தானா சேர்ந்த கூட்டம் (2018)

நகைச்சுவைப் படங்களுக்குத் தர்க்கமுரண்பாடுகள் பார்க்கத் தேவையில்லை என்பது சரி தான். அதற்காக தர்க்க முரண்பாடுகளே பார்க்கக் கூடாது என்பதற்காகவே ஒரு படத்தை நகைச்சுவைப் படமாக எடுப்பதென்பது எந்த வகையினைச் சாரும் என்பதை இயக்குனர் தான் விளக்க வேண்டும்? இருப்பவர்களிடம் இருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் ராபின் ஹூட் கருவினைக் கொண்டு பண்டிகைக்கேற்ற பட்டாசாகப் படத்தைக் கொடுத்திருக்க வேண்டிய விக்னேஷ் சிவன், எதிர்பார்ப்புக்களை வீணாக்கி நமத்துப் போன புஸ்வானத்துடனேயே திருப்திப்பட்டுக் கொண்டுள்ளார் போலும். சூர்யாவின் அலட்டலில்லாத மாறுபட்ட நடிப்புடன் சேர்ந்து நகைச்சுவைக் காட்சிகள் முன்பாதியைக் தூக்கி நிறுத்தினாலும், இரண்டாம் பாதி இயக்குனரின் தகிடு தத்தங்களால் ஒரேயடியாகப் படுத்தே விடுகிறது.

தான் லஞ்சம் வாங்கியதை மேலிடத்திற்குப் புகார் கூற முயன்ற தம்பி ராமையாவைப் பழி வாங்க எண்ணி, அவரது மகன் சூர்யாவிற்குக் கிடைக்க வேண்டிய சிபிஐ அதிகாரி வேலைக்கு முட்டுக்கட்டை போடுகிறார் உயரதிகாரி சுரேஷ் மேனன். இதே சமயம், திறமையும் தகுதியும் இருந்தும் பணம் கொடுத்துக் காவல்துறையில் வேலைக்குச் சேர முடியாத விரக்தியில் அவரது நண்பன் கலையரசன் தற்கொலை செய்து கொள்ள, அதன் பாதிப்பில் போலியான சிபிஐ குழுவினைத் உருவாக்கி, அரசாங்கத்தை ஏமாற்றி லஞ்சம் வாங்கி ஏப்பம் விடும் பணமுதலைகளைக் குறி வைத்து திடீர் சோதனை செய்வது போல் பாவனை செய்து, அவர்கள் பணத்தைக் களவாடி, வேலைக்காக இலஞ்சப் பணத்தைக் கொடுக்க முடியாமல் திண்டாடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கிறார். விஷயம் ஒரு கட்டத்தில் சிபிஐ வரை சென்று வழக்கிற்கான விசாரணை அதிகாரியாக கார்த்திக் நியமிக்கப்பட கார்த்திக் – சூர்யா – சுரேஷ் மேனன் என மும்முனைப் போட்டியாகச் சென்றிருக்க வேண்டிய கதையில், மூவரையும் ஒரு சேரக் கட்டிக் கிணற்றில் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பதோடு மாத்திரம் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

TSK2.jpg

படத்தைப் பொறுத்த வரை அழகான ஆச்சரியம் என்றால் அது சூர்யா தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அயன் படத்தில் பார்த்த அதே புத்துணர்ச்சியுடன் மீண்டும் சூர்யாவைப் பார்க்க முடிகிறது. நண்பன் கலையரசனின் வேலைக்காக காவலதிகாரி பாலா சிங்கிடம் கெஞ்சி மன்றாடி ஒரு கட்டத்தில் ஆர்ப்பரிக்கும் அந்த அறிமுகக் காட்சியிலேயே எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் தூக்கி வைத்து விட்டார். வேலைக்கான நேர்முகத் தேர்வில் உயரத்தைக் குறி வைத்த எள்ளி நகையாட சுரேஷ் மேனனுக்கு அனுமதித்து இறுதிக் காட்சியில் “உயரம் எவ்ளோன்னு முக்கியமில்லை. எவ்வளவு தூரம் நாம உயருரோங்கிறது தான் முக்கியம்..” எனத் திருப்பி அடிப்பது, வேலை கிடைக்காத விரக்தியைத் தந்தையிடம் கோபமாக வெளிப்படுத்துவது, கண் முன்னே நிகழும் கலையரசன் மரணத்தால் நிலை குலைந்து நிலத்தில் விழுந்து அழுவது, ஹைதராபாத்தில் போலியாக சிபிஐ சோதனை செய்ய முயன்று பாஷை தெரியாமல் சமாளிப்பது எனக் கடைசி வரை ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். சிங்கம் தொடர்களைப் பார்த்துச் சலித்துப் போனவர்களுக்கு அமைதியான அவரது உடல்மொழியும் ஆங்காங்கே அவர் செய்யும் குறும்புகளும் பிடித்துப் போவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

கீர்த்தி சுரேஷை சூர்யாவின் கொள்ளைக் கூட்டத்தில் சேர்த்திருப்பதையும், அதற்கான பின்னணியையும் கூட ஏற்கலாம். ஆனால் செயற்கையான அந்த காதல் காட்சிகளையும், திருடும் போது நடிப்பாற்றலைக் கண்டு வியந்து காதலிப்பதாக சூர்யா கூறும் அபத்தமான வியாக்கியானத்தையும் எந்த வகையில் ஏற்பது. கீர்த்தி சுரேஷ் கொடுத்த வேடத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் அழுத்தமே இல்லாத அவரது கதாப்பாத்திரமும், சுவாரஸ்யமே இல்லாத காதல் காட்சிகளும் படத்தின் பலவீனம். அந்தப் பெண் பார்க்கும் படலம் மாத்திரம் சற்றே கலகலக்க வைக்கிறது. கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் தங்கி விடுகிறது கலையரசனின் கதாப்பாத்திரம். நண்பனின் மரணமே தனது குற்றத்திற்கான தூண்டுதல் என்பது சூர்யா தரப்பு நியாயம். அதற்கேற்றாற்போல் கலையரசனின் கதாப்பாத்திரம் வேலையின்மையால் மனவழுத்தத்திற்க்கு ஆளாவதாகக் காட்டப்படுவதும் சரியே. ஆனாலும் அவரது தற்கொலைக்குக் காரணம் மனைவியின் மீதான அவரது சந்தேகபுத்தியே; மனவழுத்தம் அந்த சந்தர்ப்பத்தில் வெறுமனே தூண்டுகோல் அன்றி நேரடிக் காரணி அல்ல. இந்த இடத்தில் இயக்குனரால் முன் வைக்கப்படும் நியாயம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

TSK3.jpg

கலகலப்பிற்குப் பஞ்சமில்லாமல் நகர்கிறது முதல் பாதி. அதிலும் அமைச்சர் ஆனந்தராஜின் வீட்டில் நிகழும் சோதனைக் காட்சி வெடிச் சிரிப்பிற்கு உத்தரவாதம். அத்தனை நட்சத்திரங்கள் குறித்த காட்சியில் இருந்தும் ஒட்டு மொத்தக் கவனத்தையும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து விடுகிறது ஆனந்தராஜின் ஆளுமை. உளறிக் கொட்டும் வார்த்தைகளைக் கொண்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தைக் கண்டு பிடிக்கிறார்கள் என மனைவி நிரோஷா குறிப்பால் உணர்த்தியதும் கண்களால் உள்ளார்ந்த பயத்தை அவர் வெளிப்படுத்தும் அந்தக் காட்சிக்குத் திரையரங்கமே கரகோஷிக்கிறது. அந்தக் காட்சி வரை விறைப்பான சிபிஐ அதிகாரியாகக் கர்ஜித்து விட்டு, அடுத்த காட்சியிலேயே கண்களில் கண்ணீருடன் புலம்பித் தள்ளும் ரம்யா கிருஷ்ணன் சரியான தேர்வு. நேர்முகத் தேர்விற்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய சூர்யாவிடம் “சாதாரண கிளார்க்கோடா பையன் தான் நீ. ஒனக்கெதுக்கு ஆபீசர் வேலை. சர்வீசில இருக்கும் போதே உங்கப்பன் செத்திட்டா அந்த வேலை உனக்குத் தான். அதனால உங்கப்பனை போய் சாகச் சொல்லுனு யாரும் சொல்லலையாப்பா?” என இயலாமையில் கேட்கும் அந்தக் காட்சியில் நெகிழ வைக்கிறார்.

எதிர்முகாம்களைச் சேர்ந்த கதாப்பாத்திரங்கள் அத்தனை பலமானதாக இல்லாமை; அல்லது பலத்த எதிர்ப்புகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட அந்தக் கதாப்பாத்திரங்கள் இரண்டாம் பாதியில் மென்வலுத் தன்மையுடன் பயணிக்கின்றமை திரைக்கதையின் பலவீனம். பிரதான வில்லனாக சுரேஷ் மேனன் தன் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். சூர்யாவுடனான அந்த நேர்முகக் காட்சியில் அவரது மிடுக்கான தோற்றமும் நடிப்பும் பலம். பரபரப்பாக அறிமுகப்படுத்தப்படும் கார்த்திக் கடைசி வரை பெரிதாக எதையும் செய்யாமல் போவது ஏமாற்றம். திறமையிருந்தும் தகுந்த வாய்ப்புக் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நந்தாவிற்கு வேலூர் மாவட்டம் படத்திற்குப் பிறகு நல்ல வாய்ப்பு. அவரது மீசை ஒன்று தான் சற்று உறுத்தல். அதிகமாகப் பேசுவதாலேயே கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் விட்டு விலகும் அம்சமான பாத்திரம் RJ பாலாஜிக்கு. எந்தக் கேள்வி கேட்டாலும் நான்கு பதில்கள் சொல்வேனெனக் கூறி விட்டு, அப்பா பெயர் என்னவென்று கேட்டதும் மெல்லிய புன்னகையுடன் “இப்பிடி தான் சார். எனக்கு எந்த வேலையும் கிடைக்கிறதில்லை..” என சலிப்புடன் கூறும் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார்.

1987 இல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்டையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஸ்பெஷல் 26 படத்தின் தழுவல் என்பதால் அதே எண்பதுகளின் இறுதியில் கதை நகர்வதாக அமைத்திருக்கலாம். ஆனாலும் பின்னனியில் வரும் பழைய படங்களின் சுவரொட்டிகள், பழங்காலத்துத் தொலைபேசிகள், ஒரேயொரு ரெட்ரோ பாடல், கீர்த்தியின் சிகையலங்காரம் தவிர்த்து வேறேதும் பெரிதாக என்பதுகளை நினைவுபடுத்தவில்லை என்பதே உண்மை. சமகாலப் படங்களைப் பார்க்கும் உணர்வே மோலோங்கி நிற்கிறது. ஒரே மாதிரியான அமைப்பில் மீண்டும் மீண்டும் காட்டப்படும் போலி சிபிஐ சோதனைக் காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பையே ஏற்படுத்துகிறது. கண் கட்டி வித்தையாகக் காட்சிகள் பலவற்றை நகர்த்துகிறார்கள். போலியான சிபிஐ ஆட்சேர்ப்பிற்காகப் கொடுக்கப்பட்ட பத்திரிக்கை விளம்பரத்தைப் பார்த்து ஏராளமான பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்கு ஒன்று கூடுகிறார்கள். ஆனாலும் நேர்முகத் தேர்வு முடிந்து அடுத்த நாள் வரை காவல்துறைக்கோ சிபிஐக்கோ இந்தச் செய்தி சென்றடையவில்லை என்பது காதிலே பூ சமாச்சாரம்.

TSK4.jpg

நகைமுரண்களைக் கையாண்ட விதத்தில் விக்னேஷ் சிவனைப் பாராட்டலாம். கெட்டவரான சுரேஷ் மேனனின் பெயர் உத்தமன், கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த சூர்யாவின் பெயர் நச்சினார்கினியன் (உத்தமன் என்பது பொருள்), தொடை நடுங்கியான ரம்யா கிருஷ்ணனின் பெயர் ஜான்சி ராணி, ஊழலை எதிர்க்கும் பெண்ணின் பெயர் சசிகலா என சிந்தித்து வைத்திருக்கிறார்கள். சூர்யாவின் குழுவில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன், சிவசங்கர் எல்லோருமே தேவையான இடத்தில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்; அதே சமயம் விசாரணைக் காட்சியில் ஆங்கிலத்தில் பேசி அசத்தும் செந்திலும், பாரத நாட்டிய ஈடுபட்டால் பெண்மைத் தனம் இயல்பாகவே ஒட்டிக் கொண்டிருப்பதால் வேலை கிடைக்காமல் திண்டாடும் சிவசங்கரும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள். செந்தில் ஆல் இன் அழகுராஜா பெற்றோமேக்ஸ் விளக்கு நகைச்சுவை நினைவுபடுத்திச் சிரிக்க வைக்கிறார். புதுமையாக ஏதுமில்லாமல் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பையே தருகிறது. ரம்யா கிருஷ்ணனிற்கு அத்தனை நீளமான பின்னணிக் கதை தேவையேயில்லை.

அனிருத்தின் இசையில் பாடல்கள் கொண்டாட்ட மனநிலைக்கே இட்டுச் செல்கின்றன. அந்தோணி தாசன் பாடிய “சொடக்கு மேல சொடக்கு..” பாடலுக்கு திரையரங்கமே குதூகலிக்கிறது. அனிருத்தின் குரலில் “நானா தானா வீனா போனா..” அழகான மெல்லிசைப் பாடல். “வெட்டி வீரத்தால்..” பாடலில் அத்தனை ஈர்ப்பில்லை. ஜாஸி கிப்ட் பாடிய “பீலா பீலா பீலா விடாத..” பாடலும் அதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ரெட்ரோ கருப்பொருளும் அட்டகாசம். அனிருத் – ஷக்திஸ்ரீ கோபாலன் பாடிய “எங்கே என்று போவது..” பாடல் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார் அனிருத். நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் இடைவேளைக் காட்சி தனில் பின்னணி இசை தனித்தே தெரிகிறது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக வந்துள்ளன.

விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை இடைவேளைக்குப் பின் தொக்கி நிற்கிறது. குறைந்த பட்சம் பாடல்கள் மற்றும் பின்கதைக் கட்சிகளிலாவது படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் கத்தரி போட்டிருக்கலாம். இறுதிக் காட்சிக்கு முந்தைய திருப்புமுனைக் காட்சி எளிதில் யூகிக்கக் கூடியதாக இருப்பது சற்று பலவீனம். படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை விட இறுதிக் காட்சி அமைக்கப் பட்டிருக்கும் விதத்தினை நொந்து சிரிக்கிறார்கள் ரசிகர்கள். இத்தனை பலவீனமாக இறுதிக் காட்சியை வைப்பது?

மொத்தத்தில் தானா சேர்ந்த கூட்டத்தைத் தானே முன் வந்து கலைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Please like & share this page if you really like our writings..

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Thaanaa Serndha Koottam Teaser

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s