Classics of Tamil Cinema 5: அக்ரஹாரத்தில் கழுதை (1977)

வகுப்புவாதங்கள் புரையோடிப் போயிருந்த காலகட்டத்தில் வெளிவந்து முதலாளித்துவதையும், சாதிக்கட்டுப்பாடுகளையும், சமூக அரசியலையும் சாடிய படம் எனும் விம்பம் அக்ரஹாரத்தில் கழுதைக்கு எப்பொழுதுமே உண்டு. இன்றளவிலும் கூட இயக்குனர் ஜான் ஆப்ரஹாமை கலகக்காரனாகவும் புரட்சியாளனாகவும் சித்தரித்து வாதப் பிரதிவாதங்கள் இணையதளங்களில் எழுவதுண்டு. வகுப்புவாதத்திற்கும் ஜீவகாருண்யத்திற்கும் இடைநடுவே ஊசலாடும் திரைக்கதையே இந்த விவாதத்திற்கு முதன்மைக் காரணி. அதே சமயம் பழைமைவாதத்தைக் கேள்வி கேட்க வேண்டிய படைப்பு முடிவில் அதற்கு நிகரான பிற்போக்கு வாதத்தை முன் வைத்திருப்பதும் துரதிஷ்ட்ரம் என்பதை மறுப்பதற்குமில்லை. சமூக அரசியலைப் புறம் தள்ளிப் பார்த்தால், மனித மனங்களின் குரூரத்தை அன்பின் பால் களைய முற்பட்டிருக்கும் முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியதே.

சிறுவர்களின் விளையாட்டுச் செயல் விபரீதமாகிப் போய் விட, கழுதையொன்று நகர்ப்புறவாசிகளால் கொலை செய்யப்படுகிறது. அநாதரவாக நிற்கும் அதன் கழுதைக்குட்டி பேராசிரியர் நாராயணசுவாமி வீட்டில் அடைக்கலம் சேர்க்கிறது. விஷயம் கல்லூரி வரை சென்று மாணவர்களின் கிண்டலுக்குள்ளாகி வேறு வழியில்லாமல் தனது கிராமத்திற்கே கழுதையைக் கொண்டு செல்கிறார் பேராசிரியர். நவநாகரீக நகர்புறவாசிகளிடம் இல்லாத ஜீவகாருண்ய உணர்வினை கிராமத்தார்களிடம் எதிர்பார்த்துச் சென்ற அவருக்கு ஏமாற்றமே கிட்டியது. அவர் சார்ந்திருந்த மேல்தட்டு அக்ரஹாரவாசிகள் அவரை ஏளனமாகவே பார்த்தனர். தமது சொந்தக் கோப தாபங்களைத் தீர்த்துக் கொள்ள அந்த வாயில்லா ஜீவனைப் பலிகடா ஆக்குகிறார்கள். பழி சுமத்தப் போகிறார்கள் என்று தெரியாமலேயே அந்த ஜீவனும் அவர்கள் இழுக்கும் இழுப்பிற்கெல்லாம் சென்று உயிரையும் விடுகிறது. தாய்க்கழுதைக்கு நேர்ந்த கதியே தான் அந்த அதன் குட்டிக்கும் நேருகிறது. ஆக மொத்தத்தில் மனிதம் செத்து விட்டதென்பதே இந்தப் படைப்பு சொல்லி இருக்க வேண்டிய சேதி. இடை நடுவே கதை நகரும் அக்ரஹாரக் களமும் மேம்போக்காகக் தொட்டுச் செல்லும் வகுப்புவாத அரசியலும் திரைக்கதையின் போக்கினைச் சற்று திசை மாற்றியுள்ளதென்பதே உண்மை.

ak1.png

பேராசிரியர் அக்ரஹாரத்தில் சந்திக்கும் ஏளனங்களுக்கு சற்றும் சலித்தவையல்ல நகர்புறத்தில் அவர் சந்திக்கும் அவமானங்கள். “பணக்காரங்க நாய் வளர்ப்பாங்க. பாப்பாரங்க பசு வளர்ப்பாங்க. இந்த ஐயரு என்னடான்னா இப்படிக் கழுதைய பிடிச்சுட்டு வந்து வந்துருக்காரே..! கருமம் கருமம்…” என்று அவர் காதுபடவே விமர்சிக்கும் வேலைக்காரி, கழுதையைக் கல்லூரிக்குக் கூட்டி வந்து கொட்டமடுக்கும் மாணவர்கள், வீட்டில் கழுதை வளர்ப்பது தனிப்பட்ட விஷயம் எனும் நாகரிகம் கூட இல்லாமல் பேராசியரைக் கண்டிக்கும் அதிபர், “இது மனுசன் போற பஸ்சா இல்ல கழுதை போற பஸ்சா?” என்று பேருந்துப் பயணத்தில் கடிந்து கொள்ளும் சக பயணி என நகர்ப்புற மாந்தர் தம் இழி மனோநிலையையும் இயக்குனர் எடுத்தியமைப்பத் தவறவில்லை.

பெற்றோரை ஒருவாறு சமாளித்து தன் வீட்டு ஊமைப் பணிப்பெண் கவனிப்பில் கழுதையை விட்டுச் செல்கிறார் பேராசிரியர். அக்ரஹாரத்திற்குள் கழுதை வந்ததை எதிர்க்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். குறும்புக்காரச் சிறுவர்களின் விளையாட்டுத் தனத்தால் கழுதை மோதி வயோதிபப் பெண்மணி விழுந்து விட நேருகிறது; நவகிரஹ ஹோமத்தின் மத்தியில் கழுதையை அனுப்பி கலாட்டா செய்கிறார்கள் அந்த ஊர் இளந்தாரிகள்; வயோதிபர் ஒருவர் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள கழுதையைப் பயன்படுத்தி பெண் பார்க்கும் படலத்தைத் தடுக்கிறார். பிராமணர் ஒருவர் தந்தைக்கு செய்யும் திவசமொன்று தடைபடுகிறது. மொத்தப் பழியும் அந்தக் கழுதையின் மீது விழுகிறது.

எல்லாவற்றிற்கும் உச்சாணிக்கொம்பாக கழுதையை வளர்க்கும் ஊமைப்பெண்ணிற்குத் தகாத முறையில் ஏற்பட்ட தொடர்பால் பிறக்கும் குழந்தை இறந்து விட அவளது தாய் சிசுவின் பிணத்தினை கோவில் வாசலில் வைத்து விடுகிறாள். தீட்டுப் பட்டு விட்டதாகக் கருதி பிராமிணர்கள் தாயை விசாரிக்கப் தண்டனைக்குப் பயந்து பழியைக் கழுதையின் மேல் போட்டு விடுகிறாள். பொறுமையிழந்த அக்ரஹாரவாசிகள் கூலிக்கு ஆள் பிடித்துக் கழுதையை அடித்துக் கொள்கிறார்கள். கொன்றதன் பிற்பாடு குற்றவுணர்ச்சியில் கழுதையைத் தெய்வமாக்குகிறார்கள். கோயில் கட்டிப் பரிகாரமும் தேடிக் கொள்கிறார்கள். இறுதிக் காட்சியில் பேராசிரியரும் ஊமைப் பணிப்பெண்ணும் சேர்ந்து கழுதையின் மண்டையோட்டினைத் தேடியெடுத்துத் தீ மூட்டுகிறார்கள். அந்தத் தீ அக்ரஹாரம் முழுவது பரவிப் பற்றியெரிகிறது.

ak2.jpg

அக்ரஹாரத்தில் கழுதை வந்தால் என்னவாகும்? இங்கு கழுதை என்பது குறியீடு. மேட்டுக்குடி மக்களிடத்தே தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை தான் இயக்குனர் கூற முற்படுகிறாரா? தலைப்பும் அதையே இயம்புகிறது. ஆனாலும் இயக்குனர் இந்தச் சமூகச் சிக்கல்களை மேம்போக்காகத் தான் தொட்டுச் செல்கிறார். அக்ரஹாரத்தில் கழுதை நுழையும் போது எல்லோரும் ஏளனமாகப் பார்க்கிறார்களேயன்றி எதிரியாகப் பார்க்கவில்லை. “ஓய் அனந்தராமைய்யாரே! வித்தையை வளர்க்க வேண்டிய வயசில கழுதையை வளர்த்து ஏன்யா கழுத்தறுக்கிறீர்? பிரத்தியாருக்குக் கஷ்டம் கொடுக்காம கழுதைய வளர்க்கிறது எப்பிடின்னு ஒரு வண்ணானைப் போய் கேளும் ஓய்! அவன் சொல்லுவான்.” எனும் வசனமொன்றே அதற்குச் சான்று. ஆக மொத்தத்தில் இது கழுதையால் ஏற்படும் தடங்கல்களால் ஏற்படும் வெறுப்பே. மேலும் இதே நெருக்கடி தான் தாய்கழுதைக்கும் நகர்ப்புறத்தில் ஏற்பட்டது. இது இவ்வுலகம் தன்னொருவனுக்கேயுரியது எனச் சொந்தம் கொண்டாடும் மனிதனின் இழிவான மனப்பாங்கு. வீட்டிற்கு வெளியே தேமேயெனப் படுத்திருக்கும் தெருநாய்க்குக் கல்லெறிவதும், புறப்படத் தாயாரான நேரத்தில் தற்செயலாகக் குறுக்கே போகும் பூனையைச் சகுனத்தைக் கெடுத்து விட்டதாகக் கருதிக் கலைப்பது போன்ற மனிதன் இழிவான மனநிலைக்கு ஒப்பானது.

கழுதையைக் கொல்வதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை ஊமைப்பெண்ணின் தாயரைக் கூப்பிட்டு விசாரித்த பின்பே முடிவெடுக்கிறார்கள். இங்கும் கழுதையினால் ஏற்பட்ட தடைகளும் அதன் மூலம் ஏற்பட்ட குரோதங்களுமே பெரிதாகக் காட்சிகளில் முன்னிறுத்தப்படுகிறது. கோவிலில் சிசுவின் உடலைக் கொண்டு சென்று போட்டதால் ஏற்பட்ட தீட்டு ஒரு தூண்டுதலேயன்றி முழுமுதற் காரணமாகச் சித்தரிக்கப்படவில்லை என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. கூடவே கழுதைக்கெதிராகப் பொய் சாட்சி சொல்லும் கிழவியைத் தெரிந்தே மன்னித்து விடுகிறார் கதாசிரியர். கூலி வாங்கிக் கொண்டு கழுதையைக் கொன்ற வேலையாட்களுக்கும் இறுதிச் சடங்கு செய்தவுடன் பாவ மன்னிப்புக் கிடைத்து விடுகிறது. ஆனாலும் செய்த தவறுக்காகக் குற்றவுணர்ச்சியில் கோவில் கட்டும் அக்ரஹாரத்துவாசிகள் மட்டும் வேள்வித்தீக்கு இரையாகிறார்கள் எனும் முடிவு சற்றே பக்கச் சார்பாக அமைந்து விடுவதும் மறுப்பதற்கில்லை.

ak3.jpg

உயர்சாதி மக்களின் மேட்டிமைத்தன்மைக்கும் அடக்குமுறைக்குகளுக்குமான தீர்வு அவர்களது அறியாமையைப் போக்குவதேயன்றி மொத்தமாக அழித்தல் என்பது பிற்போக்குத்தனமான வாதம். இங்கு தான் இயக்குனர் தடம் மாறுகிறார். இருக்கும் போது தொந்தரவாக இருந்த கழுதை இறந்ததும் தெய்வீகக் கழுதை ஆகிறது. பலர் கொலை செய்யப்பட்ட மலை முகட்டில் கழுதையின் ஆவியைக் காண்கின்றனர். நடக்கும் நன்மைகள் யாவற்றுக்கும் அதன் தெய்வீக அம்சத்தையே நினைவு கூறுகின்றனர்.எல்லாவற்றிற்கும் மேலாகக் கழுதையின் பெயரில் கோயிலும் காட்டுகிறார்கள். ஜீவகாருண்யத்தைத் தொலைத்து பரிகாரம் செய்யும் இந்தச் செயல் தான் அறியாமையின் உச்சம். அதைச் சுட்டிக் காட்டிய விதத்திற்கு நிச்சயம் பாராட்டலாம். அதை அப்படியே கொண்டு செல்லாமல் இறுதிக் காட்சியில் அக்ரஹாரத்தை எரிப்பதாக இயக்குனர் கொடுத்திருக்கும் முடிவுவென்பது கழுதையைக் கொன்று அக்ரஹாரவாசிகள் செய்த அதே பாவச் செயலுக்கு ஒப்பானதே.

வெங்கட் சுவாமிநாதனின் திரைக்கதையை சிற்சில மாறுதல்களுடன் படமாக்கியிருக்கிறார் ஜான் ஆப்ரஹாம். புனித மேய்ப்பரைப் பின்பற்றும் கிறிஸ்தவப் பாதிரியார் கழுதை வளர்பதற்க்காகக் கண்டிக்கிறார். பசுவினை தெய்வமாகப் போற்றும் பிராமணர்கள் கழுதை இழிவான ஜீவன் என்பதால் புறக்கணிக்கிறார்கள். படித்த மேல்தட்டு மக்களால் தாய் கழுதை கொல்லப்படுகிறது. படிப்பறிவற்ற கிராமத்து மக்களும் கைக்காசை வாங்கிக் கொண்டு அதன் குட்டியைக் கொல்கிறார்கள். ஆக மொத்தத்தில் எல்லாத் தரப்பினரிடமும் மனிதம் செத்து விட்டதென்பதே படம் சொல்ல வேண்டிய நீதி. எனினும் படத்தின் தலைப்பும் இறுதிக் காட்சியும் திரைக்கதையின் போக்கினை மாற்றி விட்டது.

மொத்தத்தில் தடம் மாறியிருந்தாலும் அக்ரஹாரத்தில் கழுதை நேர்த்தியான முயற்சியென்பதில் ஐயமில்லை.

Click here to read complete web series of Classics of Tamil Cinema

Click here to advertise @ Thiraimozhi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s