மாயவன் (2017)

புதுமுகங்களின் படம் தானே என அசமந்தப் போக்குடன் நீங்கள் திரையரங்கத்திற்குச் செல்வீர்களாயின் நிச்சயம் உங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது. தனது சிந்தையில் பதிந்திருக்கும் நினைவுகளின் தொகுப்பினை நவீன விஞ்ஞானத்தின் துணை கொண்டு வன்தட்டில் பிரதியெடுத்து, அடுத்தவர் அறியாமலேயே அதனை அவர்களது மூளைக்குள் செலுத்தி, தனது நினைவுகளின் பிரதிநிதியாக அவர்களை உலவ விட்டு இறவாப் பெரு வாழ்வு வாழ்ந்திடத் துடிக்கும் விஞ்ஞானியின் கதை தான் இந்த மாயவன். மேலோட்டமாகப் பார்த்தால் மை டியர் மார்த்தாண்டன், போகன் போன்ற கூடு விட்டுக் கூடு பாயும் கதையாகத் தோன்றினாலும், அவற்றைப் போலவே மாந்திரீகத்தின் பால் செல்லாது, மூளைநரம்பியலில் இதுவரை வெறும் கருத்து விவாதப் பொருளாகவே இருக்கும் நினைவுகளின் பிரதி எனும் கருவினை நம்பும் படியாகத் திரைக்கதையாக்கி, கடைசிக் காட்சி வரை பரபரப்பாக நகர்த்துவதில் வித்தியாசப்படுத்தி இருக்கிறது இந்த CV குமார் – நலன் குமாரசாமி கூட்டணி.

விசாரணைக்காகத் திருடனொருவனைத் துரத்திச் செல்லும் காவலதிகாரி சந்தீப் கிஷன், தற்செயலாகக் காண நேர்ந்த கொலையொன்றின் சூத்திரதாரியைப் பின் தொடர்ந்து பிடிக்க முற்படுகையில் விபத்துக்குள்ளாகி நான்கு மாத ஓய்விற்குப் பின் பணிக்குத் திரும்புகிறார். முந்தைய கொலைச் சம்பவத்தின் பாதிப்பினால் அவதிப்படும் அவருக்கு மனநல ஆலோசகர் லாவண்யாவின் உதவி கிட்டுகிறது. ஒரு பக்கம் குடும்பப் பெண், பிரபல நடிகை, நரம்பியல் விஞ்ஞானி என ஒரே சாயலில் அடுத்தடுத்து நிகழும் கொலைகள்; மறுபுறம் ஒவ்வொரு கொலைகளின் சூத்திரதாரிகளாக சந்தீப்பினால் சந்தேகிக்கப்படும் உடற்பயிற்சிவிப்பாளர் தீனா, கொலை செய்யப்பட்ட நடிகையின் ஒப்பனையாளரான மைம் கோபி, தன்னம்பிக்கைப் பேச்சாளர் டேனியல் பாலாஜி, இராணுவ உயரதிகாரி ஜாக்கி செராஃப் அனைவரும் விசாரணைக்காக அவரால் நெருங்கப்படும் வேளை, அவர்களாகவே தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தக் கொலைகளின் பின்னணி என்ன? கொலைகளின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? இந்தக் கொலைகளுக்கும் நாயகன் சந்தீப்பின் மனவழுத்தத்திற்கும் இடையான தொடர்பென்ன? என ஏகப்பட்ட சுவாரசியமான கேள்விகளோடு நகர்கிறது நலன் குமாரசாமியின் பரபரப்பான திரைக்கதை.

Maayavan.jpg

மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் என சந்தீப் கிஷனின் கதைத்தேர்வுகளுக்கே தனியான சபாஷ் போடலாம். கதை இவரைச் சுற்றியே நகர்ந்தாலும் அதீத மிகைப்படுத்தல்கள் ஏதுமின்றி இயல்பான காவலதிகாரியாக இவரது கதாப்பாத்திரம் அமைந்திருப்பது சிறப்பு. உளவியல் ரீதியாகப் பூர்ணமாகக் குணமடையவில்லை என குறிப்பிட்ட மருத்துவர் லாவண்யாவிடம் காவலதிகாரிக்கே உரித்தான தோரணையில் கோபத்தைக் காட்டுவது, அதுவே கொலைச் சம்பவத்தை விசாரிக்கச் சென்ற இடத்தில் உதிரத்தைப் பார்த்து மனவழுத்ததால் நிலை குலைந்து அதே மருத்துவரிடம் குழந்தை போல அடைக்கலம் கோருவது என கொடுக்கப்பட்ட இடைவெளியில் பரிணமித்திருக்கிறார். படம் முழுவதும் ஒரே விதமான குழப்பமான மனோபாவத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம். காவல்த்துறை உயரதிகாரிகளுடனான கலந்துரையாடல் காட்சியில் இவரது வசன ஒலிச்சேர்க்கை சில வினாடிகள் ஒவ்வாமல் தனித்தே தெரிவதையும் கவனித்திருக்க வேண்டும்.

மனநல ஆலோசகராக வரும் நாயகி லாவண்யா திரிபதிக்கு ஒரு சில காட்சிகளே வந்தாலும் அத்தனை அழுத்தமான வேடம். பிரம்மன் படத்திற்குப் பிறகு தமிழில் நல்லதோர் வாய்ப்பு. மனவழுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் சந்தீப்பிற்கு அதன் தாக்கத்தைப் புரிய வைக்க அவர் எடுக்கும் முயற்சிகளில் கண்களால் அவர் காட்டும் கோபமும் வேகமும் அத்தனை கூர்மை. எதிர்பாராத நேரத்தில் குணச்சித்திர வேடத்தில் அசத்துகிறார் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ புகழ் பகவதி பெருமாள். விசாரணைக் காட்சியில் டேனியல் பாலாஜியின் பிடியிலிருந்து லாவகமாகத் தப்பிப்பது, இறுதிக் காட்சியில் காணொளி அழைப்பில் (Video call) நேரலையில் ஜாக்கி செராஃபினால் மனைவி கொல்லப்படும் போது வாய் விட்டு அழ முடியாமல் மனதிற்குள்ளேயே புழுங்குவது என அட்டகாசமான நடிப்பு.

Maayavan.jpg

தேர்ந்த நடிகர்களுக்கு இரண்டே காட்சிகள் போதும் அந்தக் கதாப்பாத்திரத்தின் நிறத்தினை செவ்வனே வெளிக்கொணர என்பதற்கு ஜாக்கி செராஃப் சிறந்த எடுத்துக்காட்டு. இராணுவ உயரதிகாரியாக சிங்கம் போல அவர் அறிமுகமாகும் அந்தத் தோரணைக்கு ஒட்டு மொத்தத் திரையரங்கமுமே கரகோஷிக்கிறது. தன் கைகளைக் கட்டிப் போடுவதற்காக வாய்ப்புத் தேடியலையும் சந்தீப்பை தன்னிடத்திற்கே வரவழைத்து செக்மேட் வைக்கும் காட்சி நச். டேனியல் பாலாஜி தன்னம்பிக்கைப் பேச்சாளராக காட்டப்பட்டிருக்கிறாரே தவிர அந்த கதாப்பாத்திரத்திற்கு வலுச் சேர்க்குமளவிற்கு அவர் பேசும் வசனங்கள் கை கொடுக்கவில்லை. டேனியலை சந்தீப் சந்தேகிக்கும் காட்சிகள் வெகு சாமர்தியமாகப் புனையப்பட்டிருக்கின்றன.

திரைக்கதையின் முதல் பாதி நாயகனின் மனவழுத்தம், தொடர் கொலைகள் மற்றும் அவை சார்ந்த பின்னணியைத் தொடர்புபடுத்தி நகர்ந்தாலும் அவை வெறுமனே கிளைக் கதைகள் மாத்திரமே. உயிர் என்பது நினைவுகளின் தொகுப்பே; உடல் என்பது பொருட்டே அல்ல; ஒருவரது நினைவுகளின் தொகுப்பின் பிரதியை இன்னொருவரின் மூளையில் ஊடு செலுத்துவதன் மூலம் அவரது உடம்பில் நாம் உயிர் வாழ முடியும் என்னும் மூளை நரம்பியல் விஞ்ஞானத்தின் விவாதக் கருப்பொருளை மையக் கருவாக எடுத்துக் கொண்டு, கிளைக்கதைகளை அந்த மையப் புள்ளியுடன் இணைத்த விதத்திற்கே நலன் குமாரசாமிக்கு சபாஷ் போடலாம். இடியாப்பச் சிக்கலான கதையை குழப்பமில்லாமல் CV குமார் படமாக்கி இருக்கும் விதமும் சிறப்பு.

தொடர் கொலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் பொதுமையான உத்திகளையும், நிதானமிழந்து செய்யும் கொலைகளுக்கும், நன்கே திட்டமிடப்பட்டு செய்யும் கொலைகளுக்கும் இடையான வேறுபாட்டையும் அத்தனை நுணுக்கமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதீத சுகாதாரம், கறுப்புப் புகைச்சுருள், பெண்கள் மீதான வக்கிரப் பார்வை என கொலைகளின் பின்னணியுள்ள சூத்திரதாரியின் குணாதிசயங்கள், இன்னொருவரது மூளை அச்சூத்திரதாரியின் நினைவுகளின் பிரதியினால் ஆட்கொள்ளப்படும் போது அந்தந்தக் கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களில் ஏற்படும் துல்லிய மாற்றங்கள் என்பனவற்றை ஒரு கட்டத்திற்கு மேல் வேறொரு கதாப்பாத்திரத்தின் துணை இல்லாமலேயே பார்வையாளர்களால் கணிக்க முடிவது தான் திரைக்கதையின் உண்மையான வெற்றி.

Maayavan

கதாப்பாத்திரத் தேர்வும் வடிவமைப்பும் படத்தின் பக்க பலம். மூளை நரம்பியல் ஆராய்ச்சி நிபுணராக வரும் அமரேந்திரன், அவரது தொழில்முறை நண்பராக வரும் ஜெயப்ரகாஷ் மற்றும் காவல்துறை உயரதிகாரியாக வரும் ரவீந்திரன் தமது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். ஓரிரு காட்சியில் வந்தாலும் தீனா மற்றும் மைம் கோபி நன்கே பரிமளிக்கிறார்கள். ஒரேயொரு காட்சிக்காக எதற்கு KS ரவிகுமாரைக் கொண்டு வந்தார்கள் என்பது தான் புரியாத புதிர். அவர் வரும் காட்சி அழுத்தமானது தான் என்றாலும் கூட வசனங்களில் அத்தனை வீரியம் இல்லாமையால் கதாப்பாத்திரம் அப்படியே நமத்துப் போகிறதென்பது தான் உண்மை. லியோ ஜான் பாலின் படத்தொகுப்பில் அத்தனை பரபரப்பாக நகர்கின்றன காட்சிச் சட்டகங்கள். சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளவாவது மருந்துக்கு பகவதி பெருமாளின் ஒன் லைனர்களைப் பயன்படுத்தி இருக்கலாம். ஏதோ ஒரேயொரு ஒன் லைனெருக்குக் குறுநகை புரிந்ததாய் ஞாபகம்.

ஜிப்ரானின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம். ஸ்வேதா சுப்ராம் – அபிஷேக் பாடிய “மெல்ல மெல்ல சொல்லவா…” அழகான மெல்லிசைப் பாடல். பாடல் படமாக்கப்பட்டிருக்கும் பின்னணியும் அத்தனை அழகு. களியாட்ட விடுதியில் ஒலிக்கும் “போதைப் பூ தத்தித்தத்தி…” பாடல் கேட்கலாம் ரகம். “மாயா மஸ்தாவா..” பாடல் படத்தில் வந்ததாக நினைவில்லை. பின்னணி இசை அசத்தல் ரகம்; குறிப்பாக “Maya’s touch“, “Chase the shadows“, “Wrath of Maya“, “Decoding the mystery“, “Getting stronger and wilder” எல்லாமே ரசிக்க வைக்கின்றன. படம் தொடங்கும் 2017 காலப்பகுதியிலும், நிறைவுறும் 2037 காலப்பகுதியிலும் இளையராஜாவின் “கேளடி கண்மணி…” பாடலை இசைக்குறியீடாகப் பயன்படுத்தி இருக்கும் விதம் அருமை. கோபி அமர்நாத்தின் படமாக்கல் நேர்த்தி; நரம்பியல் விஞ்ஞானியின் கடந்த கால, நவீன கால ஆராய்ச்சி கூடத்தின் உருவாக்களில் கலை இயக்குனரின் உழைப்புத் தெரிகிறது. புதுமுகங்களின் படங்களுக்கு போதிய விளம்பரமும் வெளியீட்டுத் திட்டமிடலும் அவசியம். பலருக்குப் படம் வெளியானதே தெரியவில்லை என்பது தான் ஒரே குறை.

மொத்தத்தில் மாயவனைத் திரையரங்கில் சந்தித்தால் விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் அனுபவம் நிச்சயம் கிட்டும்.

Please like & share this page if you really like our writings..

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Maayavan Trailer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s