வேலைக்காரன் (2017)

ஆடம்பரத் தேவைகளுக்காகத் தமது அத்தியாவசியத் தேவைகளைச் சமரசம் செய்து கொள்ளும் நடுத்தர வர்க்கத்தைக் இலக்கு வைத்து, பன்னாட்டு நிறுவனங்களால் அதே நடுத்தர வர்கத்துத் தொழிலாளிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சந்தைப்படுத்தல் உத்திகளையும் அதன் பின்புலத்தில் இருக்கும் முதலாளித்துவ அரசியலையும் சமூக நோக்கோடு அணுகியிருக்கிறது இந்த வேலைக்காரன். சிவகார்த்திகேயன் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் வணிக ரீதியான சமரசங்களுக்குப் பெரிதும் இடம் கொடாமல் அழுத்தமான கதையை நம்பியே கடைசி வரை பயணித்திருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. எதுகை மோனை வசனங்களை நாயக பிம்பத்தின் மீது கட்டியமைத்து ரசிகர்களின் கரகோஷங்களை பெற முயற்சி செய்யாமல், சூழ்நிலைகளுக்குத் தகுந்த யதார்த்தமான வசனங்கள் மூலம் சிந்திக்க வைத்திருப்பது தான் இயக்குனரின் வெற்றி.

குப்பத்து மக்களின் வறுமையைத் தனக்கு சாதமாகப் பயன்படுத்தி அவர்களை அடியாள்களாக மாற்றும் தாதா பிரகாஷ்ராஜின் செயற்திட்டத்தினை முறியடிப்பதற்குத் தனது பண்பலை வானொலியைப் பயன்படுத்தி வரும் சிவகார்த்திகேயன், உயிரச்சுறுத்தல் காரணமாக அப்பணியை இடை நிறுத்தி உணவு உற்பத்தி நிறுவனமொன்றில் விற்பனை முகவராகச் சேர்ந்து, தனது மேலதிகாரி ஃபஹத் ஃபாசிலின் தலைமைத்துப் பண்புகளால் ஈர்க்கப்பட்டு அவரின் நிழலையொட்டி வளர்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் செயற்கைச் சுவையூட்டிகளெனும் பெயரால் அளவிற்கு மீறிச் சேர்க்கப்படும் இரசாயனங்கள் ஏற்படும் பக்க விளைவுகளைக் கண்கூடாகப் பார்க்க நேரிட, தரமான பொருட்கள் ஒரு முறையாவது நுகர்வோரைச் சென்றடைய வேண்டுமெனப் போராடுகிறார். தனியொருவானால் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை எப்படி அசைக்கப் பார்க்க முடியுமென்பதற்குத் தனது விறுவிறுப்பான காட்சியமைப்புக்களால் விடை சொல்கிறார் இயக்குனர் ராஜா.

velaikkaran1.jpg

சிவகார்த்திகேயனிடம் எதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருவார்களோ அந்தச் சமாச்சாரங்கள் எதுவுமேயின்றி, புது மாதிரியாகக் காட்சிப்படுத்த வேண்டுமென்பதே இயக்குனரின் எண்ணம் போலும். வழமையான ஆட்டம்பாட்டமின்றி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் பக்கம் பக்கமாக வசனங்கள் பேசியே கவர்ந்து விடுகிறார் சிவா. பிரகாஷ்ராஜ் – சரத் லோகிதாஸ் இடையான கோஷ்டி மோதலை நேரலையாகத் தனது பண்பலை வானொலியில் ஒளிபரப்பிக் குப்பத்து மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்டுவது, அடிதடியில் மூழ்கிப் போயிருக்கும் குப்பத்து இளைஞர்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைப்பதற்க்காக வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பது, முதலாளித்துவக் கொள்கைக்கெதிராகத் தொழிலார்களை ஒன்று திரட்டி போராடுவது என சமூகப் பொறுப்புள்ள வேடம். இயலாமையின் உச்சக் கட்டமாகக் கூலிக்காரப் பேட்டையைக் கொலைகாரப் பேட்டையாக்கிய தாதா பிரகாஷ்ராஜ் மீதான வன்மத்தை அவர் குத்துப்பாட்டுக் கிடக்கும் தருணத்தில் வெளிப்படுத்துவது, நடுத்தர வர்க்கத்திற்கேயுரிய வரவிற்கு மீறிய செலவைச் சமாளிக்க முடியாத கோபத்தில் தாயிடம் பொரிந்து தள்ளி விட்டுப் பின் நிதானமாகச் சிந்தித்து வருத்தப்படுவது, விற்பனை முகவரொருவர் மின்நிலைப்படுத்தும் கருவியை ஏமாற்றி விற்க முனைகையில் தனது தொழில்முறை அனுபவத்தைக் கொண்டு நடுத்தரக் குடும்பங்கள் ஆடம்பரப் பொருள்களின் மீதான ஆசையால் ஏமாற்றப்படும் விதத்தினை எடுத்துக் காட்டுவது என சிவகார்த்திகேயனிற்கு நிச்சயம் இது புது அனுபவம் தான்.

வேலைக்கான நேர்காணலின் போது கூட்டத்தில் ஒருவனாக அமைதியாக இருந்து ஒவ்வொருவரையும் அவதானித்து, அடுத்த நொடியே அமைதியைக் குலைத்து கம்பீரமாகத் தனது தேர்வுகளையும், தேர்வுகளுக்கான காரணங்களையும் அடுக்கும் போதே ஃபஹத் ஃபாசிலின் குணாதிசயம் அட்டகாசமாக வெளிப்படுகிறது. அவரது கூர்மையான பார்வையும் தமிழ் மொழி நடையும் அவ்வப்போது மம்முட்டியை நினைவு படுத்துகிறது. பல்பொருள் அங்காடியொன்றில் நுழைந்து, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வலது பக்கம் விளம்பரம், இடது பக்கம் வாசனைத் திரவியங்கள், வாடிக்கையாளரின் குற்றவுணர்ச்சியைத் தூண்டி பொருளை வாங்குவதற்காக வழங்கப்படும் கூடைகள், அவர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் இருப்பதற்கான உத்திகள், குழந்தைகளுக்கு எட்டும் விதத்தில் வைக்கப்படும் விசுக்கோத்துகள் மற்றும் மிட்டாய்கள், ஆடம்பரப் பொருள்களைக் கடந்து செல்லும் விதத்தில் கடைசியில் வைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் என சிவாவிற்கு விளம்பர உத்திகளைக் கற்றுக் கொடுக்கும் அந்தக் காட்சியில் ஃபஹத் சிவாவை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் சேர்த்தே வசியப்படுத்தி விடுகிறார்.

நயன்தாராவை வெறுமனே காதல் காட்சிகளுக்காகவும் பாடல்களுக்காகவும் வீணடித்திருக்கிறார்கள். நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரும் நயன்தாராவிற்கும் சிவாவிற்கும் இடையான ஊடல்கள் கொஞ்சம் சுவாரசியம். மற்றையபடி புதுமுக நாயகிகளுக்கு நிகராக அவரது கதாப்பாத்திரத்தை ஒப்புக்கு சப்பாணியாகப் புனைத்திருப்பது சற்றே ஏமாற்றம். சிவாவின் தரமான உணவுகளை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் திட்டத்தினை ரேடியோ மிர்ச்சியினூடாகக் விளம்பரப்படுத்தக் கிடைக்கும் உதவிக்கு மாத்திரமே அவரது நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாத்திரம் அவசியமாகிறது. சிநேகாவிற்கு அளவான வேடமென்றாலும் கூட அழுத்தமான காட்சிகள் அந்தக் கதாப்பாத்திரத்தை முழுமையடையச் செய்கின்றன. “நம்ம விசுவாசம் எதுவரைக்கும்னு கோடு போடுறது நம்ம கையில தான் இருக்கு.. நம்ம வாங்கிற சம்பளம் நம்ம விஸ்வாசத்துக்கு தாண்டா. அது முதலாளிங்க செய்யிற தப்ப மறைக்கிற லஞ்சமில்ல..” சிவா நிலைகுலைந்து நிற்கும் தறுவாயில் தான் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவுறுத்தும் தாயாக ரோகிணியும், குடும்ப பாரத்தை மகனிடம் திணிக்க விரும்பாமல், அவனது போக்கிலேயே விட்டுப் பிடிக்கும் தகப்பனாக சார்லியும் சரியான தேர்வுகள்.

velaikkaran2.jpg

கொலைகாரக் குப்பம், பன்னாட்டு நிறுவனம் என இருவேறு தளங்களில் நகரும் கதைகளை ஒன்று சேர்க்கும் அந்த முடிச்சு கூடுதல் சுவாரசியம். நண்பனின் வற்புறுத்தலின் பேரில் திருந்தி வாழ நினைக்கும் விஜய் வசந்த்திற்கு நேரும் முடிவு, அதற்கு சூத்திரதாரியான பிரகாஷ்ராஜின் கதாப்பாத்திரத்தில் ஏற்படும் சடுதியான மாற்றம் எதிர்பாராதது. ராஜா – சுபா கூட்டணியில் வசனங்களில் அத்தனை கூர்மை. “நான் டார்கெட்.. டார்கெட்டுன்னு எவன் கிட்டயோ புடுங்கிட்டு வந்தா.. நீ எங்கிட்ட புடுங்கிட்டு போயிடுவ.. நான் எவன் கிட்டடா போய் புடுங்கிறது?“, “நமக்கு தேவையில்லாத ஆடம்பரத்தை விற்க மார்கெட்டிங்க்ல ஆள் இருக்கு. நமக்கு தேவையான அத்தியாவசியத்தை விக்க ஆள் இல்ல..“, “நமக்குத் தெரியாமலேயே எவன் பொருளையோ நமக்குள்ளேயே வித்திட்டு இருக்கோம். இன்னிக்கு நான் உன் பாக்கெட்ல 10 ரூபா எடுத்தா.. நாளைக்கு இவன் என் பாக்கெட்ல 20 ரூபா எடுத்திட்டு போயிடுவான்..“, “நாமெல்லாம் பொருள விக்கலடா.. பொய்ய வித்திண்டிருக்கோம்..” என யதார்த்தத்திற்கு அருகே நின்று சிந்திக்க வைக்கும் வசனங்கள் ஏராளம்.

ரோபோ ஷங்கர், RJ பாலாஜி, சதீஷ் என நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் அளவாகவே பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். “பால் பாக்கெட்டை வாங்கி பசு மாட்டுகிட்டேயே கொடுக்கிற மாதிரி சேல்ஸ்மேன் வீட்லேயே பொருளை விக்க வந்தியா?“, “இவன் என்ன கேமராவ பார்த்ததும் கணேஷ் வெங்கட்ராமன் மாதிரி யோகாவெல்லாம் பன்றான்?” என சதீஷின் ஓரிரு துணுக்குகளுக்கும், நயன்தாராவிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ரோபோ ஷங்கரின் உடல்மொழிக்கும் அவ்வப்போது சிரித்ததாய் ஞாபகம். போட்டியாளரின் சூசகமானா விளம்பரத்தின் மறை பொருளை சிவா வாயிலாக ஃபஹத் கண்டுபிடிப்பதும், அதை தானே கண்டுபிடித்ததாய் மேலாளரிடம் பிரஸ்தாபிக்க நினைத்து YG மகேந்திரா மூக்குடைபடுவதும் கலகலப்பான பகுதிகள். ஓரிரு காட்சிகளே வந்தாலும் வினோதினி வைத்தியநாதன், மன்சூர் அலிகான், தம்பி ராமய்யா, ராமதாஸ், காளி வெங்கட், அருள்தாஸ் அகியோரைப் பயன்படுத்தி இருக்கும் விதம் அருமை. மிர்ச்சி அறிவிப்பாளர் ஷா, ஆபீஸ் மற்றும் பகல் நிலவு புகழ் உதய் மகேஷ், சரத் லோகிதாஸ், மதுசூதனன் ராவ் ஆகியோர் ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார்கள். தேர்ந்த நடிகர் YG மகேந்திராவை சிறிய வேடத்திற்காக வீணடித்திருக்க வேண்டாமே?

நாயக பிம்பத்தையொட்டி கதையை நகர்த்தாமல் நுகர்வோர் பிரச்சினையை தொழிலாளர்களிடம் கொண்டு சென்று லாபநோக்குடன் சுயநலமாக செயற்படும் முதலாளித்துவ அரசியலை வீழ்த்தும் விதம் சிறப்பு. போகிற போக்கில் Division of Labour எனும் முகாமைத்துவக் கோட்பாடு முதலாளித்துவத் தவறுகளுக்குத் துணை போகும் விதம், முதலாளித்துவத் தத்துவத்தின் பின்புலத்திலுள்ள அரசியல், நுகர்வோர் நலன் மீது தொழிலாளிகள் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியம், பொதுவுடைமைத் தத்துவங்கள் என சொல்ல வந்த விஷயங்களை நடைமுறைச் சிக்கல்களுடன் விளக்கி இருக்கும் விதத்திற்கு சபாஷ் போடலாம். கடைசி வரை அமைதியாக சிவாவுடனேயே பயணித்து ஒவ்வொரு நகர்வுகளாகக் கண்காணித்து, தகுந்த நேரத்தில் பிரச்சினையைத் திசை திருப்பும் இடத்தில் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பு அபாரம்.

velaikkaran3.jpg

பாடல்களொன்றே இந்தப் படத்தின் வேகத்தடை; அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே அதீத வெற்றியடைந்திருந்தாலும் கதையோடு ஒட்டி நகராமையால் ஒரு கட்டத்தில் சலிப்பையே தருகிறது. தலைப்புப் பாடலான “வா வேலைக்காரா..” சுமார் ரகம் தான். அனிருத் பாடிய “கறுத்தவனெல்லாம் கலீஜா..” பாடலுக்குத் திரையரங்கமே அதிர்கிறது. “இதயனே என்னை என்ன செய்தாய்?..” பாடலில் அத்தனை ஈர்ப்பில்லை. அனிருத் – ஜோனிடா காந்தி குரலில் “இறைவா.. என் இறைவா..” அட்டகாசமான மெட்டு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் பாடல் இடம்பெறும் தருணம் சற்றும் பொருத்தமில்லை. படம் முடிந்த பின் இடம்பெறும் சங்கர் மகாதேவனின் “ஓயாதே.. சாயாதே..” எனும் புரட்சிப் பாடல் ரொம்பவே பொறுமையை சோதிக்கிறது. பாடல்களுக்குப் பாரபட்சம் பார்க்காமல் படத்தொகுப்பாளர் ரூபன் கத்திரி போட்டிருந்தால் இரண்டாம் பாதி இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். பின்னணி இசை சில இடங்களில் கவனிக்க வைக்கிறது.

முன் கூட்டியே வில்லனின் குணாதிசயங்களைப் பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்திவிட்டு நாயகனுடனான நேரெதிர் மோதலாகக் கொண்டு செல்வது சவாலான விடயமெனினும் அது அழகாகவே கையாளப்பட்டிருக்கிறது. திரைப்படங்களென்பது காட்சி ஊடகம் என்பதை மறந்து விட்டு எல்லாக் கதாப்பாத்திரங்களும் பக்கம் பக்கமாக வசனங்கள் பேசிக் கொண்டிருப்பது, என்ன தான் வசனங்கள் அபாரமாக இருந்தாலும் இறுதிக் கட்டத்தை நெருங்கும் தருவாயில் பொறுமையை சோதிக்கிறது. இறுதித் திருப்புமுனைக் காட்சியைப் பெரிதும் எதிர்பார்த்திருக்க அதையும் வெறுமனே வசனங்களாகவே கடந்திருப்பது சற்று ஏமாற்றம். கொலைகாரக் குப்பத்தில் உருவாக்கத்தில் கலை இயக்குனர் முத்துராஜின் கைவண்ணம் தனித்தே தெரிகிறது. பாடல் காட்சிகளிலும், நிறுவனத்தின் உட்புறப் படப்பிடிப்புக்களிலும் ராம்ஜியின் ஒளியோவியம் பக்க பலம்.

மொத்தத்தில் இந்த வேலைக்காரன் நல்லதோர் முயற்சி.. இன்னமும் நேர்த்தியாக இருந்திருக்கலாம்.

Please like & share this page if you really like our writings..

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Velaikkaran Trailer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s