அருவி (2017)

தனிமனிதத் தேவைகளைக் கருத்திற் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூகக் கோட்பாடுகளில் இருந்து, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திசை திருப்பப்பட்ட பெண், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தன் மீது திணிக்கப்பட்டிருக்கும் தவறான பிம்பங்களுக்கு மத்தியில் முட்டிமோதி தனது சுயத்தை நிரூபிப்பதற்காக நிகழ்த்தும் உணர்வுப் போராட்டமே இந்த அருவி. இது உணர்வுகளால் புனையப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. எத்தனை முறை நீங்கள் படத்தைப் பார்த்தாலும் அந்தந்த நேரத்தில் உங்கள் மனவோட்டத்திற்கேற்ப ஏதோவொரு சேதியைச் உணர்த்திச் செல்லும். அருவி பேசும் நுண்ணரசியல் நமக்கு என்றும் புதியவையல்ல; நாளாந்த தெரிந்தே தெரியாமல் கடந்து செல்லும் சமூகச் சிக்கல்களை, இதுவரை கண்ணுறாத கோணத்தில் அலசி இருப்பது தான் இயக்குனர் அருண் பிரபுவின் வெற்றி.

தத்தத்தி நடை பழகும் காலத்திலேயே பெற்றோரின் அரவணைப்பில் சுதந்திரக் காற்றை சுவாசித்து வளரும் குழந்தை அருவி, தனது யௌவனப் பிராயத்தில் எதிர்பாராத விபத்தில் சிக்கிக் கொள்ள நேர்கிறது. அவள் வாழ்க்கையையே புரட்டிப் போடும் அந்த சம்பவத்திற்குக் காரணம் அதுவரை கொடுத்து வந்த அதீத சுதந்திரமே என்றெண்ணித் தவறான புரிதலுடன் குடும்பமே அவளை அவமானச் சின்னமாகக் கருதி வெளியேற்ற, கையறு நிலையில் இருக்கும் அருவியை, அவளுக்கு உதவ முற்படும் போர்வையில் அவளது நண்பியின் தந்தை, சாமியார் போர்வையில் இருக்கும் மோசடி ஆசாமி, மற்றும் அவளுக்கு தையல் நிறுவனத்தில் வேலை கொடுத்த முதலாளி என வன்புணர்ச்சிக்குட்படுத்துகிறார்கள். திருநங்கை ஒருவரது உதவியுடன், தனக்காக நியாயம் கேட்டு சொல்வதெல்லாம் சத்தியம் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் களம் புகும் அருவி வெளியேறும் போது தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு வெளியேற நேர்கிறது. அருவிக்கு நேரும் விபத்து என்ன? தன்னை ஏமாற்றியவர்களிடம் அவள் முன் வைக்கும் கோரிக்கை என்ன? தான் சந்தித்த ஒவ்வொரு மனிதர்களின் முகமூடிகளையும் அவர்கள் கையாலேயே களையச் செய்வதெப்படி? எனும் சுவாரசியமான கேள்விகளோடு நகர்கிறது படத்தின் திரைக்கதை.

aruvi.jpg

நாயகி அதிதி பாலனை இந்த வருடத்தின் சிறந்த அறிமுகம் எனலாம். விடலைப் பருவத்திற்கேயுரிய குறும்போடு நகரும் அருவியின் வாழ்க்கை, அந்த துர்ச்சம்பவத்தின் பின் குடும்பத்தால் புறக்கணிப்பிற்குள்ளாகும் போது, அதை எதிர்த்து நின்று தந்தையிடம், “சரிப்பா.. என் பர்த்டே இங்க யாருக்கும் முக்கியமில்லை. என்னைப் பத்தி தப்புப் தப்பா சொல்லியிருக்காங்கப்பா அம்மா.” என இயலாமையில் புலம்பும் அந்தக் காட்சியிலேயே அருவியாய் மனதிற்குள் பதிந்து விடுகிறார் அதிதி பாலன். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையிலும் தந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காகப் பணி புரியும் இடத்தில் கடன் வாங்கி யாருக்கும் தெரியாமல் தம்பியிடம் கொடுத்து, “இவ்ளோதான்டா என்னால முடிஞ்சிது. அப்பாவ ஒரே வாட்டி பாக்கலாமாடா?” எனக் கெஞ்சுவதாகட்டும், சொல்வதெல்லாம் சத்தியம் நிகழ்ச்சியில் உதவி செய்கிறேன் பேர் வழியெனும் போர்வையில் அனுதாபத்தை தேடிக் கொள்ள முயலும் தொகுப்பாளினியை சமூகக் கோவத்தோடு அணுகும் விதமாகட்டும், கையிலுள்ள துப்பாக்கியைக் கொண்டு மிரட்டியே ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கும் குழந்தைத் தனத்தை வெளிக்கொணரும் காட்சியாகட்டும், இறுதிக் காட்சியில் உடல் தளவுற்ற நிலையிலும் மனவுறுத்தியுடன் போராடும் காட்சியாகட்டும், இதை விடச் சிறப்பாக யாராலும் இந்தக் கதாப்பாத்திரத்தை அணுகியிருக்க முடியாதோ என எண்ணத் தோன்றுகிறது.

கதாப்பாத்திரத் தேர்வும் வடிவமைப்பும் படத்திற்கு பக்க பலம். துணைக் கதாப்பாத்திரங்கள் யாவும் புதுமுகங்களாக இருப்பினும் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பு. குறிப்பாக நிர்கதியாக நிற்கும் அருவிக்கு கடைசி வரை துணை நிற்கும் திருநங்கையாக நடித்திருக்கும் அஞ்சலி வரதன் மனதில் நிற்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அருவியைப் பங்கேற்க வைக்க அவர் செய்யும் குட்டி கலாட்டாக்கள் கலகல ரகம். என்ன தான் படம் நெடுகிலும் அந்தக் கதாப்பாத்திரத்தை உயர்வாகச் சித்தரித்திருந்தாலும், ஒரு கட்டத்தில் நகைச்சுவை எனும் பெயரில் “இத்த போய் எப்பிடிண்ணா மூணு பேர்..” என பிற்போக்குத் தனமான வசனங்களைத் திணித்திருப்பது சுத்த அபத்தம். வெறுமனே புதுமுகங்களை மட்டுமே வைத்துத் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியினை மையப்படுத்தியே வெளிப்புறப் படப்பிடிப்புகள் ஏதுமில்லாமல், ஒரு மணி நேராக் கதையினை சுவாரிஸ்யம் கெடாமல் சொல்லி இருக்கும் விதத்திற்கு நிச்சயம் சபாஷ் போடலாம். ஜீ தமிழ் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை சாயலே கதைக்களத்தை அமைத்திருப்பது, அவர் ஆற்றப் போகும் எதிர்வினைகள் படத்திற்கு இலவச விளம்பரத்தைத் தேடித் தருமெனும் நம்பிக்கையொன்றைத் தவிர வேறேதுமில்லை.

தன்னை ஏமாற்றிய ஆண்கள் மூவரையும் பொதுவெளியில் வைத்து தன்னிடம் மன்னிப்பு கேட்க வைப்பதே அருவியின் நோக்கம். மன்னிப்புக் கேட்பதால் மாத்திரம் அவர்களது துரோகம் மறந்து போகுமா? என்றால் கிடையாது. ஆனாலும் தன் வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை எண்ணிக் கொண்டிருக்கும் தறுவாயில் மன்னிப்பு மாத்திரமே குறைந்த பட்ச ஆறுதல் என்பது அந்தக் கதாப்பாத்திரத்தின் மனக்கிடக்கை. பெண்களின் மீதான எண்ணக் கிடக்கைகளை இந்தச் சமூகம் அவளது உடல் சார்ந்தே முன் வைக்கிறது என்பதைக் குறிப்பிட இயக்குனர் அமைத்திருக்கும் யதார்த்தமான வசனங்கள் அருமை. அதுவரை அருவிக்கு ஆதரவாகவே பேசிக் கொண்டிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் லக்ஷ்மி கோபால்ஸ்வாமியின் போக்கு, அவள் தனது உடல் சார்ந்த பிரச்சினையை முன் வைத்த பின் அவளுக்கு எதிராகவே மாறி விடுகிறது. தொகுப்பாளர் லக்ஷ்மியினால் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, இயலாமையை நியாயப்படுத்தி அதிதி பாலன் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் திரையரங்கமே கரகோஷிக்கிறது.

aruvi.jpg

வசனங்கள் ஒவ்வொன்றும் அத்தனை கூர்மை. “நீ எவ்வளவு வேணாலும் வாங்கலாம். வாங்கலானெல்லாம் கெடையாது. வாங்கித் தான் ஆகணும். நீ என்ன வாங்கணும்னு உட்காந்து யோசனை பண்ணெலாம் தேவையில்லை. உன்னை சுத்தி நீ நின்னாலோ, நடந்தாலோ, பஸ்சுக்கு வெயிட் பன்னாலோ, டிவி, ரேடியோ, நியூஸ் பேப்பர், இன்டர்நெட், ரோட் முழுக்க கடை.. கடை முழுக்க discount, offer, sales. இங்க ஒரே ரூல்ஸ் தான் பணம். சமூகம் என்ன சொல்லுது? பணக்காரனா இருந்தா மதிப்பேன். இல்லைனா உன்ன மதிக்க மாட்டேன்… இங்க டிவில நூறு தடவை ஒரு விளம்பரம் போட்டானா.. நீ அவன் சோப்பை வாங்கித் தான் ஆகணும் வேற வழியே கெடையாது.“, “பெரிய பெரிய முதலாளிங்க சொகுசா வாழனும்னா நோய் சாக கூடாது நோயாளிங்க தான் சாகனும்.“, “தினம் தினம் உழைச்சு உழைச்சு ஆசைப்பட்டு தேவையில்லாத குப்பையெல்லாம் வாங்கி, எதுக்கு வாங்கினோங்கிறதே மறந்து போய், அடுத்த நாள் காலையில எழுந்து மறுபடியும் உழைச்சுக் கொட்டணும். அப்போ தான் உலகத்தில இருக்கிற அத்தனை பணக்காரங்களும் சந்தோசமா இருப்பாங்க. இதையெல்லாம் புரிஞ்சுகிட்டு அவங்க தேவையெல்லாம் பூர்த்தி செஞ்சா தான் இது ஒரு குடும்பம். அப்போ தான் இந்த சமூகம் உன்ன ஏத்துக்கும்.” என அருவியின் வாயிலாக முன் வைக்கப்படும் கேள்விக்கணைகளின் மூலம் உள்ளூர் பொருளாதாரம் முதல் உலகப் பொருளாதாரம் வரை சாடியிருக்கும் விதம் அருமை. இடைவேளைக்கு முன்னதான அந்த நீளமான வசனங்களில் அதிதி பாலனின் வெளிப்படுத்தும் நடிப்பிற்கும் வசன நடைக்கும் கரகோஷங்கள் விண்ணை முட்டுகின்றன.

என்ன படம் எடுக்கிறாங்க. ஒரு குடும்பம் 1000/= செலவு பண்ணி படம் பாக்கணும்னா அந்த படத்தில ஏதாவது இருக்கணுமில்ல. ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது. ஆன அந்த படத்தை நீங்க உட்காந்து பார்த்து தான் ஆகணும். ஏன்னா அது தான் விதி.” எனப் போகிற போக்கில் தற்கால வணிகப் படங்களையும் நேரடியாகச் சாடியிருக்கிறார்கள். அதிதி பாலனின் எதிர்க் கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் பதற்றத்தில் திணறுவதும், இயக்குனர் ‘கட்’ சொன்னதும், பணிபெண்ணைக் அழைத்து ஒப்பனை செய்து விட்டு, மீண்டும் பாந்தமாக அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு நகர்வதென நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் கலக்கி இருக்கிறார் லக்ஷ்மி கோபால்ஸ்வாமி. உதவியாளர்களிடம் எகிறி விட்டு, லக்ஷ்மியிடம் பம்மும் இயக்குனராக கவிதா பாரதி சரியான தேர்வு. சூடான வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் “ரோலிங்.. சார்!” எனும் ஒற்றை வார்த்தையால் கலகலக்க வைக்கிறார் ஒளிப்பதிவாராக நடித்திருக்கும் அபிநய குமார். அவரது குரல் பண்பலை மாற்றத்தை அவதானித்து, அடுத்தடுத்த காட்சிகளில் கவிதா பாரதி “ரோலிங் கேமரா!” சொன்னதும் மொத்தத் திரையரங்குமே “ரோலிங் சார்!” சொல்கிறது.

காவல்த்துறை விசாரணைக் காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள் என நகரும் திரைக்கதை இடைவேளைக்குப் பின் நிதானமாகக் கடந்து செல்கிறது. அழுத்தமான இறுதிக் காட்சியை நோக்கிப் பயணிக்கும் பார்வையாளர்களை சற்றே ஆசுவாசப்படுத்தி சிந்திக்க வைப்பதற்காக இயக்குனர் கையாண்டுள்ள உத்தி தான் துப்பாக்கி முனையில் அதிதி செய்யும் அந்த கலாட்டாக் காட்சிகள். மரண பயத்தை ஒவ்வொருவர் கண்ணிலும் காட்டி ஒவ்வொருவருக்குள்ளேயே புதைந்திருக்கும் அன்பையும் குழந்தைத் தனத்தையும் வெளிக்கொணரரும் காட்சிகள் அத்தனை இயல்பானவை. எந்தவித செயற்கைத் தனமும் இல்லாமல் கையாளப்பட்டிருக்கும் உதவி இயக்குனர் பிரதீப் ஆன்டனி – அதிதி காதல் பகுதியும் அத்தனை அழகு. அருவியின் தந்தையாக நடித்திருக்கும் திருநாவுக்கரசு, தையல் நிறுவன மேலாளராக நடித்திருக்கும் மதனகுமார், காவல்துறை அதிகாரி மொஹமட் அலி பைக், சுபாஷாக வரும் சுட்டிப் பையன் ஆகியோர் மனதில் நிற்கின்றனர்.

aruvi

பிந்து மாலினி -மற்றும் வேதந்த் பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்தோடு பயணிப்பதால் ஈர்த்து விடுகின்றன. அருவியின் குழந்தைப் பருவத்தின் பின்னணியில் வரும் “குக்கூட்டி குன்னாட்டி..” பாடலில் அந்தக் குழந்தையின் குரலும் வாத்தியங்கள் பெரிதாக இன்றி ஒலிக்கும் அந்தக் குழுவிசையும் அத்தனை அழகு. இந்த இசைத்தொகுப்பின் அசத்தலான பாடலென்றால் ட்ரம்பெட் – பேஸ் கிட்டார் துணையுடன் ஜாலம் காட்டும் “அசைந்தாடும் மயிலொன்று கண்டாள்..” எனக் குறிப்பிடலாம். குட்டி ரேவதியின் வரிகளில் “உச்சம் தொடும் அன்பின் கொடி..” சற்றே அழுத்தமான பாடல். பிந்து மாலினி பாடும் குறும்புப் பாடலான “சிமென்டுக் காடு..” கேட்கும் ரகம் தான். இயக்குனர் எழுதியிருக்கும் அன்பின் உன்னதத்தைக் கூறும் பாடலான “மேற்குக் கரையில் அந்த வானம்..” பாடலில் பான்ஜோ – சாரங்கியின் மெல்லிய நரம்பிசை மனதை வருடும். பின்னணி இசையில் கிட்டார், வயலின், செல்லோவுடன் பகுதிகளுடன் வரும் குழுவிசையும் அபாரம். வெளிப்புறப் படப்பிடிப்புகள் பெரிதும் கிடையாது. அருவியின் வீடு, தொலைக்காட்சி நிறுவனத்தின் படப்பிடிப்புத் தளம், மருத்துவமனை என மூன்றே களங்களில் நகரும் கதைக்கு ஷெல்லி கலிஸ்ட்டின் ஒளிப்பதிவு பெரிதும் கை கொடுக்கிறது. வேண்டிய இடத்தில் திரைக்கதையில் வேகத்தையும், தேவையான இடத்தில் நிதானத்தையும் தெரிந்தே அனுமதிருக்கிறது ரேய்மண்டின் படத்தொகுப்பு.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வார்புருவினை Slumdog Millionaire போல நேர்மறையாகவும் பயன்படுத்தலாம். அதே சமயம் கவண் போல எதிர்மறையாகவும் பயன்படுத்தலாம்.” என்னும் லஷ்மி ராமகிருஷ்ணனின் கருத்தை இந்த இடத்தில் ஏற்கத் தான் வேண்டும். இயக்குனர் தெரிந்தே தான் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்ட பெண் அந்த நிலையில் பாதுகாப்பாகவே இருந்தேன் எனக் குறிப்பிடுவதும் குறித்த மூவருக்கும் எவ்வித நோயுமில்லை எனக் கணிப்பதும் எப்படி? எனும் கேள்வியை மழுப்பலாகவே அணுகியிருக்கிறார் இயக்குனர். அருவியின் கையில் புகைச்சுருளும் மதுவும் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதன் நோக்கம் வெறுமனே அவளை நவநாகரீகப் புரட்சிப் பெண்ணாகச் சித்தரிப்பதேயன்றி வேறேதுமில்லை. இறுதிக் காட்சி உணர்வு பூர்வமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. தந்தைக்கு அனுப்பிய காணொளியில் “என்ன விட்டிட்டு எப்பிடிப்பா இருந்தா?” என அருவி கேட்கும் போது கண்கள் குளமாவது உறுதி.

மொத்தத்தில் அருவி உணர்வுகள் சூழ் கவிதைத் தொகுப்பு; நெகிழ்ச்சியான நிறைவான அநுபவம்.

Please like & share this page if you really like our writings..

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Aruvi Trailer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s