கோமாளி கிங்ஸ் (2018)

நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தின் பகட்டு வாழ்க்கைக்காக எந்திரமாக உழைத்து நிகழ்கால அற்ப சந்தோஷங்களுக்காக வருங்கால நிம்மதியைத் தொலைத்து விட்டு கடனட்டையிலே வாழ்க்கை நடாத்தும் வெளிநாட்டு வாசி ஒருவனுக்கு, சொந்த மண்ணில் ராஜாவாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்புக் கிட்டினால், அதை விட சுவர்க்கம் வேறேதும் உண்டோ? Simple, but a master plan என்பதைப் போல, எளிமையான கதைக்கருவினை எடுத்துக் கொண்டு அட்டகாசமான முழு நீள நகைச்சுவைப் படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் கிங் ரட்னம். முன்னணி நட்சத்திரங்களுக்கே இந்தக் காலத்தில் சவாலான மீள்வருகைப் பார்வையாளர்களைச் சர்வ சாதாரணமாகத் திரையரங்குகளுக்குக் கொண்டு சேர்த்திருப்பதன் மூலம் இலங்கையின் வணிக ரீதியிலான தமிழ்ப் படங்களுக்குத் புதிய பாதையைக் காட்டியிருக்கிறார்கள் கோமாளி கிங்ஸ் குழுவினர்.

சீதனம் கொடுத்து மணமுடித்து வைத்து மகளைக் கரை சேர்க்க வசதியின்றி அவதிப்படும் ராஜ கணேசனின் வீட்டில், திருமணமொன்றிற்காக லண்டனில் இருந்து வந்து குடும்பத்தோடு தங்கி விடுகிறார் கிங் ரட்ணம். மட்டக்களப்பிற்குச் சுற்றுலா சென்ற வேளை எதிர்பாராத விதமாக தனது சொத்துக்களை பெட்டியொன்றில் போட்டு இந்த மண்ணில் புதைத்திருப்பதாக கிங் ரட்னம் போதையில் உளறிக் கொட்டி விட, அந்தப் பெட்டியை அடைவதற்காக பாபா கேங்க் எனும் கூலிப்படையின் உதவியுடன் கிங்கைக் கடத்துகிறார் ராஜ கணேசன். ஒரு கட்டத்தில் கடத்தலில் ஈடுபடும் பாபா கேங்கிற்கும் பெட்டியைப் பற்றிய உண்மைகள் தெரிய வர, அந்தப் பெட்டியில் இருந்தது என்ன? இறுதியில் பெட்டியை அடைந்தது கிங் ரட்ணமா? ராஜ கணேசனா? இல்லை பாபா கோஷ்டியா? எனும் திரைக்கதையின் முடிச்சுக்களுக்கு இரண்டு மணி நேரம் சிரிக்க சிரிக்க விருந்து வைத்திருக்கிறது இந்த கோமாளி கிங்ஸ்.

kk2.png

தான் கடத்தப்பட்டுள்ளதாக மனைவியிடம் நடிக்கும் அந்த முதல் காட்சியிலேயே தனது கதாப்பாத்திரத்தின் சுதந்திரம் எந்தத் தரப்பினைச் சார்ந்துள்ளது எனத் தெளிவாகப் பார்வையாளர்களுக்கு உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் கிங் ரட்ணம். மனைவி – பிள்ளைகளுடனான கருத்து பேதங்களுக்கு மத்தியில் “இஞ்ச எண்ட பிரஷர் குளிசைகள் எல்லாம் எடுத்து வச்சனீரா நீர்? இல்லையெண்டா நான் நரம்பு வெடிச்சு செத்திடுவன்…” எனத் தனது இயலாமையை வெளிப்படுத்துவதாகட்டும், சுற்றுலாவிற்கான செலவீனங்களுக்குப் பயந்து காய்ச்சலால் அவதிப்படுவதைப் போன்று நடிப்பதாகட்டும், மகளை வேறோர் ஆடவனுடன் உந்துருளியில் கண்டதும் அவர்களைப் பின் தொடர்வதும், எதேச்சையாக மகள் பார்த்ததும் மீண்டும் சம்சார சகதியில் சிக்குண்டு விடக் கூடாதெனும் தவிப்புடன் பாபா கோஷ்டியிடமே தஞ்சம் புகுவதுமென மனுஷர் கலக்கி இருக்கிறார்.

படத்தின் முக்கிய சிறப்பம்சம் என்றால் அது நாகேஷ் மாதிரி இருந்து கொண்டு நம்பியார் ரகத்தில் திட்டம் போடும் ராஜ கணேசனின் நடிப்புத் தான். அந்தத் தள்ளாத வயதிலும் பெட்டியை அடைவதற்காக பாபா கோஷ்டியுடன் கூட்டணி வைத்து அவர் போடும் நாடகம் சிரிப்பு மத்தாப்பூக்களுக்கான உத்தரவாதம். “உங்கட வைஃப் சொன்னவ. நீங்கள் எப்பவும் பிஸ்னஸ் கிளாஸ்ல தான் போறனீங்களெண்டு. பிஸ்னஸ் கிளாஸ்ல நல்ல கால விரிச்சு வச்சு இருக்கலாமோ?” என வெகுளித் தனமாக கிங் ரட்ணத்திடம் கேட்பது, வெளிநாட்டு உறவினரிடம் மகளின் திருமணத்திற்காக உதவி கேட்கச் சொல்லும் மனைவியிடம், நடுத்தர வர்க்கத்துக்கேயுரிய சுயமரியாதையுடன் “பிச்சை எடுக்கச் சொல்லுரீரோ?” எனக் கடிந்து கொள்வது, சுற்றுலாவிலிருந்து கிளம்பும் தறுவாயில் கிங்கின் பெட்டியை அபேஸ் செய்வதற்க்காகச் செய்யும் தகிடுதத்தங்கள், பெட்டியை அடைய முடியாத விரக்தியில் கழிவறையில் இருந்து கொண்டு கிங்கைக் கடத்துவதற்குத் திட்டமிடுவது என அந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

பாபா கோஷ்டியின் அறிமுகத்துக்குப் பின் படத்தின் நிறமே மாறுகிறது. அவர்களின் அறிமுகத்துக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட மினக்கிடல்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். ரவுடி பபெத் பாபாவாக நடித்திருக்கும் கஜன் கணேசன், அவரது ஆலோசகர் கமல்ராஜ் பாலகிருஷ்ணன், உதவியாளர்கள் இருவர் என அனைவருமே சிறப்பான பங்களிப்பினை நல்கி இருக்கிறார்கள். ட்ரைலரிலேயே ஹிட்டடித்த வசனமான “அஜித் அய்யா, வானை ஸ்டார்ட் பண்ணி, நேர பேஸ்லைன் வந்து பார்க் ரோட் போட்டு…” என தொடங்கும் அந்த நீண்ட வசனத்தைக் கமல்ராஜ் பேசி முடிக்கும் போது திரையரங்கில் கரகோஷம் விண்னைப் பிளக்கிறது. கடத்திய பாபா கோஷ்டிக்கு கிங் ரட்ணம் கொடுக்கும் பாசக் குடைச்சல்களும், சகிக்க முடியாமல் “இவன் ஒரு புதினமான சாமான்வா.. சனியனைத் தூக்கி பனியனில போட்ட மாதிரியில்லவா இருக்கு” எனப் புலம்புவதும், கடைசியில் அவர்களாகவே கிங்கைக் கழட்டி விடப் போடும் திட்டங்களும் கலகல ரகம்.

kk3.png

கிளைக் கதைகளாக வரும் காவலதிகாரி தர்ஷன் தர்மராஜ் – மனைவி நவயுகா இடையிலான ஊடல் காட்சிகளும், கிங் ரட்ணத்தின் மகள் மீனா தெய்வநாயகம் – பக்கத்து வீட்டுப் பையன் அதிரி அபிலாஷ் இடையான காதல் காட்சிகளும் திரைக்கதையைத் தொய்வில்லாமல் நகர்த்த உதவியிருக்கின்றன. அதிலும் தர்ஷன் தர்மராஜ் நவயுகவிடம் பல்பு வாங்கும் முதலிரவுக் காட்சி மற்றும் மாறுவேடக் காட்சிகளில் இருவரின் நடிப்பும் அபாரம். பாலின வேறுபாட்டால் பருவ வயதில் வரும் மோகத்தை நாகரீகமாக கையாண்டியிருக்கும் விதமும், இறுதிக் காட்சியில் மீனா – அதிரி அபிலாஷ் இடையான சம்பாஷணையைக் கையாண்ட விதமும் பாராட்டுக்குரியது. கிங் ரட்ணத்தின் மனைவியும், வீடியோ எடுத்து மிரட்டியே காரியத்தை சாதித்துக் கொள்ளும் அவரது சுட்டிப் பையனும் சிறந்த தேர்வுகள்.

குடும்பத்தாரின் ஆடம்பரச் செலவுகளுக்காக வெளிநாட்டில் எந்திரமாக உழைத்து உழைத்துச் சலித்துப் போய் இழந்திருந்த சுதந்திரத்தை, பணயக் கைதியாக ரவுடிகள் சூழ்ந்திருக்கும் அந்த வீட்டில் எளிமையான வாழ்க்கையில் கிங் ரட்ணம் உணரும் விதம் அருமை. “வெளிநாட்டுக் குளிரில நாய் மாதிரி உழைச்சு மெஷின் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனனான். இப்ப தான் புரியுது, அங்க நான் வாழ்ந்து கொண்டிருந்தது போலியான வாழ்க்கை. இது எண்ட சொந்த நாடு. இங்க நான் அகதியும் இல்லை. எவனுக்கு அடிமையும் இல்லை.” என உருகும் காட்சி தனில் வசனங்கள் கவனிக்க வைக்கிறது. மகளின் பார்வையில் இருந்து கிங் தப்பியோடும் காட்சியொன்றே, அந்தச் சுதந்திர வாழ்க்கையில் இருந்து வெளிவர அவர் விரும்பவில்லை என்பதற்கான சான்று.

இரண்டாம் பாதியில் பாபா கோஷ்டியின் அட்டகாசங்கள் அதிமாக இருந்ததென்னவோ உண்மை தான். பெட்டியைப் பற்றிய உண்மையை மறைத்த கிழவர் ராஜ கணேசனை “பபா மாதிரி இருந்துகிட்டு பணியார வேலையா பாக்கிறா? நீ எங்களுக்கே கேமை குடுக்க பாத்திருக்க..” என வசை பாடுவதும், பெட்டியைப் பற்றி கிங்கின் மனைவியிடம் விசாரிக்கையில் கிங் பதற்றப்பட்டு உண்மையைச் சொல்ல முற்படுகையில் “உங்க மேன் sudden ஆ வாந்தியெடுக்கிறாரு. நான் பார்த்திட்டு மறுவுகாட்டியும் call குத்திறன்” என லந்து கொடுப்பதும், பெட்டி யாழ்ப்பாணத்தில் இருப்பதாகக் கிங் கூறக் கேட்டு “மட்டக்களப்பில் புதைச்சு பெட்டி எப்பிடிவா யாழ்ப்பாணம் போகும்? பங்கருக்குள்ளாலயா போகும்?” எனக் கடுப்படைவது என கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் சிக்சர் அடிக்கிறார்கள்.

kk4.png

ஸ்ரீராம் சாச்சியின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே அருமை. வருண் துஷ்யந்தன் வரிகளில் சாஷா – லாரன்ஸ் பாடிய “காஷுக்கும் கவலை இல்லை ஆசைக்கும் அளவே இல்லை..” நல்லதோர் கதை சொல்லும் பாடல். இனிமையான சுற்றுலாப் பாடலான “நாடு விட்டு நாடு வந்தா ஊரு விட்டு ஊரு போவோம்..” படமாக்கப் பட்ட விதம் இன்னமும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நகைச்சுவைப் பாடலான “ஆடு தானா சூப்பில் விழுகுது..” கதையினூடே நகர்வது சிறப்பு. பாபா கோஷ்டியின் அறிமுகம், கிங்கை ராஜ கணேசன் பின் தொடரும் காட்சி போன்ற இடங்களில் பின்னணி இசை சிறப்பு. கொழும்பு மாநகரின் சனநெரிசல், காலி முகத்திடல், வீறு கொண்டு நிற்கும் நல்லூரின் அழகு, மீன் படும் தேன் நாடான மட்டக்களப்பின் செழுமை, பாபா கோஷ்டியின் கடத்தல் திட்டத்தின் போது சுற்றிச் சுழலும் கேமரா, மற்றும் அறை வெளிச்சத்தில் படமாக்கப்பட்ட காட்சிகளில் மஹிந்த அபயசிங்கவின் ஒளிஓவியம் சிறப்பு.

தேவையற்ற காட்சிகள், கதாப்பாத்திரங்கள் என்றேதுமில்லை; நேர்த்தியான படத்தொகுப்பும் கூட. இடைவேளைக்குப் பிறகான முதல் காட்சி தர்ஷன் தர்மராஜ் – நவயுகா இடையான முதலிரவில் தொடங்குவது மாத்திரம் சற்று நெருடல். காரணம் அந்தக் கதாப்பாத்திரங்கள் அதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. இரண்டு காட்சிகள் போன பிற்பாடு தான் ரசிகர்களால் நிதானமாக ஊகித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. உதவி கேட்கச் சொல்லும் மனைவியிடம் “பிச்சை எடுக்கச் சொல்றீரோ?” எனப் பொரிந்து தள்ளும் ராஜ கணேசன், அடுத்த இரண்டு காட்சிகளில் பணத்திற்காகப் பெட்டியை அபகரிக்க முயற்சிப்பதும், முடியாதவிடத்து கடத்த முற்படுவதும் ஏன்? திருடுவது அவரது தன்மானத்திற்கு இழுக்கில்லையா? எனும் கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. வெளிப்படையாக உதவியேதும் கோராதவிடத்து, தனிப்பட்ட ஏமாற்றம் ஒன்றே அந்தக் கதாப்பாத்திரத்தின் நிறமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கும் எனும் இயக்குனரின் வாதம் அத்தனை ஏற்புடையதல்ல. அவரது சூழ்நிலையை நியாயப்படுத்தும் ஒரு காட்சி இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நகைச்சுவையைத் தேவையின்றித் திணிக்காமல், கதாப்பாத்திரங்களினூடே அவர்களின் வழக்கு மொழி சார்ந்து நகர்த்தி இருக்கும் விதத்திற்க்காகவே தனியாகப் பாராட்டலாம். 40 வருடங்களுக்குப் பின் பரவலாக வெளியாகும் இலங்கைத் தமிழ் படம் என்பதைத் தாண்டி, இத்தனை காலத்திற்குப் பிறகு வெளியானாலும், இதுவரை முடங்கிக் கிடந்தது நமது முயற்சிகள் மாத்திரமே, கலைத்தாகம் அல்ல என்பதை மீண்டுமொரு நிரூபித்திருப்பதற்காகவே மனமாரப் பாராட்டலாம்.

மொத்தத்தில் கோமாளி கிங்ஸ் – குடும்பத்தோடு பார்த்து மகிழக் கூடிய கலகலப்பான படம்.

Please like & share this page if you really like our writings..

Click here to read previous movie reviews

Click here to advertise @ Thiraimozhi

Komaali Kings Trailer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s