்சுத் தான் குடிப்பீங்களா?” என முகம் சுளிக்கும் ப்ரியாவின் அம்மாவிடம் வெகுளித்தனமாக “ஆமா. நீங்க வேறெத வச்சுக் குடிப்பீங்க?” என எதிர்க் கேள்வி கேட்பதும் கலகலப்பின் உச்சக்கட்டம்.

கல்யாணம் முதல் காதல் வரை தொடருக்குப் பின் சிறிய இடைவெளியெடுத்துக் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். தங்க நிற ஜரிகை போட்ட வெண்ணிறப் புடவையில் அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே ரசிகர்களை வசீகரித்து விடுகிறார். நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி வைபவ்வைக் காப்பாற்றுவதற்காக சற்று எல்லை மீறித் தொலைபேசியில் திட்டும் அந்தக் காட்சியில் தவிப்பையும் தடுமாற்றத்தையும் ஒரு சேர வெளிப்படுத்துவது, தன்னிலை தவறி போதையில் வைபவ் வர்ணிக்கும் காட்சியில் மகிழ்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் உள்ளூர ரசிப்பது, தோழியின் திருமணத்தில் வைபவ்வை நேருக்கு நேர் சந்திக்கும் காட்சியில் முகபாவனை மகிழ்ச்சியில் இருந்து வெறுமைக்கு மாறும் விதம், வைபவ்வுடனான நட்பைக் கொச்சைப்படுத்தும் தந்தையிடம் “பல்லைத் தானே காட்டினேன். வேறெதையும் காட்டிடலையே..” எனக் கோபத்தை வெளிப்படுத்துவது என மதுமிதா கதாப்பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

படத்தின் பெருமைக்குரிய அறிமுகமென்றால் அது வைபவ்வின் தங்கையாக நடித்திருக்கும் இந்துஜா தான். சிறுவயதில் இருந்தே பார்த்து வளர்ந்த அண்ணனின் நண்பன் விவேக் பிரசன்னாவிடம் மனதைப் பறிகொடுப்பதும், தங்கையாகவே பாவிக்கும் அவனிடம் காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதும், தன்னை இந்துஜா விரும்புவது தெரியாமல் அவளுக்கான வரனை விவேக் பிரசன்னா கொண்டு வரும் போது செய்வதறியாது செயலறுந்த நிலையில் நிற்பது என அட்டகாசமாக நடித்திருக்கிறார். தங்கையாகப் பாவிக்கும் விவேக் பிரசன்னாவிடம் “சும்மா தங்கச்சி தங்கச்சின்னு சொல்லித் தொடர வேலையெல்லாம் வச்சுக்காத..” என மனதிலுள்ள காதலை சொல்ல முடியாமல் பொருமுவதும், “அன்னைக்கும் இன்னைக்கும் அவன் உன்ன தங்கச்சியாத் தான் பாக்கிறான்..” எனும் வைபவ்விடம், “அதான் பிரச்சனையே.. என்னால அப்பிடிப் பார்க்க முடியல. எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு.” எனக் காதலை நாசூக்காக அண்ணனிடம் தெரிவிப்பதுமெனக் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் பரிமளிக்கிறார்.

mey.jpg

சேதுபதி மற்றும் விக்ரம் வேதாவிற்குப் பிறகு விவேக் பிரசன்னாவுக்குப் பெயர் சொல்லும் வேடமிது. சிறுவயதிலிருந்தே தூக்கி வளர்த்த நண்பனின் தங்கை தன் மீது காதல் வயப்பட்டிருப்பதை அறிந்து அந்தக் காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிர்ப்பது, வைபவ்விற்கு அந்தக் காதல் தெரிய வந்ததும் நண்பனை எதிர்கொள்ள கொள்ள முடியாமல் விலகிச் செல்வது, இறுதியில் மெல்ல மெல்ல அரும்பும் காதலை வெளிப்படுத்த முடியாமல் திணறுவது என சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். ப்ரியா – வைபவ் மையக் காதல் கதையை விட இந்துஜா – விவேக் பிரசன்னாவின் காதல் கதை உணர்வு பூர்வமாக அமைந்துள்ளமை சிறப்பு. அதிலும் இந்துஜாவைப் பெண் பார்க்க விவேக் பிரசன்னா வரனைக் கூட்டி வரும் ஒரே காட்சியில் தங்கையின் காதலை வைபவ் நண்பனிற்குப் புரிய வைப்பதும், கூடவே தன் மீது வைபவ்விற்கிருந்த காதலை ப்ரியா புரிந்து கொள்வதும் அழகான கவிதை.

முதன்முதலாகக் காதல் பூத்ததும் அதை வெளிப்படுத்தத் தெரியாமல் விவேக் பிரசன்னா தடுமாறும் காட்சியில் வசனங்களுக்கு சபாஷ் போடலாம். “இது போன பார்த்டேக்கு நான் வாங்கிக் குடுத்த சுடிதார் தானே?” என விவேக் கேட்க, பதிலுக்கு இந்துஜா “இதுவரைக்கும் இந்த ட்ரெஸ்ஸ இருபது வாட்டி போட்டிருப்பன். அப்பெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலையா. இப்பென்ன புதுசா?” என மடக்க, “அப்பெல்லாம் என் கண்ணு ஒன் கழுத்துக்குக் கீழ போனதே கிடையாது.” என விவேக் பிரசன்னா வார்த்தையை விட அதை இரட்டை அர்த்தத்தில் புரிந்து கொண்டு இந்துஜா நாணித் திரும்புவதும், “போதும்.. இந்த கண்ணைப் பார்த்தன்.. காதப் பார்த்தன்னுகிட்டு.. இதெல்லாம் பொய்.” என இந்துஜா விரக்தியில் கோபப்படுவதும் அத்தனை அழகாக இருக்கும். வைபவ்வின் நண்பராக வரும் மத்தியூஸ் வர்கீஸ் முன்பாதியைக் கலகலப்பாக நகர்த்திச் செல்ல உதவுகிறார். “சமூக சேவையா.. என்ன தான் ஆர்ட்டிக்கல்ல அன்னை தெரேசாவப் பத்தி எழுதியிருந்தாலும் அட்டைப் படத்துக்குக் காதெரின் தெரேசா தான் தேவைப்படுது.” என கவுண்டர் கொடுக்கும் சிறுவனும் கவனத்தை ஈர்க்கிறான்.

கலகலப்பாக தொடங்கும் காதல் கதை யதார்த்தமாக நகர்ந்து உணர்வு பூர்வமான எல்லையை எட்டும் தருவாயில் சினிமாத் தனமாக நகைச்சுவைக்காக வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் அந்த இறுதிக் காட்சி சற்றே நெருடல். ப்ரியா பவானி சங்கர் அடிக்கடி மயங்கி விழுகிறார். முதல் தடவை மயங்கி விழுவதற்கான காரணம் சொல்லப் படவேயில்லை. தந்தையிடம் “அவன் கிட்ட பல்லத் தானே கட்டினேன். வேறேதும் காட்டலியே..” எனச் சண்டை போடும் நாயகி ஒரு கட்டத்தில் நாயகனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்தக் கதாப்பாத்திரத்தின் நிறம் மாறுகிறதே? என்ன தான் “நீ சொல்ற மாதிரி நான் கெட்ட பொண்ணாயிட்டேன்ல..” என வசனத்தில் ப்ரியா கூறினாலும் அந்தக் காட்சியில் கதாப்பாத்திர நிறமாற்றத்திற்கான அழுத்தம் போதவில்லை. கூடவே அவர்களது பிரிவும் அதனைத் தொடர்ந்து வரும் நாயகியைத் தூற்றிப் பாடும் பாடலும் வெறும் திணிப்புகளாவே தெரிகின்றன.

mey.jpg

சந்தோஷ் நாராயணன் – பிரதீப் கூட்டணியில் பாடல்கள் முதல் தடவை கேட்கும் போது அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனாலும் படத்தோடு பார்த்த பின் மறுபடியும் கேட்காமல் இருக்க முடியவில்லை. அத்தனைபாடல்களும் ஏதோவொரு கதையினூடே நகர்கின்றன. டோலக் துணையுடன் கே கே பாலா பாடும் “எங்க வீட்டுக் குத்துவிளக்கு..” அருமையான கானா. விவேக்கின் வரிகளில் பிரதீப் குமார் பாடும் “மேகமோ அவள் மாயப் பூத்திரள்..” பாடலில் ப்ரியா பவானி சங்கர் கொள்ளை அழகு. எத்தனை பாடல்கள் இருந்தாலும் அந்தோணி தாசனின் தங்கச்சிப் பாடலான “ஆனபெல்லி பேயி வரா.. அன்பின் குட்டித்தாயி வரா..” பாடல் தான் உசத்தி. அதிலும் வைபவ் – இந்துஜா போடும் குத்தாட்டம் சிறப்போ சிறப்பு. பிரதீப் குமார் பாடும் மெல்லிசைப் பாடலில் கிட்டாரின் அதிரும் நரம்பிசையை ரசிக்கலாம். “ரத்தினக்கட்டி.. உன்ன வைக்கிறேன் பொத்தி..” பாடல் வழக்கமான சந்தோஷ் நாராயணன் வைகையறாப் பாடல் தான். சித் ஸ்ரீராம் – தர்ஷனாவின் மயக்கும் குரலில் ஒலிக்கும் “காத்தில் அசையும் தாமரையே..” அழகான மெல்லிசைப் பாடல். இறுதிப் பாடலான “ஏண்டி ஏண்டி எஸ்.மது..” பாடலை அத்தனை ரசிக்க முடியவில்லை என்பதே உண்மை.

முதல் படமாக இருந்தாலும் சுவாரசியமான காட்சியமைப்பினாலும் உணர்வுகளை அழகாக்க கையாண்ட விதத்திலும் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். ஜவ்வாக நகரும் கடைசி பதினைந்து நிமிடங்களை கொஞ்சம் கத்தரித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் கவலைகளை மறந்து சிரித்து ரசிக்கக் கூடிய தரமான படைப்பு இந்த மேயாத மான்.

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Meyaadha Maan Trailer

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s