அண்ணாதுரை (2017)

திருப்புமுனைக் காட்சிகளை கதை நகரும் போக்கில் வைக்க வேண்டும்; விடுத்து அக்காட்சிகளை முன்னிறுத்தியே கதையை எழுதினால் திரைக்கதை போதிய பிடிமானமற்றுச் சலம்பலாய் அமைந்து விடுமென்பதற்குச் சரியான உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த அண்ணாதுரை. வழக்கமாகக் கதைத்தேர்விற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் ஆன்டனி இந்த முறை சற்றே தடுமாறி இருக்கிறார். நாயகனை மையப்படுத்தியே நகரும் இரட்டை வேட ஆள்மாறாட்டக் கதை; பார்த்துப் பழகிய காட்சியமைப்புக்கள் என்பதால் கதையின் போக்கையும் எளிதில் ஊகித்துக் கொள்ள முடிவதென்பது திரைக்கதையின் பலவீனம். விஜய் ஆண்டனியின் யதார்த்தமான நடிப்பு மற்றும் ஆங்காங்கே இயக்குனர் அவிழ்க்கும் சுவாரசியமான முடிச்சுக்கள் மாத்திரமே படத்தின் ஒரே ஆறுதல்.

அண்ணாதுரை, தம்பிதுரை என இரட்டை வேடங்களில் விஜய் ஆன்டனி; காதலி இறந்து போன சோகத்தில் குடித்துக் குடித்தே வாழ்க்கையில் தடம் மாறிப் போன அண்ணாதுரை, நண்பன் காளி வெங்கட்டுக்காக கடன் வாங்கி கொடுக்கச் சென்று கந்து வட்டிக் கும்பலின் வலையில் வீழ்ந்து எதிர்பாராத விதமாகக் கொலைப்பழியேற்று சிறை செல்ல நேர, சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் தம்பிதுரையை அவர்களது வாழ்க்கையை அழித்த ரவுடி கும்பலிடம் கொண்டு சேர்த்து விடுகிறது. தடம் மாறிப் போன தம்பியின் வாழ்க்கையை சீர்திருத்த, சிறையிலிருந்து மீண்டு வரும் அண்ணன் எடுக்கும் முயற்சிகளே அண்ணாதுரை படத்தின் சுவாரசியமான முடிச்சுக்கள். ஆனாலும் மையக்கருவிற்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல் கிளைக்கதைகளை வார்த்தெடுப்பதில் கவனம் செலுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜி.ஸ்ரீனிவாசன்.

anna

எதிரியின் தலையில் உடைக்க வேண்டிய போத்தலைத் தன் தலையிலேயே அடித்து உடைத்துக் கொண்டு விஜய் ஆண்டனி அறிமுகமாகும் அந்தக் காட்சியை என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஒருவேளை அண்ணாதுரை கதாப்பாத்திரம் எப்பொழுதுமே போதையில் இருப்பதால் உல்டாவாகச் செய்கிறாரா? இல்லை அதையும் திருப்புமுனைக் காட்சியென்று எண்ணியே இயக்குனர் வைத்து விட்டாரா எனத் தெரியவில்லை. ஆனாலும் ரவுடிகளிடம் சிக்குண்டிருக்கும் மஹிமாவைக் காப்பாற்றி கண்ணியமாக வீடு சேர்க்கும் அந்தக் காட்சி வெறுமனே நாயக பிம்பத்திற்காகப் புனையப்பட்டிருந்தாலும், இறுதிக் காட்சியில் அதன் அவசியத்தை உணர்த்தி இருக்கும் விதம் அருமை. இரண்டு வேடங்களையும் வெறுமனே தாடியை வைத்து ஒப்பேற்றி இருக்கிறார் விஜய் ஆண்டனி. குறைந்தபட்சம் உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பிலாவது வேறுபடுத்திக் காட்டி இருந்தால் அவரது முந்தைய திரைப்படங்கள் நினைவிற்கு வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

உணர்வு பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ள காட்சிகள் குடும்ப ரசிகர்களை ஈர்க்கவல்லன. தன்னை நினைத்துப் புலம்பும் தாயிடம் அண்ணாதுரை குடிக்க மாட்டேனெனச் சத்தியம் செய்ய, “அண்ணே! உன்னோட சத்தியதையெல்லாம் குடிக்கிறதுக்கு முன்னாடி பண்ணுன்னே..” என தம்பிதுரை பதிலடி கொடுப்பது, பெண் கேட்டு வந்த இடத்தில் தாயை அவமானப்படுத்தும் தாய்மாமனுக்கு, “அது புள்ள நல்லா இருக்கணும்னு அது கேட்டிச்சு.. உன் பொண்ணு நல்லா இருக்கணும்னு நீ நெனச்சிருக்க.. ரெண்டுமே தப்பில்லையே மாமா.. குடுக்க மாட்டேன்னு சொல்லியிருந்தாலும் பொறுமையா கோவப்படாம சொல்லி இருக்கலாமே மாமா?” என பொறுமையாக எடுத்துரைப்பது, ஜுவல் மேரியை விரும்பும் செய்தியை விஜய் ஆண்டனி தொலைபேசி உரையாடலாகவே தாயிடம் தெரிவிப்பது என நெகிழ வைக்கும் காட்சிகள் ஏராளம்.

என்ன தான் கதை அண்ணாதுரை கதாப்பாத்திரத்தைச் சுற்றியே நகர்ந்தாலும், அதிகமாக ஈர்ப்பதென்னவோ தம்பிதுரை விஜய் ஆண்டனி தான். அவரது கல்யாணமாலை பெண் தேடும் படலமும், அங்கு சந்திக்கும் நாயகி டயானாவிடம் “அவங்கபாட்டுக்கு ஏதோ பேசிட்டிருங்கன்னு விட்டிட்டு போய்ட்டாங்க. என்ன பேசுறதுன்னு தான் தெரியல..” எனப் புலம்பும் காட்சியும் கலகல. வேலைக்கான நேர்காணலிற்குச் சென்ற இடத்தில் விஜய் ஆன்டனியுடம் அதீத உரிமையுடன் பழகச் சென்று மூக்குடைபடும் காட்சியிலும், திருமணம் தடைபடும் நேரத்தில் கண்களாலேயே தன் இயலாமையை விஜய் ஆண்டனி வெளிப்படுத்த அதை ஏற்க முடியாமல் பரிதவிக்கும் காட்சியிலும் மனதில் நிற்கிறார் டயானா சம்பிகா. நண்பர் காளி வெங்கட்டின் காதலுக்காக அண்ணாதுரை ஜுவல் மேரியிடம் தூது போவதும், அந்தப் பெண் பதிலுக்கு அண்ணாதுரையையே காதலிப்பதும் உஸ்ஸ்.. முடியல சாமி!

anna

அண்ணாதுரை கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள். துணிக்கடையை நிர்வகித்து வரும் அண்ணாதுரைக்கு வெற்றுப் பாத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கக் கூடாது எனும் அடிப்படை அறிவு கூட இல்லையா? ஒருமுறை தான் தவறிழைத்தார் என எண்ணினாலும், நண்பனுக்காக வாங்கிய கடனை அடைக்கச் சென்ற இடத்தில் பணத்தைக் கொடுத்து விட்டுக் கடன் பாத்திரத்தை வாங்காமல் வருவதெல்லாம் ரொம்பவே சினிமாத்தனம். கூடவே அண்ணாதுரை தாடியை மழித்துக் கொண்டு தம்பிதுரையாக ஆள் மாறாட்டம் செய்வதற்கான காரணம் அத்தனை வலியதாக இல்லை. யாருக்காக ஆள்மாறாட்டம் செய்கிறாரோ, அதே கந்துவட்டிக்காரர் இரண்டே நொடிகளில் சாராய வாடையை வைத்து எளிதில் இனங்கண்டு கொள்கிறாரே? காளி வெங்கட்டின் வெகுளித்தமான நடிப்பு படத்திற்கு பக்க பலம். கடனை செலுத்த முடியாமல் காரணம் கூறும் காளி வெங்கட்டிடம் கந்துவட்டிக்காரர் “எனக்குத் தேவை உன்னோட பதிலில்ல.. பணம்.” கூறுமிடத்தில் வசனங்கள் நச்.

இடைவேளைக் காட்சி படத்தின் எதிர்பாராத திருப்புமுனை. அதுவரை அமைதியாகவே இருந்த தம்பிதுரை கதாப்பாத்திரத்தின் நிலை மாற்றமும், அதை அதிர்ச்சியுடன் உற்று நோக்கும் அண்ணாதுரை என இரு வேடங்களிலும் கண்களாலேயே வேறுபாட்டை காட்டும் காட்சியில் விஜய் ஆண்டனியின் திரையனுபவம் கை கொடுக்கிறது. இடைவேளைக்குப் பின் படம் வேறொரு தளத்தில் நகர்ந்தாலும் விறுவிறுப்பாக இருக்கிறது. “நீயெல்லாம் செஞ்சிருவேன்.. செஞ்சிருவேன்ன்னு பேசிகிட்டு தான் இருப்ப.. நானெல்லாம் பேசிக்கிட்டிருக்கும் போதே செஞ்சிருவேன்.” என பன்ச் விஜய் ஆண்டனி பேசும் பன்ச் வசனங்கள் எல்லாம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அவரது கதாப்பாத்திர நிறமாற்றத்திற்கு உள்ளார்ந்த கோபம் மாத்திரம் போதுமானதாக இல்லை. இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்திருந்தும், தம்பிதுரைக்காக “சின்னப்பயடா அவன். இன்னும் வாழவே ஆரம்பிக்கல..” என அண்ணாதுரை வருத்தப்படுவதாக வசனங்கள் வைத்திருப்பது எதற்காக என்பது இயக்குநருக்கே வெளிச்சம். ஒரே வயசு தானே பாஸ்?

தந்தையாக வரும் நளினிகாந்த், மற்றும் தாயாக வரும் ரிந்து ரவியின் நடிப்பு மனதில் நிற்கிறது. அத்தனை அனுபவமுள்ள நடிகர் ராதாரவியை ஏதோ பொம்மை போல உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். கவிதாலயா கிருஷ்ணனை நீண்ட காலத்திற்குப் பின் திரையில் காண முடிகிறது. ஓரிரு காட்சிகளில் வந்தாலும் பெண் காவலதிகாரியாக வரும் மஹிமா இறுதிக் காட்சியில் மனத்தைத் தொடுகிறார். சரவணன் மீனாட்சி தொடரில் வரும் தந்தை கதாப்பாத்திரமாகவே வந்து செல்கிறார் வேலுச்சாமி. “இந்த ஊர் பழி சொல்லுமே தவிர வழி சொல்லாது..“, “அன்னைக்கு நீ என்னைக் கொன்னிருவங்கிற பயத்தில தான் உன் கிட்ட வேலைக்கு சேர்ந்தேன். இன்னைக்கு நான் உன்னைக் கொன்னிருவேங்கிற பயத்தில தான் உன்ன விட்டுப் போறேங்கிறேன். என்னை விட்டிடுண்ணே..” எனப் பல இடங்களில் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. வசங்களுக்காகவே இயக்குனர் ஸ்ரீனிவாசனைப் பாராட்டலாம்.

anna.jpg

விஜய் ஆண்டனியின் இசையில் பெரும்பாலான பாடல்கள் கதையினூடே நகர்வதென்பது சிறப்பு. அண்ணாதுரையின் கதாப்பாத்திரத்தை பிரதிபலிக்கும் “தங்கமா வைரமா என்ன சொல்ல..” பாடலில் கார்த்திக்கின் குரலும் அருண் பாரதியின் வரிகளும் மனதை நெகிழச் செய்யும். “ஜிஎஸ்டியா மாறி நீயும்..” பாடலில் காட்சியமைப்பும் பாடலுக்கான கருவும் மிக்க அழகு. கதையினூடே பயணிக்கும் “ஓடாதே.. ஓடாதே..நியாயங்கள் தேடாதே..” பாடலும் ரசிக்கவே வைக்கிறது. அனந்துவின் குரலில் வரும் “ஒட்டு மொத்தப் பாசமும்..” பாடலில் இருக்கும் அழுத்தம் காட்சிக்கு அத்தனை அவசியம். பின்னணி இசையும் காட்சிக்கேற்ப ஒலிப்பதும் சிறப்பு. சண்டைக் காட்சிகள் சற்றே மிகைப்படுத்தல்கள் இன்றி இருந்திருக்கலாம்.

தில்ராஜின் இயல்பான ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம். படத்தொகுப்பாளராகவும் தன் பங்கை சரிவரச் செய்திருக்கிறார் விஜய் ஆன்டனி. குழப்பமான கதை, ஏகப்பட்ட கிளைக்கதைகள் வேறு; படத்தை வெறுமனே நீட்டி முழக்கமால் கனகச்சிதமாகத் தொகுத்திருக்கிறார். தேவையற்ற காட்சிகள் என்றெதுமில்லை. ஆனாலும் காட்சிகள் இன்னும் புதுமையாக இருந்திருக்கலாம். கந்துவட்டிக்காரர் அண்ணாதுரையை ஏமாற்றித் தான் துணிக்கடையை எழுதி வாங்கினார் என்பதை தம்பிதுரை தெரிந்தே இருக்கிறார் என்பது அவர் பேசும் பன்ச் வசனசமொன்றிலேயே வருகிறது. அவர் ரவுடியானதன் பிற்பாடு அதை மீட்டிருக்கலாமே? அண்ணாதுரை சிறையிலிருந்து வரும் வரை காத்திருக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? எனக் கேள்வி எழாமல் இல்லை. திரையிலேயே காட்டாமல் காதலியான எஸ்தர் கதாப்பாத்திரத்தைக் கையாண்டிருக்கும் விதம் சிறப்பு.

மொத்தத்தில் காட்சியமைப்பில் கவனம் செலுத்தி இருந்தால் மனதை வென்றிருப்பான் இந்த அண்ணாதுரை. ஆனாலும் விஜய் ஆண்டனிக்காக ஒருமுறை பார்க்கலாம்.

Please like & share this page if you really like our writings..

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Annadurai Trailer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s